என் மலர்tooltip icon

    உலகம்

    • இந்தியாவும், சீனாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள்.
    • புதிய சந்தைகள், புதிய எரிசக்தி வினியோக ஆதாரங்களை தேட அவர்களை கட்டாயப் படுத்துகிறது.

    ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்து உள்ளது. உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதி உதவி செய்து வருவதாக அமெரிக்கா விமர்சித்து வருகிறது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்து வருகிறது.

    மேலும் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பயப்படாமல் ரஷியாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணை வாங்கி வருகிறது. இந்தநிலையில் ரஷிய வெளியுறவு துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத்தல் பலன் அளிக்காது என கூறி உள்ளார்.

    தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு செர்ஜி லாவ்ரோவ் இது தொடர்பாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ரஷியா மீது விதிக்கப்பட்ட புதிய தடைகளால் எங்களுக்கு எந்த விதமான பிரச்சினையும் இல்லை. அந்த காலக்கட்டத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு தடைகளை டிரம்பின் முதல் பதவி காலத்தில் விடுக்கப்பட்டது.

    மேற்கத்திய நாடுகள் இந்த தடைகளை விதித்தபோது இருந்த சூழ்நிலையில் இருந்து நாங்கள் முடிவுகளை எடுக்க தொடங்கினோம்.

    இந்தியாவும், சீனாவும் பண்டைய நாகரிகங்கள் கொண்ட நாடுகள். எனக்கு பிடிக்காததை செய்வதை நீங்கள் நிறுத்துங்கள், அல்லது நான் உங்கள் மீது வரிகளை விதிப்பேன் என்று அவர்களிடம் பேசுவதில் எந்த பயனும் இல்லை. இந்தியா மற்றும் சீனாவுக்கு எதிராக அதிக வரி விதிக்கும் அமெரிக்காவின் அச்சுறுத் தல்கள் பலன் அளிக்காது என்பது நிரூபணம் ஆகி வருகிறது.

    இந்தியாவும், சீனாவும் அமெரிக்காவின் கோரிக்கை களை எதிர்த்து வருகிறது. அந்த நாடுகள் அமெரிக்கா வின் அழுத்தத்தை விட தங்கள் சொந்த தேசிய நலன்களை அடிப்படையாக கொண்ட கொள்கைகளை தொடர்ந்து பின்பற்றி வருகின்றன.

    இந்த வரி அச்சுறுத்தல் அந்த நாடுகளின் பொருளா தார வளர்ச்சியை குறை மதிப்பிற்கு உட்படுத்துகிறது என்பதோடு மட்டுமல்லாமல் குறைந்த பட்சம் மிகவும் கடுமையான சிரமங்களை உருவாக்குகிறது.

    இதனால் புதிய சந்தைகள், புதிய எரிசக்தி வினியோக ஆதாரங்களை தேட அவர்களை கட்டாயப் படுத்துகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆளுநர் தேர்தலில் 2ஆம் பிடித்த நிலையில், மேல்சபை தேர்தலில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
    • தோல்வி விரக்தியில் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப துறையில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. நாம் கேட்கும் கேள்விகளுக்கு டக் டக்கென பதில் கொடுத்து வருகிறது. தகவல் பெறுவதற்காகவே ஏ.ஐ. பயன்படுத்தி வந்த நிலையில், ஜப்பானை சேர்ந்த கட்சி ஏ.ஐ.-யை கட்சித் தலைவராக்க முடிவு செய்துள்ளது.

    தேர்தலில் தோல்வியடைந்ததால், விரக்தியடைந்து அந்த கட்சியின் நிறுவனர் உடனடியாக வெளியேறிவிட்டார். இதனால் புதிய தலைவர் நியமிக்கப்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், செயற்கை தொழில்நுட்பத்தை (AI) கட்சியின் தலைவராக நியமனம் செய்ய முடிவு செய்துள்ளது.

    The Path to Rebirth என் கட்சி கடந்த ஜனவரியில் ஷிஞ்ஜி இஷிமாரு என்பவரால் தொடங்கப்பட்டது. இவர் மேற்கு ஜப்பானில் உள்ள ஒரு சிறு நகரின் முன்னாள் மேயர் ஆவார். அந்தக் கட்சி ஒருங்கிணைந்த கொள்கை தளத்தில் செயல்படுவதில்லை. மாறாக அதன் உறுப்பினர்கள் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களைத் தொடர அனுமதிக்கிறது.

    2024 டோக்கியோ ஆளுநர் தேர்தலில், வலுவான ஆன்லைன் பிரசாரத்தின் மூலம் இரண்டாவது இடத்தைப் பிடித்தபோது, இஷிமாரு ஆரம்பத்தில் தேசிய கவனத்தை ஈர்த்தார். இருப்பினும், இந்த ஆண்டு மேல்சபை தேர்தலில் அவரின் கட்சி எந்த இடத்தையும் பிடிக்காத நிலையில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து வெளியேறினார்.

    எப்படி செயல்படுத்தப்படும் என்பது உட்பட செயற்கை நுண்ணறிவு பற்றிய விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. உறுப்பினர்களின் அரசியல் நடவடிக்கைகளை AI கட்டுப்படுத்தாது. கட்சியின் செயல்பாடுகளை மேற்பார்வையிடும் என அக்கட்சியின் தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

    • நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன.
    • மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    ரஷியாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த 5-ந்தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எதிரொலியாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    இந்நிலையில் ரஷியாவின் கம்சட்கா பகுதியில் இன்று மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவானது. நிலநடுக்கத்தால் கட்டடங்கள் அதிர்ந்தன. அத்துடன் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

    அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, காம்சட்கா தீபகற்பத்தின் தலைநகரான பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-காம்சாட்ஸ்கிக்கு கிழக்கே 128 கிலோமீட்டர் (80 மைல்) தொலைவில், 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.

    அமெரிக்க பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம், அருகிலுள்ள கடலோரப் பகுதிகளில் ஆபத்தான அலைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. இன்று அதிகாலை 2.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் நிலநடுக்கம் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    • கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
    • பின்னர் லாரியில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தினார்.

    காசாவில் இஸ்ரேல் தரைவழியாக பீரங்கிகள் மூலம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதனால் காசாவில் இஸ்ரேலால் கொல்லப்பட்ட பாலஸ்தீன பொதுமக்களின் எண்ணிக்கை 65,100 ஐ தாண்டியுள்ளது. மக்கள் நகரை விட்டு அதிகளவில் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். 

    நேற்று, காசாவில் உள்ள மருத்துவமனைகள் அருகே இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. காசா நகரில் தரைவழித் தாக்குதல் தொடங்கிய பின்னர், மருத்துவமனைகள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் தீவிரப்படுத்தியுள்ளது.

    காசாவில் உள்ள அல்-ஷிஃபா மற்றும் அல்-அஹ்லி மருத்துவமனைகள் மீது இஸ்ரேலிய ஏவுகணைகள் தாக்குதல் நடத்தி 15 பேர் கொல்லப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே நேற்று தெற்கு காசாவின் ரஃபாவில் ஹமாஸ் நடத்திய எதிர் தாக்குதலில் நான்கு இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டனர்.

    மேஜர் ஓம்ரி சாய் பென் மோஷே (26), லெப்டினன்ட் எரான் ஷெலெம் (23), லெப்டினன்ட் ஈதன் அவ்னர் பென் இட்ஷாக் (22), மற்றும் லெப்டினன்ட் ரான் அரிலி (20) ஆகியோர் கொல்லப்பட்டனர். நேற்று காலை 9:30 மணிக்கு ஹமாஸ் போராளிகள் அவர்கள் பயணித்த இராணுவ வாகனத்தைத் தாக்கினர்.

    இதற்கிடையே இஸ்ரேலிய துறைமுக நகரமான ஈலாட் மீது ஹவுத்திகள் நேற்று ட்ரோன் தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு ஹோட்டல் தீப்பிடித்தது.

    மேலும், மேற்குக் கரைக்கும் ஜோர்டானுக்கும் இடையிலான ஆலன்பி கிராசிங்கில் நேற்று பிற்பகல் 3 மணியளவில் ஜோர்டானிய லாரி ஓட்டுநர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு இஸ்ரேலிய குடிமக்கள் கொல்லப்பட்டனர்.

    இஸ்ரேலிய அதிகாரிகள் லாரியை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது, தாக்குதல் நடத்தியவர் இஸ்ரேலியர்கள் மீது கைத்துப்பாக்கியால் சுட்டார். பின்னர் லாரியில் இருந்து இறங்கி அருகில் இருந்தவர்களை கத்தியால் குத்தினார். சம்பவ இடத்திலேயே இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகளால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 

    • விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன.
    • விசாரணையில் எரிபொருள் சுவிட்சுகள் 'கட்ஆஃப்' நிலையில் இருப்பது தெரியவந்தது.

    கடந்த ஜூன் 12 அன்று, அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா 171 போயிங் விமானத்தின் 2 இயந்திரங்களும் செயலிழந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அருகிலுள்ள கட்டிடத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில், உயிரிழந்தவர்களில் நான்கு பேரின் குடும்பங்கள் அமெரிக்க விமான உற்பத்தியாளர் போயிங் மற்றும் எரிபொருள் ஸ்விட்ச் -ஐ தயாரித்த உபகரண நிறுவனமான ஹனிவெல் மீது நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர்ந்துள்ளனர்.

    அமெரிக்காவின் டெலாவேர் உயர் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மனுவின்படி, தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில், விமானத்தில் எரிபொருள் சுவிட்ச் பொருத்தப்பட்டுள்ள இடம் மற்றும் அதன் வடிவமைப்பு காரணமாக விபத்து நிகழ்வதற்கான சாத்தியங்கள் அதிகமாக உள்ளன என்று மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

    காக்பிட் குரல் பதிவுக் கருவியில் ஒரு விமானி, "நீங்கள் ஏன் எரிபொருளைக் தடுத்தீர்கள்?" என்று கேட்பது பதிவாகியுள்ளது. மற்ற விமானி, "நான் செய்யவில்லை" என்று பதிலளித்தார்.

    விசாரணையில் எரிபொருள் சுவிட்சுகள் 'கட்ஆஃப்' நிலையில் இருப்பது தெரியவந்தது. குழுவினர் 14 வினாடிகளுக்குள் அவற்றை 'ரன்' நிலைக்குத் சொடுக்கினாலும், விமானம் ஏற்கனவே கட்டுப்பாட்டை இழந்து 32 வினாடிகளுக்குள் விபத்துக்குள்ளானது.

    இருப்பினும், இந்த சுவிட்சுகளின் வடிவமைப்பை அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) சோதனை செய்து அங்கீகரித்துள்ளது.

    இந்த விபத்து குறித்து எப்.ஏ.ஏ. நிர்வாகம் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், எரிபொருள் சுவிட்ச் கோளாறால் விபத்து நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தது. 

    • ஒழுக்கக்கேட்டைத் தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
    • பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிவேக இணைய சேவையை இழந்துள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் நாட்டில், சுமார் 6 மாகாணங்களில் ஃபைபர் ஆப்டிக் இணைய சேவைக்கு, தலிபான் அரசு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.  

    தாலிபான்களின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா பிறப்பித்த உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ஒழுக்கக்கேட்டைத் தடுக்க இந்த தடை விதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    இதனால், ஆப்கானிஸ்தானின் அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் இல்லங்களில் வைஃபை இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி முதல் வடக்கு பால்க் மாகாணத்தில் வைஃபை இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டன.

    இதனைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களான பாக்லான், படாக்ஷான், குண்டுஸ், நான்கார்ஹர் மற்றும் தகார் ஆகிய மாகாணங்களில், நேற்று முதல் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

    இதன் காரணமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் அதிவேக இணைய சேவையை இழந்துள்ளனர். பல நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்கள் வணிகம் மற்றும் அன்றாட நடவடிக்கைகளுக்கு இணையத்தை பெரிதும் நம்பியிருப்பதால், இது பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட பகுதிகளில், தொலைபேசி நெட்வொர்க்குகள் வழியாக மட்டுமே இணையத்தை அணுக முடியும், ஆனால் அதுவும் அடிக்கடி துண்டிக்கப்படுவதால் சிரமமான சூழல் ஏற்பட்டுள்ளது.  

    • பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் பேசினார்.
    • இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரிட்டன் பயணத்தின் போது இந்தியாவுடனும் பிரதமர் நரேந்திர மோடியுடனும் தனக்கு வலுவான தனிப்பட்ட உறவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

    பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய டிரம்ப்,  "நான் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். நான் இந்தியப் பிரதமருடன் மிகவும் நெருக்கமாக இருக்கிறேன். எங்களுக்குள் மிகச் சிறந்த உறவு உள்ளது" என்று  கூறினார்.

    சமீபத்தில் தனது 75வது பிறந்தநாளைக் கொண்டாடிய பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்ததாகவும், அதற்கு நன்றி தெரிவித்து மோடி ஒரு அழகான அறிக்கை வெளியிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

    இருப்பினும், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா விதித்த தடைகளை டிரம்ப் நியாயப்படுத்தினார்.

    ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனாவுக்கும் இதே போன்ற தடைகள் விதிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

    ரஷியா-உக்ரைன் போரை நிறுத்துவது குறித்து பேசிய அவர், "மிக எளிமையாகச் சொன்னால், எண்ணெய் விலை குறைந்தால், புதின் வெளியேறப் போகிறார். அவருக்கு வேறு வழியில்லை. அவர் அந்தப் போரிலிருந்து விலகப் போகிறார்" என்று டிரம்ப் கூறினார்.

    முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான பிரச்னையை தான் தீர்த்ததாக டிரம்ப் மீண்டும் தெரிவித்தார்.  

    இதற்கிடையே டிரம்ப்பின் இந்த பயணத்தின்போது அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது.  

     

    • குற்ற வழக்கு தொடர்பாக போலீசார் ஒருவரை கைது செய்ய சென்றனர்.
    • துப்பாக்கிசூடு சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அமெரிக்காவின் மத்திய பென்சில்வேனியாவில் உள்ள யாக் கவுண்டி பகுதியில் ஒரு குற்ற வழக்கு தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்ய சென்றனர்.

    அப்போது போலீசார் மீது வாலிபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியானார்கள். 2 பேர் காயம் அடைந்தனர்.

    இதையடுத்து துப்பாக்கி சூடு நடத்திய நபர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

    அவரின் அடையாளத்தை அதிகாரிகள் வெளியிடவில்லை. இருப்பினும், இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தங்கச் சிலை அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது.
    • தங்க சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில டிரம்பின் 12 அடி உயரமுள்ள தங்கச் சிலை அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது.

    அந்த சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர். இதற்காக கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதி அளித்தனர்.

    பிட்காயினை கையில் ஏந்தி நிற்கும் வகையில் டிரம்பின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிலையை நிறுவியவர்கள் கூறும்போது, "டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதிச் சந்தைகளில் அமெரிக்க அரசின் பங்கு பற்றிய விவாதத்தைத் தூண்டுவதே எங்களின் நோக்கம் ஆகும்.

    டிரம்பின் கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையான ஆதரவை இந்த சிலை வெளிப்படுத்தும்" என்றனர்.

    • ஜம்மு-காஷ்மீரின் ஆறுகள், அணைகள் விரைவில் எங்களுடையதாக இருக்கும்.
    • பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக சைபுல்லா கசூரி செயல்பட்டதாக கருதப்படுகிறது.

    இஸ்லாமாபாத்:

    காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர்.

    இத்தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ந்தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்பட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

    இந்த நிலையில் இந்தியாவை பழிவாங்குவோம் என்று லஷ்கர்-இதொய்பா பயங்கரவாத இயக்க துணைத் தலைவர் சை புல்லா கசூரி மிரட்டல் விடுத்து உள்ளார். அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் அவர் பேசியதாவது:-

    ஜம்மு-காஷ்மீரின் ஆறுகள், அணைகள் விரைவில் எங்களுடையதாக இருக்கும். இது ஒரு கடினமான நேரம். ஆனால் எங்களின் தீர்மானம் வலுவாக உள்ளது என்று இந்திய பிரதமர் மோடியிடம் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் சகோதரர்களின் ரத்தத்திற்கு நாங்கள் பழிவாங்குவோம்.

    இவ்வாறு அவர் பேசி உள்ளார்.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக சைபுல்லா கசூரி செயல்பட்டதாக கருதப்படுகிறது. இந்தியாவின் தாக்குதலால் நிலைகுலைந்துபோன பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்காக கெஞ்சியதையடுத்து தாக்குதலை இந்தியா நிறுத்தியது.

    இந்த நிலையில் லஷ்கர் தளபதி பகிரங்கமாக இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும்.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், ஒரு நாட்டின் மீதான எந்தவொரு தாக்குதலும் இரு நாடுகளுக்கும் எதிரான தாக்குதலாகக் கருதப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பாகிஸ்தான் - சவுதி அரேபியா ஆகிய இருநாடுகளும் NATO அமைப்பு போன்ற பாதுகாப்பு ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதால், இந்த ஒப்பந்தம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

    கத்தாரில் உள்ள ஹமாஸ் அலுவலகங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியதன் விளைவாக இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் சவுதி அரேபியா கையெழுத்திட்டுள்ளது.

    அண்மையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டது. இருநாடுகளும் இடையே ராணுவ மோதல் ஏற்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இனிமேல் பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தினால் பதிலுக்கு இந்தியா மீது சவூதி அரேபியா தாக்குதல் நடத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    • அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக பட்டியலில் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.
    • போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.

    சட்ட விரோதமாக போதைப்பொருள் தயாரித்தல் மற்றும் கடத்தலில் ஈடுபடும் நாடுகள் பட்டியலை அமெரிக்க பாராளுமன்றத்தில் ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டார்.

    23 நாடுகளை கொண்ட அந்த பட்டியலில் ஆப்கானிஸ்தான், சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியாவின் பெயரையும் அவர் சேர்த்து இருந்தார்.

    போதைப்பொருள் கடத்தல் மற்றும் அவற்றின் தயாரிப்பில் முக்கியமாக ஈடுபட்டுள்ள இந்த நாடுகளின் செயலால் அமெரிக்கா மற்றும் அதன் குடிமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக அந்த பட்டியலில் டிரம்ப் குறிப்பிட்டு உள்ளார்.

    இந்த குற்றச்செயல் தடுப்பில் தவறிவிட்டதாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் உள்ளிட்ட 5 நாடுகளை குறிப்பிட்டு இருந்த அவர், போதைப்பொருள் தடுப்புக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டு உள்ளார்.

    போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் கடத்தல் நாடுகளின் பட்டியலில் இந்தியாவை சேர்த்த டிரம்பின் நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×