search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Balakrishnan"

    தஞ்சை, நாகை, திருவாரூரில் தூர்வாரும் பணி நடைபெறாததால் வாய்கால்கள் வறண்டு கிடப்பதாக பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருவாரூர்:

    திருவாரூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் 150 டி.எம்.சி. அளவுக்கு கடலில் கலந்து வீணாகி உள்ளது.

    தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தூர்வரும் பணிகள் முறையாக நடைபெறாததால் கிளை வாய்க்கால்கள் வறண்டு கிடக்கின்றன. நீர் மேலாண்மையில் தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டது.

    கடந்த மாதம் (ஜூலை) 13-ந் தேதியே மேட்டூர் அணையை திறந்திருந்தால் ஓரளவுக்கு நீரை சேமித்திருக்கலாம். விலை மதிப்பில்லாத தண்ணீரை கடலில் வீணாக்கி வருகின்றனர். இதற்கு காரணமான அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு இனியாவது மாற்று பாசன திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.

    வைகை, காவிரி, குண்டாறு இணைப்பு திட்டம், ஆதனூர் கதவணை திட்டம், சுமார் ரூ.11 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டிருந்த காவிரி பாசன மேம்பாட்டு திட்டம் போன்றவற்றை இந்த அரசு செய்ய தவறிவிட்டது. காவிரி சமவெளி பகுதி என்பதால் தடுப்பணை கட்ட முடியாது என முதல்-அமைச்சர் சொல்கிறார். பின்னர் ஏன் 62 தடுப்பணைகளை கட்டுவதாக அறிவித்துள்ளார்? அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசுகிறார்.

    நீர் மேலாண்மை குறித்த புரிதல் எதிர்க்கட்சிகளுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் கூறி வருகிறார். அவர் நீர் மேலாண்மையில் ஆய்வு செய்து டாக்டரேட் பட்டம் பெற்றவரல்ல. காவிரி டெல்டா பற்றி அவருக்கு என்ன தெரியும்? கேரளா, கர்நாடக மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு திறந்து விடப்பட்ட 150 டி.எம்.சி. தண்ணீர் கடலில் கலக்கிறது.

    சுமார் ரூ.4 ஆயிரம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ள கேரளா மாநிலத்துக்கு மத்திய அரசு ரூ.500 கோடியை மட்டுமே ஒதுக்கி உள்ளது. இதே போன்ற அணுகுமுறையைத் தான் கடந்த காலங்களில் தமிழக அரசுடன், மத்திய அரசு கையாண்டது. இயற்கை இடர்பாடுகள் வருகின்றபோது மாநில அரசுகளை மத்திய அரசு சுமையாக கருதுகிறது. இது ஒரு தவறான அணுகுமுறையாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மதவாத பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பதற்கு எதிராக புதிய வியூகங்களை அமைக்கப்படும் என்று பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #ParliamentElection #BJP
    சிதம்பரம்:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று சிதம்பரத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பா.ஜ.க. வெற்றி பெற்றது. தனது ஆதரவு மாநில கட்சிகள் மூலம் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி நாடு முழுவதுமான பெற்ற வெற்றி இல்லை. மக்கள் மன்றத்தில் பா.ஜ.க. தோல்வி அடைந்து விட்டது. இந்தியா முழுவதும் நடைபெற்ற நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பா.ஜ.கவுக்கு ஏற்பட்ட தோல்வியே இதற்கு சான்று.

    கருப்பு பணம் ஓழிப்பு, விலைவாசி உயர்வு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திட்டம் பற்றி எதிர்கட்சிகளின் கேள்விக்கு பிரதமரின் பதில் ஏற்று கொள்ளகூடியதாக இல்லை. மேலும் கல்வி, விவசாயிகளுக்கான இரட்டிப்பு வருமானம் 2022-ல் வரும் என்பது ஏற்று கொள்ள முடியாது. 2014 நாடாளுமன்ற தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதிக்கும் தற்போது பிரதமரின் பதிலும் முரண்பாடாக உள்ளது. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மதவாத பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைப்பதற்கு எதிராக வியூகங்களை அமைக்கும் வகையில் செப்டம்பர் மாதம் மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தப்படும்.

    தற்போது ஏரிகள் போர்கால அடிப்படையில் 20 நாட்களில் தூர்வாரப்படும் என்கிறார்கள். வறட்சி காலங்களில் எதுவும் செய்யாமல் தற்போது ஏரிகள் தூர்வாரப்படும் என்ற அறிவிப்பு மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் உள்ளது. மேட்டூர் அணையில் நீர்திறந்து விடப்பட்ட பிறகு ஏன் தூர்வார வேண்டும். நீர்நிலைகளில் தண்ணீர் வரும் சூழ்நிலையில் அவசரகதியில் தூர்வாருவதால் எந்த பயனும் இல்லை. இது ஊழலுக்கு வழிவகுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #ParliamentElection #BJP

    18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எடப்பாடி ஆட்சி அதிக நாள் நீடிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #MLAsDisqualified

    பூதலூர்:

    போராடுவோம் தமிழகமே என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பிரசார பயணம் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டியில் பிரசார பயணம் நடைபெற்றது. இந்த பிரசார பயணத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். பேசும் போது கூறியதாவது:-

    காவிரி பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் உரிமைகளை போராடி பெற வேண்டிய தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது. மக்கள் தமக்குள்ள உரிமைகளை பெற போராடிஆக வேண்டும். போராடாமல் தீர்வு கிடைக்காது.

     


    18 எம்.எல்.ஏக்கள் குறித்து தீர்ப்பு எப்படி இருந்தாலும் எடப்பாடி ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மத்தியில் ஆளும் மோடியும், மாநிலத்தில் மோடியின் எடுபிடியாக உள்ள எடப்பாடி ஆட்சியும் நீடிக்க வாய்ப்பு இல்லை. இந்த பிரசார பயணம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்த பிரசார பயணம் நிறைவு பெறும் போது மாற்றம் நிகழும்.

    தஞ்சை மாவட்டம் பயன்பெற குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. விவசாயிகள் சலுகை கேட்டால் சாக்கு போக்கு சொல்லும் மத்திய,மாநில அரசுகள் கார்பரேட் கம்பெனி முதலாளிகளான அதானி. அம்பானி ஆகியோருக்கு சலுகைகளை அள்ளி வழங்கி கொண்டிருக்கின்றன.

    தமிழகத்தில் குட்கா வழக்கை சிபிஐ விவசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிடும் காலம் விரைவில் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #MLAsDisqualified

    ஆளுங்கட்சியின் குரலாகத் தான் ரஜினி இருக்கிறார் என்று திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
    திருச்சி:

    திருச்சியில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது :-

    மக்கள் விரோத மத்திய பா.ஜனதா அரசு மற்றும் அ.தி.மு.க. அரசை அகற்றும் நோக்கத்துடன் மாற்றுக் கொள்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் விழிப்புணர்வு பிரசாரம் தொடங்குகிறது.

    இதன் நிறைவு நாள் கூட்டம் திருச்சியில் வருகிற 14-ந்தேதி நடைபெறுகிறது. இதில் சீத்தாராம் யெச்சூரி பங்கேற்கிறார். மத்திய அரசு விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்ய மறுக்கிறது. காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு முதல் கூட்டம் கூட நடக்கவில்லை.

    ஜூன்.12-ந்தேதி தண்ணீர் திறக்கப்படுமா? என்ற சந்தேகம் உள்ளது. நீட் விவகாரத்தில் அனைத்து கட்சிகளும் ரத்து செய்ய போராட வேண்டும். இதற்கு தற்கொலைகள் தீர்வு ஆகாது.

    தமிழக அரசின் தொழிற்துறை மானியக் கோரிக்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளது என்பதை தெளிவாக்கியுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. ஆகியவை தான் இதற்கு காரணம்.

    தூத்துக்குடி துப்பாக்கி சுடும் சம்பவத்தில் ரஜினியின் கருத்து மக்களுக்கு எதிராக உள்ளது. மக்களை இழிவுப்படுத்திய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும். ஆளுங்கட்சியின் குரலாகத் தான் ரஜினி இருக்கிறார்.

    கமல் கருத்தை மக்கள் ஏற்க மாட்டார்கள். ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றது மூலம் அந்த அமைப்பிற்கு சமூக அந்தஸ்தை கொடுத்துள்ளார். ஆர்.எஸ்.எஸ்.கூட்டத்தில் சகிப்பின்மையை பற்றி பேசுவது மதுக்கடையில் இருந்து கொண்டு மதுபானத்திற்கு எதிராக பிரசாரம் செய்வது போன்றது.

    இதில் அவர் பங்கேற்றிருக்க கூடாது. பா.ஜ.க.வை வீழ்த்த மதசார்ப்பற்ற கட்சிகளோடு தேர்தல் நேரத்தில் கைகோர்ப்பது என்கிற முடிவை எடுத்துள்ளோம். தேர்தல் நேரத்தில் அதற்கான யுக்தியை கையாள்வோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Rajinikanth
    தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்தின் பேச்சு கண்டிக்கத்தக்கது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தூத்துக்குடி சம்பவத்தில் காயமடைந்தவர்களை பார்க்க சென்ற ரஜினிகாந்த் அங்கு பேசும் போது மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி பேசி உள்ளார். அவரது பேச்சு கண்டிக்கத்தக்கது.

    போராட்டக் காரர்களால் தான் பிரச்சினை என்ற ரீதியில் அவர்களை வன்முறையாளர்களாக சித்தரித்து பேசியுள்ளார். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் வன்முறையாளர்கள், பிரிவினைவாத சக்திகள் சம்பந்தப்பட்டிருப்பதாக பேசுகிறார். போராட்டம் நடத்தினால் எப்படி தொழிற்சாலைகள் வரும் என்று கேட்கிறார்.

    ஜனநாயக ரீதியில் போராடுவதை கொச்சை படுத்திருக்கிறார். காவிரிக்காக தமிழர்கள் போராடக் கூடாது என்று அவர் சொல்கிறார். பா.ஜனதாவின் ஊதுகுழலாக பேசும் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் என்று போராடுவது தவறு என்கிறாரா? பெட்ரோல், டீசல் விலைக்கு போராட வேண்டாம் என்கிறாரா?

    சட்ட சபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்பாக்கி சூடு பற்றி வாய்திறக்க வில்லை. காவல் துறையின் தவறை மூடி மறைக்க முதல்வர் முயற்சி செய்கிறார். பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு உயர் நீதிமன்ற கண்காணிப்பில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

    ஜூன் 12-ந்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. முதல்வர் உண்மைக்கு மாறான தகவல்களை தருவதை கைவிட்டு காவிரியில் தண்ணீர் பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    துப்பாக்கிச்சூட்டுக்கு உத்தரவு பிறப்பிக்க துணை தாசில்தார்களுக்கு அதிகாரம் இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.
    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த 22.5.2018 அன்று தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி பல்லாயிரக்கணக்கான ஏழை, எளிய பொதுமக்கள், மீனவர்கள், விவசாயிகள், வியாபாரிகள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்தபோது அவர்களிடம் முறையான பேச்சுவார்த்தை எதுவும் நடத்தாமல் காவல்துறையினர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். வரலாற்றில் இல்லாத அளவுக்கு துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டு 13 பேர் உயிரிழந்து உள்ளதுடன், மேலும் 26 பேர் குண்டு காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மட்டுமின்றி சில நூறு பேர் தடியடியால் படுகாயம் அடைந்துள்ளனர்.

    இத்தகைய அடக்குமுறையினை ஏவிவிட்ட தமிழக ஆட்சியாளர்கள் தொடர்ந்து உண்மைக்கு மாறான செய்திகளை பரப்பி வருகின்றனர். அப்பாவி பொது மக்களை தீவிரவாதிகள் எனவும், கொலைகாரர்கள் எனவும் சிருஷ்டிப்பதுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தவர்களது உயிர்களைக் காப்பாற்ற துப்பாக்கிச்சூடு நடத்தியதாக இட்டுக்கட்டி செய்தி வெளியிட்டு வந்தனர்.

    இதுவரை துப்பாக்கிசூடு நடத்துவதற்கு உத்தரவிட்டது யார்? என்ற கேள்விக்கு ஒரு வாரமாக பதிலளிக்க மறுத்து வந்த தமிழக அரசும், காவல்துறையும் தற்போது இரண்டு துணை வட்டாட்சியர்கள் உத்தரவின் பேரில் தான் துப்பாக்கி சூடு நடந்ததாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளனர்.

    கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உள்ள நிலையில் இரண்டு துணை வட்டாட்சியர்கள் துப்பாக்கி சூடு நடத்த உத்தரவிட வேண்டிய நிலைமை ஏன் ஏற்பட்டது? மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேறு எந்த அதிகாரியும் அப்போது பணியில் இல்லையா? 22-ந்தேதி ஊர்வலத்தையொட்டி 144 தடை உத்தரவு போட்டுள்ள நிலையில் அனைத்து அதிகாரிகளும் கூண்டோடு மாவட்ட ஆட்சியர் அலுவலத்தை விட்டு ஏன் வெளியேறினார்கள்?

    துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு உத்தரவிட துணை வட்டாட்சியருக்கு அதிகாரம் உள்ளதா? அவர்களுக்கு ஜூடிசியல் மேஜிஸ்டிரேட் என்ற அதிகாரமில்லாதபோது துப்பாக்கி சூடு நடத்த அவர்கள் எப்படி உத்தரவிட முடியும்? அவர்கள் உண்மையில் உத்தரவிட்டிருந்தால் இத்தனை நாட்கள் அதை மூடி மறைக்க வேண்டிய அவசியம் என்ன?

    இப்போது தாமதமாக இந்த எப்.ஐ.ஆர் போட வேண்டிய அவசியமென்ன? இத்தனை நாட்கள் இல்லாமல் இந்த நாடகங்களை அரங்கேற்றுவதற்கு தான் துணை முதலமைச்சர் தூத்துக்குடி சென்றாரா? நாளை தமிழக சட்டமன்றம் கூடுவதால் சட்டமன்ற ஆவணங்களில் பதிவேற்றம் செய்ய இந்த நாடகம் அரங்கேற்றப்படுகிறதா? போன்ற எண்ணற்ற கேள்விகள் எழும்புகின்றன.

    வேதாந்தா நிறுவனத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாப்பதற்காக மத்திய மோடி அரசின் வழி காட்டுதலில் காட்டு மிராண்டித்தனமான அடக்கு முறையை ஏவிவிட்டு பலரை கொன்று விட்டு இதிலிருந்து தப்பித்துக் கொள்ள தமிழக அரசு பல பொய்யான ஆவணங்களை தயார் செய்து வருவது தெளிவாகிறது. இத்தகைய நாடகங்களின் மூலம் உண்மையை மறைத்து குற்றவாளிகளை தப்பிக்க வைக்கும் தமிழக அரசின் முயற்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

    மேலும், நடந்த கொடூரத்திற்கு பொறுப்பேற்க வேண்டிய தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் தப்பித்துக் கொள்வதுடன் அப்பாவியாக உள்ள பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்து கைது படலம் தொடர்ந்து கொண்டுள்ளது.

    இக்கொடுமையினை எதிர்த்து அனைவரும் குரல்கொடுக்க முன்வர வேண்டுமெனவும், உயர் நீதிமன்றம் தாமே முன்வந்து தலையிட்டு இவ்வழக்கினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலசெயற்குழு வற்புறுத்தி கேட்டுக் கொள்கிறது.

    தற்போது ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடுவதாக தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவினை மே மாதம் 22-ந்தேதிக்கு முன்னால் வெளியிட்டிருந்தால் தூத்துக்குடியில் காவல்துறையின் துப்பாக்கி சூடுக்கு 13 உயிர்கள் பலியாக வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்காது. மேலும், பலர் குண்டு காயங்களுடன், தடியடி காயங்களும் ஏற்படுவதை தடுத்திருக்க முடியும்.

    ஆலையை மூட வேண்டுமென போராடிய மக்கள் மீது அடக்குமுறையை ஏவி, அப்போராட்டத்தை அடக்கிட அரசு முனைந்தது. ஆனால், தமிழகம் முழுவதும் ஏற்பட்ட கொந்தளிப்புக்கும், மக்களின் எதிர்ப்புக்குரலுக்கும் அரசு பணிய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதன் விளைவே இந்த உத்தரவு.

    தற்போது ஆலையை மூடுவதற்கு அரசு உத்தரவிட்டிருந்தாலும், வேதாந்தா நிர்வாகம் மோடி அரசின் செல்வாக்கோடு உச்சநீதி மன்றத்தில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பைப் பெற முயற்சிப்பார்கள். தமிழக அரசு நீதிமன்றத்தில் கோட்டை விட்டு விட்டு மீண்டும் ஆலையை நீதி மன்ற உத்தரவின் மூலம் திறப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின் மீண்டும் மக்களது கொந்தளிப்பிற்கு ஆளாக வேண்டிய அவசியம் ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


    ×