search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ayyanar"

    • 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர்.
    • இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

    சிங்கம்புணரியில் உள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சேவகப்பெருமாள் அய்யனார் கோவில் உள்ளது. சிங்கம்புணரி வட்டார பகுதியில் உள்ள 100 கிராம மக்களின் குலதெய்வமாக விளங்கும் இந்த கோவில் ஆயிரம் ஆண்டுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். இந்த கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.

    இதை தொடர்ந்து 21 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகத்திற்காக கோவில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு திருப்பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்றன. திருப்பணி குழு தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராம அருணகிரி தலைமையில் கோவில் அருகில் யாகசாலை அமைப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    வருகிற 1-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த திருப்பணி குழுவினர் முடிவு செய்தனர். விழாவிற்கு சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் பல்வேறு அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பொன்னம்பல அடிகளார் மற்றும் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    தற்போது பிரமாண்டமாக யாகசாலை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

    வருகின்ற 29-ந் தேதி (திங்கட்கிழமை) காலை 5 மணி முதல் யாகசாலையில் சிறப்பு வேள்வி நிகழ்ச்சிகள் தொடங்கி முதல் கால பூஜையுடன் கும்பாபிஷேகம் தொடங்குகிறது. பின்னர் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்ற 1-ந் தேதி (வியாழக்கிழமை) அன்று மகா கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் ராம.அருணகிரி, தேவஸ்தான மேலாளர் இளங்கோவன், தேவஸ்தான கண்காணிப்பாளர் தண்ணாயிரம் திருப்பணி குழு கமிட்டியினர் மற்றும் அடைக்கலம் காத்த நாட்டார்கள் பரம்பரை ஸ்தானீகம் சிவாச்சாரியார்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று காலையும் மாலையும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது.
    • கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    திருச்சிற்றம்பலம்- பட்டுக்கோட்டை சாலையில் உள்ள அலிவலம் கிராமத்தில், பழமையான பூர்ண புஷ்கலா மண்ணுமுடைய அய்யனார் கோவில் உள்ளது. அதே பகுதியில் பக்தநேய ஆஞ்சநேயர் கோவிலும் உள்ளது. இவ்விரு கோவில்களிலும் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, திருப்பணி வேலைகள் நடைபெற்றன. திருப்பணி வேலைகள் அனைத்தும் நிறைவு பெற்ற நிலையில், நேற்று காலை கணபதி பூஜை நடைபெற்றது. மாலை கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜைகள் தொடங்கின.

    இன்று(புதன்கிழமை) காலையும் மாலையும் யாகசாலை பூஜைகள் நடக்கிறது.

    நாளை( வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு குறிச்சி செந்தில் ஆண்டவர் மந்திராலய நிறுவனர் தன. ராமலிங்க சுவாமிகளின் ஆன்மிக சொற்பொழிவு நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்குகிறது. காலை 10.30 மணிக்கு மண்ணுமுடைய அய்யனார், பக்தநேய ஆஞ்சநேயர் மற்றும் அதன் பரிவார தெய்வங்களின் கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடக்கிறது.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடக்கிறது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படுகிறது. விழா ஏற்பாடுகளை அலிவலம் ஆஞ்சநேயர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், திருப்பணி குழுவினர் மற்றும் அலிவலம் கிராம மக்கள் செய்து உள்ளனர்.

    • இரவில் சாமி வீதி உலா நடைபெற்றது
    • பக்தர்கள் பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    கடலூர் அருகே தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகு முத்து அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பின்புறத்தில் அழகர் சித்தர் ஜலசமாதி அடைந்த கிணறு உள்ளது சிறப்பு அம்சமாகும். இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை அன்று சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று முன்தினம் அங்குள்ள மலட்டாற்றில் இருந்து கரகங்கள் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை சுற்றியுள்ள மாரியம்மன் கோவில்களில் சாகை வார்த்தல் உற்சவம் நடைபெற்றது.

    தொடர்ந்து அழகுமுத்து அய்யனார் மற்றும் அழகர் சித்தர் சன்னதி, பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையடுத்து விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை மலட்டாற்றில் இருந்து காவடியும், பொன்னி அம்மன் கோவிலில் இருந்து கரகமும் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்னர் அழகர் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து தென்னம்பாக்கம் ஆற்றில் அழகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து மாலையில் வேட சாத்தான் கோவிலில் இருந்து கரகம் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.

    இதில் ஒரே நேரத்தில் 108 நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை இசைக்க உற்சவர் பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

    இதனை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து மகிழ்ந்தனர். இரவில் சாமி வீதி உலா நடைபெற்றது.

    விழாவில் கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மாநிலம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பலர் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கோவிலில் பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் செய்து இருந்தனர்.

    • இன்று கோபூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.
    • திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பாவாஜிக்கோட்டை கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்து நாளை(ஞாயிறுக்கிழமை) குடமுழுக்கு நடக்கிறது. விழாவையொட்டி இன்று(சனிக்கிழமை) காலை 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், தனபூஜை, கோபூஜை ஆகியவையும், மாலை 5 மணிக்கு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல் கால யாக பூஜை, அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகியவை நடக்கிறது.

    நாளை காலை 6 மணிக்கு 2-ம் கால யாகசாலை பூஜை தொடக்கம், தீபாராதனையும், 9.45 மணிக்கு கடம்புறப்பாடு, 10 மணிக்கு விமான குடமுழுக்கும், 10.15 மணிக்கு மூலவர் குடமுழுக்கும் நடக்கிறது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இதற்கான ஏற்பாடுகளை அத்திவெட்டி மறவக்காடு முத்துவைரவ ஆகாசம் சேர்வைக்காரர், பாலோஜி ரெகுநாதசமுத்திரம் கிராம மக்கள், பாவாஜிக்கோட்டை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.

    • திருவிழா 3-ந்தேதி மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது.
    • கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 3-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு மாவிளக்கு பூஜையுடன் தொடங்குகிறது. இதில் நாட்டில் அமைதி வேண்டியும், நல்ல கனமழை பொழிந்து நாடு செழிக்க வேண்டியும் பாடல்கள் பாடி பெண்கள் வழிபாடு நடத்துகிறார்கள். இரவு 7 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணிக்கு மேளதாளத்துடன் பால்குடம் எடுத்து வருதல், 9 மணிக்கு தாமிரபரணி தீர்த்தம் கொண்டு வருதல், 10 மணிக்கு வில்லிசை, 11 மணிக்கு சுவாமி கற்குவேல் அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடக்கிறது.

    மதியம் 12 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான மக்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். பக்தர்கள் வந்து செல்ல வசதியாக திருச்செந்தூரில் இருந்து கோவில் வரை தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தக்கார் அஜித், செயல் அலுவலர் காந்திமதி மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • இக்கோயிலை எட்டு பங்கு இந்து நாடார் உறவின் முறையினர் நிர்வகித்து வருகின்றனர்.
    • ஆண்டுதோறும் இக்கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருவிழா நடைபெறுகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ளது மேலப்புதுக்குடி. இவ்வூரில் அமைந்துள்ளது அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில். சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு திருவைகுண்டத்தை தலைமையிடமாக கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இப்பகுதியை ஆண்டு வந்தான். அப்பகுதியில் தடாகம்(நீர்நிலை) ஒன்று இருந்தது. அதிலுள்ள நீர் பன்னீர் போன்று தெளிந்தும், சுவை மிக்கதாகவும் இருந்தது. ஒரு முறை இந்த தடாகத்தில் இருந்து கனகமணி என்ற கன்னிப்பெண் ஒருவர் குடத்தினில் தண்ணீர் எடுத்துக்கொண்டு வீடு திரும்பினாள். கானகத்தின் வழியே நடந்து சென்றபோது வழியில் கல்லால் கால் இடறி விழுந்தாள். அவள் விழுந்ததால் குடத்து நீர் அவ்விடத்தில் தவம் செய்து கொண்டிருந்த முனிவரை நனைத்தது. தவநிலை கலைந்த முனிவர் கடும்சினம் கொண்டார்.

    கவனச்சிதறலால் கால் இடறி விழுந்த கன்னிகையே, ''உன் கையால் எவர் நீர் வாங்கி அருந்தினாலும் அடுத்த கனமே அவர் மாண்டுபோவார். இதை நீ வெளியே தெரிவித்தால் மறுகனமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்காக மரிப்பாய்'' என்று சாபம் இட்டார். ''அனைத்தும் அறிந்த மாமுனியே, அறியாது செய்த பிழைக்கு மாபெரும் தண்டனையா,'' என்று மங்கையவள் வினவ, ''பெண்ணே, நீ இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும். மரணத்திற்கு பிறகு நீ சொர்க்கம் போவாய்'' என்று உரைத்தார் அவர்.

    இந்நிலையில் மன்னன் சிங்கராஜன் தினமும் உண்டு வந்த கனி மரம் தினமும் ஒரு கனி தான் காய்க்கும். அக்கனியை தான் மன்னன் உண்டு வந்தான். மரத்திலிருந்து விழும் கனி மன்னன் வருகைக்காக அதே இடத்தில் கிடக்கும். அதை யாரும் எடுத்து விடக்கூடாது என்பதற்காக மன்னனின் காவலாட்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் அங்கு காவல் காத்து வந்தனர். வழக்கம் போல் தடாகத்தில் தண்ணீர் எடுத்து வந்த கனகமணியின் குடத்திற்குள் அந்த கனி விழுந்து விட்டது. இதை காவலாட்களும், காண்கவில்லை, கன்னி கனகமணியும் கவனிக்கவில்லை. குடத்து நீருடன் குமரி அவள் இல்லம் சென்றாள். வரும் வழியில் இருபத்தோரு தேவாதி தேவாதைகள் எதிரில் வந்தன. அவைகள் தாகத்தோடு இருக்கிறோம்.

    பெண்ணே தண்ணீர் கொடு என்று கனகமணியிடம் கேட்க, திடுக்கிட்டாள் அவள். காரணம் முனிவர் இட்ட சாபம் நினைவுக்கு வந்தது. யாருக்கேனும் நீ தண்ணீர் கொடுத்தால் அவர்கள் மரணம் அடைவார்கள். இந்த ரகசியத்தை எடுத்துக்கூறினால் நீ மரித்து போவாய் என்றது. அதை எண்ணி தண்ணீர் கொடுக்க மறுத்தாள் கனகமணி. அப்போது தாகத்தால் நாங்கள் மரணித்து போய் விடுவோம் போல் உள்ளதே என்று கெஞ்சின. மனதை கல்லாக்கிய மங்கை கனகமணி தண்ணீர் கொடுக்க மறுத்து சினத்துடன் வழியை விட்டு விலகி செல்லுங்கள். நான் அனுதினமும் வழிபடும் அரிஹர புத்திரன் மீது ஆணை என்றுரைக்க, தேவாதைகள் வழிவிட்டன. அவள் வீடு போய் சேர்ந்தாள்.

    கானகத்தில் பசியோடு கனி தேடி மரத்தடி வந்தான் மன்னவன். காவலாட்கள் இன்னும் கனி விழவில்லை என்றனர் கனிவோடு, கடுஞ்சினம் கொண்ட மன்னன் நேரம் தவறிவிட்டது. விழாமல் இருக்காது கனி. காரணம் இது இறைவன் கொடுத்த அருட்பணி. மாலை பொழுதாக போகிறது மறுபடியும் விழாது இனி. கனியை உண்டது உங்களில் யார் என்று வினவ, மறைத்து வைக்கவே மனமிருக்காது. மறந்தும் மன்னவருக்கு உரிய கனியை உண்ண நேருமோ, மரணத்தை மனம் உவர்ந்து வரவேற்க யார் முன் வருவா் என்று காவலர்கள் பதில் உரைத்தனர். அப்படியானால் கனி களவாடப்பட்டிருக்கிறது. காப்பவனை விட கள்வனே பெரியவனாகி விட்டான்.

    ''சரி, எப்படியானாலும் இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் நான் கனியை உட்கொள்ள வேண்டும். ஊருக்குள் செல்லுங்கள். ஒரு வீடு விடாமல் தேடுங்கள். கனியோடு வாருங்கள். இல்லையேல் உங்களில் ஒருவருக்கும் தலை தப்பாது'' என்று எச்சரித்தார். மன்னன் கட்டளையை ஏற்று காவலர்கள் ஊருக்குள் சென்று எல்லா வீடுகளிலும் தேடினர். கடைசியில் கனகமணி வீட்டில் தேடும் போது குடத்திற்குள் நீரோடு கனியும் இருக்க கண்டனர். கனி எடுத்த காவலர்கள் கன்னியவளை இழுத்து வந்தனர். மன்னன் முன் நிறுத்தினர். காவலர்கள் கூறினர் குடத்தில் நீருக்குள் இருந்தது. அப்போது அவ்விடம் வந்த தேவாதைகள், ''கொற்றவனே நாங்கள் உரைப்பதையும் ஒரு கனம் கேளீர், குடத்து நீரில் கனியை இவள் களவாடி சென்றிருக்கவேண்டும்.

    அதனால்தான் குரல் வளை காய்ந்து குடிக்க நீரை மன்றாடி கேட்டும், குமரி இவள் மறுத்து போனதன் மர்மம் இப்போது புரிகிறது''என்றனர். அப்போது அங்கு வந்த பேச்சியம்மன், ''முதுமையடைந்த பெண்ணாய் வந்து மன்னா, இவள் களவாட வில்லை. கனி தானாக விழுந்தது'' என்றுரைத்தும் மன்னன் கேளாமல் மங்கை இவளுக்கு மரண தண்டனையை. உடனே நிறைவேற்றுங்கள் என்று கட்டளையிட்டான். மன்னனின் கட்டளையை ஏற்ற காவலர்கள் கன்னி கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினர். இறக்கும் தருவாயில் அரிஹரபுத்திரனை அழைத்தாள். நான் வணங்கும் அய்யனே என்று தனது தெய்வத்தை அழைத்தாள் கனகமணி. அவள் பக்திக்கு மனமிறங்கி வந்தார் சாஸ்தா. ''கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன்'' என்றார் சாஸ்தா.

    ''வேண்டாம் அப்பனே, இப்பிறவியில் நான் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை விரும்பவில்லை. இறக்கும் தருவாயில் நான் எண்ணியது நிறைவேறும் என்றார் அந்த மாமுனி. எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ, அது போல் இனி எவரும் தண்ணிக்கு அலைந்து சாபம் பெறக்கூடாது என்பதற்காக நான் இவ்விடம் சுனையாக மாறி இருக்க விரும்புகிறேன். சுவாமி, சுனையை யாரும் அபகரிக்காமலும், மற்றவர்கள் பயன்பாட்டுக்கு இல்லாமல் வேலியிட்டு தடுக்காமலும் இருக்க, அய்யனே நீரே, சுனையை காத்தருள வேண்டும்'' என்றார்.''அருமையான சுனையாக மாறும் உன்னை காத்தருள்வேன் என்று உறுதியளித்த அய்யன் சாஸ்தா, இவ்விடம் அருஞ்சுனை காத்த அய்யனார்''என்று அழைக்கப்பட்டார். மன்னன் மதி மயங்கி தவறு இழைத்துவிட்டேன் என எண்ணி, தனது உயிரை மாய்த்துக்கொண்டான்.

    இருபத்தோரு தேவாதைகள் அய்யனாரிடம் மன்னிப்பு கோரின. அதன் பின்னர் அவர்களுக்கு தனது இருப்பிடத்தில் இடம் கொடுத்து தனது கண்காணிப்பில் வைத்துக்கொண்டார் அய்யனார். மூலவர் பூர்ண புஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேஸ்வரி அம்மன், தளவாய்மாடன், வன்னியடி ராஜன், கருப்பசாமி, சுடலைமாடன், இசக்கியம்மன், பட்டாணி சாமி, முன்னோடி முருகன் அருள்பாலிக்கின்றனர். இங்குள்ள சுனையில் குளித்தால் தீராத பினிகளும் விலகும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பட்ட கடன் தீரவும், இட்ட துயர் மாறவும் இத்தலம் வந்து அருஞ்சுனை காத்த அய்யனாரை வழிபட்டால் அவை மாறிவிடுகிறது.

    துன்பங்களை நீக்கி அருமையான வாழ்க்கையை அருள்கிறார் அருஞ்சுனை காத்த அய்யனார். இக்கோயிலை எட்டு பங்கு இந்து நாடார் உறவின் முறையினர் நிர்வகித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இக்கோயிலில் பங்குனி உத்திரத்தையொட்டி திருவிழா நடைபெறுகிறது. திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் பாதையில் குரும்பூரிலிருந்து ஐந்து கி.மீ. தொலைவிலுள்ள மேலப்புதுக்குடியில் அருஞ்சுனை காத்த அய்யனார் கோயில் உள்ளது. அம்மன்புரத்திலிருந்து மூன்று கி.மீ தொலைவில் உள்ளது.

    சு. இளம் கலைமாறன், ரா.பரமகுமார்

    • இந்த விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.
    • 4-ந் தேதி பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மேல புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலும் ஒன்றாகும். எட்டு பங்கு இந்து நாடார்களுக்கு பாத்தியப்பட்ட இக்கோவிலில் பங்குனி உத்திர திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். அதன்படி, இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடக்கிறது. அதைத்தொடர்ந்து 5 மணியில் இருந்து 6 மணிக்குள் சன்னதிக்கு முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்படுகிறது. மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் உச்சி கால சிறப்பு பூஜை நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் மதியம் 12 மணிக்கு புஷ்ப அலங்காரத்துடன் உச்சிகால பூஜையும், 11 மணிக்கு சப்பரத்தில் உற்சவ அய்யனார் எழுந்தருளி கோவிலை வலம் வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    6-வது திருநாளான 31-ந் தேதி (வௌ்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், மதியம் சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து 1 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. 10-ம் திருநாளான 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பங்குனி உத்திர திருவிழா நடக்கிறது.

    அன்று காலை 10.30 மணிக்கு பங்குனி உத்திர கும்பாபிஷேகம், மதியம் 12.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையை தொடர்ந்து 2 மணிக்கு பக்தர்கள் சுவாமிக்கு நேமிசங்கள் செலுத்தி வழிபடுகின்றனர். நள்ளிரவு 1 மணிக்கு கற்பக பொன் சப்பரத்தில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    • இந்த கோவில் மிகவும் தொன்மையானது
    • கோவில் சுவரில் மீன்வடிவ சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

    நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும், பொன்னிநதி பாயும் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது நல்ல சேவு அய்யனார் கோவில். இப்பகுதி மக்களுக்கு குலதெய்வமாகவும், எல்லைதெய்வமாகவும், காவல்தெய்வமாகவும் நல்லசேவு அய்யனார் உள்ளார். இந்த கோவில் மிகவும் தொன்மையானது. கோவில் சுவரில் மீன்வடிவ சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

    செவிவழியாக வந்த செய்தியை சிலர் கூறினாலும் எந்த ஆண்டு, யாரால் கட்டப்பட்டது என்பதற்கு தகுந்த சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. இந்த கோவில் தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளிக்கும், தோகூருக்கும் இடையில் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் தென்கரையில் நேமம் கிராமத்தில் அமைந்துள்ளது.

    வெண்பொங்கல் பிரசாதம்

    நல்லசேவு அய்யனாருக்கு வெண்பொங்கல் பிரசாதம் செய்து படைத்து பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக நல்லசேவு அய்யனார் இப்பகுதி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வழிபாட்டுக்காரர்கள் இளங்காடு, நேமம், ராஜகிரி, திருச்சென்னம்பூண்டி, புதுஆற்காடு, பழைய ஆற்காடு, அழமேல்புரம்பூண்டி, நாகாச்சி, மேட்டுப்பட்டி, கோமாகுடி, சிறுமயங்குடி, பழமார்நேரி, கள்ளப்பெரம்பூர், ரெங்கநாதபுரம் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் உள்ளனர்.

    தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, திண்டுக்கல், திருவாரூர், திருச்சி, நாகை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் இந்த கோவிலில் உள்ள நல்லசேவு அய்யனாரை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவில் குடமுழுக்கு கடந்த 1956-ம் ஆண்டு நடைபெற்றது. இந்தநிலையில் இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, வழிபாட்டுக்காரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.

    யானை, குதிரை சிலைகள்

    இந்த திருப்பணிக்குழுவினர் கோவிலில் வழிபாடு செய்பவர்களிடம் நன்கொடையை பெற்று பழமை மாறாமல் புனரமைப்பு செய்ததுடன், பரிவார தெய்வங்களுக்கு புதிய சன்னதிகளும் கட்டப்பட்டன. கோவிலுக்கு எதிரே யானை, குதிரை சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நல்லசேவு அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளாக உள்ள விநாயகர், பால தண்டாயுதபாணி, மலையாள கருப்பு, அகோர வீரபத்திரர், மதுரைவீரன், முனியாண்டவர், நாகர்கள், பட்டவர்கள் ஆகிய தெய்வங்கள் இந்த கோவிலில் உள்ளன. மேலும் மணியுடன் கூடிய மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் குடமுழுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு மகா குடமுழுக்கும், அதைத்தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா குடமுழுக்கும் நடந்தது. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள், கிராமப்பொதுமக்கள் மற்றும் பரம்பரை அறங்காவல் குழுவினர் செய்தனர்.

    கோவிலின் சிறப்புகள்

    இந்த கோவிலில் வருடம்தோறும் குறிப்பிட்ட மாதங்களில் கோவிலுக்குள் உள்ளே இருக்கும் சாமிகள் மீது சூரியபகவான் வசம் செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 9.20 மணி வரை விநாயகர் மேல் சூரியபகவான் வசம் செய்தார். செப்டம்பர் மாதம் 13-ந் தேதி (திங்கட்கிழமை) தண்டாயுதபாணி மேல் காலை 9 மணி முதல் 9.21 மணி வரை சூரியபகவான் வசம் செய்தார். 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி காலை 8 மணி முதல் 8.30 மணி வரை நல்லசேவு அய்யனார் சன்னதி முன் சூரியஒளி விழுந்தது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி காலை 6.30 மணி முதல் 6.45 மணி வரை நல்லசேவு அய்யனார் மேல் சூரியபகவான் வசம் செய்தார்.

    வேண்டிய வரங்கள் கிடைக்கும்

    ஆடிமாதம், தை மாத வெள்ளிக்கிழமைகளில் பொங்கலிட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்து வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பாகும். கார்த்திகை மாதம் சோமவார மண்டகப்படி செய்யப்பட்டு வருகிறது. ஆடிமாதம் 18-ந் தேதியும், 28-ந் தேதியும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வந்து பொங்கலிட்டு முடிகாணிக்கை, காதுகுத்துதல் என தங்களது வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு செல்வார்கள். வெளியூரில் இருந்து வருபவர்களின் வசதிக்காக உணவுக்கூடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் வெள்ளிக்கிழமைதோறும் காவிரிநதியில் நீராடிவிட்டு விளக்கேற்றி பிரகாரத்தை சுற்றி வந்து சாமியை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தைபேறு கிடைக்கும். நாம் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். இந்த கோவிலில் அனைத்து சாதியினரும் வழிபாடு செய்யலாம். எந்த வகையான கட்டுப்பாடுகளும் கிடையாது.

    • அய்யனாரின் வாகனமாக கருதப்படும் குதிரை, 375 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது.
    • இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.

    கடலூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தென்னம்பாக்கம் கிராமம். இங்குள்ள அய்யனார் கோவில், மதுரை அழகர் கோவிலைப் போன்று பிரசித்திப்பெற்றதாகும். இந்தக் கோவிலுக்கு கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும், புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் செல்லலாம். இங்குள்ள இறைவன் 'அழகுமுத்து அய்யனார்' என்று அழைக்கப்படுகிறார். இவர் தலையில் கிரீடமும், வலது கையில் பிரமாண்ட வாளும், இடது கையில் கேடயமும் தாங்கி கம்பீரமாக காட்சி தருகிறார். இவருக்கு அருகில் பூரணி, பொற்கலையும் உள்ளனர். அதோடு பைரவர், சுந்தரேஸ்வரர், விநாயகர், நவக்கிரகங்களும் உள்ளன.

    கோவிலுக்குள் நுழையும் போது பிரமாண்ட குதிரை, யானை சிலைகளை தரிசிக்கலாம். இவற்றில் அய்யனாரின் வாகனமாக கருதப்படும் குதிரை, 375 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. அய்யனார் கையில் உள்ள வாளைச் சுற்றிலும், ஏராளமான வேண்டுதல் சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அய்யனார் நிறைவேற்றுவதாக நம்பிக்கை. அழகுமுத்து அய்யனார் கோவில் பின்புறம், அழகர் சித்தர் கோவில் உள்ளது. 366 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு வந்த சித்தர் ஒருவர், தவம் புரிந்து மக்களின் நோய்களை போக்கியதாகவும், பின்னர் அங்குள்ள கிணற்றில் இறங்கி ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கிணற்றை சுற்றி தற்போது கோவில் எழுப்பப்பட்டு உள்ளது. அந்த கிணற்றுக்கு மேல் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வகையில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கு ஒளியில் சித்தர் காட்சி தருவதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    முன்காலத்தில் தென்னம்பாக்கம் காடுகள் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது. அங்கு அய்யனார் மட்டும் ஆலமரத்தடியில் காட்சி தந்துள்ளார். அய்யனாருக்கு ஊருக்குள் இருந்து ஒரு பூசாரி வந்து, தினமும் ஒரு கால பூஜை மட்டும் செய்து வந்துள்ளார். அந்த நிலையில்தான் அங்கு அழகர் சித்தர் வந்துள்ளார். அவரைக் கண்ட மக்கள், அவரிடம் தங்களின் குறைகளைச் சொல்லி அதற்கு ஆறுதல் தேடியுள்ளனர். மக்களின் குறைகளையும் சித்தர் நிறைவேற்றி வைத்துள்ளார். சித்தர் மறைந்த பிறகு, மக்கள் தங்களின் கோரிக்கை என்னவோ, அதை ஒரு பொம்மையாக செய்து சித்தர் கோவிலின் முன்பாக வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    தற்போது இந்தக் கோவிலைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும், பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, டாக்டர், வக்கீல், போலீஸ் என பல்வேறு பொம்மைகள் காணப்படுகின்றன. குழந்தை வரம் கேட்பவர்கள் 27 நாட்கள் விரதம் இருந்து 3 முறை வந்து சித்தரை வேண்டினால், 28-வது நாள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி வேண்டுதல் நிறைவேறியவர்கள் குழந்தை பொம்மை செய்து கோவில் முன்பாக வைக்கிறார்கள். இதேபோல் கை, கால் பிரச்சினை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து, அது குணமான பிறகு கை அல்லது கால் உருவம் செய்து வைக்கின்றனர். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். அது நிறைவேறியதும், மணமக்கள் கோல பொம்மையை செய்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அந்த வரிசையில் டாக்டர், என்ஜினீயர், வக்கீல், போலீஸ் போன்ற ஆசைகள் நிறைவேறினால், அந்த தோற்றத்தில் செய்யப்பட்ட பொம்மைகளை செய்து வைக்கின்றனர். இப்படி எண்ணற்ற பொம்மைகள் இங்கே இருப்பதை வைத்தே, இந்த ஆலயம் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தற்போது இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.

    கடந்த காலங்களில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டுள்ளனர். அது நாளடைவில் மழையில் நனைந்து கரைந்து போனது. அதனால் தற்போது அனைவரும் சிமெண்டால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கிறார்கள்.

    • பக்தர்கள் கலந்து கொண்டு புனித மணலை எடுத்து வழிபட்டனர்.
    • 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவிலில் ஆண்டுதோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு இந்த திருவிழா கடந்த மாதம் 17-ந்தேதி சிறப்பு அபிஷேகத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வில்லிசை நடந்தது. நேற்று முன்தினம் காலையில் கோவில் முன்பு பெண்கள் வண்ண கோலமிட்டனர். மதியம் சிறப்பு அபிஷேகம், மாலையில் மாவிளக்கு பூஜை, இரவில் புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, உற்சவர் வீதி உலா நடைபெற்றது.

    விழாவின் சிகர நாளான நேற்று காலையில் 108 பால்குடம் ஊர்வலம் நடந்தது. பின்னர் தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வரப்பட்டு, கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

    மாலையில் சுவாமி கள்ளர் வெட்டுக்கு புறப்பட்டார். மாலை 5.45 மணியளவில் கோவில் பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

    இளநீர் என்ற கள்ளரை சுவாமி வெட்டியதும், தேரி மணலில் தண்ணீர் தெறித்து விழுந்தது. அப்போது கூடியிருந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித மணலை போட்டி போட்டு அள்ளி சென்றனர். பக்தர்கள் புனித மணலை தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்று பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். சுபகாரியங்கள் நடைபெறும்போது புனித மணலை பயன்படுத்துவார்கள். உடல் நலம் குன்றியவர்களின் நோய் குணமாக வேண்டியும் புனித மணலை உடலில் பூசுவார்கள்.

    விழாவையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் கோவிலுக்கு வந்து தங்கியிருந்து வழிபட்டனர்.

    • கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் புனித மணல் எடுத்து செல்வார்கள்
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் வட்டம் தேரிக்குடியிருப்பு குதிரைமொழி, தேரியூரில் உள்ள கற்குவேல் அய்யனார் கோவில் தென் மாவட்டங் களில் மிகவும் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இங்கு வருடம் தோறும் கள்ளர் வெட்டு திருவிழா கொண்டாடப்படுகிறது.

    இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 17-ந் தேதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானத்துடன் தொடங்கியது. தினசரி சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் தினசரி வில்லிசையும், தொடர்ந்து நடந்து வந்தது.

    நேற்று கோவில் முன்பு பெண்கள் வண்ண கோலம் இடும் நிகழ்ச்சி, சிறப்பு அபிஷேகம், மாலையில் நாட்டில் நல்ல கனமழை பொழிந்து நாடுசெழிக்க வேண்டி மாவிளக்கு பூஜையும், புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜையும் நடந்தது. கோவில் செயல் அலுவலர் காந்திமதி இருபூஜைகளையும் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.

    திருவிழா தொடங்கியதையொட்டி சென்னை, திருச்சி, மதுரை, சிவகாசி உட்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வேன், பஸ், லாரி போன்ற வாகனங்களில் வந்து குடும்பத்துடன் கோவிலில் தங்கி உள்ளனர்.

    நேற்றுஇரவு உற்சவர் திருவீதி உலாவும், கோவில் கரையரங்கத்தில், இன்னிசை கச்சேரியும் நடந்தது. கள்ளர் வெட்டு திருவிழாவின் முக்கிய நாளான இன்று காலை 8 மணிக்கு 108 பால்குட ஊர்வலம் காலை 9 மணிக்கு கற்குவேல் அய்யனார் பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி தீர்த்தம் எடுத்து மேளதாளத்துடன் வருதல் காலை 10 மணிக்கு அனைத்து சுவாமிகளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    மதியம் 12 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள், மாலை 4 மணிக்கு சுவாமிகள் கள்ளர் வெட்டுக்கு புறப்படுதல். சுமார் 4.30 மணி அளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும். இதைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள். கள்ளர் வெட்டு நடந்த இடத்தில் போட்டி போட்டு புனித மணல் எடுத்து செல்வார்கள் இந்த மணலை பூஜை அறையில் வைத்து வழிபடுவார்கள். நல்ல செயல்கள் நடக்கும் போதும் இந்த மணலை பக்தர்கள் பயன்படுத்துவார்கள்.

    விழாவில் சிறப்பு நிகழ்ச்சி யாக சமய சொற்பொழிவு, வில்லிசை, திரைப்பட இன்னிசை கச்சேரி ஆகியன நடைபெறும். 3 நாள் கோவிலில் தங்கி இருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள் புனித மணல் எடுத்துச் செல்வார்கள். அரசு போக்குவரத்து கழகம் சார்பில்சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. 500-க்கு மேற்பட்ட ஆண், பெண் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தூத்துக்குடி மாவட்ட அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி உதவி ஆணையர் சங்கர் கோயில் தக்கார் அஜித் செயல் அலுவலர் காந்தி மதி மற்றும் ஆலய பணியாளர்கள் செய்து உள்ளனர்.

    • இன்று இரவு உற்சவர் வீதிஉலா வருதல் நடக்கிறது.
    • நாளை அய்யனார், பேச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியூர் கற்குவேல் அய்யனார் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.

    விழாவில் தினமும் காலையில் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் வில்லிசை நடந்து வருகிறது.

    நேற்று காலை 11 மணிக்கு ஐவர்ராஜா மாலை அம்மன் பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் முன்பு பெண்கள் வண்ண கோலமிடும் நிகழ்ச்சி, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டி மாவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு உற்சவர் வீதிஉலா வருதல் நடக்கின்றது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், 9 மணிக்கு கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி கள்ளர் வெட்டுக்கு புறப்படுதல், 4.30 மணி அளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி உள்ளிட்டவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    ×