search icon
என் மலர்tooltip icon
    • வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனுக்கு வேல் காவடி, புஷ்ப காவடி
    • மாலை 4 மணிக்கு வேல் காவடி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்படும்

    கன்னியாகுமரி :

    மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகனுக்கு வேல் காவடி, புஷ்ப காவடி விழாக்கள் (இன்று) 19-ந்தேதி தொடங்கி 21-ந்தேதி வரை நடக்கிறது.

    இன்று காலை 5 மணிக்கு கணபதி ஹோமம் நடை பெற்றது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 7 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதலும் நடக்கிறது. 20-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு அலங்கார தீபாராதனையும், மாலை 4.30 மணிக்கு பக்தி இன்னி சையும், மாலை 5.30 மணிக்கு நையாண்டி மேளமும், மாலை 6 மணிக்கு வேல் தரித்தலும், இரவு 7.30 மணிக்கு காவடி பெரும் பூஜையும், இரவு 8.30 மணிக்கு அன்னதானமும், இரவு 9 மணிக்கு காவடி அலங்காரமும் நடக்கிறது.

    21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழ மை) காலை 7 மணிக்கு தீபாராதனையும், காலை 7.30 மணிக்கு காவடி பவனி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று அங்கு தீபாராதனை நடக்கிறது.

    மதியம் 1 மணிக்கு அன்னதானமும், மாலை 4 மணிக்கு வேல் காவடி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு மணவா ளக்குறிச்சி சந்திப்பு, அம்மாண்டிவிளை, வெள்ள மோடி, ராஜாக்கமங்கலம் வழியாக திருச்செந்தூர் செல்கிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி பிடித்த அதிகாரிகள்
    • 2 வாகனங்களிலும் கொண்டு வந்த ரேசன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு சென்றது

    கன்னியாகுமரி:

    தக்கலை அருகே சுங்கான்கடை பகுதியில் இன்று அதிகாலையில் தக்கலை வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான அலுவலக பணியாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு வந்த மினி லாரியை அதிகாரிகள் கைகாட்டி நிறுத்தினர். ஆனால் அந்த லாரி நிற்காமல் அதிவேகமாக சென்றது. உடனே அதிகாரிகள் அந்த வாகனத்தினை பின்தொடர்ந்து துரத்தி சென்றனர். சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் துரத்தி சென்றதும் அந்த வாகனத்தினை டிரைவர் சாலையில் நிறுத்திவிட்டு தப்பி ஓடினார்.

    பின்னர் மினி லாரியை சோதனை செய்ததில் அதில் சுமார் 3 ஆயிரம் கிலோ ரேசன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்து தக்கலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

    தொடர்ந்து தக்கலை அருகே அழகியமண்டபம் பகுதியில் வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது டிரைவர் தப்பி ஓடினார். சந்தேகம் அடைந்து அந்த ஆட்டோவை சோதனை செய்தனர். அதில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி ஆட்டோவுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

    முதற்கட்ட விசாரணை யில் 2 வாகனங்களிலும் கொண்டு வந்த ரேசன் அரிசி கேரளா மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு சென்றது என தெரியவந்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி உடையார்விளை அரசு கிட்டங்கியில் இன்று ஒப்படைக்கப்படுகிறது.

    • குமரி மாவட்டத்தில் 95.99 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி
    • மாநில அளவில் 4-வது இடம் பிடித்தது

    நாகர்கோவில் :

    தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

    இதில் தமிழக அளவில் தேர்ச்சி விழுக்காட்டில் குமரி மாவட்டம் 4-வது இடத்தை பிடித்துள்ளது. 23 ஆயிரத்து 141 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதி யதில் 22 ஆயிரத்து 213 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 95.99 சதவீதமாகும்.

    11 ஆயிரத்து 657 மாண வர்கள் தேர்வு எழுதியதில் 10 ஆயிரத்து 932 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 93.78 சதவீதமாகும். 11 ஆயிரத்து 484 மாணவிகள் தேர்வு எழுதியதில் 11 ஆயிரத்து 281 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விழுக்காடு 98.23 சதவீதமாகும்.

    மாணவர்களை காட்டி லும் மாணவிகளே அதிக அளவு தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினார்கள். 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அதிகாரி முருகன் பாராட்டு தெரிவித்துள் ளார்.

    கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு தேர்ச்சி விழுக் காட்டில் குமரி மாவட்டம் முதலிடம் பிடித்திருந்தது.

    இந்த ஆண்டு 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது

    • 3 மணி நேரம் இடைவிடாமல் பெய்தது
    • வியர்வையில் குளித்தவர்கள் மழையில் நனைந்தனர்

    நாகர்கோவில் :

    தமிழகத்தில் கோடை வெயில் கடந்த இரண்டு வாரங்களாக சுட்டெரித்து வருகிறது. தாங்க முடியாத வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினார்கள். இன்னும் சில நாட்கள் வெயிலின் தாக்கம் இதே போல் தான் நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை கேட்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3. 45 மணிக்கு திடீரென்று இடி, மின்னலு டன் மழை கொட்டத் தொடங்கியது. காலை 6.45 மணி வரை 3 மணி நேரம் இடைவிடாமல் கொட்டி தீர்த்த மழையால் நகரில் பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சவேரியார் கோவில் சந்திப்பு, செட்டிகுளம் சந்திப்பு, ஈத்தாமொழி ரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் போக முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நாகர்கோவிலில் பெய்த இந்த திடீர் மழை பொது மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் கோடை வெயிலிலிருந்து ஓரளவு தப்பிக்க முடியும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    மழை கொட்டிய நிலையில் இன்றைய வெப்ப நிலையும் சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதாவது அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரிக்கு கீழ்தான் இருக்கும் என்றும் அறிவித்திருப்பது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் இருந்து இன்று அதிகாலை 5.15 மணிக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவில் வந்தடைந்தது. இந்த  ரெயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் மழை கொட்டியதை பார்த்து உற்சாகத்துடன் மழையில் நனைந்தபடியே சென்றனர். இது பற்றி அவர்கள் கூறும் போது சென்னையில் ரெயில் ஏறியதும் ரெயிலுக்குள்ளே இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் அனலாக தாக்கியது. நாகர்கோவில் வந்து இறங்கியதும் மழையைப் பார்த்து சந்தோஷமாக இருக்கிறது என்ற படியே மழை தண்ணீரில் உற்சாக குளியல் போட்டபடி ஊர்களுக்கு புறப்பட்டு சென்றார்கள்.

    நாகர்கோவிலில் இன்று அதிகபட்சமாக 34.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மயிலாடி, கொட்டாரம், மாம்பழத்துறையாறு, குருந்தன்கோடு பகுதிகளிலும் இன்று காலையில் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

    அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.87 அடியாக இருந்தது. அணைக்கு 146 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.35 அடியாக உள்ளது. அணைக்கு 95 கன அடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையிலிருந்து 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ் சாணி அணைகளில் போது மான அளவு தண்ணீர் உள்ள காரணத்தினாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

    மாவட்டத்தில் கன்னி பூ சாகுபடி பணி தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயி களுக்கு தேவையான விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகள் பல்வேறு இடங்களில் சாகுபடி செய்ததையடுத்து பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளை பாசனத்திற்காக வழக்கம்போல் ஜூன் 1-ந்தேதி திறக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

    • துறைமுக வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க அதிகாரிகளுக்கு அறிவுரை
    • ஜூன் 14-ந்தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி அருகே உள்ள சின்னமுட்டத்தில் மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ளது. இந்த துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த விசைப்படகுகள் தினமும் அதிகாலை 5 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்க சென்று விட்டு இரவு 9 மணிக்கு கரைக்கு திரும்புவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி முதல் தமிழகத்தின் கிழக்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகள் மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதால் சின்னமுட்டம் துறைமுகத்தை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்தில் கரையோரமாக நங்கூரம் பாய்ச்சி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    ஒரு சில விசைப்படகுகளை மீனவர்கள் கரையேற்றி பழுது பார்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அடுத்த மாதம் ஜூன் 14-ந்தேதியுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைகிறது. அன்று முதல் மீன் பிடிக்க செல்வதற்காக விசைப்படகு மீனவர்கள் தங்களது வலைகளையும், படகுகளையும் தயார்படுத்தி வருகிறார்கள்.

    இந்த நிலையில் குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் இன்று காலை சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு "திடீர்"என்று வந்தார். அவர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தை சுற்றி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது துறைமுக வளாக பகுதியை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்திருக்கும்படி அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

    சின்ன முட்டம் துறை முகத்தில் பல்வேறு அடிப்படை வசதிகளை செய்யும் படியும் அதிகாரி களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது குமரி மாவட்ட மீன்வளத்துறை துணை இயக்குனர் சின்னமுட்டம் மீன் துறை உதவி இயக்குனர் விர்ஜில் கிறாஸ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    • அதிவேகத்தில் செல்லும் கனரக வாகனங்களால் பொதுமக்கள் பீதி
    • வெள்ளமடம் இணைப்பு சாலை வழியாக புகுந்து நாகர்கோவில் வந்து விடுகிறார்கள்.

    கன்னியாகுமரி :

    காவல்கிணறு முதல் நாகர்கோவில் வரை 4 வழிச் சாலை பணிகள் முடிந்து உள்ளது.

    இதனால் காவல்கிணறில் இருந்து நாகர்கோவில் வரும் பல கனரக வாகனங்கள் அனைத்தும் தற்போது இந்த வழியாகவே வருகிறது.

    அதிக பாரம் ஏற்றியபடி வரும் இந்த வாகனங்கள் சாலையில் அதிவேகமாக செல்கிறது. இவ்வாறு செல்லும் போது அந்த சாலையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.

    இதற்கிடையே இந்த 4 வழிச்சாலையை பயன்படுத்தும் கார், வேன் மற்றும் பஸ்கள் வெள்ளமடம் இணைப்பு சாலை வழியாக புகுந்து நாகர்கோவில் வந்து விடுகிறார்கள்.

    இதுபோல ஆரல்வாய் மொழி, குமாரபுரம் சாலை யிலும், திருப்பதிசாரம், வெள்ளமடம் சாலை வழியாகவும் தினமும் ஏராளமான வாகனங்கள் செல்கிறது.

    இவ்வாறு செல்லும் வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதோடு, இணைப்பு சாலைகளில் திரும்பும் போது அடிக்கடி விபத்துக் கள் ஏற்படுகிறது.

    இதுபோல வெள்ள மடம்-குலசேகரன்புதூர் ரோட்டில் 4 வழிச்சாலைக்கு செல்லும் இணைப்பு சாலை செங்குத்தாக உள்ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாககனங்களும் அடிக்கடி விபத்துக்களில் சிக்கி கொள்கிறது.

    இப்படி விபத்துக்களில் சிக்கி படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளுக்கு செல் வோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது வாகன ஓட்டிகளுக்கு மட்டுமின்றி இப்பகுதி மக்களுக்கும் பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    இச்சாைலையில் விபத் துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகமும், சாலை போக்கு வரத்து துறையும் இணைந்து பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். அடிக்கடி விபத்து ஏற்படும் பகுதிகளில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்த வேண்டும்.

    மேலும் இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விஜயை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்
    • கணவன், மனைவி என்று கூறி பார்வதிபுரம் பகுதியில் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (வயது 23). ஆசாரிப்பள்ளம் பகுதியில் தள்ளு வண்டியில் வைத்து துணிகளுக்கு இஸ்திரி செய்யும் தொழில் செய்து வந்தார்.

    இவர் நேற்று பார்வதிபுரம் பகுதியில் உள்ள லாட்ஜில் விஷம் குடித்து உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவருடன் இளம்பெண் ஒருவரும் இருந்தார். இதுகுறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த விஜயை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி விஜய் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வடசேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டனர். விஜய் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?. அவருடன் தங்கியிருந்த பெண் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட விஜய் இஸ்திரி செய்யும் கடைக்கு இராமன் புதூர் பகுதியை சேர்ந்த 31 வயது இளம்பெண் வந்துள் ளார். அப்போது விஜய்க்கும், அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட் டுள்ளது. அந்த பெண்ணுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளது.

    கணவரை பிரிந்து அவர் வாழ்ந்து வருகிறார். அந்த பெண்ணுடன் விஜய் பல்வேறு இடங்களுக்கு சுற்றி திரிந்து சந்தோஷமாக இருந்துள்ளார். இந்த விவகாரம் விஜயின் பெற் றோருக்கு தெரிய வந்துள் ளது.

    இதையடுத்து அந்த பெண்ணுடன் தொடர்பை துண்டித்து விடுமாறு பெற்றோர் கண்டித் துள்ளனர். ஆனால் விஜயால் அந்த பெண்ணை மறக்க முடியவில்லை. இந்த நிலையில் விஜய் அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.

    இதற்கு அந்தப் பெண்ணும் சம்மதம் தெரிவித்தார். அதன்படி நாகர்கோவிலில் உள்ள கோவில் ஒன்றில் விஜய் அந்த பெண்ணுக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

    பின்னர் இருவரும் கணவன், மனைவி என்று கூறி பார்வதிபுரம் பகுதியில் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். பின்னர் விஜய் தனது வீட்டிற்கு சென்று தனது பெற்றோரை சந்தித்து பேசினார். அப்போது அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும் தங்களை ஏற்றுக்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

    ஆனால் அவரது பெற்றோர் விஜயின் திரும ணத்தை ஏற்க மறுத்தனர். இதனால் மனமுடைந்த விஜய் வீட்டில் இருந்து புறப்பட்டு விடுதிக்கு வந்துள்ளார்.

    அப்போது அவர் விஷம் அருந்தி உள்ளார். விஷம் குடித்த விஜய் லாட்ஜுக்கு சென்றதும் மயங்கி விழுந்து உள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணிடம் நம்மை சேர்ந்து வாழ விட மாட் டார்கள். இதனால் நான் சாகப்போகிறேன் என்று கூறியுள்ளார். அதன்பிறகு தான் விஜய் விஷம் குடித்த தகவல் அந்த பெண்ணுக்கு தெரியவந்துள்ளது.

    உடனே அவர் கூச்சலிட்டு விஜயை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றது விசார ணையில் தெரியவந்துள்ளது.

    • குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
    • குட்கா, புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    நாகர்கோவில், தக்கலை, குளச்சல், கன்னியாகுமரி சப்-டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சா மற்றும் போதை பொருட்கள் வழக்கில் கைது செய்யப்படுபவர்களை போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜாங்க பெருமாள் தலைமையிலான போலீசார் களியல் ஜங்ஷன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த மினி டிரக்கரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

    அதில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வாகனத்தில் இருந்த 56 கிலோ குட்கா புகையிலையை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட இருவரிடம் விசாரணை நடத்தியபோது அவர்கள் களியல் பகுதியை சேர்ந்த அருள் தாஸ் (வயது 48), சிதறால் பகுதியை சேர்ந்த எட்வின் (37) என்பது தெரியவந்தது. இருவரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குட்கா, புகையிலை பொருட்களை எங்கிருந்து வாங்கி வந்தார்கள் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 14 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்க ஏற்பாடு
    • மூத்த நிர்வாகிகள் அவசர ஆலோசனை

    நாகர்கோவில் :

    அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஒருங்கிணைப்பாளராக ஓ. பன்னீர் செல்வ மும், இணை ஒருங்கி ணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் செயல்பட்டு வந்தனர்.

    அதன்பின்பு கட்சிக்குள் ஒற்றை தலைமையை ஏற்படுத்த மூத்த நிர்வாகிகள் முயற்சி செய்தனர். இதையடுத்து நடந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதனை ஏற்க மறுத்த ஓ.பன்னீர் செல்வம் சட்டபோராட்டத்தில் ஈடுபட்டார். இதில் எடப்பாடி பழனிசாமிக்கே வெற்றி கிடைத்தது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்றும் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

    இதையடுத்து அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்து வர இருக்கிற பாராளுமன்ற தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் பணிகளை தொடங்கி விட்டார். அதன் முதல் கட்டமாக சமீபத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார். இந்த கூட்டத்தில் சில மாவட்ட செயலாளர்கள் பங்கேற்கவில்லை.

    கூட்டத்தில் பங்கேற்காத மாவட்ட செயலாளர்கள் யார்-யார்? என பட்டிய லிட்ட போது அவர்கள் ஓ.பன்னீர் செல்வம் ஆதர வாளர்கள் என தெரிய வந்தது. கட்சியில் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர் செல்வத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட போது எடப்பாடி பழனிசாமிக்கு பெரும்பாலான மாவட்ட செயலாளர்கள் ஆதரவு தெரிவித்து அவரது அணியில் இணைந்து கொண்டனர்.

    ஆனால் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்த சில மாவட்ட செயலாளர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது தெரியவந்தது. இதில் குமரி கிழக்கு மாவட்டம், தஞ்சாவூர், சென்னையில் 2 மாவட்ட செயலாளர்கள் உள்பட 6 பேர் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களாக இருப்பது தெரியவந்தது.

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் அனைவரையும் ஓரங்கட்டிவிட்டு, புதிய மாவட்ட செயலாளர்களை நியமிக்க கட்சியின் மூத்த நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.

    அந்த வகையில் குமரி கிழக்கு மாவட்ட செய லாளராக இருந்த எஸ்.ஏ.அசோகன் ஓ.பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் ஆவார். எனவே அவருக்கு பதிலாக புதிய மாவட்ட செயலாளரை நியமிக்க ஏற்பாடுகள் நடந்து வரு கிறது. இதுபோல கட்சி பணிகளில் ஆர்வம் காட்டா மல் இருக்கும் மாவட்ட செயலாளர்களை கண்ட றிந்து அவர்களையும் ஓரங் கட்ட கட்சியின் மேலிடம் முடிவு செய்துள்ளது. அதன்படி குமரி, தஞ்சை, சென்னை உள்ளிட்ட 14 மாவட்ட செயலாளர்கள் புதிதாக நியமிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படும் போது அந்த பதவியை கைப்பற்ற இப்போதே பல நிர்வாகிகள் காய்நகர்த்த தொடங்கி விட்டனர்.

    இதில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த எஸ். ஏ.அசோக னுக்கு பதிலாக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் உள்பட குமரி மாவட்டத்தை சேர்ந்த சில மூத்த நிர்வாகி களின் பெயர்கள் அடிபடு கிறது. இவர்களில் யாருக்கா வது ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங் கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. பாராளு மன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கன்னியா குமரி கிழக்கு மாவட்டத்தில் புதிய மாவட்ட செயலாளரை நியமனம் செய்து கட்சியை மேலும் வலுப்படுத்த மூத்த நிர்வாகிகள் தீவிரம் காட்ட தொடங்கி உள்ளனர்.

    • தூர்வாரும் கப்பல் மூலம் மணல் அகற்றும் பணி
    • இன்று காலை தொடங்கியது

    கன்னியாகுமரி :

    சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.

    இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் மூலம் 3 படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. அடிக்கடி ஏற்படும் கடல் சீற்றம், நீர்மட்டம் தாழ்வு, உயர்வு, உள்வாங்குதல் போன்ற இயற்கை மாற்றங்களினால் திருவள்ளுவர் சிலையை சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்லும் நிலை இருந்து வருகிறது.

    இதைத்தொடர்ந்து விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்பு பாலம் அமைக்க வேண்டும் என்று பல்வேறு தமிழ் அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி செலவில் கண்ணாடி இழையினால் ஆன கூண்டுப்பாலம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த கண்ணாடி இழை கூண்டுப்பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்கும். பாலத்தின் மீது சுற்றுலா பயணிகள் நடந்து செல்லும் போது பக்கவாட்டிலும், நடை பாதையின் கீழேயும் கண்ணாடி வழியாக கடல் அலையை ரசிக்க முடியும். இந்த நிலையில், இந்த பணிகள் ஜனவரி 2024-ல் நிறைவுபெறும் என்று நெடுஞ்சாலைத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாடு கடல் சார் வாரியம் விவேகானந்தர் நினைவு மண்டபம் - திருவள்ளுவர் சிலை இடையே ரூ.37 கோடி மதிப்பீட்டில் சிறப்பு மிக்க நவீன கடல் சார் பாதசாரிகள் பாலத்தை மத்திய அரசின் 50 சதவீத நிதி உதவியுடன் சாகர் மாலா திட்டத்தின் கீழ் மேற்கொண்டு வருகிறது.

    இதில் முதல் கட்டப்பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. ஜனவரி 2024-ல் பணிகள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்ணாடி பாலம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை வருகிற 24-ந்தேதி நடக்கிறது. இதில் தமிழக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு இந்த பணியை தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில் கண்ணாடி பாலம் அமைப்பதற்கான மூலப்பொருட்கள் ஏற்றி செல்லும் கப்பல் போன்ற அமைப்பு கொண்ட மெர்ஜி என்னும் படகு கடந்த மாதம் 21-ந்தேதி கொச்சி துறைமுகத்தில் இருந்து சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படகு விவேகானந்தர் மண்டபத்தில் கூடுதல் படகு தளம் அமைப்பதற்காக படகு தளத்தை ஆழப்படுத்தி விரிவாக்கம் செய்யும் பணிக்கான கிரேனை ஏற்றிக்கொண்டு நேற்று மாலை விவேகானந்தர் பாறையின் அருகில் கடல் நடுவே தயார் நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. இன்று காலை விவேகானந்தர் பாதையில் படகு நிறுத்தும் தளத்தில் தூர்வாரி கப்பல் மூலம் மணலை அகற்றி ஆழப்படுத்தும் பணி தொடங்கியது.

    • குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார்.
    • சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார்.

    நாகர்கோவில் :

    பார்வதிபுரம் கணியாகுளம் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 43) கொத்தனார்.

    இவரது மனைவி ஆஷா (37). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாரியப்பன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். சம்பவத்தன்று அவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியிடம் தகராறு செய்துள்ளார். பின்னர் வீட்டிலிருந்து மாரியப்பன் வெளியே சென்றார்.

    இந்தநிலையில் பார்வதிபுரம் இலந்தையடி ரெயில்வே கேட் பகுதியில் அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடப்பதாக மனைவி ஆஷாவிற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உறவினர்கள் அங்கு சென்று மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி மாரியப்பன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து வடசேரி போலீசில், ஆஷா புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்தவன் துணிகரம்
    • சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்

    கன்னியாகுமரி :

    குளச்சல் அருகே கோடிமுனை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் ஹென்றி ஆஸ்டின் (வயது 37), மீன் பிடித்தொழிலாளி.

    இவரது மனைவி டெனிலா (33), நேற்று தனது 3 வயது பெண் குழந்தையுடன் குறும்பனை திருமண மண்டபத்தில் நடந்த உறவினர் மகள் திருமணத்திற்கு சென்றிருந்தார். மதிய வேளையில் மண்டபத்தின் முன்பு உள்ள மைதானத்தில் சிறுமி விளையாடிக் கொண்டிருந்தாள்.

    அப்போது 25 வயது மதிக்கத் தக்க வாலிபர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் அங்கு வந்தார். அவர் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு மண்டபம் நோக்கி வந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த டெனிலாவின் 3 வயது மகள் கழுத்தில் கிடந்த 1 பவுன் தங்க சங்கிலியை பறித்தார்.

    இதை பார்த்தவர்கள் சப்தமிட்ட படியே வாலிபரை பிடிக்க முயன்ற னர். ஆனால் அவர் மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டார். இதனால் திருமண மண்டபம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து குளச்சல் போலீசில் டெனிலா புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். திருமண மண்டபம் முன்பு சிறுமியிடம் செயின் பறித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×