search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெங்கையா நாயுடுக்கு பலத்த பாதுகாப்பு- விஜயவாடா விமான நிலையத்தில் 144 தடை உத்தரவு
    X

    வெங்கையா நாயுடுக்கு பலத்த பாதுகாப்பு- விஜயவாடா விமான நிலையத்தில் 144 தடை உத்தரவு

    அமித்ஷா வந்த போது கறுப்பு கொடி காட்டியதால் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக வெங்கையா நாயுடு வருகையை ஒட்டி விஜயவாடா விமான நிலையத்தில் 55 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #VenkaiahNaidu #APSpecialStatus

    விஜயவாடா:

    ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு தெலுங்கு தேசம் கட்சி போராடி வருகிறது. மத்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்ததால் பா.ஜனதாவுடனான கூட்டணியை தெலுங்கு தேசம் முறித்துக் கொண்டது. மத்திய மந்திரி சபையில் இருந்து தெலுங்கு தேசம் மந்திரிகளும் விலகினார்கள்.

    இந்த நிலையில் பா.ஜனதா தலைவர் அமித்ஷா திருப்பதிக்கு சாமி கும்பிட வந்த போது நேற்று முன்தினம் கறுப்புக்கொடி காட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். பாதுகாப்பு படையினர் ஆர்ப்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தினார்கள்.

    அமித்ஷாவுக்கு பின்னால் வந்த வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதில் பா.ஜனதா தலைவர் கோலா ஆனந்த் கார் கண்ணாடி உடைந்தது. அவர் காரில் இருந்து இறங்கி தெலுங்கு தேசம் தொண்டர்களுடன் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். போலீசார் விரைந்து சென்று தெலுங்கு தேசம் தொண்டர்களை கைது செய்தனர்.


    அமித்ஷாவுடன் வந்த பா.ஜனதா தலைவர் கார் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆந்திரா வரும் தலைவர்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க போலீசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு வருகிற 21-ந்தேதி ஆந்திர மாநிலம் விஜயவாடா வருகிறார். அங்கு 22-ந்தேதி தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார். கண்ணாவரம் அருகே கொண்டபாவுளுரு கிராமத்தில் மாணவர்கள் விடுதியை திறந்து வைக்கிறார்.

    இதற்காக விஜயவாடா வரும் வெங்கையாநாயுடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. விஜயவாடா விமான நிலையம் அமைந்துள்ள கண்ணாவரம் பகுதியில் கடந்த 11-ந்தேதி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஜூலை 4-ந்தேதிவரை 55 நாட்களுக்கு தடை உத்தரவு அமலில் இருக்கும் என்று விஜயவாடா போலீஸ் கமி‌ஷனர் கவுதம் சவாங் தெரிவித்தார்.

    மேலும் தடையை மீறி 4 பேருக்கு மேல் கூடினால் கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையம் வந்த போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் பாதுகாப்பை மீறி விமான நிலையத்துக்குள் புகுந்து கறுப்பு கொடி காட்டினார்கள்.

    அது போன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்கவும், அமித்ஷா வந்த போது கறுப்பு கொடி காட்டியதாலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக விஜயவாடா விமான நிலையத்தில் 55 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #VenkaiahNaidu #APSpecialStatus

    Next Story
    ×