என் மலர்

  ஆன்மிகம்

  திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றதை படத்தில் காணலாம்.
  X
  திருப்பரங்குன்றத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றதை படத்தில் காணலாம்.

  திருப்பரங்குன்றம், சோலைமலை கோவில்களில் சூரசம்ஹாரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பரங்குன்றம் மற்றும் சோலைமலையில் கந்தசஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது.
  முருகப்பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றத்தில் கடந்த 8-ந்தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் கந்தசஷ்டி திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக நேற்று முன்தினம் ‘வேல் வாங்குதல்‘ நடைபெற்றது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி கோவிலுக்குள் உள்ள ஒடுக்க மண்டபத்தில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

  இதேபோல் போர் படை தளபதி வீரபாகு தேவருக்கும் அலங்காரம் செய்யப்பட்டது. மாலை 5.10 மணி அளவில் முருகப்பெருமான் தனது தாயார் கோவர்த்தனாம்பிகையிடம் இருந்து பெற்ற சக்திவேலை ஏந்தியபடி தனது வாகனமான தங்கமயில் வாகனத்தில் அமர்ந்து நகர் வீதியில் வலம் வந்தார். இதனையடுத்து வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளியபடி வீரபாகு தேவரும் வீதிஉலா வந்தார்.

  அப்போது அசுரனான சூரபத்மன் இருமாப்புடன் சன்னதி தெருவுக்கு வந்தார். இதற்கிடையே முருகப்பெருமானின் பிரதிநிதியான சிவாச்சாரியார் தன் கையில் வாள் ஏந்தியபடி வந்தார். முருகப்பெருமான் நகரின் நான்கு வீதிகளிலுமாக இருமாப்பு கொண்ட சூரபத்மனை ஓட, ஓட விரட்டினார். அதில் சூரபத்மன் யானை முகம், சிங்கமுகம், ஆட்டுத் தலை என்று மாறி, மாறி உருவெடுத்து கொக்கரித்தார்.

  இந்த நிலையிலும் முருகப் பெருமான் 4 திசையிலும் எட்டு திக்குமாக சூரபத்மனை துரத்தினார். இறுதியில் சன்னதி தெருவில் உள்ள சொக்கநாதர் கோவில் முன்பு மாலை 6.42 மணி அளவில் முருகப்பெருமான் சக்திவேலால் சூரபத்மனை வதம் செய்தார். அப்போது அங்கு குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ‘வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வீரவேல் முருகனுக்கு அரோகரா‘ என்று பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

  முருகனின் அறுபடை வீடுகளில் ஆறாம் வீடான சோலைமலை முருகன் கோவிலில் நடைபெற்ற சூரசம்ஹாரம் நிகழ்ச்சியை காண கூடியிருந்த பக்தர்கள் கூட்டத்தின் மத்தியில் சூரனை வதம் செய்த முருகப்பெருமானை படத்தில் காணலாம். உள்படம்- மயில் வாகனத்தில் முருகப்பெருமான்.

  சூரசம்ஹாரத்தை தொடர்ந்து கோவிலுக்குள் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணியசாமி, தெய்வானைக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சி நடந்தது. இதனையடுத்து பூச்சப்பரத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக இன்று(புதன்கிழமை) கிரிவலத்தில் சட்டத்தேர் பவனி நடக்கிறது.

  இதேபோன்று முருகப்பெருமானின் ஆறாம் படை வீடான பழமுதிர் சோலை என்றழைக்கப்படும் சோலைமலையில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. இதனையொட்டி காலையில் குதிரை வாகனத்தில் சாமி புறப்பாடு நடந்தது. மாலை 4.35 மணி அளவில் வெள்ளிமயில் வாகனத்தில் சுப்பிரமணியசாமி புறப்பாடாகி வேல் வாங்குதல் நடைபெற்றது. பின்னர் அதே வாகனத்தில் 5.40 மணி அளவில் முருகப்பெருமான் ஈசான திக்கில் கஜமுகாசூரனையும், அக்கினிதிக்கில் சிங்கமுகா சூரனையும் சம்ஹாரம் செய்து, தலவிருட்சமான நாவல் மரத்தடியில் பத்மாசூரனை சம்ஹாரம் செய்யும் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர்.

  தொடர்ந்து சஷ்டிமண்டபத்தில் சாமிக்கு சாந்த அபிஷேகம் நடந்தது. திருவிழாவில் இன்று(புதன்கிழமை) காலை திருக்கல்யாண உற்சவமும், மாலை ஊஞ்சல் சேவையும் நடைபெறும். முடிவில் மஞ்சள் நீர் உற்சவத்துடன் திருவிழா நிறைவுபெறும். இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் செய்தனர். 
  Next Story
  ×