search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    டெஸ்ட்களில் விளையாடுவதை நிறுத்த வேண்டுமா? பத்திரிகையாளர் கேள்வியால் கோபமடைந்த பாபர் அசாம்
    X

    டெஸ்ட்களில் விளையாடுவதை நிறுத்த வேண்டுமா? பத்திரிகையாளர் கேள்வியால் கோபமடைந்த பாபர் அசாம்

    • டி 20-யில் பாபர்- ரிஸ்வான் ஜோடி அபாரமாக விளையாடு வருகிறது
    • இங்கிலாந்துக்கு எதிராக பாகிஸ்தான் பேட்டிங் பெரிதாக ஜொலிக்கவில்லை

    பாகிஸ்தான்- இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது, ராவல்பிண்டி, முல்தானில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.

    பாதுகாப்பு காரணமாக சுமார் 15 ஆண்டுகள் பாகிஸ்தான் சென்று விளையாடாமல் இருந்த இங்கிலாந்து, தற்போது சுற்றுப் பயணம் செய்து தொடரையும் வென்றுள்ளது. பாகிஸ்தான் தோல்வியை அந்நாட்டு ரசிகர்கள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

    பாகிஸ்தான் தோல்விக்கு பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்கள் சேர்க்காததுதான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மேலும், அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம், முகமது ரிஸ்வான் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து விட்டால், பாகிஸ்தான் அதன்பின் குறைந்த ஸ்கோரில் சுருண்டு விடுகிறது. இது அந்த அணிக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. அது டி20யாக இருந்தாலும் சரி, டெஸ்ட் போட்டியாக இருந்தாலும் சரி.

    முல்தான் டெஸ்ட் நேற்றோடு முடிவடைந்தது. தோல்விக்குப் பின் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது ஒரு பத்திரிகையாளர் ''இந்த கேள்வி ரசிகர்கள் சார்பில் கேட்கப்படுகிறது. பாபர் அசாம், ரிஸ்வான் டி20 போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். அணியின் ஸ்கோர் உங்கள் இருவரையும் சார்ந்து இருப்பதுதான் அதற்கு காரணம்'' எனக் கேள்வியை எழுப்பினார்.

    கேள்வியை பத்திரிகையாளர் முடிப்பதற்குள், பாபர் ஆசம் கோபம் அடைந்து ''ஆகவே, நீங்கள் என்ன சொல்ல முயற்சிக்கிறீர்கள்?. நாங்கள் டெஸ்ட்களில் விளையாடுவதை நிறுத்த வேண்டுமா?'' என ஆவேசம் அடைந்தார்.

    இதை சற்றும் எதிர்பார்க்காத பத்திரிகையாளர் ''இல்லை. இந்த விசயத்தில் உங்களுடைய எண்ணம் என்ன? என்பதை தான் கேட்டேன். உங்கள் வீரர்கள் டி20-யில் விளையாட வேண்டுமா?'' என்றார்.

    இதுதொடர்பான கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்க நினைத்த பாபர் அசாம் ''நான் இதுபோன்று எதையும் நினைக்கவில்லை'' எனத் தெரிவித்தார்.

    Next Story
    ×