என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    மோசடி மூலம் சிக்கியிருக்கும் தனது நிலத்தை மீட்க போராடும் ஒரு விவசாயியின் கதை.

    ஒரு கிராமத்தில் விதார்த் தனது மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வருகிறார். விவசாயியான விதார்த் தனது மகனை பெரிய ஆளாக்க வேண்டும் என்று கனவுடன் உழைக்கிறார். இதற்காக அதிகளவில் கடனை பெற்று மகனை பெரிய கான்வென்ட் பள்ளியில் சேர்க்கிறார்.

    இந்த சூழலில், தனது விவசாய நிலம் வங்கியில் ஏலம் விட்டதை தெரிந்து விதார்த் அதிர்ச்சி அடைகிறார். வாங்காத கடனுக்கு நிலம் எப்படி ஏலத்தில் போகும் என்றும் குழம்புகிறார்.

    இதுதொடர்பாக விதார்த் வங்கியில் கேட்கும்போது, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், கடன் வாங்கியிருந்தால் தந்தை இதை பற்றி சொல்லியிருப்பாரே என்றும் யோசிக்கிறார். இதில், ஏதோ மோசடி நடந்திருப்பதை விதார்த் உணர்கிறார். இந்த மோசடி பின்னணியில் இருக்கும் விஷயங்களை ஆராய்கிறார்.

    இறுதியில் விதார்த் தனது நிலத்தை மீட்டாரா? மோசடியில் ஈடுபட்டது யார்? என்பதே மீதி கதை...

    நடிகர்கள்

    விவசாயி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விதார்த், நிலத்தை மீட்க போராடும் காட்சிகளில் கண்கலங்க வைக்கிறார். தனது நடிப்பின் அனுபவம் வெளிப்படுகிறது. ரக்ஷனா கதாப்பாத்திரத்திற்கு பொருத்தமான நடிப்பை காட்டியிருக்கிறார்.

    சிறுவனாக நடித்துள்ள கார்த்திக் நடிப்பும் கவனம் ஈர்க்கிறது. அருள்தாஸ், சரவண சுப்பையா, மாறன், நாகராஜ் ஆகியோரின் நடிப்பு நினைவில் நிற்கிறது.

    இயக்கம்

    பட நேரம் குறைவு என்றாலும் இழுவையாக தெரிகிறது. திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    விவசாயிகளுக்கான திட்டங்கள் மற்றும் சலுகைகளை மோசடியாக சிலர் எப்படி சுரண்டுகிறார்கள்? என்பதை சொல்லி, அதற்கான தீர்வுகளை எடுத்துரைத்து திரும்பி பார்க்க வைத்துள்ளார் இயக்குனர் வி.கஜேந்திரன்.

    இசை

    என்.ஆர்.ரகுநந்தன் இசை கதைக்கு கச்சிதம்.

    ஒளிப்பதிவு

    அருள் கே.சோமசுந்தரத்தின் ஒளிப்பதிவு கிராமத்து பசுமையைக் காட்சிப்படுத்தி இருக்கிறது.

    • திருமணத்திற்கு நல்ல வரன் அமையும்.
    • சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும்.

    மேஷம்

    நன்மைகள் அதிகரிக்கும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தான அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகத்தில் இருக்கிறார். வெற்றிக் கனியை ருசிப்பீர்கள். புத்தி சாதுர்யமும் அறிவுத் திறனும் அதிகரிக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.

    எதிர்பார்க்கும் உயர்வுகள் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். செல்வாக்கு, சொல்வாக்கு உயரும். தீபாவளி போனஸ் மகிழ்ச்சியை அதிகரிக்கும். தந்தையின் ஆசீர்வாதம் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். வருமானத்தடை விலகும்.

    சிறிய முதலீட்டில் அதிக லாபம் பார்ப்பீர்கள். தடைபட்ட வாடகை வருமானம் வரத் துவங்கும். தம்பதிகளிடம் நல்ல புரிதல் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உங்களின் பேச்சிற்கு கட்டுப்படுவார்கள். உடல் நலனில் முன்னேற்றம் அதிகமாகும்.

    வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் உங்களுக்கு சாதகமாகவே நடக்கும். திருமணத் தடை அகலும். எதிர் பாலினத்தவரால் ஏற்பட்ட இன்னல்கள் விலகும். அரசு, வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. குழந்தை பாக்கியம் கிடைக்கும். செயற்கை கருத்தரிப்பை நாடியவர்களுக்கு இயற்கையாகவே குழந்தை பிறக்கும். குல தெய்வ வழிபாடு பலன் தரும்.

    ரிஷபம்

    விழிப்புடன் செயல்பட வேண்டிய நேரம். ராசி அதிபதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ளார். சொத்து இல்லாதவர்களுக்கு புதிய வீடு, வாகன யோகம் உண்டாகும். கூட்டுக் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு பிறந்த வீட்டு பாகப்பிரிவினை சொத்து, பணம், நகை கிடைக்கும். ஜாமீன் வழக்கு, செக் மோசடி வழக்கில் தீர்ப்பு சாதகமாகும்.

    திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். ராசிக்கு செவ்வாயின் எட்டாம் பார்வையின் சனியின் மூன்றாம் பார்வையும் பதிகிறது. மனதில் குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் சங்கடமும் முயற்சியில் இழுபறியும் உண்டாகும். கை, கால் வலி மற்றும் உடல் உபாதைக்கு வைத்தியம் செய்வீர்கள். அண்ணன், தம்பிகளை அனுசரித்து செல்லுதல் நலம். சிலருக்கு வேற்று மத நம்பிக்கை அதிகரிக்கும். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு கிடைக்கும்.

    தீபாவளிக்கு வீட்டு தேவைக்கான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தீபாவளி போட்டி வியாபாரத்தை சூழ்நிலைக்கு ஏற்ப பேசி சமாளிப்பீர்கள். விநாயகர் வழிபாட்டால் நிம்மதியை அதிகரிக்க முடியும்.

    மிதுனம்

    நன்மைகள் மிகுதியாக நடக்கும் வாரம். ராசி அதிபதி புதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும். ஆழ்மன சிந்தனை பெருகும். சுறுசுறுப்பாக இயங்கி புதிய முயற்சி செய்து கொண்டே இருப்பார்கள். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. பங்குச்சந்தை ஆதாயம் அதிகரிக்கும். பிள்ளைகளால் நிம்மதி கூடும்.

    பூர்வீகச் சொத்தால் மிகுதியான பலன் உண்டு. குல தெய்வ அனுகிரகம் உண்டாகும். குல தெய்வம் தெரியாதவர்களுக்கு குல தெய்வம் பற்றி அறியும் காலம் வந்து விட்டது. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும்.

    தீபாவளிக்கு பரிசுகள், பட்டாசுகள், இனிப்புகள் கிடைக்கும். தடைபட்ட பல விசயங்களுக்கு விடைகள் கிடைத்து அனுகூலமான மாற்றங்கள் பெற்று மகிழ்வீர்கள். கடன் தொல்லைகள் நீங்கி கணிசமான லாபம் உயரும்.

    பிள்ளைகளால் ஏற்பட்ட மன சஞ்சலம் அகலும். தாயாரின் ஆயுள் ஆரோக்யம் சிறப்பாக இருக்கும். மீனாட்சி அம்மன் வழிபாட்டால் சிறப்பான பலன்கள் நடக்கும்.

    கடகம்

    கருமமே கண்ணாக செயல்பட வேண்டிய வாரம். ராசியில் குரு பகவான் வார இறுதி நாளில் இரவில் உச்சம் பெற போகிறார். ஜென்ம குரு என்று பயப்படத் தேவையில்லை. பிற கோட்சார கிரகங்களின் செயல்பாடுகள் உங்களுக்கு சாதகமாக உள்ளது. சிறப்பான பலன்கள் தேடி வரும். பாக்கியாதிபதி குரு தன் வீட்டைத் தானே பார்ப்பதால் பூர்வ புண்ணிய ஸ்தானம், பாக்கிய ஸ்தான வலிமையால் வாழ்க்கையின் அனைத்து விஷயங்களும் சாதகமாக நடக்கும்.

    புதிய தொழில் வாய்ப்புகளால் வருவாய் பெருகும். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் விருப்பம் ஏற்படும். தீபாவளி வியாபாரம் அமோகமாக நடக்கும். கையிருப்பு கணிசமாக உயரும். உயர் நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவீர்கள். படித்த படிப்பு, அனுபவம் என அனைத்து விதத்திலும் மேன்மையான பலன்கள் உண்டு. அசையும், அசையாச் சொத்துகளில் முதலீடு செய்வீர்கள். எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வைத்தியத்தில் நீங்கும். திருமணத் தடை அகலும். மறுமண முயற்சி வெற்றி தரும். ஸ்ரீ துர்க்கை அம்மனை வழிபட சகல சவுபாக்கியங்களும் பெருகும்.

    சிம்மம்

    கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டிய வாரம். அஷ்டமச் சனி மற்றும் ராகு கேது தாக்கத்துடன் குரு பகவானும் அதி சாரமாக விரய ஸ்தானத்திற்கு செல்ல போகிறார். வெளி மாநிலம், வெளிநாட்டிற்கும் இடம் பெயரலாம். உடல் பெருக்கம் ஏற்படும். வாயுத் தொல்லை உருவாகும். சிலருக்கு கடன் தொல்லை சர்ஜரி, வம்பு, வழக்கு வரலாம். சுய தொழில் புரிபவர்கள் எச்சரிக்கையாக நிதானத்துடன் இருக்க வேண்டும்.

    வேலையில் எதிர்பார்த்த மாற்றம் இடப்பெயர்ச்சி கிடைத்துவிடும். கணவன் மனைவிக்கிடையே நிலவிய இறுக்கமான மனநிலை நீங்கும். மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வீர்கள். கோபம் கூடவே இருந்து குழி பறிக்கும். விட்டுக் கொடுத்து செல்லும் போது பின்நாட்களில் வரும் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

    சிலருக்கு ஆரோக்கிய கேடு உண்டாகும். சிலருக்கு பல் தொடர்பான பிரச்சனைகளுக்கு சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம். சில சங்கடங்கள் நிலவினாலும் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்று வருவதால் அனைத்தும் சூரியனைக் கண்ட பனியாக மறையும். கோட்ச்சார கிரகங்களால் நன்மை கூடும்.

    கன்னி

    தொட்டது துலங்கும் வாரம். ராசி அதிபதி புதன் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் வெற்றி ஸ்தான அதிபதி செவ்வாயுடன் சஞ்சரிக்கிறார். தடைபட்ட அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். திட்டுமிட்டு செயல்படுவீர்கள். சொல்வாக்கு உயரும். எல்லா விசயமும் வேகமாகவும் தனக்கு சாதகமாகவும் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மிகுதியாக இருக்கும்.

    நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் வாய்ப்புகள் உருவாகும். திட்டமிட்டு செயல்படுவீர்கள். புத்திர பாக்கியம் கைகூடும். சுப செய்திகள் தேடி வரும். கொடுக்கல், வாங்கலில் சுமூகமான சூழல் நிலவும். அடமானச் சொத்துக்களை மீட்கக்கூடிய சந்தர்ப்பங்கள் கூடிவரும். பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு செல்வாக்கு சொல்வாக்கு அதிகரிக்கும்.

    உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகள் சீராகும். மாமனாரால் ஏற்பட்ட மனக்குழப்பங்கள் சீராகும். எதிர்காலம் பற்றிய பய உணர்வு அகலும். வீடு மாற்றம், இடமாற்றம் ஏற்படும். உடலும் உள்ளமும் மகிழும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பு கொடுப்பார்கள். தீபாவளிக்கு தான தர்மங்கள் வழங்க திட்டமிடுவீர்கள். தினமும் குலதெய்வத்தை வழிபடவும்.

    துலாம்

    பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் நீச்சபங்க ராஜயோகத்தில் உள்ளார். அதிர்ஷ்ட சொத்து, உழைக்காத வருமானம் உண்டு. வழக்குகளில் வெற்றி உண்டாகும். உயர் அதிகாரிகளுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கையில் ஆர்வம் அதிகரிக்கும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். ஆதாயம் இல்லாத செயலைச் செய்ய மாட்டீர்கள். மங்களகரமான சுப நிகழ்வில் கலந்து கொள்வீர்கள்.

    குழந்தை பாக்கியத்தில் நிலவிய தடைகள் விலகும். மருத்துவச் செலவுகள் குறையும். உடன் பிறந்தவர்களுடன் நிலவிய கருத்து வேற்றுமை மறையும். சொத்துக்கள் வாங்க விற்க உகந்த நேரம். உயர்கல்வி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.12.10.2025 அதிகாலை 2.25 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் தவறான போன் தகவலை நம்பி வங்கிக் கணக்கு எண்களை யாரிடமும் தெரிவிக்க கூடாது. சேமிப்பில் உள்ள பணத்தை இழக்கும் வாய்ப்பு இருப்பதால் கவனம் தேவை. ஆஞ்சநேயரை வழிபட நெருக்கடிகள் விலகும்.

    விருச்சிகம்

    நல்ல செயல்கள் நடைபெறும் வாரம். இந்த வார இறுதிவரை தொழில் ஸ்தான அதிபதி சூரியன் லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பார். வளர்ச்சியில் ஏற்பட்ட தளர்ச்சிகள் விலகும். ஆதாயம் தரும் விதத்தில் தொழில் முன்னேற்றம் இருக்கும். பணி புரியும் இடத்தில் உங்கள் திறமைகள் போற்றப்படும். சிலர் தீபாவளி முடிந்தவுடன் பார்க்கும் வேலையை மாற்றலாம். வாங்கிப் போட்ட சொத்தின் மதிப்பு உயரும். பங்குச் சந்தையில் ஈடுபட்டவர்களின் தொழில் வளர்ச்சி பிரமாண்டமாகும். திடீர் பணவரவு மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும்.

    வெளிநாடு செல்வதில் நிலவிய விசா பிரச்சினை சீராகும். ஆன்மீகச் சுற்றுலா செல்லும் வாய்ப்பு உள்ளது. தாய், தந்தையின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். சமுதாய அந்தஸ்து நிறைந்த புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். காதல் திருமண முயற்சிக்கு பெற்றோரின் சம்மதம் கிடைக்கும்.

    உடல் ஆரோக்கியத்தில் நிலவிய தொல்லைகள் சீராகும். 12.10.2025 அதிகாலை 2.25 மணி முதல் 14.10.2025 அன்று விடியற்காலை 5.59 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் சின்னச் சின்னப் பிரச்சனைகள் தோன்றினாலும் உணர்ச்சி வசப்படாமல் சிந்தித்து செயல்படுவது நல்லது. ஸ்ரீ லட்சுமி நரசிம்மரை வழிபடவும்.

    தனுசு

    புத்தியை தீட்ட வேண்டிய வாரம். அடுத்த 48 நாட்களுக்கு ராசி அதிபதி குரு பகவான் அஷ்டம ஸ்தானம் செல்ல போகிறார். கவனமாக செயல்பட வேண்டும். வெளிநாட்டு வேலை மற்றும் பயணம் திட்டமிட்டபடி நடக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். மூத்த சகோதர வகையில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உண்டாகும். சொத்துக்கள் விற்பனையால் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவி இடையே சின்னச் சின்ன சலசலப்புகள் வரலாம். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

    குடும்பச் செலவுகள் இந்த வாரம் அதிகரிக்கும். தீபாவளி பட்ஜெட் கூடும். அதற்குக் தகுந்த வரவும் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். சொத்து தொடர்பான வழக்குகள் சாதகமாகும். வெளிநாட்டில், வெளியூரில் வசிப்பவர்கள் பூர்வீகத்தில் சொத்து வாங்கலாம். சிலர் புதிய இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பார்கள்.

    14.10.2025 அன்று விடியற்காலை 5.59 மணி முதல் 16.10.2025 பகல் 12.42 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் வேலைப்பளு கூடும். வாழ்க்கையை பாதிக்கும் முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்து விடவும். உணவு விசயத்தில் கவனம் தேவை. நவகிரக குரு பகவான் வழிபடுவதால் ஏற்றமான பலன்கள் நடக்கும்.

    மகரம்

    முயற்சிகள் வெற்றி தரும் வாரம். அதிசார குருவால் ராசிக்கு குருப் பார்வை கிடைக்கப்போகிறது. மகர ராசிக்கு மிக அற்புதமான நல்ல மாற்றங்கள் தெரியும். எதிர்பார்த்த இலக்கை அடைய முடியும். புதிய முயற்சிகான பலன்கள் உடனே தெரியும். முன்னேற்றப் பாதையில் நிலவிய தடைகள் விலகும். இதுவரை ஏற்பட்ட இழப்புகளை ஈடு செய்யும் படியாக வருமானம் கூடும். குடும்ப பிரச்சனைகள் விலகி நிம்மதி கூடும். பிள்ளைகளுக்கு சுப விசேஷங்கள் செய்து மகிழ்வீர்கள்.

    கை நழுவிச் சென்ற வாய்ப்புகள் இப்பொழுது வந்து சேரும். பதவி உயர்வு, உத்தியோக உயர்வு தானாக கிட்டும். புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு உபரி லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு பாராட்டும் புகழும் கிடைக்கும். பொன், பொருள் சேரும். வாழ்க்கை துணையின் ஆயுள், ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் சீராகும். இடம், பூமி, வாங்கும் முயற்சிகள் கைகூடும். 16.10.2025 பகல் 12.42 மணி முதல் 18.10.2025 இரவு 10.11 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. வீண் செலவால் மனச் சஞ்சலம் மனக்குழப்பம் உருவாகும். மகா விஷ்ணு சமேத மகாலட்சுமியை வழிபடவும்.

    கும்பம்

    நெருக்கடிகள் விலகும் வாரம். தன ஸ்தானத்திற்கு குருப்பார்வை கிடைப்பதால் உங்களின் பல வருட எதிர்பார்ப்புகள் இந்த வாரத்தில் நிறைவேறும். அரசு வழியில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். குடும்ப ஒற்றுமை மேலோங்கும். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். வர வேண்டிய பாக்கிகள் வசூலாகும். கொடுக்க வேண்டிய கடன்களை கொடுத்து நிம்மதி அடைவீர்கள். உடன் பிறந்தவர்களுடன் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும்.

    வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். குல தெய்வ வழிபாடு பலன் தரும். முக்கிய பிரார்த்தனைகளையும், வேண்டுதல்களையும் நிறைவு செய்வீர்கள். விவசாயிகளுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் மானியத்துடன் கடன் கிடைக்கும். வாக்கு வன்மை உண்டாகும். ஆரோக்கியம் சீராகும். சின்னத்திரை, சினிமா கலைஞர்களின் புகழ், அந்தஸ்து கூடும். கவுரவப் பதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு பிறந்த வீட்டு தீபாவளி சீதனம் மகிழ்ச்சியை அதிகரிக்கும்.

    சிலருக்கு காதல் திருமணம் நடக்கும் வாய்ப்பும் உள்ளது. சிலருக்கு மறு விவாகம் நடக்கும். உடல் ஆரோக்கியமடையும். காவல் தெய்வங்களை வழிபடவும்.

    மீனம்

    கவலைகள் குறையும் வாரம். ராசி அதிபதி குரு பகவான் ராசியில் உள்ள சனிபகவானை பார்க்கப் போகிறார். மீன ராசிக்கு பலவிதமான கிரக அமைப்புகள் சாதகமாக இருப்பதால் பணக்கஷ்டம் ஏற்படாது. கடன் பாதிப்பு இருக்காது. பழைய பாக்கிகள் வசூலாகும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் அதிக லாபத்தை தரப்போகிறது. ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பெண்களுக்கு குடும்ப முன்னேற்றம் நிம்மதி தரும். பேசி நிச்சயித்த திருமணத்திற்கு முகூர்த்தம் குறிக்கப்படும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம்.

    பிள்ளைகளின் கல்வி, ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கணிசமான பாலிசி முதிர்வு, தொகை, பிக்சட் டெபாசிட், ரெக்கரிங் டெபாசிட் முதிர்வு தொகை, ஏலச்சீட்டு பணம் கிடைக்கும். முன்னோர்களின் நல்லாசிகளைப் பெறுவீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். நண்பர், உறவினர் மத்தியில் மதிப்பு கூடும். புதிய வீடு, வாகனம் வாங்க திட்டமிடுவீர்கள். தாய் வழி உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை அதிகரிக்கும். உக்கிர தெய்வங்களை வழிபடுவதால் உயர்வுகள் கூடும். 

    • மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியுடன் சென்ற ஆண் நபரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • 2026 இல் மம்தா பானர்ஜி வெளியேற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி கற்பழித்து கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. தலைநகர் கொல்கத்தாவில் இருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் இந்த மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உள்ளது.

    ஒடிசா மாநிலம் ஜலேஸ் வரை சேர்ந்த மாணவி அங்கு 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவில் 8.30 மாணவி கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது.

    அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு, மாணவியை தரதரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குபுறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. அந்த சமயத்தில் வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது.

    அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் இதுவரை 3 பேரை கைது செய்துள்ளதாகவும், மேலும் இருவரை தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். 

     மருத்துவக் கல்லூரி ஊழியர்கள் மற்றும் மாணவியுடன் சென்ற ஆண் நபரை காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஞ்சி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "மேற்கு வங்க அரசாங்கத்தைத் தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மூத்த அதிகாரிகளுக்கு நான் அறிவுறுத்தியுள்ளேன். ஒடிசா அரசாங்கத்தின் சார்பாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா, "மேற்கு வங்கம் பெண்களுக்கு பாதுகாப்பானது அல்ல. திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கம் இருக்கும்வரை, மாநிலம் முழுவதும் பெண்கள் அச்சத்தில் வாழ்வார்கள். 2026 இல் மம்தா பானர்ஜி வெளியேற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

    இதற்கு பதிலடி கொடுத்துள்ள மம்தாவின் திரிணாமுல் கட்சி முக்கிய தலைவரும் மேற்கு வங்க அமைச்சருமான சசி பஞ்சா, "இங்கே அரசியலுக்கு இடமுண்டா? ஒடிசாவில் தீக்குளித்த பெண்களுக்கு கிடைத்த நியாயம் என்ன? மணிப்பூர் எரிந்தபோது அல்லது டெல்லி ஜந்தர் மந்தரில் பாஜக தலைவரின் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக தங்கப் பதக்கம் வென்ற பெண் மல்யுத்த போராட்டம் நடத்தியபோது இந்தக் குரல்கள் எங்கே இருந்தன? வங்காளத்தில் பாஜகவின் கடையை மூடச் சொல்லுங்கள். காவல்துறை ஏற்கனவே விசாரணையைத் தொடங்கிவிட்டது" என்று தெரிவித்துள்ளார்.

    அடுத்த வருடம் மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆர்ஜி கர் மருத்துவ மாணவி கொலை மற்றும் தற்போதைய விவகாரத்தை பாஜக கையில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • பெர்த் நகரில் தாய் வாத்து தனது குஞ்சுகளுடன் சாலையை கடந்து சென்றது.
    • இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    ஆஸ்திரேலியா நாட்டின் பெர்த் நகரில் தாய் வாத்து தனது குஞ்சுகளுடன் சாலையை கடந்து சென்றது.

    இதனை பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக தங்களது வாகனங்களை நிறுத்தி வாத்துகள் கடந்து செல்லும் வரை காத்திருந்தனர்.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

    • 2006இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
    • இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டத்தால் இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

    இதன் பின், 2006இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசை தேர்ந்தெடுக்க அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

    இதற்கிடையே அந்நாட்டின் சிறுபாண்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. இந்துக்கள் வீதிகளில் திரண்டு போராட்டங்களும் நடத்தினர். இதுகுறித்து இந்திய அரசும் கவலை தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது எந்தவிதமான தாக்குதல்களும் நடக்கவில்லை என்றும், இதுகுறித்த இந்திய ஊடகங்களின் செய்திகள் அனைத்தும் போலியானவை என்றும் முகமது யூனுஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

    கடந்த வாரம் அமெரிக்க செய்தியாளர் மெஹ்தி ஹாசன் உடனான நேர்காணலின்போது அவர் இதை தெரிவித்துள்ளார்.

    மேலும் அதில், இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.

    நிலம் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் தொடர்பாக அண்டை வீட்டாருக்கு இடையே அவ்வப்போது தகராறுகள் ஏற்படுவதுண்டு. இதுபோன்ற மோதல்களுக்கு வகுப்புவாத சாயம் பூசுவது சரியல்ல என்று அவர் கூறினார்.

    இந்துக்கள் மீதான தாக்குதல் செய்திகள் தவறானவை என்றும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது என்றும் முகமது யூனுஸ் தெளிவுபடுத்தினார்.    

    • விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை விசுவாசிகளாக நியமித்திருந்தால் கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது.
    • நேரத்தை முறையாக பின்பற்றி இருந்தால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்காது.

    கடந்த மாதம் 27-ந்தேதி த.வெ.க. பிரசாரகூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினர் விஜய் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழுவினர் விசாரித்து வருகின்றனர்.

    கரூர் கூட்ட நெரிசலுக்கு பின் த.வெ.க. தலைவர் விஜய், வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ கால் மூலம் பேசி ஆறுதல் கூறினார்.

    இதற்கிடையே, விஜயை சந்தித்தால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க கோரிக்கை வைப்பேன் என்று நடிகர் தாடி பாலாஜி கூறியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறுகையில்,

    * விஜய் இரண்டாம் கட்ட தலைவர்களை விசுவாசிகளாக நியமித்திருந்தால் கரூர் கோர சம்பவம் நடந்திருக்காது.

    * கரூர் சம்பவத்திற்கு பிறகு விஜய் தனித்துவிடப்பட்டுள்ளார்.

    * நேரத்தை முறையாக பின்பற்றி இருந்தால் இந்த கோர சம்பவம் நிகழ்ந்திருக்காது.

    * கூட்டணி தொடர்பாக என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கணும் என்றார். 

    • விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.
    • இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன

    பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் வசிக்கும் விகாஸ் குமார் 5 ஆண்டுகளுக்கு முன்பு சுனிதா தேவி (25) என்ற பெண்ணை திருமணம் செய்தார்.

    திருமணம் முடிந்த பின்பு தான் விகாஸ் குமாருக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி இருப்பதும் அப்பெண்ணை விவாகரத்து செய்யமல் 2 ஆவது திருமணம் செய்ததும் சுனிதாவுக்கு தெரியவந்தது. ஆனால் சுனிதா குடும்பத்தினர் அவரை சம்மதிக்கவைத்து விகாஸ் குமாருடன் ஒன்றாக வாழவைத்தனர்.

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்து அடுத்தடுத்து இறந்தன. இதையடுத்து விகாஸ் குமார் தான் இன்னொரு பெண்ணை காதலிப்பதாகவும் அப்பெண்ணை திருமணம் செய்துகொள்ள போவதாகவும் சுனிதாவிடம் தெரிவித்துள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையில் சுனிதா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.

    துர்கா பூஜையின் போது சுனிதா வீட்டுக்கு சென்று அவரை மீண்டும் தன்னுடைய வீட்டுக்கு வருமாறு விகாஸ் வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் சுனிதா மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரித்துக் கொன்ற கொண்டுருள்ளார்.

    தீயில் கருகிய உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ள போலீசார் இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.
    • டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

    புதுடெல்லி:

    பள்ளிகளில் மாணவர்களுக்கான பல்வேறு கட்டணங்களை வசூலிப்பதில் நவீனத்தை புகுத்துமாறு மாநிலங்களை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

    குறிப்பாக கல்வி கட்டணம், சேர்க்கை மற்றும் தேர்வு கட்டணங்களை பணமாக வசூலிக்காமல் யு.பி.ஐ., செல்போன் வாலட்டுகள் மற்றும் நெட்பேங்கிங் போன்ற டிஜிட்டல் முறையில் வசூலிக்க அறிவுறுத்துமாறு மாநிலங்களுக்கு மத்திய கல்வி அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

    இதன் மூலம் வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படுவதுடன், பெற்றோருக்கு பணம் செலுத்தும் வசதியும் எளிமையாகும், அதாவது பள்ளிக்கு செல்லாமலேயே வீட்டில் இருந்தே பணம் செலுத்த முடியும் என்றும் அந்த கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது. மேலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை குறித்த அறிவும் மக்களிடம் அதிகரிக்கும் என்றும் அதில் குறிப்பிட்டு உள்ளது.

    • சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள்.
    • பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும்.

    சென்னை:

    பண்டிகை காலம் என்றாலே ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிப்பது வாடிக்கையாக உள்ளது. எத்தனை முறை அரசு எச்சரித்தாலும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலிப்பதில் உறுதியாக உள்ளனர்.

    தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி வெளியூர் பயணம் அதிகரிப்பதால் அதன் தேவையை கருத்தில் கொண்டு கட்டணங்களை 3 மடங்கு உயர்த்தி விட்டனர்.

    சென்னையில் இருந்து மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், தென்காசி, விருதுநகர், கோவில்பட்டி உள்ளிட்ட தென்மாவட்ட பகுதிகளுக்கு சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரெயில்களிலும் இடங்கள் நிரம்பி விட்டன.

    காத்திருப்போர் பட்டியல் அதிகமாக இருந்ததால் முன்பதிவையும் நிறுத்தி விட்டனர். அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் இடங்கள் நிரம்பிவிட்டன. இதனால் மக்கள் அரசு மற்றும் ஆம்னி பஸ்களை நாடி செல்கிறார்கள்.

    சொந்த ஊர் சொல்வதற்காக வருகிற 17 மற்றும் 18-ந்தேதிகளில் பொதுமக்கள் பெருமளவில் முன்பதிவு செய்து வருகிறார்கள். இதை அறிந்த ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் தங்களது இணையதளத்தில் அதிக கட்டணங்களை வசூலிக்கின்றனர். சென்னையில் இருந்து நெல்கைக்கு வழக்கமாக இருந்த கட்டணமான ரூ.1,800 தற்போது ரூ.5,000 வரை உயர்ந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் சென்னையில் இருந்து மதுரைக்கும் வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்தை விட மும்மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதால் பயணிகள் செய்வதறியாது தவிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கூடுதல் கட்டணம் வசூலிப்பதும் அரசு எச்சரிப்பதும் வாடிக்கையாக உள்ளது. ஆனால் இதில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று பொதுமக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

    எனவே பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ் ஆபரேட்டர்கள் மீது அரசு சரியான நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு உதவிட வேண்டும். விசேஷ நாட்களை பயன்படுத்தி இதுபோன்ற கட்டண கொள்ளையில் ஈடுபடுவது எந்த விதத்தில் நியாயம் என்று சமூக ஆர்வலர்கள் கேட்கிறார்கள்.

    மேலும் கூடுதலாக சிறப்பு ரெயில்களை இயக்கினால் ஆம்னி பஸ்களின் பயன்பாடு குறையும். கட்டணத்தையும் குறைக்க வழியுண்டு. எனவே தென் மாவட்டங்களுக்கு பகல் நேர ரெயில்களை கூடுதலாக இயக்க வேண்டும். முன்பதிவு இல்லாத ரெயில் சேவையை அதிகரித்தால் ஏழை, நடுத்தர மக்கள் பயணம் செய்ய உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது.

    • தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
    • சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.

    தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...

    • பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது.
    • இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர்.

    அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    மிசிசிபி மாகாணத்தில் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர். கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

    இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம். மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.
    • நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

    ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருகிறது. இதற்கிடையே ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினர் அடிக்கடி பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

    இதற்கு பாகிஸ்தானும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஆப்கானிஸ்தானுக்குள் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பினரை குறிவைத்து பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல் நடத்தி உள்ளது.

    தலைநகர் காபூலின் கிழக்கு பகுதியில் தெக்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை குறிவைத்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இந்த தாக்குதலில் இருந்து நூர் வாலி தப்பி பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது மகன் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே காபூலில் 2 சக்திவாய்ந்த குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டது என்றும், துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்தது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவ நிலைகளை தலிபான் இஸ்லாமிய எமிரேட் படைகள் கைப்பற்றியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    2 நாட்டின் எல்லைக் கோட்டின் குறுக்கே 2 பாகிஸ்தானிய நிலைகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த தாக்குதலில் 12 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், பல வீரர்கள் காயம் அடைந்துள்ளனர் என்று கூறப்படுகிறது.

    பாகிஸ்தானுக்கும், தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையேயான இந்த தாக்குதல் சம்பவம் இரு நாட்டிற்கும் இடையே பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    ×