search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kantha Sasti"

    • 80 இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்.
    • கோவில் வளாகத்தில் 4 இடங்களில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லில் கந்தசஷ்டி திருவிழா 13-ந் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 18-ந் தேதியும், திருக்கல்யாணம் 19-ந் தேதியும் நடக்கிறது. விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    ஆலோசனை கூட்டம்

    எனவே பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அரசுத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று கோவில் இணை ஆணையர் அலுவலக வளாகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு கோவில் அறங்காவலர் குழுத்தலை வர் அருள்முருகன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் உதவி கலெக்டர் குருச்சந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு வசந்தராஜ், தாசில்தார் வாமணன், அறங்காவலர் செந்தில்முருகன், தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் அன்புமணி, உதவி ஆணையர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கோவில் இணை ஆணையர்கள் கார்த்திக் வரவேற்று பேசினார்.

    பக்தர்களுக்கு குடிநீர்

    கூட்டத்தில் திருவிழாக்காலங்களில் பக்தர்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் தங்கி விரதமிருப்பதற்காக கோவில் வளாகத்தில் 21 தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்த கொட்டகைகளின் உள் பகுதியில் மழைநீர் பாதுகாப்பு கருதி சுமார் ஒரு அடி உயரத்தில் பலகைகள் மூலம் சிறிய மேடை அமைக்கப்படும். அருகில் தற்காலிக கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளது.

    2,500 போலீசார்

    13 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, மேலும் 80 இடங்களில் சி.சி.டி.வி. காமிராக்கள் மற்றும் நடமாடும் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும். பக்தர்கள் பாதுகாப்பு கருதி 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் 24 மணி நேரமும் தயார் நிலையில் மருத்துவகுழுவும், கோவில் வளாகத்தில் 4 இடங்களில் அவசர ஊர்தியுடன் கூடிய மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும். தீயணைப்பு வீரர்களுடன் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். கடல் காவல் படை மற்றும் மீன்வளத்துறை மூலம் கடலில் பக்தர்கள் ஆழத்திற்கு செல்லாமல் தடுத்திடும் வகையில் மிதக்கும் வகையில் தடுப்பு கயிறுகள் போடப்பட்டு வீரர்கள் ரோந்து செல்வர்.

    தடையின்றி மின்சாரம்

    திருவிழா காலங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்கவும், பக்தர்கள் விரதமிருக்கும் கொட்டகை களில் மின் கசிவு ஏற்படாதவண்ணம் பாது காப்பான முறையில் மின் தடங்கள் அமைக்கப்படும்.

    சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் கால்நடைகள் பிடித்து கோசா லையில் ஒப்படைக்கப்படும். தெருநாய்கள் பக்தர்களை தாக்காத வகை யில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 3 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப் படும்.

    இந்த முறை கடற்கரையில் சூரசம்ஹாரம் பார்க்கும் இடங்களில் இரும்பு குழாய்கள் மூலம் பாதைகள் மற்றும் தடுப்பு வேலிகள் அமைக்கப்படவுள்ளது. கோவிலில் பெருந்திட்ட வளாகப்பணிகள் நடை பெறும் இடங்களில் யாரும் நுழையாதவாறு பாது காப்பு பலப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

    கூட்டத்தில் கோவில் கண்காணிப்பாளர்கள் ரவீந்திரன், ஆனந்தராஜ், மக்கள் தொடர்பு அலுவலர் சிவநாதன், செயற்பொறியாளர்கள் முருகன், சந்தானகிருஷ்ணன், திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி தலைமை டாக்டர் பொன்ரவி, டாக்டர் நஸ்ரின்பாத்திமா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், கோவில போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மர், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் கணேச மணிகண்டன், நகராட்சி ஆணையர் கண்மணி, தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜமூர்த்தி, மின் வாரிய இளநிலை பொறியாளர் முத்துராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த விழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது.
    • 2 ஆண்டுகளாக பக்தர்கள் கந்தசஷ்டி விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் உலக புகழ் பெற்ற கந்த சஷ்டி விழா ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் நடந்து வருகிறது. விழாவின் நிறைவில் சூரசம்ஹார நிகழ்ச்சியும் மறுநாள் திருக்கல்யாண வைபோகமும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொள்ளும் இந்த விழா வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. அன்று முதல் 6 நாட்கள் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் உட்பிரகாரத்திலும், கோவில் வளாகங்களிலும் தங்கி இருந்து விரதம் இருப்பர்.

    இதில் தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்கள், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஹாங்காங் போன்ற வெளிநாடுகளை சார்ந்த பக்தர்களும் தங்கி இருந்து விரதம் மேற்கொள்வார்கள்.

    கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் கந்தசஷ்டி விழாவில் கலந்து கொள்ள அனுமதி இல்லை. இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம் ஆனால் உள்பிரகாரத்தில் தங்கி இருந்து விரதம் இருக்க அனுமதி இல்லை என்ற தி.மு.க அரசின் அறிவிப்பு பக்தர்களை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.

    1000 ஆண்டுகளுக்கு மேலாக முருகப்பெருமானின் பக்தர்கள் கடைபிடித்து வரும் ஐதீகத்தையும், இந்து சமய வரலாற்றையும் மாற்றும் விதமாக தி.மு.க அரசு செயல்பட்டு வருகிறது. இதை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க சார்பில் வன்மையாக கண்டிக்கின்றேன்.

    மேலும் மழைக் காலம் தொடங்கிவிட்டது. இந்த நேரத்தில் கோவில் வளாகத்தில் தற்காலிக கூடாரங்களில் தங்கி இருந்து விரதம் இருப்பது பக்தர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தி.மு.க அரசு இந்த முடிவை மறுபரிசீலனை செய்து பக்தர்களுக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் செய்து கொடுக்கப்பட்ட அனைத்து வசதிகளையும் செய்து கந்தசஷ்டி விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்ய வேண்டும் என்று இந்து சமய அறநிலைய துறையையும், கோவில் நிர்வாகத்தையும் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா மிக முக்கியமான திருவிழாவாகும்.
    • விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு 12 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளது.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் இணை ஆணையர்(பொறுப்பு) அன்புமணி வெளிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திட்டப்பணிகள்

    முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா மிக முக்கியமான திருவிழாவாகும். இத்திருவிழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் விரதமிருந்து சூரசம்ஹார நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

    கடந்த மாதம் 28-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கோவிலில் சுமார் ரூ.300 கோடி செலவில் பெருந்திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, பணிகள் தொடங்கி பழைய கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    பக்தர்கள் பாதுகாப்பு

    அதனால் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார நலனை கருத்தில் கொண்டு கோவில் உள்ள உட்பிரகாரத்தில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது. அதனால் கோவில் வெளி வளாகத்தில் கந்த சஷ்டி திருவிழாவிற்கு விரதமிருக்கும் பக்தர்கள் தங்குவதற்கு 12 இடங்களில் கொட்டகைகள் அமைக்கப்பட உள்ளது.

    அதாவது வசந்த மண்டபம், வேலவன் விடுதி, கலையரங்கம் பின்புறம், திருமண மண்டபம், திருநீறு மண்டபம், வடக்கு டோல்கேட், நாழிகிணறு பஸ் நிலையம் பகுதி, உணவு கூடம், கிழக்கு கிரி பிரகாரம் உள்ளிட்ட இடங்களில் தற்காலிக கொட்டகைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் கந்த சஷ்டி திருவிழா தொடங்குவதற்கு முன்பாக நிறைவு செய்யப்படும்.

    தற்காலிக கழிப்பறைகள்

    மேலும் பக்தர்களின் வசதிக்காக கோவில் வளாகத்தில் 7 இடங்களில் 237 கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பாதயாத்திரை பக்தர்களுக்கும், தங்கி விரதம் இருக்கும் பக்தர்களின் வசதிக்காக கூடுதலாக ஆண்கள், பெண்கள் என தலா 50 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கபட உள்ளது.

    அதேபோல் தரிசனம் செய்ய வரிசையில் நிற்கும் பக்தர்களுக்காக 21 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்படும். மேலும் கோவில் வளாகத்தில் 26 இடங்களிலும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதேபோல் பக்தர்களுக்கு வேண்டிய அனைத்து வசதிகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    ஆறு முகங்களும், பன்னிரு திருக்கைகளும் கொண்ட ஆறுமுகனின் அவதாரம், அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காக்கும் பொருட்டு சிவனிடமிருந்து தோன்றிய தெய்வாம்சம் ஆகும்.
    சண்முக தத்துவம்

    சண்முகனுக்கு, ஆறுமுகம் என்பது நாம் அறிந்ததே. தெய்வங்களின் அம்சங்களாக அருள்புரியும் சண்முகனின் தத்துவம் இது. ஒரு முகம் மகாவிஷ்ணுவாகவும், இரு முகம் அக்னிக்கும், மூன்று முகம் தத்ராத்ரேயருக்கும், நான்கு முகம் பிரம்மாவுக்கும், ஐந்து முகம் சிவன், அனுமன், காயத்ரிதேவி, கணபதிக்கும் உரித்தாகி, ஆறாவது முகம் கந்தனுக்கு என்பதே சண்முகத் தத்துவமாக சாஸ்திரங்கள் கூறுகின்றது.

    ஆறு குண்டலினி தலங்கள்

    மனிதன் உயர்நிலையை அடைய, புற உடலில் உள்ள ஆறு சக்கரங்களை அடக்கியாள வேண்டியது அவசியமாகிறது. குண்டலினிகள் எனப்படும் இவைகளை சரியாக பயன்படுத்தியதால் தான், சிலர் மனித நிலையிலிருந்து மகான் நிலையை அடைந்தார்கள். நம் முருகனின் ஆறுபடை வீடுகள், ஆறு குண்டலினிகளாக விளங்குவது சிறப்பு. திருப்பரங்குன்றம் - மூலாதாரம், திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம், பழனி- மணிபூரகம், சுவாமிமலை - அனாகதம், திருத்தணிகை- விசுத்தி, பழமுதிர்ச்சோலை - ஆக்ஞை ஆகியவை ஆகும். இத்தலங்களில் உள்ள முருகனை நினைத்து விசாகம், பவுர்ணமி, கிருத்திகை நாட்களிலும், கந்த சஷ்டியிலும் துதித்தால் மனித வாழ்வு உயர்வு பெறும்.

    மூன்று மயில் வாகனம்

    முருகனுக்கு வாகனம் மயில் என்பதை அறிவோம். ஆனால் மூன்று மயில்களாக கந்தனின் சரித்திரத்தில் உள்ளது தெரியுமா? மாங்கனி வேண்டி உலகை சுற்றி வந்த முருகனின் வாகனம் ஆன மயில் ‘மந்திர மயில்’ எனவும், சூரபதுமனை வதம் செய்ய சென்றபோது முருகனுக்கு வாகனமாக வந்த இந்திரன் மயிலாக கந்தனைத் தாங்கினான். அந்த மயில் ‘தேவ மயில்’ என்றும், சூரனின் அகங்காரம் அழித்து அவனை இருகூர் ஆக்கியதில் உருவான மயில் ‘அசுர மயில்’ எனவும் புராண செய்திகள் கூறுகிறது.

    சஷ்டி விரதம் மகிமை

    ஐப்பசி மாதம் வளர்பிறையில் இருந்து ஆறு நாட்கள் கந்தசஷ்டி விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது. தீபாவளிஅன்று வரும் அமாவாசையன்று முருகனை ஒருமனதாக நினைத்து, ஒருவேளை மட்டுமே உணவருந்தி, மனிதனின் தீய குணங்களான கோபம், குரோதம், காமம், பொறாமை போன்றவற்றை விலக்கி ஆறாம் நாள் கந்தனை வழிபடுவதே விரதத்தின் நியதி. அசுரர்களான சூரபதுமன் ஆணவ மலமும், தாரகாசுரன் மாயா மலமும், சிங்கமுகன் கன்ம மலமும் கொண்டு அகங்காரத்துடன் இருந்ததால், அவர்களை ஞானம் எனும் வேல் கொண்டு முருகப்பெருமான் வெற்றிகொண்டார். எனவே முருகப்பெருமானை நினைத்து வழிபடும் போது, நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலங்கள் அழிந்து, ஞானம் என்னும் பெருவாழ்வு கிடைக்கிறது.

    மும்மூர்த்திகளின் அம்சம்

    ஞாலம், ஐஸ்வர்யம், அழகு, வீரம், வைராக்கியம், புகழ் எனும் ஆறு குணங்களைக் குறிக்கும் திருமுகங்களைக் கொண்டவர் முருகன். இவர் பிரணவத்தின் சொரூபியாவார். ‘மு’ என்றால் முகுந்தன். ‘ரு’ என்றால் ருத்திரன். ‘கா’ என்றால் பிரம்மா. ‘முருகா’ என்று அழைக்கும்போது மூன்று தெய்வங்களையும் வணங்கிய பலன் கிடைக்கும். மேலும் சிவனின் அக்னியில் இருந்து தோன்றியதால் ‘சிவமே ஆறுமுகம்; ஆறுமுகமே சிவம்’ என்றும் பொருளாகிறது. கந்தனிடம் கையேந்தி விரதம் இருப்பவர்களின் கவலைகளை, அந்த ஈசனும் தீர்த்து வைப்பார் என்பது நிச்சயம்.

    முழுமையான தரிசனம்

    சூரனை அழித்து வதம் செய்த தலமான திருச்செந்தூரில், கந்த சஷ்டி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு வழிபடும் இத்தல முருகனை, வருடம் ஒருமுறை இவ்விழாவின் போது ஆறுமுகங்களும் பன்னிரு திருக்கைகளும் கொண்ட மூர்த்தியாக முழுமையாக தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அங்கவஸ்திரம் அலங்கரித்திருக்கும். ஆகவே சஷ்டி விழா பக்தர்களின் வருகையால் சிறப்புமிக்கதாகிறது.
    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்தச‌ஷ்டி திருவிழாவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
    அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தச‌ஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி தொடங்கியது. 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடந்தது. 7-ம் திருநாளான நேற்று இரவில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    இதனை முன்னிட்டு, அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணிக்கு தெய்வானை அம்பாள், தெப்பக்குளம் அருகில் உள்ள நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்தில் எழுந்தருளினார்.

    மதியம் 3.30 மணிக்கு சுவாமி குமரவிடங்க பெருமான் தங்க மயில் வாகனத்தில் கோவிலில் எழுந்தருளி, சன்னதி தெரு, பள்ளத்தெரு, சபாபதிபுரம் தெரு, தெற்கு ரத வீதி வழியாக நட்டாத்தி பண்ணையார் தபசு காட்சி மண்டபத்துக்கு வந்தார். அங்கு தெய்வானை அம்பாளுக்கு காட்சி கொடுத்த பின்னர் சுவாமி-அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.

    தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் மேல ரத வீதி, வடக்கு ரத வீதி, கீழ ரத வீதி மற்றும் நான்கு உள்மாட வீதிகளிலும் உலா வந்து, சன்னதி தெரு வழியாக கோவிலை சேர்ந்தனர். இரவில் ராஜகோபுர திருக்கல்யாண மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் வைதீக முறைப்படி திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடந்தது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாணத்தில் மொய் எழுதிய பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, சுவாமி படம் அடங்கிய பிரசாத பை வழங்கப்பட்டது.

    விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
    அறுபடைவீடுகளுள் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. 7-ம் திருநாளான நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார்.

    அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. திருமண மேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம், யாகம் நடைபெற்றது. பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது.

    அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் தனுசு லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்ப, பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

    சண்முகர், வள்ளி-தெய்வானை திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த போது எடுத்த படம்.

    கோவில் குருக்கள் செல்வ சுப்பிரமணியம், சுந்தரமூர்த்திசிவம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனையும், சோடச உபசாரனையும் நடைபெற்றது. கோவில் ஓதுவார்கள், குருக்கள்கள் பாடல்கள் பாட மகாதீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனை நடைபெற்றது.

    திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, சித்தனாதன் சன்ஸ் ரவீந்திரன், செந்தில், கந்தவிலாஸ் நவீன், போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், கோவில் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், வள்ளி-தெய்வானை சப்பரத்திலும் மணக்கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி வடை, பாயாசத்துடன் 5 ஆயிரம் பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. விருந்து சாப்பிட்ட அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவையொட்டி சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் தண்டு விரதத்தை நிறைவு செய்து வழிபாடு நடத்தினர்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் காப்பு கட்டி சஷ்டி விரதம் தொடங்கினர். சஷ்டி விரதம் என்பது திதி விரதம் ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அமாவாசை தினத்துக்கு அடுத்த நாள் பிரதமை அன்று தொடங்குகிறது. சஷ்டி விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். ‘சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்’ என்று பழமொழி இருக் கிறது.

    சஷ்டியில் விரதம் இருந்தால் கருப்பையில் கரு உருவாகும் என்பதே இதன் பொருளாகும். சஷ்டி விரதத்தின் போது தினமும் கந்தசஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கந்தபுராணம் ஆகியவற்றை பாராயணம் செய்ய வேண்டும். கந்த சஷ்டி விரத நாட்களான 6 நாட்களும் முருகப்பெருமானை வழிபடுவது சிறப்பாகும். கந்தசஷ்டியையொட்டி முருகன் எழுந்தருளியுள்ள அனைத்து கோவில்களிலும் பூர்ண கும்பம் வைத்து விசேஷ அபிஷேகம், அர்ச்சனை போன்றவை நடைபெறும்.

    6 நாட்கள் விரதம் இருக்கும் பக்தர்கள் 6-ம் நாளில் வாழைத்தண்டு, உளுந்தம்பருப்பு, கொய்யா, மாதுளை, திராட்சை, ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள், மாங்காய், தயிர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து தண்டு கூட்டு தயாரிப்பார்கள். பின்னர் அதனை முருகனுக்கு படைத்து வழிபாடு நடத்துவார்கள். இந்த வழிபாடு தண்டுவிரதம் நிறைவு செய்யும் வழிபாடு என அழைக்கப்படுகிறது. பின்னர் பக்தர்கள் அதை சாப்பிட்டு தண்டு விரதத்தை நிறைவு செய்வார்கள்.

    இதன் மூலம் 6 நாட்களாக கடும் விரதம் இருந்த பக்தர்களின் உடல்நலம் இயல்பு நிலைக்கு திரும்பும். 7-ம் நாளான இன்று (புதன்கிழமை) திருக்கல்யாண வைபவத்தை விரதம் இருக்கும் பக்தர்கள் பார்த்து முருகப்பெருமானை வணங்கிவிட்டு, பின்னர் நடக்கும் திருமண விருந்தில் கலந்துகொண்டு சஷ்டி விரதத்தை நிறைவு செய்வார்கள். 
    திருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலையில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
    முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நேற்று முன்தினம் ‘வேல் வாங்குதல்‘ நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    இதேபோல் போர் படை தளபதி வீரபாகு தேவருக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.10 மணி அளவில் முருகப்பெருமான் தனது தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து பெற்ற சக்திவேலை ஏந்தியபடி தனது வாகனமான தங்கமயில் வாகனத்தில் அமர்ந்து நகர் வீதியில் வலம் வந்தார். இதனையடுத்து வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளியபடி வீரபாகு தேவரும் வீதிஉலா வந்தார்.

    அப்போது அசுரனான சூரபத்மன் இருமாப்புடன் சன்னதி தெருவுக்கு வந்தார். இதற்கிடையே முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவாச்சாரியார் தன் கையில் வாள் ஏந்தியபடி வந்தார். முருகப்பெருமான் நகரின் நான்கு வீதிகளிலுமாக இருமாப்பு கொண்ட சூரபத்மனை ஓட, ஓட விரட்டினார். அதில் சூரபத்மன் யானை முகம், சிங்கமுகம், ஆட்டுத் தலை என்று மாறி, மாறி உருவெடுத்து கொக்கரித்தார்.

    இந்த நிலையிலும் முருகப் பெருமான் 4 திசையிலும் எட்டு திக்குமாக சூரபத்மனை துரத்தினார். இறுதியில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மாலை 6.42 மணி அளவில் முருகப்பெருமான் சக்திவேலால் சூரபத்மனை வதம் செய்தார். அப்போது அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா‘ என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம் வீடான சோலைமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமானை படத்தில் காணலாம். உள்படம்- மயில் வாகனத்தில் முருகப்பெருமான்.

    சூரசம்ஹாரத்தை தொடர்ந்து கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி, தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து பூச்சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று(புதன்கிழமை) கிரிவலத்தில் சட்டத்தேர் பவனி நடக்கிறது.

    இதேபோன்று முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர் சோலை என்றழைக்கப்படும் சோலைமலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி காலையில் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. மாலை 4.35 மணி அளவில் வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியசாமி புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெற்றது. பின்னர் அதே வாகனத்தில் 5.40 மணி அளவில் முருகப்பெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினிதிக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாமிக்கு சாந்த அபிஷேகம் நடந்தது. திருவிழாவில் இன்று(புதன்கிழமை) காலை திருக்கல்யாண உற்சவமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெறும். முடிவில் மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்தனர். 
    சுவாமிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் திகழ்கிறது. தந்தையாகிய சிவபெருமானுக்கு ஓம் எனும் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்ததால் சிவகுருநாதனாக சிறப்பு பெற்று இத்தலம் விளங்குகிறது.

    பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 7-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் சாமி வீதி உலா நடைபெற்றது.

    சுவாமிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி 108 சங்காபிஷேகம் நடைபெற்றதையும், இதில் கலந்து கொண்ட பக்தர்களையும் படத்தில் காணலாம்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் நேற்று இரவு நடைபெற்றது. முன்னதாக காலை 11 மணிக்கு 108 சங்காபிஷேகமும், மாலை 6 மணிக்கு சிறப்பு தீபாராதனையும், 7 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சாமி புறப்பட்டு அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து இரவு 8 மணிக்கு சன்னதி தெரு மற்றும் தெற்கு வீதியில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை 11 மணிக்கு சண்முகசுவாமி புறப்பாடும், காவிரி ஆற்றில் தீர்த்தவாரியும், இரவு 7 மணிக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    கந்தசஷ்டி விழாவையொட்டி விராலிமலை முருகன் கோவிலில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் வழிபாட்டு தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது விராலிமலை முருகன் கோவில். இங்குள்ள மலைமேல் முருக பெருமான் வள்ளி - தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

    இக்கோவில் முருக பெருமான் அருணகிரிநாதருக்கு காட்சியளித்து, அஷ்டமாசித்திகளை வழங்கி, திருப்புகழ் பாட சொல்லி அதன்படி, அருணகிரிநாதர் முருகனை பற்றி பாடியதும், நாரதருக்கு பாவ விமோசனம் தந்த கோவிலாகவும் விளங்குகிறது.

    இத்தனை சிறப்புமிக்க இக்கோவிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு கந்த சஷ்டி விழாவானது கடந்த 8-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மலைமேல் உள்ள முருக பெருமான் மற்றும் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் நாகம், சிம்மம், பூதம், மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி முருக பெருமான் கோவில் கீழ ரதவீதியில் நேற்று மாலை 6 மணியளவில் எழுந்தருளினார்.

    அங்கு சூரனை வேல் கொண்டு வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடந்தது. முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்தார். பின்னர் சிங்கமுகமகாவும், தன முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை முருக பெருமான் வேல் கொண்டு வதம் செய்தார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி சுவாமி தன்னுடன் ஆட் கொண்டார். சேவலை தனது கொடியாகவும், மயிலை தனது வாகனமாகவும் மாற்றி சுவாமி ஆட் கொண்டார். அப்போது பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் முருக பெருமானுக்கு ஆராதனை நடைபெற்றது.

    தொடர்ந்து முருகனுக்கு மஞ்சள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பால், லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இன்று (புதன்கிழமை) காலை முருக பெருமான், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் கண்ணன் தலைமையில், கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மண்டகபடிதாரர்கள் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி விழாவையொட்டி பக்தர்களின் ‘அரோகரா’ கோஷம் முழங்க சூரசம்ஹாரம் நடந்தது. லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    முருகப்பெருமான் அசுரர்களுடன் போர் புரிந்து அவர்களை அழித்து தேவர்களை காத்தருளினார். இந்த நிகழ்வே முருகப்பெருமான் எழுந்தருளிய கோவில்களில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி விழா முருகனின் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலில் கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் 6-ம் திருநாளான நேற்று கந்தசஷ்டி விழாவாகும். இதையொட்டி மாலை 6 மணிக்கு மேல் அடிவாரம் கிரிவீதியில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக நேற்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விளாபூஜை, சிறுகாலசந்தி, காலசந்தி பூஜைகள் நடந்தன.

    பின்னர் பகல் 11.30 மணிக்கு சின்னக்குமாரர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மண்டகப்படி அடையும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது சின்னக்குமாரருக்கு 16 வகை அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் வில்-அம்பு, கேடயம், கோடரி உள்ளிட்ட ஆயுதங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடந்தன. அதையடுத்து உச்சிகால பூஜைக்கு பிறகு மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சண்முகார்ச்சனை நடைபெற்றது.

    அதைத்தொடர்ந்து 2.45 மணியளவில் அசுரர்களை வதம் செய்வதற்காக மலைக்கோவில் மூலவரான தண்டாயுதபாணி சுவாமியிடம் பராசக்திவேல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், சக்தி வேலை மலைக்கொழுந்து அம்மனிடம் வைத்து சிறப்பு பூஜை, தீபாராதனை செய்து பின்னர் அம்மனிடம் வேல் வாங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். அதன்பின்னர் மலைக்கோவில் நடை அடைக்கப்பட்டது. தொடர்ந்து சின்னக்குமாரர் வில்-அம்பு, கேடயத்துடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி மலைக்கோவிலில் இருந்து சூரனை வதம் செய்வதற்காக புறப்பட்டார். அவருடன் வீரபாகு தேவர், நவ வீரர்கள் புடைசூழ புறப்பட்டனர்.

    விழாவையொட்டி பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் விசேஷ அலங்காரத்தில் வெள்ளி பிடாரி மயில் வாகனத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து மலைக்கோவிலில் இருந்து தங்க சப்பரத்தில் பராசக்தி வேலுடன் புறப்பட்ட சின்னக்குமாரர், பாதவிநாயகர் கோவில் வந்தடைந்தார்.

    சூரசம்ஹாரத்தை காண திரண்ட பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதி.

    அதையடுத்து பராசக்தி வேல் திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பராசக்தி வேலுக்கு மாலைகள் அணிவித்தும், மலர் தூவியும் வழிபட்டனர். பின்னர் கோவில் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம் மற்றும் சர்வசாதகம் செல்வசுப்பிரமணிய குருக்கள், சுந்தரமூர்த்தி சிவம் மற்றும் ஓதுவார்கள் பராசக்தி வேல், குத்தீட்டி உள்ளிட்ட ஆயுதங்களை சின்னக்குமாரரிடம் வைத்து வழிபாடு நடத்தி, தீபாராதனைகள் செய்து அனுமதி பெற்று போருக்கு புறப்பட்டனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு சூரசம்ஹார நிகழ்ச்சிகள் தொடங்கின. முன்னதாக பெரியநாயகி அம்மன் கோவிலில் இருந்து தாரகாசூரன், பானுகோபன், சிங்கமுகசூரன் ஆகியோரும் நான்கு ரதவீதிகளில் போர் முரசு கொட்டியபடி புறப்பட்டு பழனி அடிவாரம் கிரி வீதியை வந்தடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து சின்னக்குமாரரிடம் பராசக்தி வேலை பெற்ற கோவில் குருக்கள்கள் வடக்கு கிரிவீதியில் தாரகாசூரனை வதம் செய்து சூரசம்ஹார நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு ‘அரோகரா’, வீரவேல் முருகனுக்கு ‘அரோகரா’ என்று சரண கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் வாணவேடிக்கையும் நடந்தது.

    அதைத்தொடர்ந்து கிழக்கு கிரிவீதியில் பானுகோபன் வதமும், தெற்கு கிரிவீதியில் சிங்கமுகசூரன் வதமும், மேற்கு கிரிவீதியில் சூரபத்மன் வதமும் நடைபெற்றது. அதன் பின்னர் இந்திர வாகனத்தில் முத்துக்குமாரசுவாமியுடன், சின்னக்குமாரர் சந்திக்கும் நிகழ்ச்சியும், தீபாராதனையும், வெற்றி விழாவும் நடைபெற்றது. பராசக்திவேலுடன் சின்னக்குமாரர் மலைக்கோவிலுக்கு சென்று சம்ரோஷண பூஜைக்கு பின்பு கோவில் நடை திறக்கப்பட்டு ராக்கால பூஜை நடைபெற்றது.

    விழாவில் இன்று (புதன் கிழமை) மலைக்கோவிலில் காலை 9 மணிக்கு சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், தொடர்ந்து திருமண விருந்தும் நடைபெறுகிறது. பின்னர் மாலை 7 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவில் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பாடும் நடைபெறுகிறது. 
    கந்த சஷ்டியின் போது சிந்தனை முழுவதும் சஷ்டிக்கவசம் பாராயணம் செய்வதில் இருக்க வேண்டும். சரவணபவ மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.
    பொதுவாகவே விரதங்களின்போது அந்தந்த தெய்வங்களின் நாமத்தை உச்சரிப்பது நல்லது. அதே போல் கந்த சஷ்டியின் போது சிந்தனை முழுவதும் சஷ்டிக்கவசம் பாராயணம் செய்வதில் இருக்க வேண்டும்.

    முடியாதவர்கள் எளிதாக சொல்லக்கூடிய மகாமந்திரமான ‘சரவண பவ’ என்பதைச் சொல்லலாம். எளிய மந்திரமானாலும் அதன் மகிமை அளவிட முடியாதது.

    ச- லட்சுமி கடாட்சம்,
    ர- சரஸ்வதி கடாட்சம்,
    வ- போகம்,
    ண-சத்துரு ஜெயம் (எதிரிகள் வெற்றி ),
    ப - ம்ருத்தய ஜெயம்,
    வ- நோயற்ற வாழ்வு.

    எனவே சரவணபவ மந்திரத்தை உச்சரித்து முருகப்பெருமானின் அருளைப் பெறுவோம்.

    ×