என் மலர்
தலைப்புச்செய்திகள்
- தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது.
- ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,980-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
08-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
06-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-02-2025- ஒரு கிராம் ரூ.107
08-02-2025- ஒரு கிராம் ரூ.107
07-02-2025- ஒரு கிராம் ரூ.107
06-02-2025- ஒரு கிராம் ரூ.107
05-02-2025- ஒரு கிராம் ரூ.107
- இன்றைய முக்கியச் செய்திகள்.
- இன்றைய அரசியல், சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்..
- அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா.
- 2011-ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார்.
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஆனால் இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமி- செங்கோட்டையன் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி நிகழ்ச்சியில் பங்கேற்காதது ஏன்? என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அத்திக்கடவு- அவினாசி திட்டத்தில் விழாவை ஏற்பாடு செய்த குழுவினர் 3 நாட்களுக்கு முன்னர் என்னை சந்தித்தனர். அத்திக்கடவு-அவிநாசி திட்டத்திற்கு நிதி வழங்கியவர் ஜெயலலிதா. 2011-ல் ஜெயலலிதா ரூ.3.72 கோடி நிதி அளித்தார். திட்டப் பணிகளை தொடங்க அடித்தளமாக இருந்த தலைவர்களின் படங்கள் மேடையில் இல்லை. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இல்லாததால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு தெரிவிக்கும் விழாவை நான் புறக்கணிக்கவில்லை. விழாவிற்கு செல்லவில்லை என்று கூறினார்.
- மனதை தொடும் வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டது.
- வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய கால கட்டத்தில் பாசம், அன்பு என்பது வெறும் சொல்லாகவே உள்ளதாக பெரும்பாலானோர் உணர்கின்றனர். ஒருவர் காட்டும் பாசத்தை புறந்தள்ளும் சம்பவங்களே இன்றைய சமூகத்தில் அதிகமாக நடைபெறுவதாக பலர் வேதனையில் உள்ளனர். ஆறறிவு மனிதர்கள் தான் இப்படி... ஐந்தறிவு உள்ள விலங்குகள் அப்படி இல்லை என்று சமூக வலைத்தளங்களில் வெளியாகும் பல வீடியோக்கள் உணர்த்தியுள்ளன. அப்படி தற்போது பகிரப்படும் வீடியோ தான் பார்ப்பவர்களை உணர்ச்சியில் கண்ணீர் சிந்த வைத்துள்ளது.
27 வினாடிகளே ஓடும் வீடியோவில் யானை ஒன்று மருத்துவமனை வாசலில் நிற்கிறது. பிறகு, அறையின் உயரம் குறைவாக உள்ளதை உணர்ந்த யானையானது மெதுவாக குனிந்து அடிமேல் அடி வைத்து ஊர்ந்து தன்னை வளர்த்த முதியவரிடம் சென்று அதன் தும்பிக்கையை நீட்டி அவர் மீது போர்த்தியிருக்கும் துணியை விலக்குகிறது. அதன்பின் அங்கு இருக்கும் பெண் ஒருவர் யானையின் தும்பிக்கையை தூக்கி முதியவரின் கையோடு இணைக்கிறார்.
இச்சம்பவத்தை அங்கிருந்தவர்கள் படம் பிடித்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த மனதை தொடும் வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரத்திலேயே 60 லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் லைக் செய்யப்பட்டது. மேலும் பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
ஒரு பயனர் 'இது அன்பின் தூய்மையான வடிவம்... விலங்குகள் தங்களைப் பராமரித்தவர்களை ஒருபோதும் மறக்காது' என்றும் மற்றொருவர் "காதலுக்கு எல்லைகள் இல்லை என்பதற்கு இந்த வீடியோ சான்றாகும். இதுதான் மிகவும் அழகான, மனதைத் தொடும் காட்சி" என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
- இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- 99 போட்டிகளில் 300-க்கும் அதிக ரன்களை அடித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகள் முடிவில் இந்திய அணி இரண்டிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் மோதிய இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 304 ரன்களை குவித்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 44.3 ஓவர்களில் 6 விக்கெட் இழந்து 308 ரன்களை குவித்து நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் 300 ரன்களுக்கும் மேல் அடித்த போதிலும், இங்கிலாந்து அணி தோல்வியை தழுவியது.
இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்களுக்கும் மேல் அடித்தும் அதிக தோல்வியை தழுவிய அணி என்ற மோசமான சாதனையை இங்கிலாந்து அணி படைத்துள்ளது. இதுவரை 99 போட்டிகளில் 300-க்கும் அதிக ரன்களை அடித்துள்ள இங்கிலாந்து அணி இவற்றில் 28 போட்டிகளில் தோல்வியை தழுவியுள்ளது.
இந்தப் பட்டியலில் இந்திய அணி 136 போட்டிகளில் 300-க்கும் அதிக ரன்களை அடித்துள்ளது. இதில் 27 போட்டிகளில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது.
- தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடக்கிறது.
- நாளை தைப்பூச நாளன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.
பழனி:
அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது. விழாவையொட்டி தந்த பல்லக்கு, இரவில் தங்க மயில், வெள்ளி காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது.
இதனை தொடர்ந்து தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் பாதயாத்திரையாக பழனி நோக்கி வந்த வண்ணம் உள்ளனர்.
தைப்பூச திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று இரவு 7 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் நடக்கிறது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு சாமி மணக்கோலத்தில் வெள்ளிரத புறப்பாடும் நடைபெறுகிறது. பின்னர் நாளை தைப்பூச நாளன்று அதிகாலை சண்முகநதியில் தீர்த்தவாரியும், மாலை 4.30 மணிக்கு தேரோட்டமும் நடைபெறுகிறது.
இந்த நிலையில், பழனி மலைக்கோவிலில் இன்று முதல் வருகிற 12-ந்தேதி வரை சாமி தரிசனத்திற்கான கட்டணம் ரத்து செய்யப்படுகிறது. அதனால், அனைத்து வரிசைகளிலும் கட்டணமின்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
- 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
- கைதானவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்று எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்களை 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மேலும் 2 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட மீனவர்களை இரணை தீவு கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று பின்னர் யாழ்ப்பாணம் மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
- பரினிதா உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
- நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்த 23 வயது இளம்பெண் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலங்களில் மாரடைப்பால் உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ம.பி. மாநிலத்தின் இந்தூரை சேர்ந்த பரினிதா ஜெயின் என்ற 23 வயது இளம்பெண் ரிசார்ட் ஒன்றில் நடைபெற்ற தன் உறவினர் சகோதரியின் திருமண விழாவுக்கு சென்றார். அங்கு இசைக்கப்பட்ட பாலிவுட் பாலட்களுக்கு பரினிதா உற்சாகமாக நடனமாடிக் கொண்டிருந்தார்.
200க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்ட 'ஹல்தி' விழாவின் போது பரினிதா மேடையில் நடனமாடியதை காட்டும் வீடியோ சமூக வலைதளகங்களில் அதிகம் பகிரப்படுகிறது. உற்சாகமாக நடனம் ஆடிக் கொண்டிருந்தவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார்.
இதையடுத்து மேடையில் சலசலப்பு ஏற்பட்டது. உடனே விழாவில் கலந்து கொண்ட மருத்துவர்களான குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு CPR செய்ய முயன்றனர். எனினும், அவர் சுயநினைவுக்கு வரவில்லை.
இதன்பிறகு உடனடியாக அவர் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். எம்.பி.ஏ. பட்டதாரியான பரினிதா, இந்தூரின் தெற்கு துகோகஞ்சில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். முன்னதாக பரினிதாவின் தம்பிகளில் ஒருவரும் 12 வயதில் மாரடைப்பால் இறந்தார்.
- இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, பழைய கட்டிடத்தை இடித்துள்ளனர்.
- இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் சொந்த மாவட்டத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில், சுவர் இல்லை, கூரை இல்லை, போதிய ஆசிரியர்களும் இல்லை, வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் கல்வி. இது தான் தமிழகத்தின் பள்ளிக் கல்வித் துறையின் லட்சணம்.
திருச்சி மாவட்டம், பச்சை மலையில் உள்ள ராமநாதபுரம் என்ற கிராமத்தில் உள்ளது இந்த பள்ளி. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப் போவதாகக் கூறி, பழைய கட்டிடத்தை இடித்துள்ளனர். ஆனால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
மகனின் ரசிகர்மன்ற தலைவருக்கு பதவி கொடுத்தே ஆகவேண்டும் என்ற கட்டாயம் இருந்திருந்தால், சினிமாத் துறை என்ற புதிய துறையை உருவாக்கி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களை அமைச்சர் ஆக்கியிருக்க வேண்டியது தானே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களே. என் ஏரியா, உன் ஏரியா என்று திரைப்பட பாணியில் வசனங்கள் பேசுவது ஒன்றே அமைச்சரின் தகுதி என்று நினைத்துக் கொண்டிருப்பவருக்குப் பொருத்தமாக இருந்திருக்கும்.
பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி 44,042 கோடி ரூபாய். எங்கே செல்கிறது இந்த நிதி? அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்தல் உட்பட பல்வேறு பணிகளுக்காக 2021 தொடங்கி 2024 ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்ட சமக்ர சிக்ஷா திட்ட நிதி ரூ.5,583 கோடி எங்கே போனது?
வாங்கிய நிதியை முறையாகப் பயன்படுத்தாமல், மத்திய அரசு வஞ்சிக்கிறது என்று பொய் கூறக் கூச்சமாக இல்லையா? என தெரிவித்துள்ளார்.
- ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
- இவை என்னை சிரிக்க செய்தன.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலி வீடியோக்களை உருவாக்கி வருகிறார். மேலும் அவற்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அவ்வாறு அவர் உருவாக்கிய போலி வீடியோ ஒன்றில் 1980-க்களில் பிரபலமாக "வோயேஜ் வோயேஜ்" பாடலுக்கு அவரே நடனமாடும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த வீடியோவை உருவாக்கியவர்களை பாராட்டிய மேக்ரான் "வீடியோக்கள் அருமையாக உருவாக்கப்பட்டு இருக்கின்றன. இவை மிக அழகாக உள்ளன. இவை என்னை சிரிக்க செய்தன," என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஏ.ஐ. உச்சிமாநாட்டை ஊக்குவிக்கும் வகையில், மேக்ரான் இந்த வீடியோக்களை உருவாக்கி இருக்கிறார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி உள்பட பல்வேறு உலக தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டிற்கு இந்தியாவும் இணைந்து தலைமை தாங்குகிறது.
இது தொடர்பாக அதிபர் மேக்ரானின் இன்ஸ்டாகிராம் பதிவு அதிக பார்வையாளர்களை பெற்றதோடு, அதிகளவு பகிரப்பட்டும் வருகிறது. எனினும், சிலர் அதிபர் மேக்ரானின் சமூக வலைதள கணக்கு ஹேக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று நினைத்தனர்.
- இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம்.
- சிவன் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-28 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: திரயோதசி இரவு 8.08 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 7.12 மணி வரை பிறகு பூசம்
யோகம்: அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று பிரதோஷம். சுபமுகூர்த்த தினம். சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருமெய்யம் ஸ்ரீ ஆண்டாள் கவுரித் திருமஞ்சனம், தண்டியலில் சேவை. மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் தங்கப் பல்லக்கில் நாட்கதிரறுப்பு விழா. கோவை ஸ்ரீ பால தண்டாயுதபாணி திருக்கல்யாணம். ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதிக்கு பால் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் திருமஞ்சன சேவை. கோவில்பட்டி ஸ்ரீ பூவண்ணநாதர் புறப்பாடு.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஜெயம்
ரிஷபம்-மகிழ்ச்சி
மிதுனம்-சுபம்
கடகம்-நட்பு
சிம்மம்-உயர்வு
கன்னி-புகழ்
துலாம்- உவகை
விருச்சிகம்-போட்டி
தனுசு- ஆதரவு
மகரம்-பொறுமை
கும்பம்-பொறுப்பு
மீனம்-கடமை
- தமிழாக்கத்தை பேரவை தலைவர் அப்பாவு வாசித்தார்.
- தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூடுகிறது. தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த மாதம் 6-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. கடந்த ஆண்டை போன்றே இந்தமுறையும் உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார். ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை பேரவைத் தலைவர் அப்பாவு வாசித்தார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜனவரி 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை நடைபெற்றது. அந்த விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 11-ம் தேதி பதில் அளித்தார். மொத்தம் 6 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து தேதி குறிப்பிடாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், தமிழக அரசின் அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு தொடங்கும் கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். இந்தக் கூட்டத்தில் துணை முதலமைச்சர், அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.
2025-26-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பேரவையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.






