என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.
    • ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    45 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து நடிக்கும் மெகா பட்ஜெட் திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் ப்ரோமோ வீடியோ ரஜினி மற்றும் கமலின் பிறந்த தேதிகளைக் குறிக்கும் வகையில் நாளை (இன்று) 12:07 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இதனை தொடர்ந்து ரஜினி- கமல் இணையும் புதிய படத்தின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தை இயக்குநர் நெல்சன் இயக்குவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகமாக KHxRK என்று தலைப்பிடப்பட்டுள்ளது.

     

    ப்ரோமோ வீடியோவில் ரஜினி, கமல், இயக்குநர் நெல்சன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். வீடியோவில் டீம் மியூசிக் ரெடியா இருக்கு என்று அனிருத் சொல்ல, யாரு ஹீரோ? என்று கமல்ஹாசன் கேட்க, கேட்குறாங்களா சொல்லுங்க ஜீ என்று ரஜினிகாந்த் சொல்ல இயக்குனர் நெல்சனும், அனிருத்தும் செய்வதறியாது திகைக்கின்றனர். இது தொடர்பான ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

    நெல்சனின் ஆஸ்தான நடிகர்களான யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி மற்றும் விடிவி கணேஷ் ஆகியோர் நகைச்சுவை வேடங்களில் இடம் பெறுவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. 

    • எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன.
    • மாம்பலத்தில் நிற்கும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நடைமேடை 10 மற்றும் 11-ல் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள் அனைத்தும், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்படும் 5 மற்றும் 6-வது நடைமேடைக்கு மாற்றப்பட்டுள்ளன. நேற்று முதல் ஏப்ரல் 5-ந்தேதி வரை (45 நாட்கள்) இந்த மாற்றம் அமலில் இருக்கும் என தெற்கு ரெயில்வே அறிவித்து இருந்தது.

    அதன்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு செல்லும் ரெயில்கள் 6-வது நடைமேடையில் இருந்தும். மறுமார்க்கமாக வரும் ரெயில்கள் 5-வது நடைமேடையில் இருந்தும் இயக்கப்பட்டன.

    சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரெயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன.

    எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரெயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரெயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது.

    இதனால், பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

    சுமார் 40 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால், வழக்கமாக 10 நிமிடங்களுக்கு ஒருமுறை வரும் மின்சார ரெயில்கள், 20 முதல் 30 நிமிடங்கள் வரை தாமதமாக வந்தன. எக்ஸ்பிரஸ் ரெயில் பாதையில் இயக்கப்பட்ட மின்சார ரெயில்கள், சேத்துப்பட்டு கிராசிங்கில் உள்ள ஒரு வழித்தடத்தில் இருமார்க்கத்திலும் நின்று, ஒரு ரெயில் வந்த பின்னரே எதிர் திசையில் இருந்து வந்த மற்றொரு ரெயில் அந்த வழித்தடத்தில் செல்ல முடிந்தது.

    பல்வேறு மின்சார ரெயில்கள் ஆங்காங்கே தண்டவாளத்திலேயே நிறுத்தப்பட்டன. இதனால், வேலை மற்றும் பள்ளி-கல்லூரிகளுக்கு செல்பவர்கள் என அனைத்து தரப்பு பயணிகளும் கடும் அவதிக்குள்ளாகினர். பராமரிப்பு பணியின் முதல் நாளிலேயே சென்னை மக்கள் சொல்ல முடியாத துயரத்திற்கு ஆளாகி உள்ளனர்.

    இந்நிலையில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்பட்டுச் செல்லும் 8 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நாளை முதல் மாம்பலத்திலும் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    எழும்பூரில் இருந்து புறப்படும் திருச்சி சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில், நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில், மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரெயில், மன்னார்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் மற்றும் சென்னை எழும்பூர் - புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரெயில், சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் மாம்பலத்தில் நாளை முதல் ஏப்.6 வரை நின்று செல்லும். மாம்பலத்தில் நிற்கும் இந்த எக்ஸ்பிரஸ் ரெயில்கள் பயணிகளை ஏற்றிச்செல்லும் என்று தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    சென்னை எழும்பூரில் மேம்பாட்டுப் பணிகள் நடப்பதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

     

    • இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் முன்னர் அறிவித்திருந்தார்.
    • பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணியின் போட்டிகள் மட்டும் இலங்கையில் நடந்து வருகிறது.

    வங்கதேச அணிக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இழைக்கப்பட்ட அநீதிக்கு ஆதரவாக, இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிக்கப் போவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீஃப் முன்னர் அறிவித்திருந்தார்.

    பலகட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐசிசி மற்றும் பிற நாடுகளின் வேண்டுகோளை ஏற்று, பிப்ரவரி 15 அன்று நடைபெறவிருந்த இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்தது. இதன் மூலம் இறுதி நேரத்தில் புறக்கணிப்பு முடிவு மாற்றப்பட்டது.

    இந்நிலையில் நாக் அவுட் சுற்றில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் வாய்ப்பு ஏற்பட்டால் பாகிஸ்தான் அரசு முடிவையே கிரிக்கெட் வாரியம் பின்பற்றும் என கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    அரசின் அறிவுறுத்தல்களையே வாரியம் பின்பற்றும். ஒருவேளை தொடரின் நாக்-அவுட் சுற்றில் மீண்டும் இந்தியாவுடன் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டாலும், அப்போதும் அரசின் முடிவே இறுதியானது என வாரியத்திற்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று கூறினார்.

    • டிரம்புக்கு வரி விதிக்க அதிகாரம் இல்லை என அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.
    • டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனவும் நீதிமன்றம் விமர்சனம்.

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறுகையில் "பிரதமர் சமரசம் செய்து கொண்டார். அவரது துரோகம் இப்போது அம்பலமாகியுள்ளது. அவரால் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. அவர் மீண்டும் சரணடைவார்" என்றார்.

    முன்னதாக காங்கிரஸ் சார்பில் ஜெய்ராம் ரமேஷ் பிரதமர் மோடியின் முடிவை கடுமையாக விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏ.ஐ. மாநாட்டு பகுதியில் இளைஞர் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தினர்.
    • 4 காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

    டெல்லி ஏ.ஐ. மாநாட்டு பகுதியில் காங்கிரசார் மேலாடையின்றி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடிக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கான செயற்கை நுண்ணறிவு மாநாட்டை இந்தியா நடத்தி வருகிறது. இன்றுடன் முடிவடைகிறது.

    டெல்லி பாரத் மண்டபத்தில் மாநாடு நடைபெற்று வரும் இந்த மாநாட்டின் நேற்றைய நிகழ்ச்சியில் ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், கிரீஸ் பிரதமர் கிரிகோஸ், இலங்கை அதிபர் அனுரா குமார திசநாயகே, பூட்டான் பிரதமர் ஷேரிங் டோப்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில் டெல்லி பாரத் மண்டப பகுதிக்குள் திடீரென புகுந்த இளைஞர் காங்கிரசார், தங்கள் மேலாடையை கழற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்கா- இந்தியா வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டதுடன், பிரதமர் மோடிக்கு எதிராகவும் முழக்கமிட்டனர்.

    இந்த நிலையில் காங்கிரஸ் இளைஞர் பிரிவு நடத்திய போராட்டத்திற்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது. அத்துடன் டெல்லியில் போராட்டம் நடத்தினர்.

    பாஜக எம்.பி. மனோஜ் திவாரி "இந்த செயலுக்காக நாட்டு மக்கள் காங்கிரசை மன்னிக்க மாட்டார்கள். 80-க்கும் மேற்பட்ட நாட்டினர் கலந்து கொண்டுள்ளனர். இந்தியாவின் முயற்சியை அவர்கள் பாராட்டியுள்ளனர்" என்றார்.

    இதற்கிடையே போராட்டம் நடத்திய 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள்.

    • ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உயர்த்தப்பட்டது.
    • புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரெயில்களின் சேவை 3 வகையாக நடைமுறையில் உள்ளது.

    அதன்படி தினமும் 8 பயணங்கள் கொண்ட சாதாரண கட்டண சேவை, கோடை விடுமுறை, பிற விடுமுறைகள், வார இறுதிநாட்கள் மற்றம் பண்டிகைகளில் இயக்கப்படும் சிறப்பு ரெயில் சேவை, திருமணம், குடும்ப விழா, நிறுவன விழா மற்றும் சந்திப்பு நிகழ்ச்சிக்காக முழு ரெயிலையும் தனியாக வாடகைக்கு எடுப்பது (சார்ட்டர்டு சிறப்பு ரெயில்) என்று மூன்று வகைகளில் இயக்கப்பட்டு வருகிறது.

    ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டண ரெயில்களில் பயணிக்க முதல் வகுப்பில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூருக்கு ரூ.500, 2-வது வகுப்பில் பயணிக்க ரூ.250 கட்டணம் வீதம் வசூலிக்கப்படுகிறது.

    குன்னூர்-ஊட்டி இடையே முதல் வகுப்பில் பயணிக்க ரூ.290, 2-வது வகுப்பில் பயணிக்க ரூ.150 மற்றும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையே முதல் வகுப்பு கட்டணம் ரூ.1000, 2-வது வகுப்பு கட்டணம் ரூ.550 வீதம் வசூலிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த ரெயில்களின் கட்டணம் தற்போது 5 சதவீதம் உயர்த்தப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இதுகுறித்து தென்னக ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    ஊட்டி மலை ரெயிலில் சாதாரண கட்டணம் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18-ந்தேதி உயர்த்தப்பட்டது. அதன்பிறகு அதிகரிக்கப்படவில்லை.

    ஆனால் மேட்டுப்பாளையம்-குன்னூர், குன்னூர்-ஊட்டி மற்றும் மேட்டுப்பாளையம்-ஊட்டி இடையேயான மலை ரெயிலின் இயக்க செலவுகள், பராமரிப்பு செலவு மற்றும் பணியாளர்களின் ஊதியம் ஆகியவை கணிசமாக உயர்ந்து உள்ளன.

    இதனை ஈடுகட்டும் வகையிலும், வருவாய் இழப்பை சமாளிக்கும் வகையிலும் நீலகிரி மலை ரெயில் பிரிவில் சாதாரண ரெயில்களின் அடிப்படை கட்டணம் 5 சதவீதம் உயர்த்தப்படுகிறது. மேலும் இந்த புதிய கட்டண நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது.

    அதன்படி சாதாரண ரெயில்களுக்கான அடிப்படை கட்டணம் மட்டுமே 5 சதவீதம் உயர்த்தப்படும். மற்றபடி முன்பதிவு கட்டணம், கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை.

    மேலும் ஏற்கனவே பழைய கட்டணத்தில் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் செல்லுபடியாகும். அதற்கு கூடுதல் கட்டண வித்தியாசம் வசூலிக்கப்படாது. இன்று முதல் புதிய கட்டணத்தில் பயணச்சீட்டுகள் வழங்கப்படும்.

    ஊட்டி மலை ரெயில் பிரிவில் இயக்கப்படும் சிறப்பு ரெயில்கள் மற்றும் சார்ட்டர் சிறப்பு ரெயில்கள் ஆகியவற்றின் கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது.
    • மக்களுக்கு சேவை செய்ய உச்சத்தில் இருக்கும் போதே வந்தவர்.

    கடலூர்:

    தமிழக வெற்றிக் கழகத்தின் கடலூர் மாவட்ட தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் மஞ்சக்குப்பம் மைதானத்தில் நடந்தது.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கலந்து கொண்டு பேசியதாவது:-

    தலைவர் விஜய்க்கு பிடித்த மாவட்டம் கடலூர். தானே புயல், சுனாமி வந்த போது, மக்களுக்கு உதவி செய்தார். கடந்த 32 ஆண்டுகளுக்கு மேலாக மக்களுக்காக சேவை செய்து வருகிறோம். வருகிற சட்டமன்ற தேர்தலில் தலைவர் விஜய் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பார்.

    எங்கள் கட்சியில் உண்மை, உழைப்பு இருக்கிறது. மக்களுக்கு சேவை செய்ய உச்சத்தில் இருக்கும் போதே வந்தவர். ஓய்வு பெற்று, படம் ஓடாமல் அரசியலுக்கு வரவில்லை.

    தி.மு.க. மக்களுக்கு எதையும் செய்யவில்லை. மக்கள் வரிப்பணத்தில்தான் செய்தீர்கள். அதுவும் சரியாக செய்யாமல் கையாளாகாத அரசாக தி.மு.க. இருக்கிறது.

    நீங்கள் எப்படி வேஷம் போட்டாலும், தமிழ்நாட்டில் ஒரே தளபதி, தலைவர் விஜய்தான். கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளும் த.வெ.க. கோட்டையாக இருக்கும். தலைவர் விஜய் முதலமைச்சர் ஆவது உறுதி. பெண்களுக்கு பாதுகாப்பான ஆட்சியாக இருக்கும். ஆனால் தி.மு.க. 5 ஆண்டுகளில் மக்களுக்கு சேவை செய்யவில்லை.

    வருகிற சட்டமன்ற தேர்தலில் நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டும், விசில் சின்னத்தை வீடு, வீடாக கொண்டு சேர்க்க வேண்டும்.

    இவ்வாறு பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் பேசினார்.

    தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், பிப்ரவரி 20-ந்தேதி (நேற்று) தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் கடைசி சட்டசபையாக இருக்கும்.

    பீகார், தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் தி.மு.க. இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான், உண்மையான விவரம் தெரிய வரும். சமூக நீதி கூட்டணி என்று சொல்லும் தி.மு.க., ஏன் இதுவரை சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை. அந்த கூட்டணியில் உள்ளவர்களும் இதுவரை கேட்கவில்லை. பா.ஜனதா போல், தி.மு.க.வுக்கும் அந்த எண்ணம் இல்லை.

    விஜய் முதலமைச்சர் ஆன பிறகு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்துவார். பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தவில்லை என்று கூறும், தி.மு.க.வினர், பேப்பர், நிர்வாகிகள் இல்லாமல், விஜய்யுடன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதி வாரி கணக்கெடுப்பு குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த தயாரா? தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் தான் போட்டி. பழம் நழுவி பாலில் விழும் என்பது அவுட் ஆப் சிலபஸ், பழம் நழுவி கெட்டுப்போன பாலில் விழுந்துள்ளது. கெட்டுப்போன பாலை யாரும் குடிக்கமாட்டார்கள். ஜி.பே. மூலமாக தான் தி.மு.க. கூட்டணி ஓடுகிறது. விஜய்யை ஜெயிக்க ஷேர் ஆட்டோவில் ஏற்றுவது போல கட்சிகளை ஏற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். வரலாற்றில் 2-வது முறையாக தி.மு.க. ஆட்சிக்கு வந்ததாக சரித்திரம் இல்லை. கருணாநிதி இருக்கும் போதே நடக்கவில்லை.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருக்கும் போதா நடக்கப்போகிறது என்றார்.

    நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசுகையில், 45 ஆண்டுகால அரசியலுக்கு பிறகு தூக்கி எறிந்த என்னை தூக்கி பிடித்தவர் தலைவர் விஜய். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பிறகு 3-வது தலைவராக விஜய் ஆள போகிறார்.

    நம்மை வீழ்த்த எவராலும் முடியாது. தி.மு.க.வை ஆட்சி கட்டிலில் இருந்து தூக்கி எறிய தலைவர் விஜய்யால் மட்டுமே முடியும். தி.மு.க.வை வீழ்த்த த.வெ .க. தலைவரால் மட்டுமே முடியும். 234 தொகுதிகளிலும் த.வெ.க. வெற்றி பெறும் என்றார்.

    • சால்வையை வீராசாமிநாதனுக்கு அணிவித்து விட்டு திடீரென கத்தியால் அவரை வயிற்றில் குத்தினார்.
    • பிடிபட்டவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர்.

    வேடசந்தூர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீராசாமிநாதன் (வயது 55). இவர் சொந்தமாக கல்வி நிறுவனங்கள் நடத்தி வருவதுடன், பைனான்ஸ் தொழிலும் செய்து வருகிறார். மேலும் தமிழகம், பாண்டிச்சேரியில் பர்னிச்சர் டீலராகவும் இருந்து வருகிறார்.

    இவர் வேடசந்தூர் கோவிலூர் பிரிவில் உள்ள தோட்டத்தில் தனது மனைவி தாமரைசெல்வியுடன் வசித்து வருகிறார். இவரது 2 மகன்கள் ஸ்ரீகாந்த், சச்சின் ஆகியோருக்கு திருமணம் முடிந்துவிட்ட நிலையில் அவர்கள் தந்தையின் தொழிலையே கவனித்து வருகின்றனர். இவரது தோட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். வருகிற சட்டமன்ற தேர்தலில் வேடசந்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக தொடர்ந்து கட்சி பணிகள் ஆற்றி வந்தார். தினந்தோறும் தொகுதிக்குட்பட்ட பல கிராமங்களுக்கு சென்று முகாம்கள் நடத்தி நலத்திட்ட உதவிகளும் வழங்கி வந்தார்.

    இதனால் அவரை பார்க்க தினந்தோறும் காலையிலேயே கட்சியினர் தோட்டத்து வீட்டிற்கு வருவது வழக்கம். இன்று காலை அவரது உறவினரான குளத்தூர் காளனம்பட்டியை சேர்ந்த நாச்சிமுத்து என்பவர் தனது மகள் திருமணத்திற்காக அழைப்பிதழ் கொடுக்க வந்தார். அழைப்பிதழை வீராசாமிநாதனிடம் கொடுத்து விட்டு வாசலில் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு வாலிபர் அவருக்கு சால்வை அணிவிக்க வந்தார். சால்வையை வீராசாமிநாதனுக்கு அணிவித்து விட்டு திடீரென கத்தியால் அவரை வயிற்றில் குத்தினார். இதனை சற்றும் எதிர்பாராத அவர் அந்த வாலிபரை தள்ளிவிட்டு சத்தம் போட்டார். இருந்த போதும் வீராசாமிநாதனின் பின் தலையிலும் குத்தினார். உடனே அருகில் இருந்த நாச்சிமுத்து அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அப்போது நாச்சிமுத்துவையும் அவர் கத்தியால் குத்தினார்.

    இதனை தொடர்ந்து அவர் சத்தம் போடவே அங்கிருந்த தொழிலாளர்கள் ஓடிவந்து அந்த வாலிபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    கத்திக்குத்து சம்பவத்தில் காயமடைந்த வீராசாமிநாதன், நாச்சிமுத்து ஆகியோர் உடனடியாக வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கிருந்து வீராசாமிநாதன் திண்டுக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    பிடிபட்டவரை வேடசந்தூர் போலீஸ் நிலையத்தில் தொழிலாளர்கள் ஒப்படைத்தனர். போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தியதில் எரியோடு பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்த சின்னச்சாமி மகன் மணிகண்டன் (27) என தெரியவந்துள்ளது. அவர் எதற்காக கத்தியால் குத்தினார். தேர்தல் முன்விரோதம் காரணமாக குத்தினாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வீராசாமிநாதனை கத்தியால் குத்திய சம்பவம் அறிந்ததும் ஆஸ்பத்திரி முன்பு ஏராளமான தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். பிடிபட்ட வாலிபரின் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • முதல் இடத்தை பிடித்த 4 அணிகளும் சூப்பர் 8 சுற்றில் ஒரே பிரிவில் உள்ளன.
    • 2-வது இடத்தை பிடித்த அணிகள் அனைத்தும் ஒரே பிரிவில் உள்ளன.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியிட்ட சில நாட்களில் சூப்பர் 8 சுற்றுக்கான விவரமும் வெளியிடப்பட்டது. கடந்த முறையை போல் இல்லாமல் சூப்பர் 8 சுற்றில் மாற்றம் செய்யப்பட்டது.

    முன்கூட்டியே தரவரிசையை நிர்ணயித்து அதன் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2 என பிரித்தது.

    இந்த தரவரிசையின்படி குரூப் 1 பிரிவில் இந்தியா, ஜிம்பாவே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பி ரிக்கா அணிகளும், குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடித்த அணிகளே ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவிலும், ஜிம்பாவே 'பி' பிரிவிலும், வெஸ்ட் இண்டீஸ் 'சி' பிரிவிலும், தென் ஆப்பிரிக்கா 'டி' பிரிவிலும் முதல் இடத்தை பிடித்தன. இந்த 4 அணிகளும் சூப்பர் 8 சுற்றில் ஒரே பிரிவில் உள்ளன.

    இதே போல 2-வது இடத்தை பிடித்த அணிகள் அனைத்தும் ஒரே பிரிவில் உள்ளன. ஐ.சி.சி. முன்கூட்டியே தீர்மானித்த தரவரிசை தற்போது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் பிரிவில் 2-வது பிடித்த அணிகள் இடம் பெறும். அந்த நிலை தற்போது மாறி உள்ளதால் சூப்பர் 8 சுற்று போட்டி முறை குறித்து கிரிக்கெட் வல்லுனர்கள் கடும் விமர்சனத்தை முன்வைத்து உள்ளனர்.

    அதே நேரத்தில் ஐ.சி.சி. தன்நிலையை நியாயப்படுத்தி உள்ளது. இந்தியா மற்றும் இலங்கையில் போட்டிகளை இணைந்து நடத்துவதற்கு முன்கூட்டியே திட்டமிடல் தேவைப்படுகிறது. இடங்களை தேர்வு செய்வதற்கும், அட்டவணைபடுத்துவதற்கும் முன்கூட்டியே வரிசையை நிர்ணயிப்பது அவசியம் என்றும் தெரிவித்துள்ளது.

    • வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது?.
    • அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது.

    இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டார். உலக நாடுகள் இடையே பேச்சுவார்த்தைகளை நடத்தவும், ஒத்துழைப்புகளைப் பெறவும் அதிகப்படியான வர்த்தக வரிகளை விதித்து வந்தார். இதனால் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்த பல்வேறு நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

    உலக நாடுகளின் மீது அமெரிக்காவின் சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டத்தின் (IEEPA) கீழ் வரிகளை விதிப்பதற்கு அதிபர் டிரம்புக்கு எந்த ஒரு அதிகாரமும் கிடையாது எனக்கூறிய அமெரிக்க உச்சநீதிமன்றம், அவர் விதித்துள்ள வரிகள் செல்லாது என உத்தரவிட்டுள்ளது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி, வர்த்தக ஒப்பந்தத்திற்கு அவசரம் காட்டியதாக காங்கிரஸ் கட்சியின் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    பிரதமர் மோடி தனது பலவீனமான பிம்பத்தைப் பாதுகாக்க விரக்தியை வெளிப்படுத்தாமல், இன்னும் 18 நாட்கள் மட்டுமே காத்திருந்திருந்தால் இந்திய விவசாயிகள் தங்கள் வேதனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள். மேலும் இந்திய இறையாண்மை பாதுகாக்கப்பட்டிருக்கும்.

    நேற்று அமெரிக்க உச்சநீதிமன்றம் தனது வரிக் கொள்கையை ரத்து செய்த பிறகு, ஜனாதிபதி டிரம்ப் (i) மோடி தனது சிறந்த நண்பர் (ii) இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டபடி தொடரும் (iii) இந்தியா பாகிஸ்தான் மீதான தாக்குதலை (ஆபரேசன் சிந்தூர்) நிறுத்தாவிட்டால் அமெரிக்காவிற்கு இந்திய ஏற்றுமதிகள் மீதான வரிகளை அதிகரிப்பதாக மிரட்டி மே 10, 2025 அன்று அவர் தனிப்பட்ட முறையில் ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தை நிறுத்தினேன் என அறிவித்துள்ளார்.

    பிப்ரவரி 2 ஆம்தேதி இரவு இந்தியா- அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தை டிரம்ப் அறிவிப்பதை உறுதி செய்ய பிரதமர் மோடியை கட்டாயப்படுத்தியது எது?. அன்று மதியம் மக்களவையில் என்ன நடந்தது. மோடி இவ்வளவு விரக்தியடைந்து, வெள்ளை மாளிகையில் உள்ள தனது நல்ல நண்பரை அணுகி ஒரு திசைதிருப்பலை உருவாக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கியது எது?. இந்தியா- அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உண்மையில் பிரதமரின் விரக்தி மற்றும் சரணடைதலால் இந்தியா சோதனைக்குள்ளாகியுள்ளது

    இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

    • ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.
    • வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழக மீனவர்கள் கடலுக்கு செல்லும்போது எல்லைதாண்டி வந்ததாக கூறி இலங்கை படையினர் அவர்களை சிறை பிடிப்பதும், பல நேரங்களில் தாக்கி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி வந்து மீன்பிடித்ததாக கூறி காரைக்காலை சேர்ந்த 25 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் நடந்த ஒரு நாள் இடைவெளியில் 18-ந்தேதி மன்னர் வளைகுடா, நெடுந்தீவு கடல் பகுதிகளில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம், மண்டபத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். ஒரே வாரத்தில் 47 தமிழக மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்ட சம்பவம் மீனவ மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இலங்கை சிறையில் உள்ள 104 தமிழக மீனவர்களையும் 200-க்கும் மேற்பட்ட விசைப்படைகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் மூலம் கோரிக்கை வைத்தார்.

    இந்த நிலையில் ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி இன்று ஒரு நாள் ராமேசுவரத்தில் மீனவர்கள் வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகு மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை. இதன் காரணமாக 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்தன. வேலைநிறுத்தம் காரணமாக மீனவர்கள், மீன்பிடி தொழிலை சார்ந்தவர்கள் என 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

    வழக்கமாக வார இறுதி நாட்களில் மீன் வியாபாரம் களை கட்டும் நிலையில் வேலைநிறுத்தம் காரணமாக இன்று ராமேசுவரம் துறைமுகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் ரூ.1 கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

    இதே கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை தங்கச்சி மடம் வலசை பஸ் நிறுத்தம் முன்பு மீனவர் சங்கங்களின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களின் குடும்பத்தினர் மற்றும் மீனவர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

    இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மீனவர்கள் கூறுகையில், இலங்கை கடற்படையின் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு முறையும் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலையில் கடலுக்கு சென்று வருகிறோம். இதற்கு நிரந்தர தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் உடல், மனநலம் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளால் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அவர்களின் உடல்நலம் மற்றும் குடும்பத்தினரின் நிலையை கருதி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றனர்.

    • விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற 2-ந்தேதி காலை 7 மணிக்கு நடக்கிறது.
    • 11-ம் திருவிழாவான 3-ந்தேதி இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசித்திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கொடியேற்றத்தை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வருபம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலை 5.09 மணிக்கு கொடியேற்றம் நடந்தது.

    திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள், கோவில் இணை ஆணையர் ராமு, உதவி ஆணையர் மெய்வேல், ஏரல் சேர்மன் அருணாசல சுவாமி கோவில் தக்கார் கருத்தபாண்டி நாடார், இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி. ஜெயக்குமார், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் அருணாசலம், திருச்செந்தூர் நகராட்சி துணை சேர்மன் செங்குழி ரமேஷ், திருச்செந்தூர் சைவ வேளாளர் ஐக்கிய சங்க முன்னாள் தலைவர் ஜெயந்தி நாதன், முன்னாள் செயலாளர் சந்தணராஜ், கவுன்சிலர் ரேவதி கோமதி நாயகம் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கொடி மரத்துக்கு பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் ஆகி தீபாராதனை நடைபெற்றது. காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 25-ந் தேதி இரவு 7.30 மணிக்கு மேல் குடைவரை வாயில் தீபாராதனை நடக்கிறது. 7-ம் திருவிழாவான 27-ந் தேதி கோவில் நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்படுகிறது. காலை 5 மணிக்கு உருகு சட்ட சேவை நடக்கிறது.

    காலை 9 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகம் தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    அன்று மாலை 4.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் சிவன் அம்சமாக சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

    8-ம் திருவிழாவான 28-ந்தேதி (சனிக்கிழமை) காலை 6 மணிக்கு பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

     

    காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் வருகிற (மார்ச்) 2-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 7 மணிக்கு நடக்கிறது.

    11-ம் திருவிழாவான 3-ந் தேதி(செவ்வாய்க் கிழமை) இரவு 10.30 மணிக்கு மேல் சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

    ×