search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    வேண்டிய வரம் அருளும் நேமம் நல்லசேவு அய்யனார்
    X

    நல்லசேவு அய்யனார் மற்றும் நல்லசேவு அய்யனார் கோவிலின் முகப்பு தோற்றத்தை படத்தில் காணலாம்.

    வேண்டிய வரம் அருளும் நேமம் நல்லசேவு அய்யனார்

    • இந்த கோவில் மிகவும் தொன்மையானது
    • கோவில் சுவரில் மீன்வடிவ சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

    நஞ்சையும், புஞ்சையும் கொஞ்சி விளையாடும், பொன்னிநதி பாயும் காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது நல்ல சேவு அய்யனார் கோவில். இப்பகுதி மக்களுக்கு குலதெய்வமாகவும், எல்லைதெய்வமாகவும், காவல்தெய்வமாகவும் நல்லசேவு அய்யனார் உள்ளார். இந்த கோவில் மிகவும் தொன்மையானது. கோவில் சுவரில் மீன்வடிவ சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

    செவிவழியாக வந்த செய்தியை சிலர் கூறினாலும் எந்த ஆண்டு, யாரால் கட்டப்பட்டது என்பதற்கு தகுந்த சான்றுகள் கிடைக்கப்பெறவில்லை. இந்த கோவில் தஞ்சை மாவட்டம் பூதலூர் தாலுகா திருக்காட்டுப்பள்ளிக்கும், தோகூருக்கும் இடையில் திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கே 4 கிலோமீட்டர் தொலைவில் காவிரியின் தென்கரையில் நேமம் கிராமத்தில் அமைந்துள்ளது.

    வெண்பொங்கல் பிரசாதம்

    நல்லசேவு அய்யனாருக்கு வெண்பொங்கல் பிரசாதம் செய்து படைத்து பூஜை செய்வது வழக்கமாக உள்ளது. பல நூற்றாண்டுகளாக நல்லசேவு அய்யனார் இப்பகுதி மக்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவில் வழிபாட்டுக்காரர்கள் இளங்காடு, நேமம், ராஜகிரி, திருச்சென்னம்பூண்டி, புதுஆற்காடு, பழைய ஆற்காடு, அழமேல்புரம்பூண்டி, நாகாச்சி, மேட்டுப்பட்டி, கோமாகுடி, சிறுமயங்குடி, பழமார்நேரி, கள்ளப்பெரம்பூர், ரெங்கநாதபுரம் மற்றும் சுற்று பகுதிகளில் உள்ள பல கிராமங்களில் உள்ளனர்.

    தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி மதுரை, தேனி, திண்டுக்கல், திருவாரூர், திருச்சி, நாகை, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்களும் இந்த கோவிலில் உள்ள நல்லசேவு அய்யனாரை குலதெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.

    இந்த கோவில் குடமுழுக்கு கடந்த 1956-ம் ஆண்டு நடைபெற்றது. இந்தநிலையில் இந்த கோவிலில் குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, வழிபாட்டுக்காரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது.

    யானை, குதிரை சிலைகள்

    இந்த திருப்பணிக்குழுவினர் கோவிலில் வழிபாடு செய்பவர்களிடம் நன்கொடையை பெற்று பழமை மாறாமல் புனரமைப்பு செய்ததுடன், பரிவார தெய்வங்களுக்கு புதிய சன்னதிகளும் கட்டப்பட்டன. கோவிலுக்கு எதிரே யானை, குதிரை சிலைகள் புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நல்லசேவு அய்யனார் மற்றும் பரிவார மூர்த்திகளாக உள்ள விநாயகர், பால தண்டாயுதபாணி, மலையாள கருப்பு, அகோர வீரபத்திரர், மதுரைவீரன், முனியாண்டவர், நாகர்கள், பட்டவர்கள் ஆகிய தெய்வங்கள் இந்த கோவிலில் உள்ளன. மேலும் மணியுடன் கூடிய மண்டபமும் கட்டப்பட்டுள்ளது.

    இந்த கோவில் குடமுழுக்கு நேற்று (வெள்ளிக்கிழமை) நடந்தது. மூலஸ்தான விமானம் மற்றும் பரிவார மூர்த்திகள் விமானங்களுக்கு மகா குடமுழுக்கும், அதைத்தொடர்ந்து மூலஸ்தானம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மகா குடமுழுக்கும் நடந்தது. குடமுழுக்கிற்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழுவினர், குலதெய்வ வழிபாட்டுக்காரர்கள், கிராமப்பொதுமக்கள் மற்றும் பரம்பரை அறங்காவல் குழுவினர் செய்தனர்.

    கோவிலின் சிறப்புகள்

    இந்த கோவிலில் வருடம்தோறும் குறிப்பிட்ட மாதங்களில் கோவிலுக்குள் உள்ளே இருக்கும் சாமிகள் மீது சூரியபகவான் வசம் செய்து வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் 9.20 மணி வரை விநாயகர் மேல் சூரியபகவான் வசம் செய்தார். செப்டம்பர் மாதம் 13-ந் தேதி (திங்கட்கிழமை) தண்டாயுதபாணி மேல் காலை 9 மணி முதல் 9.21 மணி வரை சூரியபகவான் வசம் செய்தார். 2021-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30-ந் தேதி காலை 8 மணி முதல் 8.30 மணி வரை நல்லசேவு அய்யனார் சன்னதி முன் சூரியஒளி விழுந்தது. 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந் தேதி காலை 6.30 மணி முதல் 6.45 மணி வரை நல்லசேவு அய்யனார் மேல் சூரியபகவான் வசம் செய்தார்.

    வேண்டிய வரங்கள் கிடைக்கும்

    ஆடிமாதம், தை மாத வெள்ளிக்கிழமைகளில் பொங்கலிட்டு சந்தனகாப்பு அலங்காரம் செய்து வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பாகும். கார்த்திகை மாதம் சோமவார மண்டகப்படி செய்யப்பட்டு வருகிறது. ஆடிமாதம் 18-ந் தேதியும், 28-ந் தேதியும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் வந்து பொங்கலிட்டு முடிகாணிக்கை, காதுகுத்துதல் என தங்களது வேண்டுதலை நிறைவேற்றிவிட்டு செல்வார்கள். வெளியூரில் இருந்து வருபவர்களின் வசதிக்காக உணவுக்கூடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.

    குழந்தை வரம் வேண்டி வருபவர்கள் வெள்ளிக்கிழமைதோறும் காவிரிநதியில் நீராடிவிட்டு விளக்கேற்றி பிரகாரத்தை சுற்றி வந்து சாமியை வழிபட்டு வந்தால் விரைவில் குழந்தைபேறு கிடைக்கும். நாம் வேண்டிய வரங்கள் அனைத்தும் கிடைக்கும். இந்த கோவிலில் அனைத்து சாதியினரும் வழிபாடு செய்யலாம். எந்த வகையான கட்டுப்பாடுகளும் கிடையாது.

    Next Story
    ×