என் மலர்
நீங்கள் தேடியது "கிரிப்டோகரன்சி"
- உலகம் முழுவதும் செல்லுபடியாகும் பணமாக கிரிப்டோகரன்ஸிகள் உள்ளன.
- வெளிநாடுகளில் இதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன.
மாலைமலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வம் என்னும் சிம்மாசனத்துக்கு ஆண், பெண், கறுப்பு, சிவப்பு போன்ற எந்தப் பாகுபாடும் இல்லை. ஏழு கடல் தாண்டி, ஏழு மலை தாண்டி தன்னைத் தேடி வருபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இடம் கொடுக்க அது தயாராகவே இருக்கிறது. அந்தக் கடல்களையும், மலைகளையும் ஒவ்வொன்றாகத் தாண்டி வருகிறோம். நமக்காகத் திறந்திருக்கும் பலவிதமான முதலீட்டுக் கதவுகளைக் காணும் பாதையின் முடிவில் இருக்கிறோம். இந்த வாரம் வங்கிகள் சென்றடையாத சிறு ஊர்களில் வசிக்கும் மக்களுக்குக் கூட சேமிப்பு மற்றும் கடன் வசதிகளை ஒன்றாகத் தரும் சிட்பண்டுகள் பற்றியும், உலகில் புதிதாக முளைத்து அனைத்து இளைஞர்களின் மனதிலும் குடியிருக்கும் கிரிப்டோ கரன்ஸி பற்றியும் பார்க்கலாம்.
சிட்பண்டுகள் சாதாரணக் குடும்பஸ்தர் முதல் பெரும் வியாபாரிகள் வரை அனைவருக்கும் பேருதவியாக உள்ளது. பதிவு செய்யப்பட்ட சிட்பண்டுகள், பதிவு செய்யாமல் நடத்தப்படும் சிட்பண்டுகள் தவிர உறவினர்/ நண்பர்கள் என பத்து பேர் சேர்ந்தால் உடனே ஒரு சீட்டுக் குழு ஆரம்பிப்பதும் நடக்கிறது. நகைச் சீட்டு, தீபாவளிச் சீட்டு என்று பல வடிவங்களில் இது வலம் வருகிறது. மாதம் ஒரு முறை மதிய நேரங்களில் சந்தித்து விளையாட்டுக்கள், உரையாடல்களுடன் பார்ட்டிகள் நடத்தும் சில பெண்கள் சீட்டுக் குழுவையும் நடத்துகின்றனர். டிஜிடலைசேஷனின் வருகைக்குப் பின் ஆன்லைனிலும் சீட்டுக் குழு நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு சீட்டுக் குழுவுக்கும் ஒரு நடத்துனர் இருப்பார். 50 உறுப்பினர்கள், 50 மாதங்கள் வரை ஒவ்வொரு மாதமும் ரூ.1000/ கட்டிவருவதை ரூ.50000/ சீட்டு என்பார்கள். முதல் மாதம் ஒருவர் சீட்டை ரூ. 45000/க்கு ஏலம் எடுத்தால், மீதி இருக்கும் ரூ.5000/ குழு உறுப்பினர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும். 5% அளவு கமிஷனை சீட்டு எடுத்தவர், நடத்துனருக்குத் தரவேண்டும். இது ஏலச்சீட்டு எனப்படும். குலுக்கல் முறையிலும் இது நடத்தப்படுகிறது.
இவை சிட்பண்ட்ஸ் ஆக்ட் 1982வின் கீழ் முறைப்படுத்தப்படுகின்றன. கேரளாவிலும், கர்நாடகாவிலும் மாநில அரசே சிட்பண்ட் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்தி வருகின்றது. மார்கதரிசி, ஸ்ரிராம் க்ரூப், முத்தூட், பாலுசேரி போன்ற தனியார் நிறுவனங்களும் இதில் பெயர் பெற்றுள்ளன. அதிக மதிப்புள்ள சீட்டுக்களில் பணம் எடுக்கும்போது, தங்கம், நிலம் என்று எதையாவது அடமானமாக வைக்கவேண்டி இருக்கும். ஹைதராபாதில் உள்ள மாடல் சிட் கார்பரேஷன் நடத்தும் ரூ. ஒரு கோடி வரை உள்ள சீட்டுக்களில் நிறுவனங்கள் மட்டுமே பங்குபெறுகின்றன.
தனியார் சேர்ந்து நடத்தும் சீட்டுக் குழுக்களில் ரிஸ்க் அதிகம். சீட்டு நடத்தும் நபர், வீடு, வாசல் என்று வசதியாகவே இருந்தாலும், பணம் இல்லை என்று கைவிரித்தால் நம்மால் என்ன செய்ய முடியும்? சிலர் சீட்டு நடத்துபவருக்கு உதவியாக அக்கம்பக்கத்தில் தவணைப் பணம் வசூல் செய்து கொடுக்கிறார்கள். சரோஜா என்ற ஒரு பெண் தீபாவளிச் சீட்டு நடத்துபவருக்கு உதவி வந்தாள். மொத்தமாக 50 குடும்பங்களில் இருந்து மாதாமாதம் தலா ரூ.1000/ வசூல் செய்து, அவரிடம் கொண்டு தருவாள். தீபாவளியின் போது, பலசரக்கு, பட்டாசு, எவர்ஸில்வர் பாத்திரங்கள், துணிமணி என்று ஒவ்வொருவருக்கும் 15000/ பெறக்கூடிய பொருட்கள் தருவதாகப் பேச்சு.
தீபாவளி வந்தது. சீட்டு நடத்தியவர் சரோஜாவிடம் ஏழரை லட்சத்திற்கு பதில் நான்கு லட்ச ரூபாய் மட்டும் கொடுத்து, "எனக்குப் பெரிய நஷ்டம் வந்துவிட்டது. போலீஸில் வேறு என்னைத் தேடுகிறார்கள். இதை வைத்து சமாளி. நான் பிறகு வந்து மீதியைத் தருகிறேன்" என்று கூறிவிட்டுத் தலைமறைவாகிவிட்டார். திடீரென சீட்டு நடத்துபவர் தலைமறைவாகி விட்டால், ஏமாந்தவர்களின் கோபம் அவருக்கு உதவியாக வசூல் செய்து தந்தவர்கள் மீதுதானே பாயும்? அந்த 50 குடும்பங்களின் கோபத்தை சமாளிப்பதற்குள் சரோஜா பட்ட பாடு! தலையை அடகு வைப்பது ஒன்றுதான் பாக்கி! இப்படி சில மக்கள் பாதிக்கப்படுவதும் உண்டு.

சுந்தரி ஜகதீசன்
நகைச் சீட்டும் ஏமாற்றம் தரக்கூடியதுதான் என்று சமீப காலத்தில் சில நம்பகமான நகைக் கடைகளே காட்டி விட்டன. வட இந்தியாவில் நடைபெற்ற சாரதா ஊழல், ரோஸ்வேலி ஊழல் போன்ற பிரமாண்டமான ஏமாற்றுத் திட்டங்களால், பதிவு செய்யப்பட்ட சிட்பண்டுகள் மீது கூட சந்தேக நிழல் விழுகிறது.
மக்கள் உணராத ஒரு விஷயம் என்னவென்றால் சிட்பண்ட்கள் தரும் வட்டி வருமானம் 6.30% மாத்திரமே. ஏனெனில் நடத்துனருக்குத் தரவேண்டிய கமிஷன் ஒரு 5 சதவிகிதத்தை விழுங்கிவிடுகிறது. சிட்பண்ட், கடன் பெறுவதற்கு நல்ல வழி என்று சிலர் எண்ணுகிறார்கள். ஆனால் இங்கு கடனுக்கான வட்டியைக் கணக்கிட்டால் சுமார் 22 சதவிகிதமாக இருக்கிறது.
அப்படியானால் சீட்டுக் குழுக்களால் என்னதான் நன்மை? அவசரத்துக்கு பணம் தேவைப்படுபவர்களுக்கும், வங்கியை விட சிறிது அதிக வட்டி எதிர்பார்க்கும் முதலீட்டாளர்களுக்கும் சிட்பண்ட் உகந்ததாக உள்ளது. மாதாமாதம் ஒரு தொகையைச் சேமிக்கும் ஒழுக்கத்தை இது கற்றுத் தருகிறது. சிறு கடைக்காரர்கள், வியாபாரிகள் போன்றவர்களிடம் தினம் ரூ. ஐம்பது, நூறு என்று வசூலித்து, அவர்கள் மொத்தமாக சேமிக்க உதவும் சீட்டுக் குழுக்களும் உள்ளன. இதனால் அந்த வியாபாரிகள் தினந்தோறும் வங்கிகளுக்குச் சென்று பணம் கட்டுவதற்கான சிரமம் குறைகிறது.
சீட்டை நடத்துபவர் நேர்மையானவராக இருந்தால் மட்டும் போதாது; சீட்டுக் கட்டுபவர்களும் கட்டுப்பாட்டுடன் ஒழுங்காகத் திருப்பிக் கட்டுபவர்களாக இருக்க வேண்டும். அதனால் இதில் ரிஸ்க் அதிகம். ஆகவே பாலுசேரி, ஸ்ரீராம் சிட்பண்ட் போன்று பல வருடங்களாக வெற்றிகரமாக சீட்டுத் தொழில் நடத்திவரும் கம்பெனிகளில் சீட்டு சேர்வது உத்தமம்.
கிரிப்டோ கரன்சி
நண்பர் ஒருவரின் 24 வயது மகன் "புதிதாக வேலைக்கு சேர்ந்திருக்கிறேன். கிரிப்டோ அக்கவுன்ட் ஒன்று ஆரம்பித்து விட்டேன். வேறெங்கு முதலீடு செய்யலாம்?" என்று கேட்டபோதுதான் கிரிப்டோ கரன்சி எவ்வளவு தூரம் இளைஞர்கள் மனதில் இடம் பிடித்திருக்கிறது என்று தெரியவந்தது. உலக அளவில் அதிகக் கிரிப்டோ கரன்ஸி வாங்குவதில் வியட்நாமுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது.
ஆனால் ரிசர்வ் வங்கியும், நிதி அமைச்சரகமும் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கின்றன – "இந்தியாவில் அரசு அல்லாத தனி நபர் கிரிப்டோ கரன்ஸி செல்லாது" என்பதே அது. இதைக் கேட்ட பல இளம் முதலீட்டாளர்கள் "நாங்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டியதுதான்" என்று கொதிக்கிறார்கள். நாட்டை விட்டுக் கூட வெளியேறும் அளவுக்கு அந்த கிரிப்டோ கரன்ஸியில் என்னதான் இருக்கிறது?
அரசாங்கத்தால் தயாரிக்கப்படும் பணம், வங்கிக் கணக்குகள் மூலமும், க்ரெடிட் கார்ட்/டெபிட் கார்ட்/யுபிஐ மூலமும் பரிமாறிக் கொள்ளப்படுகின்றது. அரசாங்கங்களின் தலையீடு பிடிக்காத சுதந்திர மனிதர்கள் கண்டு பிடித்ததே கிரிப்டோகரன்ஸி. டாலர், பவுண்ட், ரூபாய் போன்றவை அந்தந்த நாடுகளில் மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் உலகம் முழுவதும் செல்லுபடியாகும் பணமாக கிரிப்டோகரன்ஸிகள் உள்ளன.
2009இல் சடோஷி நகமோடோ என்ற முகம் தெரியாத மனிதரால் பிட்காயின் என்னும் கரன்ஸி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. கிரிப்டோ ஒரு டிஜிட்டல் கரன்ஸி; அதாவது அதை நாம் தொட்டுப்பார்க்க இயலாது. இவை ப்ளாக்செயின் என்ற டெக்னாலஜி மூலம் இணையதள பரிவர்த்தனைக்காக தயாரிக்கப்படுபவை. கிரிப்டோ கரன்ஸியில் டெதர், போல்காடாட், லைட் காயின், எதீரியம் என்று சுமார் 6700 வகை உண்டு.
கிரிப்டோகாயினை வாங்க வேண்டும், விற்க வேண்டும் என்றால் கிரிப்டோகாயின் இணையதளத்தில் கணக்கு இருக்க வேண்டும். இந்த இணையதளங்களில் மட்டுமே கிரிப்டோகாயினை வாங்கவும், விற்கவும் முடியும். இந்த இணையதளங்களில் கணக்கு வைத்துக் கொள்ள எந்தக் கட்டணமும் இல்லை. வெளிநாடுகளில் இதற்காக ஏடிஎம் இயந்திரங்கள் இருக்கின்றன. டெபிட் கார்டு வசதி கூட உண்டு. ஆதலால் ஆன்லைன் ஷாப்பிங் செய்ய பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
முதலீட்டு வகைகளில் ஒன்றாக மாறி வரும் இவற்றை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுவதற்குக் காரணங்கள் உண்டு. இன்று பணவீக்கத்தில் இருந்து காக்கும் கருவியாக இருப்பவை தங்கமும், கிரிப்டோகரன்ஸியுமே. கள்ள நோட்டு அடிப்பது போல கள்ள கிரிப்டோகரன்ஸிகளை தயாரிக்க முடியாது. ஆனால் கிரிப்டோகரன்ஸியின் கோடிங் முறை தெரிந்தவர்கள் இவற்றைத் தயாரிக்க முடியும். எத்தனை கிரிப்டோகாயின்கள் தயாரிக்கலாம் என்பதற்கு வரம்பு இருப்பதால் இவை எதிர்காலத்தில் அதிக விலையேற்றம் காணும்.
ஆனால் எந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழும் இந்த கிரிப்டோ கரன்ஸிகள் வருவதில்லை என்பதால் மாபியாக்கள், போதை மருந்து வியாபாரிகள், ஆள் கடத்தல் அடியாட்கள் போன்றவர்களின் அண்டர்கிரௌண்ட் ஆட்டங்களுக்கு உதவுவதாக சந்தேகிக்கப்படுகிறது. பரிவர்த்தனைகள் முகமற்றவை என்பதால் இதனை யார் வாங்குகிறார்கள், தனியாரா, நிறுவனங்களா போன்ற எதுவும் யாருக்கும் தெரியாது.
கிரிப்டோவின் மதிப்பு ஏன் ஏறுகிறது; ஏன் இறங்குகிறது என்பது யாருக்குமே புரியாத மர்மம். 2011இல் ஒரு டாலராக இருந்த பிட்காயினின் விலை பல ஏற்ற இறக்கங்களுக்குப் பின் 2025இல் 112000 டாலரைத் தொட்டு இறங்கியது. இதன் மதிப்பு தாறுமாறாக ஏறி இறங்குவதால் இதை கரன்ஸியாக பயன்படுத்தாமல் பதுக்குவதையே பலரும் விரும்புகின்றனர். இதனை வைத்திருக்கும் நிறுவனங்களும், விற்பனை செய்யும் தளங்களும் அடிக்கடி சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாவதால், முதலீட்டாளர்கள் போட்ட முதலை வெளியே எடுப்பதில் சிரமம் உள்ளது. உதாரணமாக வாசிர் எக்ஸ் தளத்தில் முதலீடு செய்தவர்கள் இன்றுவரை பணத்தை வெளியே எடுக்கமுடியாமல் தவித்துவருகிறார்கள். இந்தியாவில் சிறு ஊர்களில் பொதுமக்களின் அறியாமையைப் பயன்படுத்தி, கிரிப்டோ வியாபாரம், கிரிப்டோ சிட்பண்ட் என்று பலவழிகளில் ஏமாற்று நடக்கிறது.
கிரிப்டோ எதிர்காலத்திற்கான கரன்ஸி. பின்னொரு காலத்தில் இது பங்குச் சந்தை போன்று பலராலும் விரும்பப்படும் முதலீட்டு வழியாக உருவாகலாம். ஆனால் இன்றையத் தேதியில் இது ஒரு நிலையற்ற முதலீடாக விளங்குவதால் சிறு முதலீட்டாளர்கள் அவசரமாக இதில் இறங்காமல் பொறுமை காப்பது நல்லது. நீங்கள் சீட்டு கட்டியதுண்டா? கிரிப்டோகரன்சி வாங்கியதுண்டா? உங்கள் அனுபவம் என்ன?
- தங்கச் சிலை அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது.
- தங்க சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் கிரிப்டோகரன்சிக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார். இந்த நிலையில டிரம்பின் 12 அடி உயரமுள்ள தங்கச் சிலை அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு நிறுவப்பட்டுள்ளது.
அந்த சிலையை கிரிப்டோ கரன்சி அமைப்பினர் வைத்து உள்ளனர். இதற்காக கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் நிதி அளித்தனர்.
பிட்காயினை கையில் ஏந்தி நிற்கும் வகையில் டிரம்பின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிலையை நிறுவியவர்கள் கூறும்போது, "டிஜிட்டல் நாணயத்தின் எதிர்காலம், பணவியல் கொள்கை மற்றும் நிதிச் சந்தைகளில் அமெரிக்க அரசின் பங்கு பற்றிய விவாதத்தைத் தூண்டுவதே எங்களின் நோக்கம் ஆகும்.
டிரம்பின் கிரிப்டோ கரன்சிக்கு வெளிப்படையான ஆதரவை இந்த சிலை வெளிப்படுத்தும்" என்றனர்.
- கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான காயின் டிசிஎக்ஸ் தளத்தை ஹேக்கர்கள் முடக்கினர்.
- காயின் டிசிஎக்ஸ் தளத்தில் இருந்து ரூ.379 கோடி திருட்டு போனது.
இந்தியாவின் முன்னணி கிரிப்டோ பண பரிவர்த்தனை தளமாக காயின் டி.சி.எக்ஸ் உள்ளது. இதில் கோடிக்கணக்கானவர்கள் கணக்கு தொடங்கி டிஜிட்டல் பண பரிமாற்ற சேவையை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் காயின் டி.சி.எக்ஸ் தளம் கடந்த 19-ந்தேதி இரவு திடீரென ஹேக்கர்களால் முடக்கப்பட்டது. இதனால் இந்த தளத்தில் இருந்து ரூ.379 கோடி திருட்டு போனது. இதில் முதலீட்டாளர்கள் கணக்கில் இருந்து எந்த பணமும் திருட்டு போகவில்லை எனவும், கருவூல கணக்கில் இருந்தே இழப்பு ஏற்பட்டுள்ளதாக காயின் டி.சி.எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுமித் குப்தா தெரிவித்தார்.
ஹேக் செய்யப்பட்ட பணத்தை மீட்டு கொண்டு வருவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் அந்த நிறுவனம் தீவிரமாக மேற்கொண்டது. மேலும் பெங்களூரு ஒயிட் பீல்டு சைபர் கிரைம் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து நிறுவனத்தின் உள் பாதுகாப்பு குழு, ஆபரேஷன் குழு, சைபர் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்ததில் காயின் டி.சி.எக்ஸ் நிறுவனத்தின் பெங்களூரு மென்பொருள் என்ஜினீயராக பணியாற்றி வரும் உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்த கார்மெலராம் பகுதியை சேர்ந்த ராகுல் அகர்வால் (வயது 30) என்பவர் உள்நுழைவு சான்றுகளை திருடி, கணினி மூலம் பணத்தை திருடியது தெரியவந்தது.
இது குறித்து பெங்களூரு நகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராகுல் அகர்வாலை கைது செய்தனர். கிரிப்டோ வர்த்தக தளமான காயின் டி.சி.எக்ஸ் நடத்தும் நெப்லியோ டெக்னாலஜிஸ் துணைத் தலைவர் ஹர்தீப் சிங் அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து துணைத் தலைவர் ஹர்தீப் சிங் கூறுகையில், "ராகுல் நிறுவனத்தின் நிரந்தரப் பணியில் இருந்தார். அலுவலக வேலைக்காக மட்டுமே அவருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. கடந்த 19-ந் தேதி அதிகாலை 2.37 மணிக்கு அந்த கணினியை பயன்படுத்தி ராகுல் அகர்வால் கணினியை ஹேக் செய்து பணத்தை திருடினார். பின்னர் காலை 9.40 மணியளவில், ரூ.379 கோடி திருடி 6 கணக்குகளுக்கு மாற்றினார். இதன் மூலம் நாங்கள் அவரை கண்டுபிடித்தோம்" என்று தெரிவித்தார்.
- கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான காயின்டிசிஎக்ஸ் தளத்தை ஹேக்கர்கள் முடக்கினர்.
- இந்த விவகாரம் குறித்து நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
மும்பையை தளமாக கொண்ட இந்தியாவின் முன்னணி கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை தளமான காயின்டிசிஎக்ஸ் தளத்தை ஹேக்கர்கள் முடக்கினர். இதனால் இந்திய ரூபாய் மதிப்பில் ரு.368 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அந்த நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-
வாடிக்கையாளர்களின் சொத்துக்கள் பாதுகாப்பாக உள்ளது. இழப்புகள் உரிய முறையில் சரி செய்யப்படும். வாடிக்கையாளர்கள் தங்களின் சொத்துக்களை சேமிக்க பயன்படுத்தப்படும் வாலட்கள் பாதிக்கப்பட வில்லை. அதிநவீன சர்வரில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தளம் ஹேக் செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் கருவூல நிதி மூலதனம் ஆரோக்கியமாக இருப்பதால் இழப்பை ஈடு செய்ய முடியும்.
எனவே அச்சமடைந்து உங்கள் முதலீடுகள் அனைத்தையும் விற்பனை செய்ய வேண்டாம். இது தேவையற்ற நஷ்டத்தை ஏற்படுத்தும். சந்தைகள் இயல்பு நிலைக்கு வரட்டும். அமைதியாக இருங்கள். இந்த சம்பவத்தை பெரியதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
ஹேக் செய்யப்பட்ட நிதியை மீட்டு கொண்டு வருவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளையும் தீவிரமாக எடுத்து வருகிறோம். எங்களின் முழு உண்மையான விபரங்களை பெறுவதற்கு உரிய வேலைகளை செய்து வருகிறோம்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து நிறுவனத்தின் உள் பாதுகாப்பு குழு, ஆபரேஷன் குழு, சைபர் பாதுகாப்பு குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
- குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியிருந்தனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் முத்தனம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 32). இவரது செல்போன் எண் ஒரு வாட்ஸ்-அப் குழுவில் சேர்க்கப்பட்டது. அந்த குழுவில் உள்ளவர்கள் சமூகவலைதள சேனல்களுக்கு பணம் செலுத்தி அதனை குழுவில் பதிவிடுவதன் மூலம் பணம் சம்பாதிப்பது தொடர்பாக பேசிக்கொண்டனர்.
தொடர்ந்து மணியும் அந்த குழுவில் கொடுக்கப்பட்ட பணிகளை முடித்து சில தொகையை பெற்றார். பின்னர் மணியை டெலிகிராம் குழுவில் இணைத்தனர். அந்த குழுவில் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்வதால் கூடுதல் லாபம் பெறலாம் என கூறியிருந்தனர்.
இதை நம்பிய மணி பல்வேறு வங்கி கணக்குகள் மற்றும் 14 பரிவர்த்தனைகள் மூலம் ரூ.18 லட்சத்து 90 ஆயிரம் அனுப்பினார். அதற்கான லாபத்தை எடுக்க முயன்ற போது மேலும் கூடுதலாக பணம் செலுத்த வேண்டுமென அறிவிப்பு வந்துள்ளது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த மணி, திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது.
- ஒரு நாளில் 101 புகார்கள் வந்துள்ளன.
மும்பை:
ஜல்னா மாவட்டத்தில் கிரி காரத் மற்றும் அவரது மனைவி தீப்தி கார்த் ஆகியோர் கிரிப்டோகரன்சி முதலீட்டை ஈர்த்து வந்தனர். இவர்கள் ஜி.டி.சி. கிரிப்டோவில் முதலீடு செய்தால் அதிக வருமானம் கிடைக்கும் என உறுதி அளித்தனர். இதை நம்பி பலர் முதலீடு செய்தனர். இந்த நிலையில் இவர்களிடம் முதலீடு செய்து நஷ்டமடைந்த நபர் ஒருவர் போலீசில் புகார் அளித்தார். இதேபோல மேலும் பலர் இந்த கிரிப்டோவில் முதலீடு செய்து ஏமாந்து இருக்கலாம் என உணர்ந்த போலீசார், அப்படி பணத்தை இழந்தவர்கள் புகார் அளிக்குமாறு பொதுஅறிவிப்பை வெளியிட்டனர்.
இதன்மூலம் ஒருநாளில் மாவட்டம் முழுவதும் இருந்து 101 பேர் போலீசாரை அணுகி புகார் அளித்துள்ளனர். சுமார் 10 ஆயிரம் முதலீட்டாளர்கள் ரூ.700 கோடி வரை இந்த மோசடியில் இழந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.
காரத் தம்பதியின் மீதான இந்த வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளது. இதன்மூலம் அவர்களின் வங்கி கணக்குகளை முடக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தநிலையில் கிரண் காரத் போலீசில் அளித்த புகாரின் மூலம் இந்த வழக்கில் மற்றொரு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இவர் தனது புகாரில் "தனது கிரிப்டோ கரன்சி திட்டத்தில் சுமார் ரூ.10 கோடி முதலீடு செய்த முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் மற்றும் 20 பேர் தன்னை 4 நாட்கள் பிணை கைதியாக பிடித்து வைத்திருந்ததாகவும், தனது சில சொத்துகள் மற்றும் நிலங்களை விஜய் ஜோல் பெயரில் மாற்ற கையெழுத்திட கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.
முன்னாள் கிரிக்கெட் வீரர் விஜய் ஜோல் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே அணியை சேர்ந்த முன்னாள் மந்திரி அர்ஜுன் கோட்கரின் மருமகன் ஆவார். இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. கைலாஷ் கோரண்டியல் கூறுகையில், 'அர்ஜுன் கோட்கரும் அவரது ஆட்களும் காரத்தை பிணை கைதியாக பிடித்து வைத்து துன்புறுத்தியதன் மூலமாக சட்டத்தை கையில் எடுத்துள்ளனர்' என குற்றம் சாட்டினார்.
- இந்தியாவை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.
- 20 நாடுகள் சபையின் தலைவராக இந்தியா உள்ளது.
பெங்களூரு:
சிந்தனையாளர்கள் அமைப்பு சார்பில் கலந்துரையாடல் கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கலந்து கொண்டு பேசியதாவது:-
கிரிப்டோகரன்சியை உலக நாடுகள் முறைப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்யாத பட்சத்தில் இந்தியா மட்டும் அதை முறைப்படுத்துவதால் சரியாக இருக்காது. 20 நாடுகள் சபையின் தலைவராக இந்தியா உள்ளது. இந்த ஜி20 நாடுகள் சபை கூட்டத்தில் இதுகுறித்து விவாதிக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த சபை கூட்டத்தில் விவாத பொருளில் (அஜண்டா) கிரிப்டோகரன்சி விஷயமும் சேர்க்கப்பட்டுள்ளது.
சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்.) கிரிப்டோகரன்சி குறித்து அறிக்கை வழங்கியுள்ளது. அது நுண்ணிய பொருளாதாரத்தின் நிலைத்தன்மையை பாதிக்கும் என்று கூறியுள்ளது. ஜி20 நாடுகள் சபையால் உருவாக்கப்பட்டுள்ள நிதி நிலை தன்மை வாரியமும் (எப்.எஸ்.பி.) அதுகுறித்து அறிக்கை வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. அந்த அமைப்பும் நிதி நிலை தன்மை குறித்த விஷயத்தில் கவனம் செலுத்தும்.
அந்த எப்.எஸ்.பி. அறிக்கை மற்றும் சர்வதேச நிதியக அறிக்கை குறித்து வருகிற ஜூலை மாதம் நடைபெறும் ஜி20 நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் மாநாட்டில் விவாதிக்க உள்ளோம். வருகிற செப்டம்பரில் ஜி20 நாடுகள் சபையின் பிரதமர்கள் மாநாடு நடக்கிறது. டிஜிட்டல் கரன்சிகள் முழுவதுமாக டிஜிட்டல் மயம், தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டுள்ளது. சில நேரங்களில் அதன் அடையாளத்தை ஏற்படுத்துவது மிக கடினமானது. ஆனால் அது ஆற்றல் வளம் வாய்ந்தது. அதனால் அனைத்து நாடுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்த விஷயத்தில் ஒரு நாடு தனித்து செயல்பட முடியாது. ஏனெனில் தொழில்நுட்பத்திற்கு எல்லை கோடுகள் கிடையாது. அதற்கு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் தேவைப்படுகிறது. இந்த முயற்சியில் அனைத்து நாடுகளும் இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும். இல்லாவிட்டால் கிரிப்டோகரன்சி விஷயம் பயனுள்ளதாக இருக்காது.
ஆனால் வினியோகிக்கப்படும் பதிவு தொழில்நுட்பத்தை நாங்கள் கட்டுப்படுத்துகிறோம் என்று அர்த்தம் இல்லை. அந்த பதிவு தொழில்நுட்பம் நல்ல நிலை, வளம் மற்றும் சொந்த பலத்தை கொண்டுள்ளது. இதை நாங்கள் எங்களின் மனதில் வைத்துள்ளோம். கொரோனா வைரஸ் பரவல், உக்ரைன்-ரஷியா போர் சூழலுக்கு மத்தியிலும் இந்தியா தனது வழியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதனால் இந்தியாவை உலக நாடுகள் உற்று கவனித்து வருகின்றன.
கச்சா எண்ணெய் மற்றும் உரம் ஆகியவற்றை இந்தியா அதிகளவில் இறக்குமதி செய்கிறது. அதன் காரணமாக பணவீக்கம் ஏற்படுகிறது. இதற்கு எதிராக ஒவ்வொரு அரசும் செயல்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலைக்கு மத்தியிலும் இந்திய மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார். ஒவ்வொரு மாநிலத்திலும் பால் கூட்டுறவு அமைப்புகள் உள்ளன. நான் பெங்களூருவில் நந்தினி பால், இனிப்பு, தயிர் சாப்பிட்டேன். டெல்லியில் இருக்கும்போது, அமுல் நிறுவன பால் பொருட்களை பயன்படுத்துகிறேன்.
டெல்லியில் நந்தினி பால் பொருட்கள் கிடைப்பது இல்லை. நான் அமுல் பொருட்களை வாங்குவதால் கர்நாடகத்திற்கு எதிராக இருக்கிறேன் என்று அர்த்தம் கிடையாது. கர்நாடகத்தில் நந்தினி பால் நிறுவனத்தை பலப்படுத்துவது என்பது தொடர்ந்து நடைபெறும். நந்தினி பொருட்கள் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கிடைக்கிறது.
அதே போல் பிற மாநில பால் பொருட்கள் கர்நாடகத்தில் கிடைக்கிறது. இது ஒரு நல்ல போட்டி தான் என்று சொல்வேன். அதனால் தான் உலகில் அதிக பால் உற்பத்தி செய்யும் நாடாக இந்திய திகழ்கிறது. நந்தினி பால் நிறுவனத்தை அழிக்கவே அமுல் கொண்டு வரப்படுவதாக சொல்வது வெட்கக்கேடானது. காங்கிரஸ் ஆட்சியில் தான் அமுல் நிறுவன பால் பொருட்கள் கர்நாடகத்தில் அனுமதிக்கப்பட்டன.
ஆனால் அந்த ஆட்சியில் முதல்-மந்திரியாக இருந்தவர் தற்போது அதுகுறித்து கேள்வி எழுப்புகிறார்கள். தற்போது தேர்தல் நேரம் என்பதால் இதை உணர்வு பூர்வமான விவகாரமாக மாற்றியுள்ளனர். அரசியல் விஷயங்களுக்குள் நமது விவசாயிகள், பெண்களை இழுக்க கூடாது. எடியூரப்பா ஆட்சியில் பாலுக்கு ஆதரவு விலையாக லிட்டருக்கு ரூ.2 வழங்கப்பட்டது. அதன் பிறகு அது ரூ.5 ஆக உயர்த்தப்பட்டது.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
- பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
- அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
வேப்பனப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியை சேர்ந்தவர் அருண்குமார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஓசூரில் தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளார்.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பு செய்து வழங்கப்படும். அதிக லாபம் பெறலாம் என ஆசை வார்த்தைகளை கூறி முதலீடு பெற்றுள்ளார். குறிப்பாக கிரிப்டோகரன்சி முறையில் 7 லட்ச ரூபாய் ஒருவர் முதலீடு செய்தால் அவருக்கு அவரது செல்போனில் பத்தாயிரம் கோல்ட் காயின்கள் பாயிண்ட்கள் பதிவேற்றம் செய்து தரப்படுகிறது.
அந்த பாயிண்டுக்கு ஏற்றவாறு வாரம் தோறும் 93 ஆயிரம் என 20 வாரங்களுக்கு வழங்கப்படும் என தெரிவித்து முதலீடு பெறப்பட்டுள்ளது. அருண்குமார் தனக்கு உதவியாக பல்வேறு முகவர்களை நியமித்துள்ளார்.
அவர்கள் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முன்னாள் இந்நாள் ராணுவ வீரர்கள் குடும்பங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் மற்றும் திருவண்ணாமலை வேலூர், தருமபுரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை போன்ற தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும், வட மாநிலங்களிலும் பொதுமக்கள் என சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் அருண்குமார் மற்றும் அவரது முகவர்களின் ஆசை வார்த்தைகளை நம்பி முதலீடு செய்துள்ளனர்.
முதலீடு செய்த நபர்களுக்கு அந்த நிறுவனம் தெரிவித்தவாறு வாரம், வாரம் பணம் வழங்கி வந்துள்ளனர். பின்னர் வாரக்கணக்கில் பணம் வழங்காமல் நிறுத்தி உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்து வந்தனர்.
இதில் பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில் அருண்குமார் மற்றும் அவர் நியமித்த முகவர்கள் ஐந்து பேர் உட்பட 6 பேர் மீது கிருஷ்ணகிரி மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் முதல் குற்றவாளி என அருண்குமார் தலைமறைவாகி இருந்தார்.
மீதமுள்ள 5 குற்றவாளிகளை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அருண்குமார் முதலீடுகளைப் பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டதாக தெரிவித்தனர்.
இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வரும் அருண்குமார் இன்று காலை கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே தனது குடும்பத்துடன் நிலம் ஒன்று வாங்குவதற்காக வந்துள்ளதாக போலீசாருக்கும், முதலீடு செய்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கும் தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அடுத்து அவர்களை பிடிக்க போலீசார் கிருஷ்ணகிரியில் இருந்து விரைந்து சென்றனர். ஆனால் தகவல் அறிந்த அருண்குமார் தனது சொகுசு காரில் தப்பிச் சென்றுள்ளார்.
இதனை அறிந்த போலீசார் ஓசூர் அருகே பாகலூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து போலீசார் அவ்வழியாக வந்த அருண்குமார் காரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 16 லட்சம் ரூபாய் பணம், 12 பவுன் தங்க நகைகள் மற்றும் சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பின்னர் விரைந்து சென்ற கிருஷ்ணகிரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அருண்குமாரை கைது செய்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளி அருண்குமார் கைது செய்யப்பட்டு இருப்பதன் மூலம் அவர் கிரிப்டோகரன்சி மூலம் அந்த நிறுவனம் எங்கெல்லாம் முதலீடு பெற்றுள்ளார்.
எத்தனை நபர்கள் இவரிடம் முதலீடு செய்துள்ளனர் என்பது குறித்து தெரியவரும். மேலும் இவரது நிதி நிறுவனத்தில் மட்டும் இதுவரை 2,000 கோடி ரூபாய் அளவில் முதலீடு பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பாக முன்னாள் ராணுவ வீரர்கள் புகார் அடிப்படையில் மட்டும் ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் அடுத்த கட்டமாக போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.
- 18 வயது முதல் 25 வயது வரையிலானோர் 35 சதவீதம்
- 18 பில்லியன் டாலர் வரை முதலீடு செய்திருப்பதாக ஆய்வில் தகவல்
கொரோனா காலத்தில் மக்கள் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டடு மக்கள் டிஜிட்டல் பணபரிமாற்றத்திற்கு சென்றார்கள். பொருளாதார சிக்கலில் சில நாடுகள் சிக்கித் தவித்ததாலும் கிரிப்டோகரன்சியின் பரிமாற்றம் விஸ்பரூபம் அடைந்தது. இதனால் பிட்காய்ன் மதிப்பு பல மடங்கு உயர்ந்தது.
இனிமேல் கிரப்டோகரன்சிதான் என்று கூறப்பட்டது. சில நாடுகள் கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், பொருளாதாரம் சீரடைந்து வரும் நிலையில் கிரிப்டோகரன்சி குறித்த செய்திகள் வெளிவருவது குறைந்துவிட்டது.
பாகிஸ்தானில் அரசியல் நிலையற்றத் தன்மை காரணமாக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. உலகளவில் பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்த வண்ணம் உள்ளது. இதனால் பாகிஸ்தானியர்களின் பெரும்பாலானோர் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யத் தொடங்கியுள்ளனர்.
கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்களில் 10 பேரில் ஒருவர் பணத்தை பெறுவதும், சம்பளம் செலுத்துவதையும் கிரிப்டோ கரன்சி மூலம் பரிமாற்றம் செய்ய விரும்புகிறார்கள் என குகாய்ன் என்ற உலகாளவிய கிரிப்டோகரன்சி எக்சேஞ்ச் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
குடும்ப ஆண்டு வருமானம் 5 மில்லியன் ரூபாய்க்கும் குறைவாக உள்ளவர்கள் அதிக அளவில் முதலீடு செய்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 30 சதவீதம் பேர் புது முதலீட்டார்களாக சேர்ந்துள்ளனர்.
பாகிஸ்தானிய முதலீட்டார்களில் 40 சதவீதம் பேர் 30 ஆயிரம் அல்லது 100 டாலருக்கு குறைவாக முதலீடு செய்துள்ளனர். இதில் 18 வயது முதல் 25 வயதுள்ள முதலீட்டாளர்கள் 35 சதவீதம் பேர். தற்போது குறைவான பணம் முதலீடு செய்தாலும் பிற்காலத்தில் கிரிப்டோ கரன்சி முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதை யூகித்து முதலீடு செய்து வருவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
பாகிஸ்தான் வங்கி இதற்கு அங்கீகாரம் வழங்கவில்லை. டிஜிட்டல் பரிமாற்றம் பரவலாக்கப்பட்ட அமைப்புகள் மூலம் சரிபார்க்கப்படுகிறது. அதில் எவ்வளவு பேர் உள்ளனர் என்று கூறுவது மிகவும் கடினம் என்றாலும், தற்போது பாகிஸ்தானின் முதலீட்டாளர்களின் மதிப்பு 18 பில்லியன் டாலர் முதல் 25 மில்லியன் டாலர் வரை இருக்கலாம் எனத் தெரிகிறது.
- உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
- ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்
உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகள் மற்றும் விசாரணைகளை ஒளிபரப்பு செய்துவந்த அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலை மர்ம நபர்கள் ஹேக் செய்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் சேனலில் தற்போது கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருவதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தற்போது அந்த சேனல் நேரலையில் ரிப்பிள் லேப்ஸ் உருவாக்கிய கிரிப்டோகரன்சியான எக்ஸ்ஆர்பியை விளம்பரப்படுத்தும் வீடியோ ஒளிபரப்பாகி வருகிறது. இதனால் உச்சநீதிமன்றத்தில் நாடாகும் விசாரணைகளின் நேரலை பாதிக்கப்ட்டுள்ளது. ஹேக் செய்யப்பட்ட சேனலை மீட்கும் பணியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் ஹேக்கர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டிலேயே சக்திவாய்ந்த அதிகார மையமாக விளங்கும் உச்சநீதிமன்றத்தின் பயன்பாட்டில் உள்ள சேனலே ஹேக் செய்யப்பட்டுள்ள சம்பவம் டிஜிட்டல் பாதுகாப்பு மீதான கேள்விகளை எழுப்பியுள்ளது.
- 88,817 டாலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது.
- கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.
உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள அதிபர் தேர்தல் பிட்காயின் மதிப்பை எகிறச்செய்துள்ளது. டிரம்பின் வெற்றி கிரிப்டோகரன்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கிரிப்டோவின் முன்னணி காயினான பிட்காயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
அமெரிக்க டாலர் மதிப்பில் 88,817 டாலர்களை எட்டி கிரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75.62 லட்சம் ஆகும். 1,00,000 டாலரை நெருங்கிக்கொண்டிருக்கும் பிட்காயின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

கிரிப்டோகரன்சியை ஆதரிக்கப்போவதாகத் தனது பிரசாரத்தில் டிரம்ப் சொன்னதே பிட்காயின் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி பிட்காயின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 டிரில்லியன் ஆக உள்ளது. எனவே வெள்ளியின் சந்தை மதிப்பான 1.729 டிரில்லியன் டாலரை தற்போது பிட்காயின் சந்தை மதிப்பு ஓவர்டேக் செய்துள்ளது.
- பைபிட் (Bybit) நிறுவனம் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை சேவைகளை வழங்கி வருகிறது.
- திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான பைபிட் (Bybit) மிகப்பெரிய கிரிப்டோ ஹேக்கிங் திருட்டுக்கு இரையாகி உள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) பைபிட் நிறுவனம், அதன் ஆஃப்லைன் ஹாட் வாலட்களில் ஒன்றிலிருந்து Ethereum (ETH) திருடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனத்தின் அறிக்கைப்படி, 401,346 ETH டோக்கன் (1.13 பில்லியன் டாலர் மதிப்பு) பைபிட்டின் ஹாட் வாலட்டில் இருந்து அடையாளம் தெரியாத வாலட் முகவரிக்கு மாற்றப்பட்டது.
பரிமாற்றத்தைத் தொடர்ந்து, திருடப்பட்ட நிதி அந்த அடையாளம் தெரியாத வாலட்டில் இருந்து வெவ்வேறு வாலட்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் விசாரித்து வருகிறோம். இதனால் மற்ற பரிமாற்றங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என பைபிட் தலைமை நிர்வாக அதிகாரி பென் சோவ் தெரிவித்துள்ளார்.






