search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ariyalur"

    உடையான்குடி ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஆர்.எஸ்.மாத்தூர்:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள உடையான்குடி ரெயில்வே கேட் தண்டவாளம் அருகே இன்று காலை அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் காது மற்றும் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் விருதாச்சலம் ரெயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    அதன் பேரில் சம்பவ இடத்திற்கு ரெயில்வே போலீசார் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது இறந்த வாலிபரின் சட்டை பையில் ஐ.டி. கார்டு ஒன்று இருந்துள்ளது. அதில் அவரது பெயர் மகேந்திரன் எனவும், தனியார் நிறுவனத்தில் டிரைவராக பணிபுரிந்து வந்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

    மேலும்  திண்டுக்கல்லில் இருந்து சென்னை செல்லும் ரெயிலில் தாம்பரம் செல்வதற்காக எடுக்கப்பட்ட டிக்கெட்டும் இருந்தது.  அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவரது செல்போனின் முகப்பு படத்தில் இளம்பெண் ஒருவரின் திருமண புகைப்படம் உள்ளது. இதனால் மகேந்திரனுக்கு திருமணமாகி சில மாதங்களே ஆகியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.  

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. ரெயிலில் பயணம் செய்யும் போது படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா? அல்லது யாரேனும் ரெயிலில் இருந்து தள்ளி அவரை கொலை செய்தனரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    அரியலூர் அருகே வீட்டின் கதவை உடைத்து 90 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நாகல்குழி கிராமம் கீழத் தெருவை சேர்ந்தவர் சின்னப்பா. இவரது மனைவி தில்லைநாயகி (வயது 45). இவர்களது மகன் தினேஷ் (21). சின்னப்பா சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக கடந்த 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். வருடத்திற்கு ஒரு முறை ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இதனால் தில்லைநாயகி அவரது மகனுடன் நாகல்குழியில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று அப்பகுதியில் உள்ள கோவில் திருவிழாவையொட்டி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அதனை காண்பதற்காக தில்லைநாயகி மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டின் முன்பக்கம் மற்றும் பின்பக்க கதவுகளை பூட்டி விட்டு சென்றனர்.

    இன்னிசை கச்சேரி முடிந்ததையடுத்து நள்ளிரவில் இருவரும் வீடு திரும்பினர். வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பல்வேறு பொருட்கள் சிதறி கிடந்தது. பின்பக்க கதவு உடைக்கப்பட்டும் கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தில்லைநாயகி வீட்டின் அறையில் உள்ள பீரோவை பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 90 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. அவற்றின் மதிப்பு ரூ.20 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.


    இது குறித்து இரும்புலிக்குறிச்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மோப்பநாய், கைரேகை நிபுணர்கள் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    தில்லைநாயகி மற்றும் அவரது மகன் கோவில் திருவிழாவுக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தெரிந்த நபர்களாகவே இருக்கலாம் என தெரிகிறது. அவர்கள் யாரென்று விசாரணை நடத்தி போலீசார் தேடி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு அரியலூர் மாவட்ட எஸ்.பி. அபினவ்குமார், ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கென்னடி ஆகியோர் சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    அரியலூர் மாவட்டத்தில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் ஊராட்சி ஒன்றியம், ராஜீவ் நகரில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறையின் சார்பில் தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. சுய உதவிக்குழுக்கள், தூய்மை காவலர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோருக்கு டெங்கு காய்ச்சல் தொடர்பான விழிப்புணர்வு அளிக்கப்பட்டது. 

    மேலும் அப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரம் மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. முன்னதாக நிகழ்ச்சியில் கலெக்டர் விஜயலட்சுமி பேசுகையில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளில் முதன்மை பணியான கொசுப்புழு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளும் விதமாக அரியலூர் மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பயனற்ற பெயிண்ட் டப்பாக்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள், உடைந்த பானைகள், தேங்காய் ஓடுகள் மற்றும் பழைய டயர்கள் ஆகியவற்றில் தேங்கும் நீரினை உடனடியாக அகற்றி சுற்றுப்புறத்தினை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். 

    இதில் திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) லோகேஸ்வரி, துணை இயக்குனர் (சுகாதாரப்பணிகள்) ஹேமசந்த்காந்தி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பழனிசாமி, கடுகூர் வட்டார மருத்துவ அலுவலர் உமா மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜேந்திரன், நல்லமுத்து, சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். 
    அரியலூரில் கர்ப்பிணி பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    தஞ்சை மாவட்டம் கண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 28). கடந்த 2013-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், விழுப்புரத்தில் பயிற்சி முடித்து விட்டு, தஞ்சை, சென்னையில் பணியாற்றினார். பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் வைஷ்ணவிக்கும், மன்னார்குடி மான்கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் (32) என்பவருக்கும் கடந்த 26.2.2018 அன்று திருமணம் நடைபெற்றது. கார்த்திக் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகியதும் தனது மனைவி வைஷ்ணவியுடன் அரியலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இதனிடையே வைஷ்ணவி கர்ப்பமடைந்தார்.

    நேற்றிரவு கணவன்- மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்ற வைஷ்ணவி திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக், வைஷ்ணவியை மீட்டு அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அரியலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, டி.எஸ்.பி. மோகன்தாஸ் மற்றும் அரியலூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வைஷ்ணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அரியலூர் மாவட்டத்தில் காவிரி விவகாரம் மற்றும் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் வைஷ்ணவி ஈடுபட்டு வந்துள்ளார்.

    கர்ப்பிணியாக இருந்த அவர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்ததால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கார்த்திக் வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கல்விகடனை முழுமையாக ரத்து செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    அரியலூர்:

    அரியலூர் மாவட்ட தே.மு.தி.க அலுவலகத்தில் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ஜோசப் சத்தியமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கவியரசன், மாவட்ட  துணைச் செயலாளர், எழிலரசன்,  தங்கதமிழ்ச் செல்வன், தலைமை செயற்குழு  உறுப்பினர் ஆனந்த், பொதுக்குழு உறுப்பினர் கலிய மூர்த்தி, ராஜா, மாவட்ட தொண்டரணி ராமச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மாவட்ட செயலாளர் ராம.ஜெயவேல் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் அரியலூர் மாவட்டத்தில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்பு, நாய், போன்ற விஷகடிகளுக்கு போதிய மருந்துகள் இல்லாததால் உயிர்சேதம் ஏற்படுகின்றது. போதிய மருந்துகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்  என கேட்டுக் கொள்கின்றோம். அரியலூர் மாவட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் பணியில் இருக்க வேண்டும் . விவசாய கடன்களையும், கல்வி கடன்களையும் முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய மாநில அரசை கேட்டுகொள்கின்றோம். 

    அரியலூரில் புதிய பேருந்து நிலையம், அமைத்து தர வேண்டும் , அரியலூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் கல்வி கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழுர் ஒன்றியத்தை தனி வட்டமாக அறிவிக்க வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் மணல் திருட்டு, மணல் கொள்ளைக்கு துணை போகும் அரசு வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரியலூர் ரயில் நிலையத்தில் பொதுமக்கள், ரயில் பயனிகளின் நலன் கருதி கேன்டீன் வசதியை உடனே துவங்க வேண்டும். அரியலூர் மாவட்ட  கொள்ளிடம் ஆற்றில் கல்லனையிலிருந்து அனைக்கரை வரை மணல் குவாரி அமைக்க அனுமதிக்க கூடாது  உள்பட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. 

    கூட்டமுடிவில் பொதுக்குழு உறுப்பினர் ராஜா நன்றி கூறினார்.
    அரியலூரில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் தாய் மற்றும் மகளை தாக்கி 7 பவுன் நகையை பறித்து சென்றனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே சுப்பு ராயபுரத்தை சேர்ந்தவர் அன்பழகன். இவரது மனைவி வனஜா (வயது 45). இவர்களுக்கு அனுசியா என்ற மகள் உள்ளார்.

    நேற்று மாலை தாய்-மகள் இருவரும் சுப்புராயபுரத்தில் இருந்து அரியலூருக்கு பைக்கில் சென்றுள்ளனர். அப்போது, எதிரே 2 வாலிபர்கள் பைக்கில் மோதுவது போல் வந்துள்ளனர். இதனால் வனஜா அதிர்ச்சியடைந்து வண்டியை நிறுத்தியுள்ளார்.

    அப்போது வனஜா மற்றும் அவரது மகளை வாலிபர்கள் இருவரும் தாக்கி கீழே தள்ளினர். மேலும் வனஜா அணிந்திருந்த 7 பவுன் செயினை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் பைக்கில் தப்பி சென்றனர். இது குறித்து வனஜா அரியலூர் போலீசில் புகார் அளித்தார்.

    இதேபோல் மேற்கு சீனிவாசபுரத்தை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி காசாம்பு (37). இவர்கள் ஆடு-மாடுகள் வளர்த்து வருகின்றனர். நேற்று மாலை காசாம்பு மாடுகளை வீட்டிற்கு அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த 2 வாலிபர்கள் காசாம்பு கழுத்தில் அணிந் திருந்த 5 பவுன் செயினை பறித்து விட்டு தப்பி சென்றனர். 

    இது குறித்து கயர்லாபாத் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அரியலூரில் கட்ட பஞ்சாயத்து மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

    அரியலூர்:

    அரியலூர் அருகே உள்ள பள்ளிகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார். இவருக்கு கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கும்பகோணத்தை சேர்ந்த அருள்செல்வி (வயது 21) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்துள்ளனர். மேலும் அருள்செல்வி குடும்பத்தினர் திருமணத்தின் போது சீர்வரிசையாக கொடுத்த பொருட்களை திருப்பி கேட்டுள்ளனர்.

    அப்போது அதே ஊரை சேர்ந்த அரசியல் பிரமுகர் நீதி நெப்போலியன் (வயது 57) என்பவர் இருவீட்டாரையும் அழைத்து கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளார். அப்போது இருவருக்கும் உடன்பாடு ஏற்படாததால் செல்வக்குமார் குடும்பத்தினர் சீர்வரிசை பொருட்களை திருப்பி தருவதாக கூறியுள்ளனர்.

    அந்த பொருட்களை நீதி நெப்போலியன் அபகரித்ததாக கூறப்படுகிறது. இதனால் அருள்செல்வி மற்றும் அவரது குடும்பத்தினர் நீதிநெப்போலியனின் வீட்டிற்கு சென்று கேட்டுள்ளனர். அப்போது அருள் செல்விக்கு நீதி நெப்போலியன் பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    இது குறித்து அரியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நீதி நெப்போலியனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் அவரை மாவட்ட எஸ்.பி.அபினவ் குமார் பரிந்துரையின் பேரில் குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார். 

    இதேபோல் அரியலூர் பகுதியில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட மத்து மடத்தியை சேர்ந்த சுந்தர் ராஜன் (41), மேலூரை சேர்ந்த பாலமுருகன் (38) ஆகியோரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்பேரில் 3 பேரின் மீதும் குண்டர் சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    ×