search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pregnant woman police suicide attempt"

    அரியலூரில் கர்ப்பிணி பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    அரியலூர்:

    தஞ்சை மாவட்டம் கண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் வைஷ்ணவி (வயது 28). கடந்த 2013-ம் ஆண்டு காவல் துறையில் பணியில் சேர்ந்த இவர், விழுப்புரத்தில் பயிற்சி முடித்து விட்டு, தஞ்சை, சென்னையில் பணியாற்றினார். பின்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றி வந்தார்.

    இந்தநிலையில் வைஷ்ணவிக்கும், மன்னார்குடி மான்கோட்டை பகுதியை சேர்ந்த கார்த்திக் (32) என்பவருக்கும் கடந்த 26.2.2018 அன்று திருமணம் நடைபெற்றது. கார்த்திக் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்தார். திருமணமாகியதும் தனது மனைவி வைஷ்ணவியுடன் அரியலூர் ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். இதனிடையே வைஷ்ணவி கர்ப்பமடைந்தார்.

    நேற்றிரவு கணவன்- மனைவி இருவரும் சாப்பிட்டு விட்டு பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் வீட்டில் உள்ள தனி அறைக்கு சென்ற வைஷ்ணவி திடீரென சேலையால் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கார்த்திக், வைஷ்ணவியை மீட்டு அரியலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து அரியலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, டி.எஸ்.பி. மோகன்தாஸ் மற்றும் அரியலூர் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வைஷ்ணவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. அரியலூர் மாவட்டத்தில் காவிரி விவகாரம் மற்றும் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கான பாதுகாப்பு பணியில் வைஷ்ணவி ஈடுபட்டு வந்துள்ளார்.

    கர்ப்பிணியாக இருந்த அவர் தொடர்ந்து பணியில் ஈடுபட்டு வந்ததால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கார்த்திக் வற்புறுத்தியதாக தெரிகிறது. மேலும் பணிச்சுமையால் மன உளைச்சலுக்கும் உள்ளாகியிருந்தார். இதன் காரணமாக அவர் தற்கொலைக்கு முயன்றிருக்கலாம் என கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×