என் மலர்

  ஆன்மிகம்

  பழனி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற காட்சி.
  X
  பழனி முருகன் கோவில் திருமண மண்டபத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு திருக்கல்யாணம் நடைபெற்ற காட்சி.

  பழனி முருகன் கோவில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் நிறைவு நாளான நேற்று சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
  அறுபடைவீடுகளுள் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. விழாவின் 6-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலையில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. 7-ம் திருநாளான நேற்று காலை மலைக்கோவிலில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு மேல் மலைக்கோவில் தெற்கு வெளிப்பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட திருமண மேடையில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் எழுந்தருளினார்.

  அதைத்தொடர்ந்து திருமண சடங்குகள் தொடங்கின. திருமண மேடைக்கு முன்பு பிரதான கலசம் வைக்கப்பட்டு சிறப்பு ஹோமம், யாகம் நடைபெற்றது. பின்னர் சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை அபிஷேகங்கள், தீபாராதனை நடைபெற்றது.

  அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன் பின்னர் காலை 9.30 மணிக்கு மேல் தனுசு லக்னத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடந்தது. பக்தர்கள் தண்டாயுதபாணி சுவாமிக்கு அரோகரா...! முருகனுக்கு அரோகரா...! என சரண கோஷம் எழுப்ப, பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், திருமாங்கல்யத்தை தெய்வானை மற்றும் வள்ளிக்கு அணிவித்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தார்.

  சண்முகர், வள்ளி-தெய்வானை திருமண கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்த போது எடுத்த படம்.

  கோவில் குருக்கள் செல்வ சுப்பிரமணியம், சுந்தரமூர்த்திசிவம் மற்றும் குருக்கள்கள் திருமண மந்திரங்களை ஓதினர். தொடர்ந்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  அதையடுத்து சண்முகர், வள்ளி-தெய்வானைக்கு 16 வகை தீபாராதனையும், சோடச உபசாரனையும் நடைபெற்றது. கோவில் ஓதுவார்கள், குருக்கள்கள் பாடல்கள் பாட மகாதீபாராதனை காட்டப்பட்டது. முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து சப்பரத்தில் சண்முகர், வள்ளி-தெய்வானையுடன் மலைக்கோவில் பிரகாரத்தை வலம் வந்து சண்முகருக்கான சன்னதியில் எழுந்தருளினார். அங்கு தீபாராதனை நடைபெற்றது.

  திருக்கல்யாண நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் செந்தில்குமார், மேலாளர் உமா, சித்தனாதன் சன்ஸ் ரவீந்திரன், செந்தில், கந்தவிலாஸ் நவீன், போலீஸ் துணை சூப்பிரண்டு விவேகானந்தன், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம், கோவில் அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

  பின்னர் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாலை 7 மணிக்கு மேல் ரிஷப லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேல் முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், வள்ளி-தெய்வானை சப்பரத்திலும் மணக்கோலத்தில் எழுந்தருளி திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி வடை, பாயாசத்துடன் 5 ஆயிரம் பக்தர்களுக்கு திருமண விருந்து அளிக்கப்பட்டது. விருந்து சாப்பிட்ட அனைவருக்கும் வெற்றிலை, பாக்கு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகள் அனைத்தும் பழனி கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
  Next Story
  ×