என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இலங்கையில் துணை மின்நிலையம் ஒன்றில் குரங்கு ஒன்று நுழைந்தது.
    • இதையடுத்து நேற்று நாடுதழுவிய மின்தடை ஏற்பட்டது என்றனர் அதிகாரிகள்.

    கொழும்பு:

    இலங்கையில் துணை மின்நிலையம் ஒன்றில் குரங்கு ஒன்று நுழைந்ததை அடுத்து நேற்று நாடு தழுவிய மின்தடை ஏற்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    உள்ளூர் நேரப்படி முற்பகல் 11.30 மணியளவில் தொடங்கிய மின்தடை 3 மணி நேரத்துக்குப் பின்னரும் சீராகவில்லை.

    இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய எரிசக்தித்துறை மந்திரி, கொழும்பு புறநகர் பகுதியான பானாந்துறை மின்நிலையத்தில் ஏற்பட்ட மின் அழுத்த பிரச்சனையால் நாடுமுழுதும் மின் தடை ஏற்பட்டது. மின்சார தடைக்கு பானாந்துறை மின்நிலையத்தில் புகுந்து குரங்கு செய்த சேட்டையே காரணம். சில பகுதிகளில் மின்சார விநியோகம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால் பல இடங்களில் மின்தடை நீடித்தது. விரைவில் மின்விநியோகம் சீராகும் என தெரிவித்தார்.

    குரங்கு செய்த சேட்டையால் இலங்கையில் மின்தடை ஏற்பட்டது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மாநிலத்தில் நடந்த கலவரத்தில் முதல் மந்திரிக்கு தொடர்புள்ளதாக சர்ச்சை எழுந்தது.
    • இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.

    புதுடெல்லி:

    மணிப்பூரில் முதல் மந்திரி பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.

    மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பா.ஜ.க. முதல் மந்திரி பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.

    இதற்கிடையே, மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய்குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கினார்.

    இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பெருகி வரும் மக்கள் அழுத்தம், சுப்ரீம் கோர்ட் விசாரணை மற்றும் காங்கிரசின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஆகியவற்றால் முதல் மந்திரி பைரன் சிங்கின் ராஜினாமா செய்துள்ளார் என பதிவிட்டுள்ளார்.

    • சுப்ரீம் கோர்ட் உத்தரவின்பேரில் சி.பி.ஐ. 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது.
    • திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தியது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்தில் கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டுகளில் விலங்குகள் கொழுப்பு கலந்த நெய்யில் தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், திருப்பதி லட்டு கலப்பட விவகாரத்தில் புதிய சுதந்திரமான சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க உத்தரவிட்டது

    அதன்படி, சி.பி.ஐ. கடந்த ஆண்டு அக்டோபரில் 5 பேர் கொண்ட சிறப்பு குழுவை அமைத்தது. இந்தக் குழு தனது விசாரணையை நடத்தி வந்தது.

    இந்நிலையில், திருப்பதி லட்டு கலப்படம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருப்பதி தேவஸ்தானத்துக்கு கலப்பட நெய் வழங்கிய தனியார் பால் நிறுவனங்களில் தொடர்புடைய விபின் ஜெயின், பொமில் ஜெயின்,

    அபூர்வ சால்டா மற்றும் ராஜசேகரன் ஆகிய 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்றது.
    • ஆண்கள் இரட்டையர் பிரிவில் இத்தாலி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்றது.

    இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிச்சுற்றில் இத்தாலியின் சிமோனே பொலேலி, ஆன்ட்ரியா வவசோரி ஜோடி,

    போலந்தின் ஜேன் ஜைன்ஸ்கி, பெல்ஜியத்தின் சாண்டர் கில்லி ஜோடி உடன் மோதியது.

    இதில் முதல் செட்டை 6-2 என வென்ற இத்தாலி ஜோடி இரண்டாவது செட்டை 4-6 என இழந்தது.

    வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை இத்தாலி ஜொடி 10-6 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றது.

    • போர்நிறுத்தம் அடிப்படையில் ஹமாஸ் போராளிகள் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர்.
    • இஸ்ரேல் ராணுவமும் தங்கள் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது.

    டெல் அவிவ்:

    இஸ்ரேல் மற்றும் காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையிலான போர் 15 மாதத்துக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு இஸ்ரேலுக்குள் புகுந்து ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி 250-க்கும் மேற்பட்டோரை பிணைக்கைதிகளாகப் பிடித்துச்சென்றனர்.

    அதன்பின், தற்காலிக போர் நிறுத்தத்தின்போது 120-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் அமைப்பினரிடம் இன்னும் 94 பிணைக்கைதிகள் உள்ளனர். 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

    போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஹமாஸ் போராளிகள் பிணைக்கைதிகளை விடுவித்து வருகின்றனர். இஸ்ரேல் ராணுவமும் தங்கள் சிறைகளில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவித்து வருகிறது.

    இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியபோது வடக்கு காசாவில் இருந்த பாலஸ்தீனர்கள் தெற்கு காசாவிற்கு இடம்பெயர்ந்தனர். அவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கு இஸ்ரேல் ராணுவம் அனுமதித்தது. அதன்படி ஏராளமான பாலஸ்தீனர்கள் வடக்கு காசாவுக்கு திரும்பி வருகின்றனர்.

    இந்நிலையில், வடக்கு காசாவையும் தெற்கு காசாவையும் இணைக்கும் நெட்சரிம் பகுதியில் இருந்து படைகள் வாபஸ் பெறப்பட்டது என இஸ்ரேல் ராணுவ அதிகாரி தெரிவித்தார்.

    • விமான கண்காட்சி தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.
    • இன்று தொடங்கி வரும் 14-ம் தேதி வரை என 5 நாட்கள் இந்த விமான கண்காட்சி நடக்கிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது.

    இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படை தளத்தில் நடைபெற இருக்கிறது. 10-ம் தேதி தொடங்கும் விமான கண்காட்சி 14-ம் தேதி வரை என 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெற உள்ளது.

    விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.

    இந்நிலையில், சர்வதேச விமான கண்காட்சியானது இன்று முதல் தொடங்க உள்ளது. விமான கண்காட்சியைக் காண பலரும் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ஜோ ரூட் 69 ரன்கள் அடித்தார்.
    • அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    கட்டாக்:

    இந்தியா, இங்கிலாந்து இடையிலான 2-வது ஒருநாள் போட்டி கட்டாக் மைதானத்தில் நடைபெற்றது.

    டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.5 ஓவரில் 304 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்னும், பென் டக்கெட் 65 ரன்னும் அடித்தனர். இந்தியா சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்த ஆட்டத்தில் ஜோ ரூட் அடித்த அரைசதம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது 56-வது அரை சதமாகப் பதிவானது.

    இதன்மூலம் இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் ஒருநாள் போட்டிகளில் அதிக அரை சதங்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்தார்.

    இயன் மோர்கன் 55 அரை சதம் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அவரை முந்தி ஜோ ரூட் சாதனை படைத்துள்ளார்.

    அதிகபட்ச அரை சதம் கடந்தோர் பட்டியல்:

    ஜோ ரூட் - 56, இயன் மோர்கன் - 55, ஐயன் பெல் - 39, பட்லர் - 38, கெவின் பீட்டர்சன் - 34

    • அயர்லாந்து 2வது இன்னிங்சில் 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய ஜிம்பாப்வே 4ம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் 187 ரன்கள் எடுத்தது.

    புலவாயோ:

    ஜிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற அயர்லாந்து பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய அயர்லாந்து முதல் இன்னிங்சில் 260 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணியின் மெக் பிரின் 90 ரன்னும், மார்க் அடைர் 78 ரன்னும் எடுத்தனர்.

    ஜிம்பாப்வே சார்பில் முசாராபானி 7 விக்கெட்டும், நகரவா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து முதல் இன்னிங்ஸ் ஆடிய ஜிம்பாப்வே 267 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நிக் வெல்க் 90 ரன்னில் ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய முசாராபாணி 47 ரன் எடுத்து அவுட்டானார்.

    அயர்லாந்து சார்பில் மெக் கார்த்தி 4 விக்கெட்டும், மெக் பிரின் 3 விக்கெட்டும், மார்க் அடைர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து, 2வது இன்னிங்சில் களமிறங்கிய அயர்லாந்து 298 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. பால்பிரின் 66 ரன்னும், லார்கன் டக்கர் 58 ரன்னும் எடுத்தனர்.

    இதையடுத்து, 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே களமிறங்கியது. மூன்றாம் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 38 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், நான்காம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. அந்த அணியின் வெஸ்லி மாதவரே ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதம் கடந்தார். பிரியன் பென்னட் 45 ரன்கள் சேர்த்தார். போதிய வெளிச்சமின்மை காரணமாக ஆட்டம் முன்னதாக முடிக்கப்பட்டது.

    நான்காம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 7 விக்கெட்டுக்கு 183 ரன்கள் எடுத்துள்ளது.

    மீதம் ஒருநாள் உள்ள நிலையில் 109 ரன்கள் எடுத்தால் ஜிம்பாப்வே அணியும், 3 விக்கெட் எடுத்தால் அயர்லாந்து அணியும் வெற்றி பெறும் என்பதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • உலக தானியங்கள் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது.
    • தானியங்களைப் பயிரிடுதல், உற்பத்தி செய்தலை ஊக்குவிக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    அகமதாபாத்:

    உலக தானியங்கள் தினம் நாளை அனுசரிக்கப்படுகிறது. தானியங்களைப் பயிரிடுதல் மற்றும் உற்பத்தி செய்தல் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வகையில் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

    உலக அளவில் தானியங்களின் மிகப்பெரிய உற்பத்தியாளராகவும், நுகர்வோராகவும் இந்தியா திகழ்கிறது. துவரம் பருப்பு, உளுந்து மற்றும் பயறு வகைகள் உள்ளிட்ட முக்கிய வகைகளில் நாடு தன்னிறைவை அடைந்துள்ளது.

    இந்நிலையில், வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி கழகம் வெளியிட்ட அறிக்கை:

    கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் நடப்பு ஆண்டு ஜனவரி வரையிலான காலகட்டத்தில் குஜராத்தில் இருந்து 2 லட்சத்து 47 ஆயிரத்து 789 டன் அளவிலான தானியங்கள் ஏற்றுமதியாகி உள்ளன என தகவல் தெரிவிக்கிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரண்டு மடங்காகும்.

    டாலர் மதிப்பு சாதகம் மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவற்றால் ஏற்றுமதியாளர்கள் பெரும் பலன் அடைந்துள்ளனர்.

    இந்த அத்தியாவசிய துறையில் தேசம் சுயசார்பில் மேம்படுவதற்கு முக்கிய பங்காற்றும் மற்றும் முக்கிய பங்கு வகிக்கும் ஒன்றாக, முதல் மந்திரி பூபேந்திர பட்டேல் தலைமையிலான குஜராத் உருவெடுத்துள்ளது.

    துவரை மற்றும் கொண்டைக்கடலை உற்பத்தியில் நாட்டில் குஜராத் முன்னிலை வகிக்கிறது. பச்சைப்பயறு மற்றும் உளுந்து உற்பத்தியில் நாட்டில் 5-வது இடம் வகிக்கிறது. சீரான குறைந்தபட்ச ஆதரவு விலையின் அதிகரிப்பால், விவசாயிகளின் வருவாயும் ஊக்குவிக்கப்பட்டு உள்ளது. அவர்களின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது. இதனால் அவர்களில் பலர், நவீன வேளாண் நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர் என தெரிவிக்கின்றது.

    • ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடைபெற்றது.
    • இதில் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் இறுதிச்சுற்றில் வெற்றி பெற்றார்.

    ரோட்டர்டாம்:

    ரோட்டர்டாம் ஓபன் டென்னிஸ் தொடர் நெதர்லாந்தில் நடந்து வருகிறது.

    இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிச்சுற்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் உடன் மோதினார்.

    இதில் முதல் செட்டை 6-4 என அல்காரஸ் வென்றார். இரண்டாவது செட்டை டி மினார் 6-3 என வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3-வது செட்டை அல்காரஸ் 6-2 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்றார்.

    • பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இயக்குனர் பாரதி ராஜா அறிமுக இயக்குனர் பிரிட்டோ ஜே.பி இயக்கத்தில் 'நிறம் மாறும் உலகில்' என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் நட்டி, ரியோராஜ், சாண்டி, சுரேஷ் மேனன், ஆடுகளம் நரேன், மைம் கோபி, வடிவுக்கரசி, விக்னேஷ்காந்த், கனிகா, ஆதிரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    மல்லிகா அர்ஜுன், மணிகண்ட ராஜா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தேவ் பிரகாஷ் இசையமைத்துள்ளார். சிக்னேச்சர் புரொடக்சன்ஸ் மற்றும் ஜி.எஸ். சினிமா இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளது. வாழ்க்கையில் உறவுகளின் அவசியத்தை, உணர்வுகளைப் பேசும் படமாக இந்த படம் உருவாகி உள்ளது. திரைப்படம் வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    இந்த நிலையில் படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது அந்த வகையில். நா. முத்துகுமார் என்ற கதாப்பாத்திரத்தில் நடிகர் யோகி பாபு , அப்துல் மாலிக் கதாப்பாத்திரத்தில் நட்டி , மலர் கதாப்பாத்திரத்தில் காவ்யா அறிவுமணி , அபி கதாப்பாத்திரத்தில் நடிகை லவ்லின் சந்திரசேகர் , விஜி கதாப்பாத்திரத்தில் விஜி சந்திரசேகர், அதியன் கதாப்பாத்திரத்தில் ரியோ ராஜ் , அன்பு கதாப்பாத்திரத்தில் சாண்டி நடித்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் போவை ஏற்பாடு செய்திருக்கிறது.
    • தேவை என்பதை அறிந்தும் அந்தக் கடமையைச் செய்ய திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக பாமக சார்பில் சென்னையில் நாளை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.

    இதுகுறித்து பாமா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தூங்குபவர்களை எழுப்பலாம்... ஆனால், தூங்குபவர்களைப் போல நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்பதைப் போலத் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதில் தமிழகத்தை ஆளும் திராவிட மாடல் அரசின் செயல்பாடுகள் உள்ளன.

    தமிழ்நாட்டில் 60% இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூகநீதியை பாதுகாப்பதற்கு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டியது மிகவும் இன்றியமையாத் தேவை என்பதை அறிந்தும் அந்தக் கடமையைச் செய்ய திமுக அரசு மறுப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

    தமிழ்நாட்டின் இன்றையத் தனிப்பெரும் தேலை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு தான். சமூக நீதி சார்ந்து தமிழ்நாடு மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது.

    இந்தியாவில் முதன்முறையாக, உச்சநீதிமன்றத்தின் ஆணையையும் மீறி, 69% இட ஒதுக்கீட்டை நாடாளுமன்ற சிறப்புச் சட்டத்தின்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வைத்து செயல்படுத்தி வரும். பெருமை தமிழ்நாட்டுக்கு உண்டு.

    ஆனால், அந்தப் பெருமை இப்போது ஆட்டம் கண்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுவதை எதிர்த்து சமூகநீதிக்கு எதிரான சக்திகள் தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு வரக் கூடும்.

    69% இட ஒதுக்கீட்டை எதிர்த்து 1994-ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 13.07.2010-ஆம் தீர்ப்பளித்த அப்போதைய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்பாச்.சுபாடியா தலைமையிலான அமர்வு 69% இட ஒதுக்கீடு செல்லும். அதேநேரத்தில் ஓராண்டுக்குள் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அருனடிப்படையில் இட ஒதுக்கிட்டின் அளவை தீர்மானிக்க வேண்டும்" என்று ஆணையிட்டது.

    ஆனால், அப்போதிருந்த தமிழக அரசுகள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இட ஒதுக்கீட்டை உறுதி செய்ததால், 69% இட ஒதுக்கிட்டை எதிர்த்து சிவர் 2012ஆம் ஆண்டில் மீண்டும் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், 69% இட ஒதுக்கீட்டை எவ்வாறு நியாயப்படுத்த முடியும்? என்று வினா எழுப்பினர்.

    அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது, தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் மக்கள் தொகை 68%க்கும் அதிகம் என்பதை ஆதாரங்களுடன் அரசு நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்காவிட்டால், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு செல்லாது என்று தீர்ப்பளிப்பதற்கான ஆபத்து இருக்கிறது.

    அந்த ஆபத்தை முடியடிப்பதற்கான ஒரே வழி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது தான். அவ்வாறு சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவது மிகவும் எளிதானது

    என்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றத்தாலும், உயர்நீதிமன்றங்களாலும் ஏற்றுக்கொள்ளத்தக்கவை தான் என்பதை அன்பையில் பிகாரிலும், தெலுங்கானாவிலும் நடத்தப்பட்ட அதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புகள் உறுதி செய்திருக்கின்றன. ஆனால், திமுக அரசு பட்டும் தான் அதை புரிந்து கொள்ளவும். ஏற்கவும் மறுக்கிறது.

    தமிழ்நாட்டை ஆளும் திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இராகுல் காந்தி உள்ளிட்ட சட்டம் தெரிந்தவர்களும், சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களும், சாதியாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்பதை ஏற்றுக்கொள்கிறார்கள்.

    ஆனால், அதற்கான அதிகாரம் தங்களுக்கு இல்லை என்ற பழைய பல்லவியையே தமிழக ஆட்சியாளர்கள் மீண்டும். மீண்டும் பாடிக் கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சமூகநீதியின் இம்மியளவும் அக்கறையில்லை.

    இத்தகைய சூழலில் தான் தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலை நிறுத்துவதற்காக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் விவகாரத்தில் அடுத்து செய்ய வேண்டியது என்ன? என்ற வினா எழுந்திருக்கிறது.

    இது குறித்து சமூகநீதியில் அக்கறை கொண்டவர்களுடன் விவாதிப்பதற்கான கலந்தாய்வுக் கூட்டத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் போவை ஏற்பாடு செய்திருக்கிறது.

    சென்னை தியாகராயர் நவர் ஜி.என். செட்டி சாலையில் உள்ள அக்கார்ட் விடுதியில் நாளை, பிப்ரவரி 10-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்தக் கலந்தாய்வுக் கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராகிய நான், புரட்சி பாரதம் கட்சித் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி, புதிய நீதிக் கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் கோ.சமரசம்.

    தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் பெஜான்பாண்டியன், இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் இரவி பச்சமுத்து, நாடார் மகாஜன எங்கத் தலைவர் கரிக்கோல் ராஜன், யாதவ மகாசபை சங்கத்தின் தலையர் நாசே இராமச்சந்திரன், தென்னிந்திய பார்வர்டு தலைவர் திருமாறன்ஜி, கொங்கு மக்கள் முன்னணியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் கவுண்டர், தமிழர் தேசம் கட்சித் தலைவர் கே.கே.எஸ் செல்வக்குமார், அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் பொருளாளர் ஸ்ரீவை சுரேஷ் தேவர், வழக்கறிஞர் சமூகநீதிப் பேரவையின் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் பல்வேறு அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    தமிழ்நாட்டில் சமூகநீதிக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ள நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை உறுதி செய்ய மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து மிகவும் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவிருக்கின்றன என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    ×