என் மலர்
நீங்கள் தேடியது "vehicle check"
கும்மிடிப்பூண்டி:
பாராளுமன்ற தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்களை அரசியல் கட்சியினர் கொடுப்பதை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பை தீவிரப் படுத்தி உள்ளனர்.
அவர்கள் உரிய ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் ரொக்கப்பணம், தங்கத்தை பறிமுதல் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கும்மிடிப்பூண்டியை அடுத்த தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள ஆரம்பாக்கம் போலீஸ் சோதனைச்சாவடியில், நேற்று இரவு கும்மிடிப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனா தத் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து சென்னை நோக்கி வந்த மினி வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த வேனில் முன்னும், பின்னும் சி.சி.டி.வி. கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் துப்பாக்கி ஏந்திய 2 தனியார் பாதுகாவலர்கள் உள்பட மொத்தம் 4 பேர் அதில் இருந்தனர்.
மொத்தம் 7 பெட்டிகளில் தலா 1 கிலோ எடை கொண்ட 25 தங்க கட்டிகள் இருந்தது. இதன் மொத்த எடை 175 கிலோ. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 56 கோடி ஆகும்.

விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற தனியார் நிறுவனம் ஒன்று, வெளிநாடுகளில் இருந்து தங்ககட்டிகளை இறக்குமதி செய்து அதனை ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் உள்ள ஒரு குடோனில் இருப்பு வைத்து பின்னர் அங்கிருந்து அனைத்து அரசு துறைகளின் உரிய அனுமதியுடன் இந்தியா முழுவதும் தங்கத்தை சப்ளை செய்து வருவது தெரியவந்தது.
175 கிலோ தங்க கட்டிகளும், சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மும்பை உள்பட பல்வேறு பகுதிகளுக்கு தனியார் வங்கி மூலம் அனுப்பி வைக்க இருந்ததாக வேனில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
அதற்குரிய ஆவணங்கள் இருந்தாலும், அவற்றின் நம்பகத்தன்மை குறித்து கண்டறியவும், முறையான அனுமதியுடன் தான் இந்த தங்க கட்டிகள் ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்கு கொண்டு வரப்படுகிறதா? என்பதை அறியவும் வேனுடன் 175 கிலோ தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அதனை கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி, கூடுதல் தேர்தல் நடத்தும் அலுவலர் சுரேஷ்பாபு ஆகியோர் தங்க கட்டிகளையும், அதற்கான ஆவணங்களையும் ஆய்வு செய்தனர்.
பின்னர் இரவு நேரம் என்பதால் தங்க கட்டிகள் அனைத்தும் கும்மிடிப்பூண்டி தாசில்தார் அலுவலகம் அருகே உள்ள கருவூலத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டன.
மேலும் நள்ளிரவில் சென்னையில் இருந்து வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் தங்க கட்டிகளையும், ஆவணங்களையும் ஆய்வு செய்து வேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது எத்தகைய ஆவணங்கள் இருப்பினும் போதிய பாதுகாப்பை உறுதி செய்திடாமல் இது போன்று இரவு நேரத்தில் தங்கம் உள்பட விலை உயர்ந்த பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் பிற துறை சார்ந்த உரிய ஆய்விற்கு பிறகே தங்க கட்டிகள் சம்மந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் என்று கும்மிடிப்பூண்டி சட்டமன்ற தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பார்வதி தெரிவித்தார். #Gold #LokSabhaElections2019
சேலம்:
சேலம் தெற்கு தொகுதிக்குட்பட்ட கொண்டலாம்பட்டி பகுதியில் இன்று அதிகாலை தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் நடத்தினர்.
அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அழகர்சாமி என்பவர் ஓட்டி வந்த லாரியில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது.
இது குறித்து அதிகாரிகள் அவரிடம் விசாரித்த போது விஜயவாடாவுக்கு செல்வதாகவும், டீசல் மற்றும் செலவுகளுக்கு அந்த பணத்தை வைத்ததுள்ளாகவும் கூறினர்.
ஆனால் அதற்கு சரியான ஆவணங்கள் இல்லை எ ன்று கூறிய பறக்கும் படையினர் அதனை பறிமுதல் செய்து மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
இதே போல அந்த வழியாக செல்வம் என்பவர் ஓட்டி வந்த லாரியையும் நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை செய்தனர்.
அப்போது லாரியில் இருந்த ரூ.57 ஆயிரம் சிக்கியது. அது குறித்து செல்வத்திடம் கேட்ட போது வடமாநிலத்திற்கு செல்வதாகவும், செலவுக்காக இந்த பணத்தை வைத்துள்ளதாகவும் கூறினார்.
ஆனால் அதற்கான ஆவணங்கள் இல்லை என்று கூறிய அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
அப்போது செலவுக்கு கொண்டு செல்லும் பணத்திற்கு எப்படி ஆவணம் காட்ட முடியும் என்று புலம்பியபடியே செல்வம் அங்கிருந்து சென்றார்.
திருப்பூர்:
பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூரில் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று இரவு 12.30 மணிக்கு திருப்பூர் - மங்கலம் சாலையில் பாரப்பாளையத்தில் பறக்கும் படை அதிகாரி கோவிந்த பிரபாகர் தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஒரு கார் வந்தது. அதனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ. 3 லட்சம் பணம் இருந்தது. இது தொடர்பாக காரில் வந்த திருப்பூர் சிவசக்தி நகர் 2-வது தெருவை சேர்ந்த இளமணிமாறனிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது அவர் தனது கம்பெனியில் வசூலான பணத்தை வீட்டிற்கு எடுத்து செல்வதாக கூறினார். ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இன்று காலை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து உரிய ஆவணங்களை ஒப்படைத்து பணத்தை பெற்று செல்லலாம் என அதிகாரிகள் கூறி சென்றனர். திருப்பூரில் இதுவரை ரூ. 10 லட்சம் வரை அதிகாரிகள் சோதனையில் சிக்கி உள்ளது. #Parliamentelection #LSPolls
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கும் பொருட்டு பறக்கும் படை அமைக்கப்பட்டு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் பறக்கும்படை தாசில்தார் ரூபிபாய் தலைமையிலான போலீசார் இன்று காலை வாகன சோதனை செய்து கொண்டு இருந்தனர்.
அப்போது காட்பாடியில் இருந்து வந்த காரை மடக்கி சோதனை செய்தனர். காரில் இருந்த ஒரு பேக்கில் ரூ. 1 லட்சம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
பணம் எடுத்து வந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் காட்பாடி காந்தி நகரை சேர்ந்த மணிவண்ணன் (45) என்பது தெரியவந்தது.
சென்னைக்கு பணத்தை கொண்டு சென்றது தெரியவந்தது. பறிமுதல் செய்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை வேலூர் தாசில்தார் பழனியிடம் பறக்கும் படை போலீசார் ஒப்படைத்தனர். #Parliamentelection #LSPolls