என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Caste wise census"

    • சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவர் நாராயண மூர்த்தி இருவரும் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தனர்.
    • "மத்திய அரசின் கணக்கெடுப்பிலும் அவர் இதேபோல் பேசுவார் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.

    பெங்களூருவில் வசித்து வரும் பாஜக மாநிலங்களவை எம்.பியும் இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவியுமான சுதா மூர்த்தி கர்நாடக சாதி வாரி கணக்கெடுப்பில் பங்கெடுக்க மறுத்துள்ளார்.

    தற்போது கர்நாடக காங்கிரஸ் அரசு சாதி மாநிலத்தில் வாரி கணக்கெடுப்பு நடத்தி வரும் நிலையில் சுதா மூர்த்தி தனது தனிப்பட்ட விருப்பமாக தனது சாதி விவரத்தைத் தெரிவிக்க மறுத்துள்ளார். அதை கர்நாடக அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது.

    சுதா மூர்த்தி மற்றும் அவரது கணவர் நாராயண மூர்த்தி இருவரும் இந்தச் சாதிவாரி கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தனர்.

    தாங்கள் இருவரும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாததால், இந்தக் குடும்பத்தின் சாதித் தகவல்களை வழங்குவது அரசுக்கு உதவாது என்று சுதா மூர்த்தி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    மேலும், தகவல்களை வழங்காததற்கு அவர் தனிப்பட்ட காரணங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மாநில தொழிலாளர்துறை அமைச்சர் சந்தோஷ் லாட், சுதா மூர்த்தி இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க மறுத்தது அவரது தனிப்பட்ட விருப்பம். அரசு என்ற முறையில், இதில் பங்கேற்க யாரையும் நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார்.

    சுதா மூர்த்தியின் நிலைப்பாட்டை மதிப்பதாகக் கூறிய அமைச்சர், ""மத்திய அரசின் கணக்கெடுப்பிலும் அவர் இதேபோல் பேசுவார் என்று நம்புகிறேன்," என்று கூறினார்.

    துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் இது குறித்துப் பதிலளிக்கையில், "இந்தக் கணக்கெடுப்பில் பங்கேற்க நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்த முடியாது. இது தன்னார்வமாகச் செய்யப்பட வேண்டியது," என்று தெரிவித்தார்.

    செப்டம்பர் 22-ஆம் தேதி தொடங்கிய இந்தக் சாதிவாரி கணக்கெடுப்பு, அக்டோபர் 19-ஆம் தேதி முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    • அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான்.
    • அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விடுதலை நாளையொட்டி மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமங்கள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாகத் திகழ வேண்டும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவதற்கான மகத்தான ஆயுதம் தான் கிராம சபைக் கூட்டங்கள் ஆகும். நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவற்றை நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான். அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கிராமசபைக் கூட்டங்களில் நாம் வெற்றிகரமாக தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

    இந்த ஆக்கப்பூர்வமான பணி நடப்பாண்டிலும் தொடர வேண்டும். அதன்படி வரும் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்கொண்டு சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையாகவும், சமூகப் பின் தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கவும் வசதியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க.வினர் உள்ளிட்ட பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று 75 ஆண்டுகளாக முழங்கி வரும் திமுகவுக்கு உண்மையாகவே ஜனநாயகத்தில் அக்கறை இருந்தால், கிராம சபைகளுக்கு உள்ள உரிமைகளை மதித்தும், அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் கொடுக்கும் வகையிலும் விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    • மு.க.ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
    • தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதன் மூலம் தாம் பெரும் தவறை செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

    மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால் மாநிலங்களின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்க முடியாது; ஒவ்வொரு மாநிலமும் அதன் சமூகநீதித் தேவைகளுக்காக தனித்தனியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் ராகுல்காந்தி கூறியுள்ள கருத்தின் பொருளாகும்.

    ஆனால், இந்தக் கருத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அவரைப் பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகை விவரங்களை வெளிக் கொண்டு வரக்கூடியது. அந்த விவரங்கள் வெளிவந்தால் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது.

    இந்த நிலைப்பாடு தவறு என்பதை முதலமைச்சர் எப்போது புரிந்துகொள்வார் என்பது தான் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முழுமையான சமூகநீதியை வழங்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணர வேண்டும்.

    ராகுல்காந்தி ஆட்சியை இழந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு உணர்ந்த தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்திலேயே உணர வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் களைய இது மிகவும் அவசியமாகும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் விவாதம் நடத்தி புரிய வைக்கத் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மோடிக்கு சரணடையும் வரலாறு உண்டு.
    • பாஜக மக்கள் தொகை கணக்கெடுப்பு மாதிரியில், அதிகாரிகள் ஒரு மூடிய அறையில் கேள்விகளை முடிவு செய்வார்கள்.

    மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி, சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் நிலைப்பாட்டை விமர்சித்துள்ளார்.

    நாட்டில் சாதி இருப்பதை மறுக்கும் மோடி எப்படி ஓ.பி.சி.யாக ஆனார் என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

    பிகாரில் ராஜிகிர் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, "தாம் ஒரு ஓபிசி என்று எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கும் மோடி, சாதி கணக்கெடுப்பு விஷயத்தில் நாட்டில் சாதி இல்லை என்று கூறுகிறார். மோடிக்கு சரணடையும் வரலாறு உண்டு. டிரம்ப் கூட நரேந்திர மோடியை பணிய வைத்ததாக 11 முறை பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

    ஆனால் மோடி ஒரு முறை கூட அதற்கு எதிராக எதிர்வினையாற்றவில்லை. ஏனென்றால் அதில் உண்மை இருக்கிறது. அவர்கள் ஒருபோதும் சாதி கணக்கெடுப்பை உண்மையாக செயல்படுத்த மாட்டார்கள். ஏனென்றால் அப்போது அவர்களின் அரசியல் முடிவுக்கு வரும்" என்று ராகுல் கூறினார்.

    மேலும் தனது எக்ஸ் பதிவில் , சாதிவாரி கணக்கெடுப்புக்கு ராகுல் காந்தி இரண்டு மாதிரிகளை முன்வைத்தார். ஒன்று பாஜக மாதிரி, மற்றொன்று தெலுங்கானா மாதிரி. சாதிவாரி கணக்கெடுப்பில் கேட்கப்படும் கேள்விகள் முக்கியமானவை.

    பாஜக மக்கள் தொகை கணக்கெடுப்பு மாதிரியில், அதிகாரிகள் ஒரு மூடிய அறையில் கேள்விகளை முடிவு செய்வார்கள்.

    அதே நேரத்தில், தெலுங்கானா மாதிரியில், கேள்விகள் வெளிப்படையாகக் கேட்கப்படும். சாதிவாரி கணக்கெடுப்பில் என்னென்ன கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்பது குறித்து பழங்குடி குழுக்கள், சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் அமைப்புகளின் கருத்துக்களைக் கேட்டதாகவும், சுமார் 3 லட்சம் பேர் கேள்விகளைத் தயாரித்துள்ளதாகவும் ராகுல் தெரிவித்தார்.

    2027 ஆம் ஆண்டில் சாதிவாரி கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடத்தப்படும் என்றும், அதில் சாதியும் சேர்க்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

    • சாதிவாரி கணக்கெடுப்பைக் கோரும் அனைவரையும் "நகர்ப்புற நக்சல்கள்" என்று மோடி முத்திரை குத்தினார்.
    • கொள்கையை தனது அரசு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள அவருக்கு நேர்மை இருக்குமா?

    மத்திய அரசு 2021 மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தும் என மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் சமீபத்தில் தெரிவித்தார். முந்தைய காலங்களில் சாதிவாரி கணக்கெடுப்பை எதிர்த்த பாஜக தற்போது தலைகீழாக முடிவெடுத்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    இதுதொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சாதிவாரி கணக்கெடுப்பில் மோடியின் திடீர் தலைகீழ் மாற்றத்திற்கான சான்றுகள் ஏராளமாக உள்ளன. இங்கே மூன்று உதாரணங்கள் மட்டுமே -

    1. கடந்த ஆண்டு, ஏப்ரல் 28, 2024 அன்று, ஒரு தொலைக்காட்சி நேர்காணலில், சாதிவாரி கணக்கெடுப்பைக் கோரும் அனைவரையும் "நகர்ப்புற நக்சல்கள்" என்று அவர் முத்திரை குத்தினார்.

    2. ஜூலை 20, 2021 அன்று, மோடி அரசு பாராளுமன்றத்தில், "மக்கள் தொகை கணக்கெடுப்பில் எஸ்சி மற்றும் எஸ்டி தவிர மற்ற சாதி வாரியான மக்கள்தொகையைக் கணக்கிட வேண்டாம் என்று கொள்கை ரீதியாக முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது.

    3. செப்டம்பர் 21, 2021 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், "மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரம்பிலிருந்து வேறு எந்த சாதி பற்றிய தகவல்களையும் கைவிடுவது மத்திய அரசால் எடுக்கப்பட்ட ஒரு கொள்கை முடிவு" என்று மோடி அரசு தெளிவாகக் கூறியது.

    உண்மையில், மோடி அரசு ஓ.பி.சி.க்களுக்கான சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டாம் உச்ச நீதிமன்றத்தை வெளிப்படையாக வலியுறுத்தியது.

    மோடிக்கு மூன்று கேள்விகள்:

    1. கடந்த பதினொரு ஆண்டுகளில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த தனது கொள்கையை தனது அரசு அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது என்பதை ஒப்புக்கொள்ள அவருக்கு நேர்மை இருக்குமா?

    2. அரசாங்கத்தின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணங்களை அவர் மக்களுக்கும் பாராளுமன்றத்திற்கும் விளக்குவாரா?

    3. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான காலக்கெடுவை அவர் நிர்ணயிப்பாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.
    • இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிலையில், இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில், " சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு வரலாற்று சிறப்பு மிக்க முடிவு" என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்தியாவில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்த மத்திய அரசு முடிவு செய்திருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும். சமூகங்களின் நிலைமையை படம் பிடித்துக் காட்ட வகை செய்யும் இந்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்கது ஆகும்.

    தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அடுத்து நடத்தப்படவிருக்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பாக நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருக்கிறார்.

    இப்படி ஓர் அறிவிப்பு எப்போது வரும் என பல பத்தாண்டுகளாக காத்திருந்தவன் என்ற முறையில் மத்திய அரசின் இந்த முடிவு எனக்கு பெரு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படவிருக்கும் இந்த சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இனிவரும் காலங்களில் இட ஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பை தகர்ப்பது உள்ளிட்ட பல்வேறு சமூகநீதிப் புரட்சிகளுக்கு வழிவகுக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

    இந்தியாவில் கடைசியாக 1931-ம் ஆண்டு தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதனடிப்படையில் தான் இந்தியாவில் இன்று வரை இட ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    அண்மைக்காலத்திய சாதிவாரி மக்கள்தொகை விவரங்கள் இல்லை என்பதைக் காரணம் காட்டியே பல சமூகங்களுக்கும் உள் இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டு வந்தது. அந்த சமூகநீதிக்கு இந்தக் கணக்கெடுப்பு முடிவு கட்டும்.

    தேசிய அளவிலும், மாநில அளவிலும் சாதிவாரி மக்கள்தொகை நடத்தப்பட வேண்டும் என்று சுமார் அரை நூற்றாண்டு காலமாக குரல் கொடுத்து வந்தது வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் தான்.

    45 ஆண்டுகளுக்கு முன் 1980-ம் ஆண்டில் வன்னியர் சங்கத்தை மருத்துவர் அய்யா அவர்கள் தொடங்கிய போது நிறைவேற்றப்பட்ட முதல் தீர்மானமே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனடிப்படையில் இட ஒதுக்கீடு நடத்தப்பட வேண்டும் என்பது தான்.

    அன்று தொடங்கி இன்று வரை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்புக்காக பல நூறு போராட்டங்கள், கருத்தரங்குகள், மக்கள் இயக்கங்கள் என ஏராளமான முயற்சிகளை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டிருக்கிறது.

    வன்னியர் சங்கம் தொடங்கப்பட்டதற்கு பிந்தைய 45 ஆண்டுகளில் இராஜிவ் காந்தி, வி.பி.சிங் , வாஜ்பாய், மன்மோகன்சிங், நரேந்திர மோடி ஆகிய 5 பிரதமர்களை மருத்துவர் அய்யா அவர்கள் பலமுறை சந்தித்து சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

    பலமுறை கடிதங்கள், கோரிக்கை மனுக்கள், போராட்டங்கள் என பல வடிவங்களில் மருத்துவர் அய்யா அவர்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தார். இடைவிடாமல் மேற்கொள்ளப்பட்ட அந்த முயற்சிகளுக்குத் தான் இப்போது வெற்றி கிடைத்திருக்கிறது. அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி பெருமிதம் கொள்கிறது.

    அதேநேரத்தில் மத்திய அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவிருப்பதைக் காரணம் காட்டி, தமிழக அரசு அதன் பங்குக்கு சாதிவாரி சர்வே நடத்தும் கடமையிலிருந்து தப்பிவிட முடியாது.

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படும் என்பதை மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது எவ்வளவு விவரங்கள் சேகரிக்கப் பட்டனவோ, அதை விட கூடுதலாக ஓபிசி சாதி குறித்த விவரம் சேகரிக்கப்படும். இது சாதிவாரி மக்கள்தொகையை அறிவதற்கு மட்டும் தான் பயன்படுமே தவிர, சமூகநிலையை அறிவதற்கு உதவாது.

    2011&ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஒட்டுமொத்தமாக 30 வினாக்கள் மட்டுமே எழுப்பப்பட்டு விவரங்கள் பெறப்பட்டன. அவற்றில் பெரும்பாலானவை பிறப்பு விவரம், முகவரி, குடும்ப உறுப்பினர் விவரங்கள், எழுத்தறிவு, இடம் பெயர்ந்தவரா? தொழில் ஆகியவை தான். ஒருவரின் சமூக பின்தங்கிய நிலையை அறிவதற்கு இந்த புள்ளி விவரங்கள் மட்டுமே போதுமானவை அல்ல.

    அதனால் தான் சமூகநீதியை நிலைநாட்டுவதற்கு மாநில அளவிலும் சாதிவாரி சர்வே எடுக்கப்பட வேண்டும் என்று நான் வலியுறுத்தி வருகிறேன். தேசிய அளவில் எடுக்கப்படும் கணக்கெடுப்பு மனித தலைகளை சாதிவாரியாக எண்ணும் நடைமுறை தான்.

    இது சமூகநீதி சார்ந்த கொள்கைகளை வகுப்பதற்கு மட்டுமே பயன்படும். மாநில அளவில் உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கு இன்னும் அதிகமான தரவுகள் தேவை. அதனால் தான் தெலுங்கானாவில் அண்மையில் நடத்தப்பட்ட சாதிவாரி சர்வேயில் 56 முதன்மை வினாக்கள், 19 துணை வினாக்கள் என மொத்தம் 75 வினாக்கள் எழுப்பி விவரங்கள் பெறப்பட்டன.

    தமிழ்நாட்டில் பல சாதிகள் உள் இட ஒதுக்கீடு கோருகின்றன. அவற்றுக்கு உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றால், அந்த சாதி மக்களின் சமூ பின்தங்கிய நிலை தரவுகளின் மூலம் உறுதி செய்யப்பட வேண்டும். எனவே, மாநில அரசின் சார்பில் சாதிவாரி சர்வே நடத்தப்பட்டு இத்தகைய விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும்.

    அதற்காக 2008&ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி தமிழ்நாட்டில் சாதிவாரி சர்வே நடத்துவதற்கான அறிவிப்பை, மத்திய அரசின் கணக்கெடுப்பு தொடங்கப் படுவதற்கு முன்பாகவே தமிழக அரசு வெளியிட்டு கணக்கெடுப்புப் பணிகளை தொடங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும், இது ஒரு கடின உழைப்பால் பெறப்பட்ட வெற்றி.
    • மற்றவர்கள் மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    இதனை வரவேற்கும் வகையில், "சாதிவாரி கணக்கெடுப்பு திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு கிடைத்த மற்றொரு வெற்றி" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மேலும், "சாதிவாரி, மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?" எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    மிகவும் அவசியமான சாதி கணக்கெடுப்பை மறுத்து தாமதப்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னர், மத்திய பாஜக அரசு இறுதியாக வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் முக்கிய கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை - மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது தொடங்கும்? அது எப்போது முடிவடையும்?

    நேரம் தற்செயலானது அல்ல. பீகார் தேர்தல் கதையில் சமூகநீதி ஆதிக்கம் செலுத்தி வருவதால், இந்த திடீர் நடவடிக்கை அரசியல் நோக்கத்திற்காக என்கிற வாடை வீசுகிறது. ஒரு காலத்தில் எதிர்க்கட்சிகள் சாதி அடிப்படையில் மக்களைப் பிரிப்பதாக குற்றம் சாட்டிய அதே பிரதமர், இப்போது அவர் மீண்டும் மீண்டும் அவதூறு செய்த கோரிக்கைக்கு அடிபணிந்துள்ளார்.

    புறநிலை கொள்கை வகுத்தல், இலக்கு வைக்கப்பட்ட நலன் மற்றும் உண்மையான சமூக நீதியைப் பின்தொடர்வதற்கு சாதி கணக்கெடுப்பு அவசியம் - விருப்பத்திற்குரியது அல்ல. அநீதியை முதலில் அதன் அளவை அங்கீகரிக்காமல் சரிசெய்ய முடியாது.

    தமிழ்நாடு அரசுக்கும் திமுகவிற்கும், இது ஒரு கடின உழைப்பால் பெறப்பட்ட வெற்றி. சாதி கணக்கெடுப்பு கோரி சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை முதலில் நிறைவேற்றியவர்கள் நாங்கள்.

    இந்த நோக்கத்தை ஒவ்வொரு மன்றத்திலும் நாங்கள் வலியுறுத்தினோம். பிரதமருடனான ஒவ்வொரு சந்திப்பிலும், பல கடிதங்கள் மூலமாகவும் இந்தக் கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம். மத்திய அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தினோம்.

    மற்றவர்கள் மாநில அளவிலான சாதி கணக்கெடுப்புகளுக்கு அழைப்பு விடுத்தாலும், நாங்கள் உறுதியாக இருந்தோம். மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு யூனியன் பாடமாகும்.

    மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு மட்டுமே சட்டப்பூர்வமாக பிணைக்கப்பட்ட சாதி கணக்கெடுப்பை வழங்க முடியும், வழங்க வேண்டும். எங்கள் நிலைப்பாடு இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

    திராவிட மாதிரியின் கொள்கைகளால் இயக்கப்படும் எங்கள் கடினமான சமூக நீதிப் பயணத்தில் திமுக மற்றும் இந்தியா கூட்டணிக்கு மற்றொரு வெற்றி.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்று அறிவிப்பு.
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டு, வாழ்த்து.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு அளித்துள்ளார்.

    அப்போது, மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும் என்ற அறிவிப்பை மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன் என்றார்.

    மேலும் அவர், "சுமார் 93 ஆண்டுகளுக்கு பிறகு மத்திய அரசால் சாரிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை வரவேற்கிறேன்.

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படம் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக சார்பில் பாராட்டு, வாழ்த்து.

    அதிமுக ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு திமுக அரசு கைவிட்டுவிட்டது" என குறிப்பிட்டுள்ளார்.

    இதுகுறித்து இபிஎஸ் வௌியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாடு மக்கள் பல ஆண்டுகளாக மத்திய அரசிடம் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர்.

    ஏற்கனவே மாண்புமிகு அம்மாவின் அரசு இருக்கும்பொழுது, தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அனைத்து நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டபிறகு வந்த திமுக அரசு அதை கைவிட்டுவிட்டது.

    தற்போது மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போதே ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதை மிகுந்த மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்.

    சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுவதை மனதார வரவேற்கிறேன்.

    ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்படும் அறிவித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு அதிமுக

    சார்பில் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஓபிசி இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றபட்டது.
    • ஓபிசி இடஒதுக்கீடு அதிகரிக்கும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது.

    தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, மாநில உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ளது.

    கல்வி, வேலைவாய்ப்பில் தற்போது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29% இடஒதுக்கீடும் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் 23% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் 2 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் எக்ஸ் பதிவை பகிர்ந்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்..

    அவரது பதிவில், "தெலுங்கானாவில் ஓபிசி இடஒதுக்கீடு அதிகரிக்கும் என்ற வாக்குறுதியை காங்கிரஸ் அரசு நிறைவேற்றியுள்ளது.

    தெலுங்காளவில் சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் பெறப்பட்ட ஓபிசி சமூகத்தினரின் உண்மையான எண்ணிக்கை ஏற்கப்பட்டு, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் அரசியலில் சம பங்களிப்பை உறுதிசெய்யும் வகையில் 42% இடஒதுக்கீட்டுக்கான மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது சமூக நீதியை நோக்கிய ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாகும், இதன் மூலம் தெலுங்கானாவில் 50% இடஒதுக்கீடு வரம்பு வீழ்த்தப்பட்டுள்ளது.

    ஒவ்வொரு சமூகத்தின் சமூக மற்றும் பொருளாதார நிலைமைகளை சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளுடன் பகுப்பாய்வு செய்வதன் மூலம், அனைவருக்கும் முன்னேற்றத்தை உறுதிப்படுத்தும் கொள்கைகள் உருவாக்கப்படும். தெலுங்கானா அரசு இதற்காக தனி நிபுணர் குழுவையும் அமைத்துள்ளது.

    சாதிவாரி கணக்கெடுப்பு எனும் X-ray மூலம் மட்டுமே பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்கள் தங்களுக்குரிய உரிமைகளைப் பெற முடியும் என்று நான் தொடர்ந்து கூறி வருகிறேன்.

    தெலுங்கானா இதற்கான வழியை காட்டியுள்ளது. இதுவே நாடு முழுவதும் தேவை. இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு நிச்சயம் நடக்கும்; நடத்திக் காட்டுவோம்" என்று பதிவிட்டுள்ளார்.

    • தெலுங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது.
    • இதில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவீதமாக உள்ளது.

    தெலுங்கானாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை 42 சதவீதமாக உயர்த்தும் மசோதாக்கள் தெலுங்கானா சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. கல்வி, வேலைவாய்ப்பு, மாநில உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இடஒதுக்கீடு அமல்படுத்தப்படவுள்ளது.

    கல்வி, வேலைவாய்ப்பில் தற்போது பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 29% இடஒதுக்கீடும் மாநில உள்ளாட்சி தேர்தல்களில் 23% இடஒதுக்கீடும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த இடஒதுக்கீட்டை 42% ஆக உயர்த்தும் 2 மசோதாக்கள் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, "பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 42% இடஒதுக்கீட்டை வழங்கும் மசோதாவிற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சியை மேற்கொள்ளவேண்டும். இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியை அனைத்துக் கட்சித் தலைவர்களும் சந்திக்க வேண்டும். பிரதமரின் சந்திப்பதற்கு மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, பண்டி சஞ்சய் குமார் மற்றும் பாஜக எம்எல்ஏக்களை உதவி செய்ய வேண்டும்

    இந்த மசோதாக்களுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்காக, நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சினையை எழுப்புமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேசவுள்ளேன்.

    சாதிவாரி மக்கள்தொகை குறித்த தகவல்கள் இல்லாததால், இடஒதுக்கீடு 50 சதவீத வரம்பை தாண்டக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெலுங்கானா அரசு சாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொண்டுள்ளது, இதில் பிற்படுத்தப்பட்ட மக்களின் எண்ணிக்கை 56.36 சதவீதமாக உள்ளது.

    நடந்து கொண்டிருக்கும் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போதே இந்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறுவதை உறுதி செய்வது தெலுங்கானா சட்டமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள அனைத்துக் கட்சிகளின் பொறுப்பாகும்" என்று தெரிவித்தார்.

    • சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியம், குறித்த கருத்தரங்கம் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார்.

    நெல்லை:

    காங்கிரஸ் கட்சியின் நெல்லை மாவட்ட ஓ.பி.சி. பிரிவு சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும், முக்கியத்துவமும் குறித்த கருத்தரங்கம் இன்று நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு நெல்லை மாநகர் மாவட்ட ஓ.பி.சி. பிரிவு தலைவர் டியூக் துரைராஜ் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட ஓ.பி.சி தலைவர் ஜான் கென்னடி, மாநகர் மாவட்ட ஓ.பி.சி. துணை தலைவர் ரிச்சர்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில ஓ.பி.சி. பிரிவு தலைவர் நவீன் கலந்து கொண்டு விளக்கவுரை ஆற்றினார். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், முன்னாள் எம்.பி. ராமசுப்பு ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

    இந்த நிகழ்ச்சியில் ஓ.பி.சி. பிரிவு பொதுச்செயலாளர்கள் மோகன், குச்சூரி, நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், ஓ.பி.சி. பிரிவு மாநில துணை தலைவர் நித்யபிரியா ரவி, மாவட்ட பஞ்சாயத்து ராஜ் தலைவர் தனசிங் பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்கமாட்டார்கள்.
    • சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான அனைத்து அதிகாரங்களும், கட்டமைப்பும் தமிழக அரசுக்கே இருக்கும் நிலையில், தமிழக அரசே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தும் என்று அறிவிக்காமல், மத்திய அரசு இந்தக் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று பிரத மருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதுவது தாம் விளையாட வேண்டிய பந்தை, பிரதமர் பக்கம் திருப்பி விடும் செயல் என்பதைத் தவிர வேறு எதுவும் அல்ல.

    இது கையில் வெண்ணெயை வைத்துக் கொண்டு நெய்க்கு அலைவதற்கு ஒப்பானது. சமூகநீதியில் அக்கறை கொண்ட எந்த முதலமைச்சரும் இப்படி ஒரு நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நான் மீண்டும், மீண்டும் கூறிக் கொள்வது, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் அதிகாரம் தமிழக அரசுக்கே உண்டு, அதற்கு எந்த நீதிமன்றமும் தடை விதிக்கவில்லை என்பதைத் தான். அந்த அதிகாரத்தை பயன்படுத்தி தான் கர்நாடகம், பீகார், ஒடிசா ஆகிய மாநிலங்கள் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தியுள்ளன. ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி உள்ளன. எனவே, இனியும் மத்திய அரசுக்கு கடிதம் எழுதாமல், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை தமிழக அரசே நடத்தும் என்று அறிவித்து, செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×