என் மலர்
தலைப்புச்செய்திகள்
- எதிர்கால தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம்
- கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் முதலமைச்சர் முத்தமிழ்ப் பேரவையின் விருது மற்றும் இசை, நாட்டிய விழா இன்று (டிச., 15) நடைபெற்றது. இதில், விருது அறிவிக்கப்பட்ட கலைஞர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விருதுகள் வழங்கி கௌரவித்தார். தொடர்ந்து விழாவில் உரையாற்றிய அவர்,
"ஒவ்வொரு ஆண்டும் இந்த விழாவை தவறவிடாமல் தொடர்ந்து வருகிறேன். நடிகர் நாசர் கூறியதைபோல முதலமைச்சராக வருகிறேனோ இல்லையோ, முதல் ஆளாக அடுத்த ஆண்டும் வருவேன். விழாவின் இயக்குநர் அமிர்தம் அழைத்தால், நான் மறுக்கமுடியுமா?.
சிறுவயதில் இருந்து என் வளர்ச்சியை பார்த்தவர். என்னை வளர்த்தவர்களில் முக்கியமான ஒருவர் அமிர்தம். தொடங்கியதிலிருந்து இன்றுவரை நடந்துகொண்டிருக்கும் முத்தமிழ் பேரவையின் 51வது ஆண்டுவிழாவை நடத்திக் கொண்டிருக்கிறோம். கலைகளை, கலைஞர்களை மதித்த காரணத்தால், கருணாநிதி கலைஞராக விளங்கினார். அவர்பேரில் விருது வழங்கவேண்டுமென்று நான் வைத்த கோரிக்கையின் படி கடந்த ஆண்டு சத்யராஜ்க்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு நாசருக்கு கலைஞர் விருது வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். கருணாநிதியின் எழுத்தில் இளைஞன், பாசப்பறவை, பொன்னன் சங்கர் என பல படங்களில் நடித்தவர் நாசர். அவர் இன்று கலைஞர் விருதை பெறுவது மிக மிக பொருத்தம் என்பதை சுட்டிக் காட்டுகிறேன். அவருக்கு எல்லாம் தகுதியும் உள்ளது. விருது பெற்றிருக்கும் அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். பாராட்டுகிறேன்.

விழாவில்
முந்தைய ஆட்சிகாலத்தில் 10 ஆண்டுகளாக வழங்கப்படாமல் இருந்த திரைப்பட விருதுகளையும், சின்னத்திரை விருதுகளையும் நாம் ஆட்சிக்கு வந்தபின் 2022ஆம் தரப்பட்டது. அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தரப்பட்டு வருகிறது. அதுபோல தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன விருதுகளும் விரைவில் வழங்கப்பட இருக்கிறது.
வசனகர்த்தா ஆருர்தாஸ், கவிஞர் மு.மேத்தா, பாடகி பி.சுசிலா ஆகியோருக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்பட்டுள்ளது. டி.எம். சௌந்தராஜன் நூற்றாண்டு விழாவை கொண்டாடி உள்ளோம். எஸ்.பி.பி, விவேக், ஜெய்சங்கர் ஆகியோர் பெயரில் தெருக்களுக்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. இளையராஜாவிற்கு பாராட்டு விழா நடத்தியுள்ளோம். கலைமாமணி விருதுகள் தகுதியுள்ளவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எழுத்தாளர்கள், இலக்கியவாதிகளுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகம் திமுக ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் பட்டமளிப்பு விழா நடந்தது. நடிகர் சிவக்குமாருக்கு மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது. இவ்வாறு கலைஞர்களை போற்றக்கூடிய அரசாக திமுக உள்ளது. எதிர்கால தலைமுறையை பண்பாடு கொண்ட தலைமுறையாக வளர்க்க கலை, இலக்கியம், விளையாட்டு போன்ற துறைகள்தான் மிகமிக முக்கியம். கலைஞர்கள் தங்கள் பங்களிப்பை நாட்டு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும்" என தெரிவித்தார்.
- பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை
- பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம்
கேரள நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் 8 ஆண்டுகள் விசாரணைக்குப் பிறகு, 6 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டு, அவர்களுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கில் பிரபல நடிகர் திலீப் உட்பட 4 பேர் விடுவிக்கப்பட்டனர். இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தநிலையில், கேரள அரசு மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவித்திருந்தது.
இதனைத்தொடர்ந்து இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நடிகையும், நடிகை மஞ்சு வாரியரும் இதுதொடர்பாக கருத்து தெரிவித்திருந்தனர். "நீதிமன்றத்தின் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால், இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை. குற்றத்தைச் செய்தவர்கள் மட்டுமே தண்டிக்கப்பட்டுள்ளனர். இந்தக் கொடூரச் செயலைத் திட்டமிட்டு, அதற்கு வழிவகுத்த அந்த மாஸ்டர் மைண்ட் அது யாருடையதாக இருந்தாலும், இன்னும் சுதந்திரமாக நடமாடுகிறது, அதுவே மிகவும் அச்சமூட்டுகிறது." என மஞ்சு வாரியர் தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் மஞ்சு வாரியரின் பக்கமே தான் நிற்பதாக நடிகரும், இயக்குநருமான அமீர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பதிவிட்டிருந்த அவர்,"பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்பதே அறம். தீர்ப்புகள் எல்லாம் நீதி ஆகிவிடாது. மஞ்சு வாரியரின் பக்கமே நான் நிற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குட் பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மேலும், குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற இளமை இதோ, இதோ, ஒத்த ரூபா தாரேன், என் ஜோடி மஞ்சக்குருவி பாடல்களை நீக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும்," அனுமதியின்றி பாடல் பயன்படுத்துவதை தடுக்க, பாடலை உருமாற்றம் செய்வதை தடுக்க இளையராஜாவுக்கு உரிமை உண்டு.
இளையராஜா பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவில் தலையிட எந்த காரணமும் இல்லை" என்று நீதிபதி தெரிவித்தார்.
இடைக்கால தடையை ரத்து செய்யக்கோரிய மனு தள்ளுபடி செய்த நீதிமன்றம் பிரதான வழக்கின் விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தது.
இந்நிலையில்,'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
படத்திலிருந்து பாடல்கள் நீக்கப்பட்டதாகவும், இனி இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்த மாட்டோம் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் உறுதி அளித்ததால் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெறும்.
- எனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா பங்கேற்பார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பு மரியாதை நிமித்தமானது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:-
இதுவரையிலும் எந்த கட்சியோடும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.
சட்டமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து தற்போது வரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.
சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிடும் உத்தேச தொகுதிகளின் பட்டியலை அமித்ஷாவிடம் தரவில்லை.
தமிழ்நாட்டில் எத்தனை முனை போட்டிகள் வந்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணியே வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்.
எனது பிரச்சார பயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷா பங்கேற்பார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த 'மான் கராத்தே' படத்தை இயக்கிய திருக்குமரன் அடுத்ததாக அருண் விஜயின் 'ரெட்ட தல' படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக சித்தி இத்னானி நடித்துள்ளார். இவர் இதற்கு முன் சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாம். சி.எஸ் இசையமைத்துள்ளார். பிடிஜி யூனிவர்சல் என்ற நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
இப்படத்தில் அருண் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் வருகிற 25-ந்தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'ரெட்ட தல' படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் வெளியாகியுள்ளது.
- திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது.
- தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் பங்கேற்க வேண்டும்
நாதக பொதுக்கூட்டம் டிச.27ஆம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
"நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் வருகின்ற 27-12-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை திருவேற்காடு ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) அரங்கில் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. இப்பொதுக்குழுக் கூட்டத்திற்கான அழைப்பு கிடைக்கப்பெறும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழ் கடிதம் மற்றும் உறுப்பினர் அட்டையுடன் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ரங்கனை கைது செய்ய வேண்டும் என்றும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
- திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு
விருத்தாசலத்தில் நேற்று திமுக நிர்வாகி ரங்கநாதனை தாக்கிய விவகாரத்தில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்மீது 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மாநாடு ஒன்றில் கலந்துகொண்டு, வீடு திரும்பிய சீமானின் காரை திமுக நிர்வாகி ரங்கன் வழிமறித்து, அவரை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த சீமான் மற்றும் அவரது தொண்டர்கள் திமுக நிர்வாகி ரங்கனை சராமாரியாக தாக்கினர். தொடர்ந்து ரங்கனை கைது செய்ய வேண்டும் என்றும் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இன்று சீமான்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தனக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக ரங்கநாதன் அளித்த புகாரின்பேரில் விருத்தாசலம் காவல்நிலையத்தில் சீமான் மீது நான்கு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் அளித்த புகாரின்பேரில் திமுக பிரமுகர் ரங்கநாதன் மீதும் இரண்டு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்திய திரைப்படங்கள் பாடல்களால் தம்மை ஆக்கிக்கொண்டவை.
- இங்கு எப்படி சில்க் ஸ்மிதாவோ அதுபோல உலகளவில் மோனிகா பெலூச்சி.
காட்சிகளால் கட்டமைக்கப்படுபவையே படம். ஆனால் இதிலிருந்து சற்று வேறுபட்டது இந்திய திரைப்பாணி. இந்திய திரைப்படங்கள் பாடல்களால் தம்மை ஆக்கிக்கொண்டவை. அதிலும் தென்னிந்திய திரைப்படங்களில் கதைக்கு எவ்வளவு முக்கியத்துவமோ, அதேபோல் பாடல்களுக்கு. இப்போது ஒருசில படங்கள் பாடல்கள் இல்லாமல் எடுக்கப்படுகின்றன. ஆனால் அப்படங்கள் ஆச்சர்யமாக பார்க்கப்படுகின்றன. பாடல்கள் இல்லாமல் படமா? என்று. ஆனால் உலகெங்கிலும் உள்ள பல்வேறு திரையுலகம் நூற்றாண்டு காலமாக இந்தப் பாணியைத்தான் பின்பற்றுகிறது.
இங்கு திரைப்படத்திற்கு உயிரோட்டத்தை கொடுப்பது பின்னணி இசையும், பாடல்களாகவுமே உள்ளது. திரைப்படம் சரியான முறையில் எடுக்கப்படாமல் இருந்தாலும் கூட அதன் இசைக்காக படம் சில நாட்கள் ஓடி லாபத்தை ஈட்டிய நிகழ்வுகளும் அரங்கேறியிருக்கின்றன. ஒரு வலியை, உணர்வை இல்லை ஒட்டுமொத்த கதையையும் காட்சியிலேயே கொடுக்க முடியும்.
ஆனால் அதை இசையாக கொடுத்தால் எப்படி இருக்கும்? அதைத்தான் செய்தது தென்னிந்திய சினிமா. காட்சிக்கு ஏற்றவாறு அமையும் பாடல் வரிகளும், அவைகளுக்காக இசைக்கப்படும் இசையும்தான் படத்தை இன்னும் தனித்து காட்டும். அதனால்தான் இப்போதைய பாடல்களைவிட, 90ஸ், 80ஸ் காலத்தில் எடுக்கப்பட்ட படங்கள் தனித்து நிற்கின்றன. அவை பலருக்கு இப்போது துணையாக உள்ளன.

இளையராஜா, ஏ.ஆர். ரகுமான்
ஆனால் இந்த தோணி இப்போது முற்றிலுமாக மாறிவருகிறது. அதாவது ஒரு படம் வணிகரீதியாக வெற்றிப்பெற உணர்ச்சிகளை தாண்டி, கவர்ச்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகின்றன. கவர்ச்சி பாடல்கள் ஒரு விளம்பர நோக்கம் என அனைவரும் அறிவோம். ஆனால் எதற்கு தென்னிந்திய சினிமா இப்படி கீழ் இறங்கிறது என்று தெரியவில்லை? உச்ச நட்சத்திரங்களும் இந்த செயல்முறைக்கு துணை நிற்கின்றனர்.
இந்த வரிசையில் சமீபமாக வெளிவந்த முக்கியப் படம்தான் கூலி. கூலியின் வணிகரீதியாக வெற்றிக்காக வைக்கப்பட்ட ஒரு பாடல்தான் 'மோனிகா பெலூச்சி'. மோனிகா பெலூச்சி பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்க, 'நான் அடிச்ச மணி கடவுளுக்கு கேட்டுச்சோ இல்லையோ, கவர்மண்டுக்கு கேட்ருச்சி' எனும் வடிவேலு காமெடிபோல, கேட்கவேண்டிய மோனிகா பெலூச்சிக்கு கேட்டுச்சி. அவர்களே வியந்து இந்தப் பாடல் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். இதில் குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கிய விஷயம் என்னவென்றால், இதில் கூலி படம் புகழ்பெற்றதோ இல்லையோ, மோனிகா பெலூச்சி இந்திய ரசிகர்களிடையே அறிமுகம் ஆனார்.
அதாவது கூலி பாடலுக்கு முன்புவரை மோனிகா பெலூச்சியை அறியாதவர்கள் பலர். அவர்கள் அனைவரும் யாருடா அது என கூகுளில் தேட இணையம் முழுவதும் நிறைந்தார் மோனிகா பெலூச்சி. ஜூலையிலிருந்து ஆகஸ்ட் வரை இவர்தான் வைரல். மோனிகா பெலூச்சி சுனாமி உண்டாச்சு என்பதுபோல இரண்டுமாதம் மோனிகா அலைதான்.

மோனிகா பெலூச்சி
யார் மோனிகா பெலூச்சி?
மோனிகா. இந்த பெயருக்கு பல அர்த்தங்கள் உண்டு. அதில் ஒன்று ''தனித்துவம்''. பெயரைப் போலவே தனித்துவமான அழகி. அட்டகாசமான மாடல். இத்தாலி நடிகையான, இவர், ஹாலிவுட் மட்டுமல்லாமல், இங்கிலாந்து, பிரான்ஸ் மொழி படங்களிலும் நடித்தவர், The Raffle என்கிற இத்தாலி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதன் பின் Bram Stoker"s Dracule மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார். பல விருதுகளுக்கு சொந்தக்காரர். இவர் புகழ் பாடினால் நீளும். சுருக்கமாக சொன்னால் இங்கு எப்படி சில்க் ஸ்மிதாவோ அதுபோல உலகளவில் மோனிகா பெலூச்சி.
- பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி பயங்கரவாதிகள் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
புதுடெல்லி:
காலை நேரத்தில் அந்த அரசு கலை அறிவியல் கல்லூரி பரபரப்புடன் காணப்பட்டது. வகுப்புகள் ஆரம்பித்து புரொபசர்கள் பாடம் நடத்திக் கொண்டிருந்தனர்.
பி.ஏ. வரலாறு வகுப்பில் புரொபசர் சண்முகம் போர்கள் குறித்து மாணவர்களுக்கு நடத்திக் கொண்டிருந்தார். அந்தக் காலத்திய போர் முறைகள் குறித்து விளக்கினார்.
அப்போது திடீரென எழுந்த பாலாஜி என்ற மாணவன், சார் இப்போதுள்ள நவீன கருவிகள் அப்போது இருந்தால் நீண்ட நாட்களாக போர் நடந்திருக்காது அல்லவா என கேட்டான். அதற்கு, ஆமாம் என சிரித்தவாறே சண்முகம் கூறினார்.
உடனே பாலாஜி, இப்போதுகூட உலக அளவில் உக்ரைன் ரஷியா இடையிலான போர் 3 ஆண்டைக் கடந்தும் நடந்து கொண்டு இருக்கிறதே என கேட்டான்.
அது ஆயுத விற்பனை அரசியல் எனக்கூறிய புரொபசர், இந்தியா பாகிஸ்தான் போர்கள் குறித்து பாடம் எடுத்தார்.
பாலாஜி உடனே எழுந்து, ஆமாம் சார் இந்தியா கூட ஆபரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையை எடுத்ததே, உலக நாடுகளும் நமக்கு பாராட்டு தெரிவித்ததே என நினைவு கூர்ந்தான்.
ஆமாம், நீ கூறியது சரிதான் என்ற சண்முகம், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை ஏன் நடந்தது என்பது குறித்து அளித்த விளக்கம் வருமாறு:
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி சுற்றுலா பயணிகளைக் குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் தாக்குதலில் வெளிநாட்டவர் உள்பட 26 பேர் உயிரிழந்தனர்.
இத்தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7-ம் தேதி இந்தியா அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டது.

இந்த நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் ஊடுருவி லஷ்கர்-இ-தொய்பா உள்ளிட்ட பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. மேலும், 100-க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
ஆபரேஷன் சிந்தூரின்போது இந்திய விமானப்படை 5 பாகிஸ்தான் போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியது. இவற்றில் F-16 மற்றும் JF-17 போன்ற நவீன விமானங்களும் அடங்கும்.
இதையடுத்து, இரு நாடுகளின் ராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சந்தித்துப் பேசினர். இதனால் மே 10-ம் தேதி இந்த மோதல் முடிவுக்கு வந்தது.
பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி இந்து பெண்கள் பலர் தங்கள் கணவனை இழந்தனர். சிந்தூர் என்றால் பொட்டுஅல்லது திலகம் என்று பொருள். பயங்கரவாத தாக்குதலில் கணவனை இழந்த இந்து பெண்கள் தங்கள் பொட்டினை இழந்ததால் அவர்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயர் வைக்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானில் இந்திய ராணுவம் நடத்திய ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்து உலக நாடுகளுக்கு விளக்கம் அளிக்க எம்.பி.க்கள் அடங்கிய 7 குழுக்கள் மத்திய அரசின் சார்பில் அமைக்கப்பட்டன.

அந்தக் குழுக்கள் பல்வேறு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்குள்ள அமைச்சர்கள், எம்.பி.க்கள், வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்கம் அளித்தது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பாராளுமன்றத்தின் மக்களவையில் ஜூலை 28-ம் தேதியிலும், மாநிலங்களவையில் ஜூலை 29-ம் தேதியிலும் விவாதம் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது என சொல்லி முடித்தார்.
புரொபசரின் விளக்கத்தைக் கேட்ட சண்முகம், வம்பு சண்டைக்குப் போகக்க் கூடாது, வந்த சண்டையை விடக் கூடாது என்பது இதுதானே சார் என கேட்டபடியே, பாடங்களுக்கான குறிப்புகளை எடுக்கத் தொடங்கினான்.
- வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!
- 100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!
100 நாள் வேலை திட்டத்திற்கான பெயர் மாற்றத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
மகாத்மா காந்தி 100 நாள் வேலை உறுதித் திட்டத்தைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசு!
தேசத்தந்தை காந்தியடிகளின் மீதுள்ள வன்மத்தால் அவர் பெயரைத் தூக்கிவிட்டு, வாயில் நுழையாத வடமொழிப் பெயரைத் திணித்திருக்கிறார்கள்!
100% ஒன்றிய அரசின் நிதியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டத்துக்கு இனி 60% மட்டுமே நிதி ஒதுக்குவார்களாம்!
இவை அனைத்துக்கும் மேலாக, நாட்டிலேயே வறுமையை முழுமையாக ஒழித்துச் சாதனை படைத்துள்ளதற்காகவே நம் தமிழ்நாடு தண்டிக்கப்படவுள்ளது! வறுமை இல்லாத மாநிலம் என்பதற்காக, இருப்பதிலேயே குறைவாகத்தான் இத்திட்டத்தின் பயன்கள் தமிழ்நாட்டு மக்களுக்குக் கிடைக்குமாம்!
பல கோடிப் பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்டு, மாண்புடன் வாழ வழிவகுத்த ஒரு திட்டத்தை ஆணவத்துடன் அழிக்கப் பார்க்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
#ThreeFarmLaws, #CasteCensus போன்றவற்றில் எப்படி பின்வாங்கினீர்களோ, அதேபோல #MGNREGA-வைச் சிதைக்கும் முயற்சியிலும் மக்கள் உங்களை நிச்சயம் பின்வாங்க வைப்பார்கள்! எனவே, மக்களின் சீற்றத்துக்கு ஆளாகாமல் இப்போதே #VBGRAMG திட்டத்தைக் கைவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது
- அமலாக்கத்துறை சார்பில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் சிலவற்றை பறிமுதல் செய்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது.
இதனையடுத்து உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவில் திருத்தம் கோரி உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனுதாக்கல் செய்தது. இதில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட முடியாது என்று கூறி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திருப்பி அளிக்க அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
இதனிடையே அமலாக்கத்துறை சார்பில் ஆகாஷ் பாஸ்கரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதனைத்தொடர்ந்து உயர் நீதிமன்ற தீர்ப்பை அவமதித்ததாக கூறி, ஆகாஷ் பாஸ்கரன் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தநிலையில் கடந்த 8ஆம் தேதி, அமலாக்கத்துறை உதவி இயக்குநர் விகாஷ்குமார் ஆஜராகதது குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை தரப்பு வழக்கறிஞர், ஆஜராவதில் இருந்து விலக்கு உள்ளதாக கூறினார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், இருவரும் நேரில் ஆஜராகி தங்கள் விளக்கத்தை அளிக்கவேண்டும் எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் நேரில் ஆஜரான அமலாக்கத்துறை உதவி இயக்குநர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார். இதனையடுத்து இந்த அவமதிப்பு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
- இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது
- இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.
திரையரங்குகளில் வசூல் எவ்வளவு, எத்தனை நாட்கள் ஓடியது என்ற கணக்குகளை விட, இந்த வருடம் மக்களின் curiosity எங்கே இருந்தது என்பதை கூகுள் நமக்கு எடுத்து காட்டுகிறது
"இந்த படம் என்ன?", "யார் நடித்திருக்காங்க?", "கதை உண்மையா?" – இப்படிப் பல கேள்விகளோடே இந்தியர்கள் அதிகம் தேடிய படங்கள் தான் 2025-ன் உண்மையான ட்ரெண்ட் படங்கள்.
2025 REWIND-ல், கலெக்சனை ஒதுக்கி விட்டு, கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய படங்கள் எவை?
ஹிட்–ஃப்ளாப் எல்லையை தாண்டி மக்கள் மனசை கலக்கிய படங்கள் யாவை? இந்த லிஸ்ட், சினிமாவின் இன்னொரு பக்கமான Search Engine சொன்ன மக்கள் தீர்ப்பை வெளிப்படுத்துகிறது. அவ்வகையில் இந்த ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் காணலாம்

1. சயாரா
அஹான் பாண்டே மற்றும் அனீத் பத்தா நடிப்பில் உருவான காதல் படம் சயாரா. குறைந்த பட்ஜெட்டில் உருவான இப்படம் இப்படம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி ரூ.500 கோடி வசூலை கடந்தது. வெறும் 50 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் ரூ.550 கோடிக்கும் மேல் வசூலித்து அனைவரையும் வாய்பிளக்க வைத்தது. அறிமுக நடிகர்கள் நடிப்பில் வெளியான ஒரு படம் இவ்வளவு வசூலை குவிப்பது இதுவே முதல்முறையாகும்.
இளைஞர்கள் பெரும் ஆதரவை பெற்ற இப்படம் கூகுள் Search-லும் முதல் இடத்தை பிடித்துள்ளது.

2. காந்தாரா - சாப்டர் 1
காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா சாப்டர் 1' திரைப்படம் காந்தி ஜெயந்தியை தினத்தன்று வெளியாகியது. 2022 ஆம் ஆண்டு வெளியான 'காந்தாரா' படத்தின் முன்கதையாக 4 ஆம் நூற்றாண்டில் நடக்கும் கதையாக இந்த படம் அமைந்தது.
இப்படம் உலகளவில் ரூ. 852 கோடி வசூலித்து புதிய சாதனை படைத்தது. சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததால் இணையத்திலும் இப்படம் பேசுபொருளாகி இந்த பட்டியலில் 2 ஆம் இடம் பிடித்துள்ளது.

3. கூலி
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான கூலி படம் இந்தாண்டில் அதிக எதிர்பார்ப்போடு வெளியான படமாகும்.
அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சவுபின் ஷாஹிர், ஸ்ருதிஹாசன், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் முதல் 4 நாட்களில் உலகளவின் மொத்தம் ரூ.404 கோடிகளுக்கு மேல் வசூல் குவித்தது. தமிழ் சினிமாவில் ரூ.1000 கோடி வசூலை குவித்த முதல் படம் என்ற சாதனையை கூலி படைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், எதிர்மறை விமர்சனங்களால் இப்படத்தின் வசூல் வெகுவாக குறைந்தது. மொத்தத்தில் இப்படம் உலக அளவில் 518 கோடி ரூபாய் தான் வசூல் செய்தது. எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்திருந்தால் இந்த பட்டியலில் முதல் இடத்தை கூட இப்படம் பெற்றிருக்க வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

4. வார் 2
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான வார் 2 திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால் மக்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை.
ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இணைந்து நடித்தது மற்றும் கியாரா அத்வானியின் பிகினி காட்சிகள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்த நிலையில், அந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யவில்லை. திரையரங்குகளில் இப்படம் மீதான வரவேற்பு குறைந்தாலும் இணையத்தில் இப்படம் பெரும் பேசுபொருளாகி இப்பட்டியலில் 4 ஆம் இடத்தை பிடித்துள்ளது.

5. சனம் தேரி கசம்
சனம் தேரி கசம் இந்தாண்டு வெளியான படம் கிடையாது. 2016 ஆம் ஆண்டு வெளியான படம். அப்படியிருக்க இந்த படம் பட்டியலில் இடம்பெற காரணம் ரீரிலீஸ் தான்.
2016-ம் ஆண்டு ரூ.15 கோடி பட்ஜெட்டில் உருவான சனம் தேரி கசம் படம் ரூ.7 கோடி வசூலை ஈட்டி தோல்வி அடைந்தது. விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற இப்படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 7-ம் தேதி இந்தப் படம் தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. காதல் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுது. இந்தப் படம் ரூ.50 கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது.
தற்போது ரீரிலீஸ் கலாச்சாரம் இந்தியா முழுவதும் வைரஸ் போல பரவியுள்ளது. அதன் காரணமாக இப்படம் இந்த பட்டியலில் 5 ஆம் இடம் பிடித்துள்ளது.

6. மார்கோ
மலையாள நடிகரான உன்னி முகுந்தன் நடிப்பில் ஹனீஃப் அதேனி இயக்கத்தில் மார்கோ திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்திய சினிமாவில் இப்படி ஒரு ஆக்ஷன் திரைப்படம் வரவில்லை என மக்கள் படத்தை பாராட்டி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.
இந்தி மொழியில் அதிக வசூலித்த மலையாள திரைப்படம் என்ற சாதனையை படைத்த இப்படம் மொத்தமாக 100 கோடி வசூலை கடந்தது. இந்தி பேசும் மக்களிடையே பெட்ரா வரவேற்பால் இந்த பட்டியலில் இப்படம் 6 ஆம் இடம் பிடித்துள்ளது.

7. ஹவுஸ்புல் 5
அக்ஷய் குமார், அபிஷேக் பச்சன், அர்ஜூன் ராம்பால் மற்றும் தர்மேந்திரா என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள ஹவுஸ்புல் 5 படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது
ஹவுஸ்புல் 4 பாகங்கள் பெற்ற வெற்றியால் ஹவுஸ்புல் 5 படத்தின் மீது நிறைய எதிர்பார்ப்பு எழுந்தது. இந்த எதிர்பார்ப்பினால் தான் இப்படம் இந்த பட்டியலில் 7 அம இடம் பிடித்துள்ளது.
8. கேம் சேஞ்சர்
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் சரண் கதாநாயகான நடித்து வெளியான திரைப்படம் 'கேம் சேஞ்சர்'. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கியாரா அத்வானி, அஞ்சலி, ஸ்ரீகாந்த், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக தோல்வியடைந்தது.
இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு காரணமாக இந்த பட்டியலில் இப்படம் 8 ஆம் பிடித்துள்ளது.

9. மிசஸ்
Mrs' என்பது 2025-ல் அதிகம் பேசப்பட்ட இந்திய படங்களில் ஒன்று. மலையாளத்தில் வெளியான The Great Indian Kitchen படத்தின் ஹிந்தி ரீமேக் ஆன இந்த படம், திருமணத்துக்குப் பிறகு ஒரு பெண் சந்திக்கும் அதிகாரம், அடக்குமுறை மற்றும் அடையாள இழப்பு போன்ற பிரச்சினைகளை நுணுக்கமாக பேசுகிறது.
இப்படத்தில் நாயகியாக நடித்துள்ள சன்யா மல்ஹோத்ரா, பாரம்பரிய குடும்ப அமைப்பில் சிக்கிக் கொள்ளும் ஒரு பெண்ணின் மனஅழுத்தத்தையும், அவளின் மௌன எதிர்ப்பையும் மிக யதார்த்தமாக வழிபடுத்தியுள்ளார்.
பெரிய ட்விஸ்ட், அதிக வசனங்கள் இல்லாமல், அன்றாட வாழ்க்கையின் சின்னச் சின்ன விஷயங்களின் மூலம் சமூக உண்மைகளை சொல்வதே 'Mrs' படத்தின் பலம். பெண்களின் உழைப்பு, சமத்துவம், திருமண வாழ்க்கையில் உள்ள மறைமுக வன்முறை போன்ற விஷயங்களை நேர்மையாக பேசும் இந்த படம், வசூலை விட விவாதத்திலும், தேடலிலும் அதிக கவனம் பெற்றது.

10. மகாவதார் நரசிம்மா
அஷ்வின் குமார் இயக்கத்தில் அனிமேஷன் திரைப்படமாக வெளியான மகாவதார் நரசிம்மா மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதானின் கதையாகும்.
வெறும் ரூ.15 கோடி பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.300 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதன்மூலம் இந்தியாவில் தயாரிக்கப்பட்டு அதிக வசூல் செய்த அனிமேஷன் திரைப்படம் என்ற சாதனையையும் இப்படம் படைத்தது.
வட இந்தியாவில் இப்படம் பெற்ற பெரிய வெற்றியால் இந்த பட்டியலில் இப்படம் 10 ஆம் இடம் பிடித்துள்ளது.






