search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Babar Azam"

    • முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 192 ரன் குவித்தது.
    • கேப்டன் பாபர் ஆசம் அதிரடியாக விளையாடி சதம் அடித்தார். அவர் 58 பந்தில் 101 ரன் எடுத்தார்.

    லாகூர்:

    பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் மோதிய 2-வது டி20 போட்டி லாகூரில் நேற்று நடந்தது.

    முதலில் விளையாடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது. கேப்டன் பாபர் அசாம் அதிரடியாக விளையாடி சதமடித்தார். அவர் 58 பந்தில் 101 ரன்னும் (11 பவுண்டரி, 3 சிக்சர்), முகமது ரிஸ்வான் 34 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) இப்திகார் அகமது 19 பந்தில் 33 ரன்னும் (1 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர்.

    தொடர்ந்து, விளையாடிய நியூசிலாந்து அணியால் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்களே எடுக்க முடிந்தது. இதன்மூலம் பாகிஸ்தான் 38 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மார்க் சேப்மேன் அதிகபட்சமாக 40 பந்தில் 65 ரன் (4 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தார்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ராப் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தான் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி நாளை நடக்கிறது.

    • இந்தியாவில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் பங்கேற்காது என ரமீஸ் ராசா கூறியிருந்தார்.
    • இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த 1992-ல் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றிருந்தது.

    கராச்சி:

    பாகிஸ்தானில் நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கவில்லை என்றால் பாகிஸ்தான் இந்தியாவில் நடைபெறும் ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் பங்கேற்காது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் ரமீஸ் ராசா சொல்லி இருந்தார்.

    பாகிஸ்தானில் திட்டமிட்டபடி ஆசியக் கோப்பை தொடர் நடைபெறுமா, அதில் இந்திய அணி பங்கேற்குமா என்ற சூழல் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என பாபர் அசாம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பாபர் அசாம் கூறியதாவது:-

    நான் நிறைய சாதிக்க வேண்டும் என விரும்புகிறேன். ஆனால், இப்போதைக்கு எனது பிரதான இலக்கு என்னவென்றால், அது நடப்பு பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் சதம் விளாசுவது மற்றும் பெஷாவர் அணிக்கு சாம்பியன் பட்டம் வென்று கொடுப்பதும்தான்.

    அதேபோல நடப்பு ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டும் எனவும் விரும்புகிறேன். எனக்கு எங்கள் அணி வெற்றி பெறுகின்ற அணியாக இருக்க வேண்டும்.

    நான் சில புதிய ஷாட்களை முயற்சித்து வருகிறேன். எனக்கு அதில் நம்பிக்கை கிடைக்கும் பட்சத்தில் போட்டிகளில் அதை அப்ளை செய்து விளையாடுவேன். அதே நேரத்தில் எனது வழக்கமான பாணியில் எனது ஆட்டத்தை தொடருவேன்.

    என பாபர் தெரிவித்துள்ளார்.

    இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி கடந்த 1992-ல் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • பெண்கள் பிரிமீயர் லீக்கின் முதலாவது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.
    • இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் விளையாட உள்ளன.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் அசாம் வாங்கும் சம்பளத்தை விட பெண்கள் பிரிமீயர் லீக்கில் மந்தனா அதிக சம்பளம் வாங்க உள்ளார். இந்நிலையில் இதை வைத்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் அதிக அளவில் வைரலாகி வருகின்றன.

    ஆண்களுக்கான ஐபிஎல் தொடர் போன்றே பெண்களுக்கும் 20 ஓவர் தொடர் நடத்த வேண்டும் என பல கோரிக்கைகளுக்கு வெற்றி கிட்டும் விதமாக பெண்கள் பிரிமீயர் லீக்கின் முதலாவது சீசன் அடுத்த மாதம் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் மொத்தம் 5 அணிகள் விளையாட உள்ளன. இந்த 5 அணிகளுக்கும் வீராங்கனைகளை உறுதி செய்ய மும்பையில் நேற்று ஏலம் நடைபெற்றது. இதில் 5 அணி நிர்வாகங்களும் தங்களுக்கு தேவையான வீராங்கனைகளை ஏலத்தில் எடுத்தனர். இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட 87 வீராங்கனைகள் மொத்தம் ரூ.59½ கோடிக்கு விலை போனார்கள். இதில் அதிகபட்சமாக இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனையும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா அதிகபட்சமாக ரூ.3.40 கோடிக்கு பெங்களூரு அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார்.


    இதேபோல் ஆஷ்லி கார்ட்னெரை ரூ.3.2 கோடிக்கு குஜராத் ஜெயன்ட்ஸ் அணியும், நதாலி சிவெரை ரூ.3.2 கோடிக்கு மும்பை அணியும், தீப்தி ஷர்மாவை ரூ. 2.6 கோடிக்கு உ.பி அணியும் ஏலத்தில் எடுத்தன.

    இந்நிலையில் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் அசாம் வாங்கும் சம்பளத்தை விட ஸ்மிருதி மந்தனா அதிக சம்பளம் வாங்க உள்ளார் என சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

    பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பாபர் அசாம் ரூ. 2.3 கோடி சம்பளம் வாங்குகிறார். அவரை விட ஸ்மிருதி மந்தனா ரூ. 90 லட்சம் அதிக சம்பளம் வாங்க உள்ளார். இதை வைத்து சமூக ஊடகங்களில் மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

    • இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.
    • 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் ஷுப்மன் கில்

    நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் இளம் வீரர் ஷுப்மன் கில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். முதல் போட்டியில் 208 ரன்களும், இரண்டாவது போட்டியில் ஆட்டமிழக்காமல் 40 ரன்களும் எடுத்தார். இன்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் 112 ரன்கள் குவித்தார்.

    இதன்மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசமின் உலக சாதனையுடன் (360 ரன்) இணைந்துள்ளார். இன்னும் ஒரு ரன் அடித்திருந்தால் பாபர் ஆசமின் சாதனையை முறியடித்து உலக சாதனை படைத்திருப்பார்.

    3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 350 ரன்களுக்கு மேல் எடுத்த இரண்டாவது வீரர் என்ற பெருமையையும் கில் பெற்றுள்ளார்.

    அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் ஷுப்மன் கில்லைத் தொடர்ந்து வங்காளதேச வீரர் இம்ரல் கயீஸ் (349), தென் ஆப்பிரிக்காவின் குயின்டன் டி காக் (342), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் (330) ஆகியோர் உள்ளனர். 

    • சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
    • பாபர் ஆசமை கேப்டன் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தினர்.

    இஸ்லாமாபாத்:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டியில் விளையாடி அந்த தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.

    சொந்த மண்ணில் பாகிஸ்தான் அணி படுதோல்வி அடைந்ததால் அந்நாட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இந்த தோல்வி காரணமாக பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் ஆசம் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.

    அவரை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று சில முன்னாள் வீரர்கள் வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் கேப்டன்ஷிப் தனது பேட்டிங்கை பாதிக்கவில்லை என்று பாபர் ஆசம் கூறி இருந்தார்.

    இந்த நிலையில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து பாபர் ஆசமை நீக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிந்த உடனேயே பாபர் ஆசம் மற்றும் பயிற்சியாளர் சக்லைன் லாகூருக்கு சென்றனர்.

    அங்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா தலைமையில் நடந்த உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்றனர்.

    இதில் இங்கிலாந்துக்கு எதிரான படுதோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் தேர்வு குழு தலைவர் முகமது வாசிமும் பங்கேற்றார். 3 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் கேப்டன் பதவி, பயிற்சியாளர் பங்கு, அணியின் ஒவ்வொரு அம்சமும் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணி நேற்று முன்தினம் அறிவிக்கப்பட இருந்தது. ஆனால் அணி தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது.

    பாபர் ஆசம் ஒரு நாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளுக்கு கேப்டனாக இருப்பதே சிறந்தது என்றும், டெஸ்ட் கேப்டன் பதவியை ஷான் மசூத் அல்லது முகமது ரிஸ்வானுக்கு அளிக்க வேண்டும் என்று கிரிக்கெட் வாரியம் கருதுவதாகவும், டெஸ்ட் கேப்டனாக பாபர் ஆசமின் எதிர்காலம் குறித்து விவாதங்கள் நடத்தப்பட்டது என்றும் கிரிக்கெட் வாரிய நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.

    அதே வேளையில் பாபர் ஆசம் வருகிற ஜூலை மாதம் டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து மாற்றப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் பதவியில் இருந்து, ரமீஸ் ராஜா நீக்கப்பட்டு, அடுத்த 4 மாதங்களுக்கு விளையாட்டை வழிநடத்த நஜாம் சேத்தி தலைமையிலான 14 பேர் கொண்ட குழுவை அரசாங்கம் நியமித்துள்ளது.

    • பாகிஸ்தான் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது,
    • பாபர் அசாம் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதம் உட்பட 348 ரன்கள் எடுத்தார்.

    பாகிஸ்தான் அணி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 0-3 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. ஆட்டங்களில் ஆரம்பம் முதல் இறுதி வரை இங்கிலாந்து முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது. ராவல்பிண்டி மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை 74 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முல்தானில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் 24 ரன்கள் வித்தியாசத்திலும், கராச்சியில் நடந்த மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்டில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் இந்த ஆண்டு சொந்த மண்ணில் நான்கு டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இது அவர்களின் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் வாய்ப்பை பாதித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 6 இன்னிங்ஸ்களில் ஒரு சதம் மற்றும் 3 அரை சதம் உட்பட 348 ரன்கள் எடுத்தார். ஆனால் ஏமாற்றமளிக்கும் முடிவுக்குப் பிறகு, அவரது கேப்டன்சி குறித்து விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.

    பாபரின் கேப்டன்சிக்காக பலர் அவரை விமர்சித்து வரும் நிலையில், அவரது அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் அப்ரிடி, அவரது கேப்டனுக்கு மிகவும் ஆதரவாக இருந்தார்.

    கொஞ்சம் மரியாதை காட்டுங்கள் என்று ரசிகர்களை வலியுறுத்திய ஷஹீன் டுவிட்டரில் ஒரு பெரிய பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், பாபர் அசாம் எனது பெருமை, பாகிஸ்தானின் பெருமை என்று பாராட்டிய அவர், ரசிகர்கள் தங்களது ஆதரவைத் தொடருமாறு கேட்டுக் கொண்டதுடன், கதை இன்னும் முடிவடையவில்லை என்றும் குறிப்பட்டிருந்தார்.

    பாகிஸ்தானின் சமீபத்திய தொடர் தோல்வியைத் தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன் தரவரிசையில் ஏழாவது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா தற்போது முறையே முதல் மற்றும் இரண்டாவது இடங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான வரலாற்று வெற்றிக்குப் பிறகு இங்கிலாந்து ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • டி20 கிரிக்கெட் போன்று டெஸ்ட் போட்டியை வீரர்களை பார்க்க வேண்டும்.
    • டி20 வீரர்களை டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தேர்வு செய்ய வேணடும் என ரமீஸ் ராசா விருப்பம்.

    இங்கிலாந்து- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-0 எனக் கைப்பற்றியது. இந்த டெஸ்ட் தொடரை அனைவரும் உற்று நோக்கினர். இதற்கு காரணம் இங்கிலாந்து அணியின் அணுகுமுறைதான்.

    இங்கிலாந்து அணி எந்தவித அச்சமின்றி தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுதான். வெற்றிக்காக மட்டுமே விளையாட வேண்டும். டிரா என்பதில் பலனில்லை என்ற கொள்கையை வகுத்துள்ளது.

    இந்திய அணி கேப்டன் கே.எல். ராகுலும் வங்காளதேசத்திற்கு எதிராக அதே அணுகுமுறையில்தான் விளையாடுவோம் என்றார். ஆனால், முதல் இன்னிங்சில் இந்திய விக்கெட்டுகள் சரிய நிதானமான ஆட்டத்தை கடைபிடித்தது.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் ரமீஸ் ராஜாவும், அதிரடி ஆட்டத்தை விரும்புவதாகவும் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டை டி20 கிரிக்கெட் போன்று பார்க்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பாபர் அசாமிடம் கேட்டபோது, எல்லா விசயங்களும் ஒரே நாள் அல்லது ஒரு வாரத்தில் மாற்றிவிட முடியாது என்றார்.

    2-வது டெஸ்ட் போட்டியை நேரில் பார்த்தபோது பேட்டியளித்த போது ரமீஸ் ராஜா கூறியதாவது:-

    இங்கிலாந்தை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டு, ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் டி20 போன்று விளையாட வேண்டும் என பாபர் அசாமிடம் நான் பரிந்துரைத்தேன். ஆகவே, நீங்கள் சிறந்த டி20 வீரர்களை தேர்வு செய்ய வேண்டும். இது பாகிஸ்தானின் மீது கட்டாயப்படுத்தப்பட்ட மனநிலை, இது எனக்கு முற்றிலும் பிடிக்கும்.

    தற்போது இங்கிலாந்து விளையாடி வருவதுபோன்று, இது டி20 வடிவ கிரிக்கெட் என வருங்கால வீரர்கள் கருத வேண்டும் என விரும்புகிறேன்.

    இவ்வாறு ரமீஸ் ராஜா தெரிவித்திருந்தார்.

    இதுகுறித்து பாபர் அசாமிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பாபர் அசாம் பதில் அளித்து கூறியதாவது:-

    கதவு எதற்காகவும் மூட்டப்படவில்லை. எல்லாவற்றிற்காகவும் திட்டம் தீட்டப்பட்டது. ஒவ்வொரு வடிவ கிரிக்கெட்டிற்கும் நான் அதை செய்கிறோம். விசயங்கள் நீங்கள் ஒரே நாள் அல்லது ஒரு வாரத்தில் மாற்ற முடியாது. அதற்கு நேரம் எடுக்கும். மனநிலையை மாற்றுவதற்கு நேரம் தேவை. அப்புறம், நாங்கள் பாதுகாப்பான ஆட்டத்தை விளையாடும்போது, பத்திரிகையாளர்கள் நீங்கள் ஏன் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை எனக் கேட்கிறார்கள்.

    நாங்கள் ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தும்போது, ஏன் மாற்று வழியில் விளையாடவில்லை எனக் கேட்கிறார்கள். அங்கே எப்போதுமே கேள்விகள் எழுப்பப்படும், எல்லோரையும் சந்தோசப்படுத்த முடியாது. இறுதியாக போட்டியின் முடிவுதான் விசயம். முடிவு சரியாக கிடைக்காவிடில், கேள்விகள் எழுப்பப்படும். நாம் என்ன செய்தோம்? என்பது விசயம் அல்ல...

    இவ்வாறு பாபர் அசாம் தெரிவித்தார்.

    • சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 0-3 என இழந்தது.
    • இங்கிலாந்து பாஸ்பால் (BazBall) அணுகுமுறை கடைபிடித்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

    இங்கிலாந்து அணி கடந்த 2005-ம் ஆண்டுக்குப்பின் முதன்முறையாக பாகிஸ்தான் சென்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. மூன்று போட்டிகளிலும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பெற்று பாகிஸ்தானை ஒயிட்வாஷ் செய்தது.

    இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பயிற்சியாளர் பிரெண்டன் மெக்கல்லம் ஆகிய இருவரும் அச்சமின்றி அதிரடியாக விளையாட வேண்டும் என்ற மனப்போக்கு கொண்டவர்கள். அவர்கள் எண்ணம்போல் இங்கிலாந்து அணி செயல்பட்டது.

    பாகிஸ்தான் அணியால் எந்த வகையிலும் ஈடுகொடுக்க முடியாமல் போனது. இதனால் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் பாகிஸ்தான் அணியை வசை பாடி வருகின்றனர். குறிப்பாக பாபர் அசாம் கேப்டன் குறித்து முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

    முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் கூறியதாவது:-

    எந்தவொரு அணிக்கும் பாகிஸ்தான் மண்ணில் தொடரை வெல்வது மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இங்கிலாந்துக்கு இது மிகப்பெரிய சாதனை. இங்கிலாந்து நீண்ட வருடம் கழித்து பாகிஸ்தான் மண்ணில் விளையாட வந்தனர். இது வரலாற்று தொடரை. அவர்கள் பாகிஸ்தானை ஒரு சரித்திரம் ஆக்கினார்கள். அவர்கள் நம்மிடம் ''உங்களுடைய கிரிக்கெட், மனநிலை, சிஸ்டம் ஆகியவற்றை அம்பலப்படுத்திவிட்டோம். தற்போது, அதை எப்படி முன்னேற்ற முடிவு செய்யப் போகிறீர்கள்'' என தெரிவித்துள்ளனர்.

    நாம் எங்கே தவறு செய்தோம் என்று நமக்குத் தெரியும். நமது அணிக்காக அறிமுகம் ஆனவர்கள், அதற்கு தகுதியானவர்கள்தானா?. நாம் ஆடுகளத்திற்கு ஏற்ப 11 பேருடம் விளையாடினோமா?. கேப்டன் தொழில் சரியாக செய்யப்படவில்லை. நீங்கள் பென் ஸ்டோக்ஸ், பாபர் அசாமின் கேப்டன் பதவியை பாருங்கள். பாபர் அசாம்தான் பாகிஸ்தானின் நீண்ட நாள் கேப்டனாக இருந்துள்ளார். குறைந்த பட்சம் தற்போதாவது முதிர்ச்சி அடைந்திருக்கனும். சிறந்த முடிவுகளை எடுத்திருக்கனும். மைதானத்தில் தங்களுடைய இருப்பை சிறந்ததாக ஆக்கியிருக்கனும். அவரிடம் எந்தவிதமான நேர்மறையாக விசயங்களும் தென்படவில்லை.

    முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து, எவ்வொரு முறையும் பத்திரிகையாளர் சந்திப்பு, வர்ணனையாளர்கள், மீடியாக்களில் ஒவ்வொருவரும் பாகிஸ்தானை இங்கிலாந்து டாமினெட் செய்ததாக பேசினார்கள். ஒருவர் கூட நம்பை பற்றி பேசவில்லை. பாராட்டவில்லை. ஏனென்றால், நாம் எதிர்மறையாக அணுகுமுறையுடன் விளையாடினோம்'' என்றார்.

    • பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அணியை கட்டமைக்க சிறுது காலம் தேவை.
    • கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை.

    கராச்சி:

    பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயனம் மேற்கொண்ட இங்கிலாந்து அணி அங்கு நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பாகிஸ்தானை வீழ்த்தி 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. பாகிஸ்தான் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்த டெஸ்ட் தொடரை 0-3 என்ற கணக்கில் முழுமையாக இழந்ததால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பாகிஸ்தான் அணி பெரும் சரிவை சந்தித்துள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தோல்வியின் காரணமாக முன்னாள் வீரர்கள் பலர் தங்களது கருத்தை வெளியிட்டு வருகின்றனர். அதில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் டேனிஷ் கனேரியா கூறும் போது பாபர் அசாம் கேப்டனாக பெரிய பூஜ்ஜியம் என்றும், முக்கியமாக அவருக்கு டெஸ்ட் அணியை வழிநடத்தும் திறன் இல்லை என்றும் கூறியிருந்தார்.

    இந்நிலையில், கேப்டன் பதவியால் எனது பேட்டிங் பாதிக்கப்படவில்லை என பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    கேப்டன் பொறுப்பு எனது பேட்டிங்கை பாதிக்கவில்லை. சொல்லப்போனால் அழுத்தமான நேரங்களில் பேட்டிங் செய்வதை நான் அணுபவித்து விளையாடுவேன். கேப்டன் பொறுப்பு என்பது ஒரு மரியாதை. நான் எப்பொழுதும் எனது நாட்டுக்காக எனது சிறந்த செயல்பாட்டை அளிக்க நினைக்கிறேன்.

    என்னைப்பொறுத்தவரை முதலில் பாகிஸ்தான் தான், அதன் பின்னர் தான் மற்றவை. தோல்வி அடைந்தால் எனது அணி வீரர்களை நான் காப்பேன், நான் தோல்வி அடைந்ததற்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வேன். எனது அணியினருக்கு முன் நான் இருப்பேன்.

    டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்ததற்கும் நான் பொறுப்பேற்கிறேன். பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் அணியை கட்டமைக்க சிறுது காலம் தேவை. டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள இளைஞர்களை நாங்கள் ஊக்குவிக்க வேண்டும். நாங்கள் இப்போது ஒரு டெஸ்ட் அணியை உருவாக்கும் கட்டத்தில் இருக்கிறோம். இது தான் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆறு அறிமுக வீரர்களுக்குக் காரணம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • முதல் நாள் முடிவில் இங்கிலாந்து ஒரு விக்கெட்டுக்கு 7 ரன் எடுத்துள்ளது.

    கராச்சி:

    இங்கிலாந்து கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நடந்த முதல் டெஸ்டில் 74 ரன் வித்தியாசத்திலும், முல்தானில் நடந்த இரண்டாவது டெஸ்டில் 26 ரன் வித்தியாசத்திலும் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 79 ஓவரில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கேப்டன் பாபர் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். அகா சல்மான் அரை சதமடித்து 56 ரன்னில் வெளியேறினார். அசார் அலி 45 ரன்னிலும், ஷான் மசூத் 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    இங்கிலாந்து சார்பில் ஜாக் லீச் 4 விக்கெட்டும், ரேஹான் அகமது 2 விக்கெட்டு வீழ்த்தினர்.

    அடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

    முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 7 ரன் எடுத்துள்ளது.

    • டி 20-யில் பாபர்- ரிஸ்வான் ஜோடி அபாரமாக விளையாடு வருகிறது
    • இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் பெரிதாக ஜொலிக்கவில்லை

    பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது, ராவல்பிண்டி, முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

    பாதுகாப்பு காரணமாக சுமார் 15 ஆண்டுகள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த இங்கிலாந்து, தற்போது சுற்றுப் பயணம் செய்து தொடரையும் வென்றுள்ளது. பாகிஸ்தான் தோல்வியை அந்நாட்டு ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

    பாகிஸ்தான் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காததுதான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விட்டால், பாகிஸ்தான் அதன்பின் குறைந்த ஸ்கோரில் சுருண்டு விடுகிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அது டி20யாக இருந்தாலும் சரி, டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி.

    முல்தான் டெஸ்ட் நேற்றோடு முடிவடைந்தது. தோல்விக்குப் பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது ஒரு பத்திரிகையாளர் ''இந்த கேள்வி ரசிகர்கள் சார்பில் கேட்கப்படுகிறது. பாபர் அசாம், ரிஸ்வான் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அணியின் ஸ்கோர் உங்கள் இருவரையும் சார்ந்து இருப்பதுதான் அதற்கு காரணம்'' எனக் கேள்வியை எழுப்பினார்.

    கேள்வியை பத்திரிகையாளர் முடிப்பதற்குள், பாபர் ஆசம் கோபம் அடைந்து ''ஆகவே, நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள்?. நாங்கள் டெஸ்ட்களில் விளையாடுவதை நிறுத்த வேண்டுமா?'' என ஆவேசம் அடைந்தார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத பத்திரிகையாளர் ''இல்லை. இந்த விசயத்தில் உங்களுடைய எண்ணம் என்ன? என்பதை தான் கேட்டேன். உங்கள் வீரர்கள் டி20-யில் விளையாட வேண்டுமா?'' என்றார்.

    இதுதொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பாபர் அசாம் ''நான் இதுபோன்று எதையும் நினைக்கவில்லை'' எனத் தெரிவித்தார்.

    • டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார்.
    • 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆம் தேதி டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் முதல் முறையாக முதல் இடத்திற்கு முன்னேறி இருந்த சூர்யகுமார் யாதவ் (890 புள்ளிகள்) தற்போது அதை தக்கவைத்துள்ளார்.

    நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் அதிரடி சதம் விளாசி இருந்த சூர்யகுமார் 31 புள்ளிகள் கூடுதலாக பெற்று 890 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். பாகிஸ்தான் அணியின் முகமது ரிஸ்வான் 836 புள்ளிகளுடன் இந்த பட்டியலில் தொடர்ந்து 2-வது இடத்தில் நீடிக்கிறார்.

    அதே நேரத்தில் 3-வது இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் 4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். நியூசிலாந்தின் டெவோன் கான்வே 3-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே உள்ளார்.

    இந்த பட்டியலில் கோலி 13-வது இடத்திலும், லோகேஷ் ராகுல் 19-வது இடத்திலும், ரோகித் சர்மா 21-வது இடத்திலும், இஷான் கிஷன் 33-வது இடத்திலும் ஹர்திக் பாண்டியா 50-வது இடத்திலும் உள்ளனர்.

    பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியாவின் புவனேஸ்வர் குமார் 11-வது இடத்திற்கும், அர்ஷ்தீப் 21-வது இடத்திற்கும் முன்னேறியுள்ளனர்.

    இந்த பட்டியலில் இலங்கை வீரர் ஹசரங்கா முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) மற்றும் அடில் ரசித் (இங்கிலாந்து) உள்ளனர்.

    ஐசிசி டி20ஐ பேட்டிங் தரவரிசை (நவம்பர் 23, 2022 நிலவரப்படி)

    சூர்யகுமார் யாதவ் - 890 புள்ளிகள் முகமது ரிஸ்வான் - 836 புள்ளிகள் டெவோன் கான்வே - 788 புள்ளிகள் பாபர் ஆசம் - 778 புள்ளிகள் ஐடன் மார்க்ரம் - 748 புள்ளிகள் டேவிட் மாலன் - 719 புள்ளிகள் கிளென் பிலிப்ஸ் - 699 புள்ளிகள் ரெய்லி ரூஸோ- 693 புள்ளிகள் ஆரோன் பின்ச் - 680 புள்ளிகள் பதும் நிசாங்கா- 673 புள்ளிகள்

    ×