என் மலர்
உலகம்

வங்கதேசத்தில் இந்துக்கள் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை.. இந்திய ஊடகங்கள் பொய் செய்தி - முகமது யூனுஸ்
- 2006இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது.
- இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டத்தால் இந்தியா ஆதரவு நிலைப்பாடு கொண்ட ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இதன் பின், 2006இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அமைந்தது. புதிய அரசை தேர்ந்தெடுக்க அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே அந்நாட்டின் சிறுபாண்மையினராக உள்ள இந்துக்கள் மற்றும் இந்து கோவில்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருவதாக பல்வேறு குற்றச்சாட்டு எழுந்தது. இந்துக்கள் வீதிகளில் திரண்டு போராட்டங்களும் நடத்தினர். இதுகுறித்து இந்திய அரசும் கவலை தெரிவித்திருந்தது.
இந்நிலையில் வங்கதேசத்தில் இந்துக்கள் மீது எந்தவிதமான தாக்குதல்களும் நடக்கவில்லை என்றும், இதுகுறித்த இந்திய ஊடகங்களின் செய்திகள் அனைத்தும் போலியானவை என்றும் முகமது யூனுஸ் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க செய்தியாளர் மெஹ்தி ஹாசன் உடனான நேர்காணலின்போது அவர் இதை தெரிவித்துள்ளார்.
மேலும் அதில், இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள்தான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
நிலம் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் தொடர்பாக அண்டை வீட்டாருக்கு இடையே அவ்வப்போது தகராறுகள் ஏற்படுவதுண்டு. இதுபோன்ற மோதல்களுக்கு வகுப்புவாத சாயம் பூசுவது சரியல்ல என்று அவர் கூறினார்.
இந்துக்கள் மீதான தாக்குதல் செய்திகள் தவறானவை என்றும், இந்த விவகாரத்தில் அரசாங்கம் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது என்றும் முகமது யூனுஸ் தெளிவுபடுத்தினார்.






