search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    அழகுமுத்து அய்யனார் கோவில் பொம்மைகள் சொல்லும் உண்மைகள்
    X

    அழகுமுத்து அய்யனார் கோவில் பொம்மைகள் சொல்லும் உண்மைகள்

    • அய்யனாரின் வாகனமாக கருதப்படும் குதிரை, 375 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது.
    • இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.

    கடலூரில் இருந்து சுமார் 22 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தென்னம்பாக்கம் கிராமம். இங்குள்ள அய்யனார் கோவில், மதுரை அழகர் கோவிலைப் போன்று பிரசித்திப்பெற்றதாகும். இந்தக் கோவிலுக்கு கடலூரில் இருந்து தூக்கணாம்பாக்கம் வழியாகவும், புதுச்சேரியில் இருந்து ஏம்பலம் வழியாகவும், வில்லியனூர் வழியாகவும் செல்லலாம். இங்குள்ள இறைவன் 'அழகுமுத்து அய்யனார்' என்று அழைக்கப்படுகிறார். இவர் தலையில் கிரீடமும், வலது கையில் பிரமாண்ட வாளும், இடது கையில் கேடயமும் தாங்கி கம்பீரமாக காட்சி தருகிறார். இவருக்கு அருகில் பூரணி, பொற்கலையும் உள்ளனர். அதோடு பைரவர், சுந்தரேஸ்வரர், விநாயகர், நவக்கிரகங்களும் உள்ளன.

    கோவிலுக்குள் நுழையும் போது பிரமாண்ட குதிரை, யானை சிலைகளை தரிசிக்கலாம். இவற்றில் அய்யனாரின் வாகனமாக கருதப்படும் குதிரை, 375 ஆண்டுகள் பழமையானதாக சொல்லப்படுகிறது. அய்யனார் கையில் உள்ள வாளைச் சுற்றிலும், ஏராளமான வேண்டுதல் சீட்டுகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றை அய்யனார் நிறைவேற்றுவதாக நம்பிக்கை. அழகுமுத்து அய்யனார் கோவில் பின்புறம், அழகர் சித்தர் கோவில் உள்ளது. 366 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்துக்கு வந்த சித்தர் ஒருவர், தவம் புரிந்து மக்களின் நோய்களை போக்கியதாகவும், பின்னர் அங்குள்ள கிணற்றில் இறங்கி ஜீவசமாதி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த கிணற்றை சுற்றி தற்போது கோவில் எழுப்பப்பட்டு உள்ளது. அந்த கிணற்றுக்கு மேல் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் வகையில் விளக்கு ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. அந்த விளக்கு ஒளியில் சித்தர் காட்சி தருவதாக பக்தர்கள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

    முன்காலத்தில் தென்னம்பாக்கம் காடுகள் நிறைந்த பகுதியாக இருந்துள்ளது. அங்கு அய்யனார் மட்டும் ஆலமரத்தடியில் காட்சி தந்துள்ளார். அய்யனாருக்கு ஊருக்குள் இருந்து ஒரு பூசாரி வந்து, தினமும் ஒரு கால பூஜை மட்டும் செய்து வந்துள்ளார். அந்த நிலையில்தான் அங்கு அழகர் சித்தர் வந்துள்ளார். அவரைக் கண்ட மக்கள், அவரிடம் தங்களின் குறைகளைச் சொல்லி அதற்கு ஆறுதல் தேடியுள்ளனர். மக்களின் குறைகளையும் சித்தர் நிறைவேற்றி வைத்துள்ளார். சித்தர் மறைந்த பிறகு, மக்கள் தங்களின் கோரிக்கை என்னவோ, அதை ஒரு பொம்மையாக செய்து சித்தர் கோவிலின் முன்பாக வைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

    தற்போது இந்தக் கோவிலைச் சுற்றிலும் எங்கு பார்த்தாலும், பொம்மைகள் அணிவகுத்து நிற்கின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, டாக்டர், வக்கீல், போலீஸ் என பல்வேறு பொம்மைகள் காணப்படுகின்றன. குழந்தை வரம் கேட்பவர்கள் 27 நாட்கள் விரதம் இருந்து 3 முறை வந்து சித்தரை வேண்டினால், 28-வது நாள் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அப்படி வேண்டுதல் நிறைவேறியவர்கள் குழந்தை பொம்மை செய்து கோவில் முன்பாக வைக்கிறார்கள். இதேபோல் கை, கால் பிரச்சினை உள்ளவர்கள் பிரார்த்தனை செய்து, அது குணமான பிறகு கை அல்லது கால் உருவம் செய்து வைக்கின்றனர். திருமணமாகாதவர்கள் இங்கு வந்து வேண்டிக்கொள்கிறார்கள். அது நிறைவேறியதும், மணமக்கள் கோல பொம்மையை செய்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

    அந்த வரிசையில் டாக்டர், என்ஜினீயர், வக்கீல், போலீஸ் போன்ற ஆசைகள் நிறைவேறினால், அந்த தோற்றத்தில் செய்யப்பட்ட பொம்மைகளை செய்து வைக்கின்றனர். இப்படி எண்ணற்ற பொம்மைகள் இங்கே இருப்பதை வைத்தே, இந்த ஆலயம் எவ்வளவு சக்திவாய்ந்தது என்பதை உணர்ந்துகொள்ள முடியும். தற்போது இந்த கோவிலைச் சுற்றிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மைகள் உள்ளன.

    கடந்த காலங்களில் மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை வைத்து பக்தர்கள் வழிபட்டுள்ளனர். அது நாளடைவில் மழையில் நனைந்து கரைந்து போனது. அதனால் தற்போது அனைவரும் சிமெண்டால் செய்யப்பட்ட பொம்மைகளை வைக்கிறார்கள்.

    Next Story
    ×