search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "144 தடை"

    தூத்துக்குடி சென்ற தலைவர்கள் மீது 144 தடையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் உள்பட 6 தலைவர்கள் மீதும் போலீஸ் தடை சட்டம் 143, 188, 153ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தையொட்டி 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானர்கள். பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    துப்பாக்கி சூட்டை கண்டித்த தலைவர்கள் தூத்துக்குடிக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்கள்.

    தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    இதேபோல் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பாலகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோரும் ஆஸ்பத்திரிக்கு சென்று ஆறுதல் கூறினார்கள்.

    இதற்கிடையே தூத்துக்குடி சென்ற தலைவர்கள் மீது 144 தடையை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஸ்டாலின் உள்பட 6 தலைவர்கள் மீதும் போலீஸ் தடை சட்டம் 143, 188, 153ஏ ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Thoothukudifiring
    தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் வட்டத்தில் 144 தடை உத்தரவு வருகிற 25-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். #Thoothukudi #SterliteProtest
    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் நடைபெறுவதை தொடர்ந்து கடந்த 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நடந்த போராட்டம் கலவரமாக மாறியது.

    10 பேர் துப்பாக்கி குண்டுக்கு பலியாகி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதைத் தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் வெங்கடேஷ் 144 தடை உத்தரவை மேலும் நீட்டித்து இன்று ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடந்த சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை கருத்தில் கொண்டு சட்டம்- ஒழுங்கை பராமரித்திட இன்று (23-ந்தேதி) 1 மணி முதல் 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி வரை குற்றவியல் நடைமுறை சட்டம் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    இந்த தடை உத்தரவு தூத்துக்குடி, திருச்செந்தூர் வட்டத்தை சேர்ந்த பகுதிகள் மற்றும் வேம்பார், குளத்தூர், ஆறுமுகமங்கலம், வேடநத்தம், ஓட்டப்பிடாரம், எப்போதும் வென்றான் ஆகிய குறுவட்டங்களுக்கு உட்பட்ட பகுதிகள் முழுவதற்கும் அமல்படுத்தி உத்தரவிடப்படுகிறது.


    இதன்படி 5 மற்றும் அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், ஊர்வலம் செல்வதற்கும், பொதுக்கூட்டம் நடத்துவதற்கும், சைக்கிள் மற்றும் வாகனங்களில் பேரணியாக செல்வதற்கும், அரிவாள், கம்பு உள்பட அபாயகரமான பொருட்களை கொண்டு செல்வதற்கும், சாதி கொடிக்கம்புகள் கொண்டு செல்வதற்கும், வாடகை வாகனங்கள் மூலம் ஆர்ப்பாட்டத்திற்கு பொதுமக்களை அழைத்து செல்வதற்கும் 144 பிரிவின் கீழ் தடை விதிக்கப்படுகிறது.

    இந்த தடை உத்தரவு பள்ளி-கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள், சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகிறது.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. #SterliteProtest #Thoothukudi #BanSterlite
    அமித்ஷா வந்த போது கறுப்பு கொடி காட்டியதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெங்கையா நாயுடு வருகையை ஒட்டி விஜயவாடா விமான நிலையத்தில் 55 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #VenkaiahNaidu #APSpecialStatus

    விஜயவாடா:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சி போராடி வருகிறது. மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் முறித்துக் கொண்டது. மத்திய மந்திரி சபையில் இருந்து தெலுங்கு தேசம் மந்திரிகளும் விலகினார்கள்.

    இந்த நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா திருப்பதிக்கு சாமி கும்பிட வந்த போது நேற்று முன்தினம் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

    அமித்ஷாவுக்கு பின்னால் வந்த வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதில் பா.ஜனதா தலைவர் கோலா ஆனந்த் கார் கண்ணாடி உடைந்தது. அவர் காரில் இருந்து இறங்கி தெலுங்கு தேசம் தொண்டர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். போலீசார் விரைந்து சென்று தெலுங்கு தேசம் தொண்டர்களை கைது செய்தனர்.


    அமித்ஷாவுடன் வந்த பா.ஜனதா தலைவர் கார் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆந்திரா வரும் தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வருகிற 21-ந்தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடா வருகிறார். அங்கு 22-ந்தேதி தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். கண்ணாவரம் அருகே கொண்டபாவுளுரு கிராமத்தில் மாணவர்கள் விடுதியை திறந்து வைக்கிறார்.

    இதற்காக விஜயவாடா வரும் வெங்கையாநாயுடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விஜயவாடா விமான நிலையம் அமைந்துள்ள கண்ணாவரம் பகுதியில் கடந்த 11-ந்தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 4-ந்தேதிவரை 55 நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று விஜயவாடா போலீஸ் கமி‌ஷனர் கவுதம் சவாங் தெரிவித்தார்.

    மேலும் தடையை மீறி 4 பேருக்கு மேல் கூடினால் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி விமான நிலையத்துக்குள் புகுந்து கறுப்பு கொடி காட்டினார்கள்.

    அது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், அமித்ஷா வந்த போது கறுப்பு கொடி காட்டியதாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விஜயவாடா விமான நிலையத்தில் 55 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #VenkaiahNaidu #APSpecialStatus

    பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் இன்று மாலை முதல் வருகிற 13-ந்தேதி காலை வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) வீரப்பன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாள் (சனிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த விழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் வகையிலும், சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் வகையிலும் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி முதல் வருகிற 13-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் குற்றவியல் நடைமுறைசட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.

    இதனால் 5 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு போன்ற அபாயகரமான ஆயுதங்களை ஊர்வலமாக கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த இருந்தால், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த தடை உத்தரவு திருமணம், இறுதி சடங்கு ஊர்வலங்கள் மற்றும் கோவில்பட்டியில் நடைபெறும் அரசு விழா ஆகியவற்றுக்கு பொருந்தாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் உள்ள சோதனை சாவடிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
    ×