search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நாளை நடக்கிறது
    X

    தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவிலில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நாளை நடக்கிறது

    • இன்று இரவு உற்சவர் வீதிஉலா வருதல் நடக்கிறது.
    • நாளை அய்யனார், பேச்சியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.

    திருச்செந்தூர் அருகே உள்ள தேரிக்குடியிருப்பு குதிரைமொழி தேரியூர் கற்குவேல் அய்யனார் கோவில் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் ஆண்டு தோறும் கள்ளர்வெட்டு திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 17-ந் தேதி தொடங்கி, நடந்து வருகிறது.

    விழாவில் தினமும் காலையில் சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், மாலையில் வில்லிசை நடந்து வருகிறது.

    நேற்று காலை 11 மணிக்கு ஐவர்ராஜா மாலை அம்மன் பூஜை, மாலை 6 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு 9 மணிக்கு மாக்காப்பு தீபாராதனை நடந்தது. இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு கோவில் முன்பு பெண்கள் வண்ண கோலமிடும் நிகழ்ச்சி, 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 12 மணிக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறுகிறது.

    மாலை 6 மணிக்கு மழை பொழிந்து நாடு செழிக்க வேண்டி மாவிளக்கு பூஜை, இரவு 7 மணிக்கு புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு உற்சவர் வீதிஉலா வருதல் நடக்கின்றது.

    விழாவில் சிகர நிகழ்ச்சியான கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

    இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு 108 பால்குட ஊர்வலம், 9 மணிக்கு கற்குவேல் அய்யனார், பேச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து சிறப்பு அபிஷேகம், பகல் 12 மணிக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடக்கிறது.

    மாலை 4 மணிக்கு சுவாமி கள்ளர் வெட்டுக்கு புறப்படுதல், 4.30 மணி அளவில் கோவிலுக்கு பின்புறம் உள்ள செம்மண் தேரியில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி உள்ளிட்டவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.

    Next Story
    ×