என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: ராகுல் உணர்ந்த தவறை மு.க.ஸ்டாலின் உணர்வாரா?- அன்புமணி
    X

    சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: ராகுல் உணர்ந்த தவறை மு.க.ஸ்டாலின் உணர்வாரா?- அன்புமணி

    • மு.க.ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை.
    • தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலன்களை பாதுகாப்பதற்கான சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தத் தவறியதன் மூலம் தாம் பெரும் தவறை செய்து விட்டதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறியிருக்கிறார்.

    மத்திய அரசின் சாதிவாரி கணக்கெடுப்பால் மாநிலங்களின் சமூகநீதித் தேவைகளை நிறைவேற்றுவதற்கான தரவுகளை வழங்க முடியாது; ஒவ்வொரு மாநிலமும் அதன் சமூகநீதித் தேவைகளுக்காக தனித்தனியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திக் கொள்ள வேண்டும் என்பது தான் ராகுல்காந்தி கூறியுள்ள கருத்தின் பொருளாகும்.

    ஆனால், இந்தக் கருத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல வகைகளில் எடுத்துக் கூறியும் அவரால் அதன் நுட்பத்தையும், தேவையையும் புரிந்து கொள்ள முடியவில்லை.

    அவரைப் பொறுத்தவரை சாதிவாரி கணக்கெடுப்பு என்பது ஒவ்வொரு சாதியின் மக்கள்தொகை விவரங்களை வெளிக் கொண்டு வரக்கூடியது. அந்த விவரங்கள் வெளிவந்தால் மக்களை ஏமாற்றி பிழைக்க முடியாது என்பது தான் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த எண்ணமாக இருக்கிறது.

    இந்த நிலைப்பாடு தவறு என்பதை முதலமைச்சர் எப்போது புரிந்துகொள்வார் என்பது தான் தெரியவில்லை. தமிழ்நாட்டில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவும், அனைத்துத் தரப்பு மக்களுக்கும் முழுமையான சமூகநீதியை வழங்கவும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டியது மிகவும் அவசியம் என்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உணர வேண்டும்.

    ராகுல்காந்தி ஆட்சியை இழந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு உணர்ந்த தவறை மு.க.ஸ்டாலின் பதவிக்காலத்திலேயே உணர வேண்டும். தமிழ்நாட்டில் மாநில அரசின் சார்பில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஆணையிட வேண்டும்.

    தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது, 69 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்தைக் களைய இது மிகவும் அவசியமாகும். இது தொடர்பாக தமிழக அரசுக்கு மாற்றுக் கருத்து இருந்தால் விவாதம் நடத்தி புரிய வைக்கத் தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×