என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    ஆகஸ்ட் 15 கிராமசபைக் கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- அன்புமணி
    X

    ஆகஸ்ட் 15 கிராமசபைக் கூட்டங்களில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- அன்புமணி

    • அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான்.
    • அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம்.

    அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் விடுதலை நாளையொட்டி மாநிலம் முழுவதும் வரும் ஆகஸ்ட் 15-ஆம் நாள் காலை 11.00 மணிக்கு கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. கிராமங்கள் அனைத்தும் தன்னாட்சி அதிகாரம் பெற்ற அமைப்புகளாகத் திகழ வேண்டும் என்ற மகாத்மா காந்தியடிகளின் கனவை நனவாக்குவதற்கான மகத்தான ஆயுதம் தான் கிராம சபைக் கூட்டங்கள் ஆகும். நமது உரிமைகளை நிலைநாட்டுவதற்காக அவற்றை நாம் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    அப்பாவி மக்கள் தங்களின் கோரிக்கைகளையும், எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிப்பதற்கான அற்புதமான வாய்ப்பு கிராமசபைக் கூட்டங்கள் தான். அத்தகையக் கூட்டங்களை கடந்த பல ஆண்டுகளாகவே நாம் சிறப்பாக பயன்படுத்தி வருகிறோம். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆயிரக்கணக்கான கிராமசபைக் கூட்டங்களில் நாம் வெற்றிகரமாக தீர்மானங்களை நிறைவேற்றினோம்.

    இந்த ஆக்கப்பூர்வமான பணி நடப்பாண்டிலும் தொடர வேண்டும். அதன்படி வரும் 15-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கிராமசபைக் கூட்டங்களில், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கை எதிர்கொண்டு சமூகநீதியைப் பாதுகாக்கவும், தமிழகத்தில் உள்ள அனைத்து சமூகங்களுக்கும் அவரவர் மக்கள்தொகைக்கு இணையாகவும், சமூகப் பின் தங்கிய நிலையின் அடிப்படையிலும் இட ஒதுக்கீடு வழங்கவும் வசதியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க.வினர் உள்ளிட்ட பொதுமக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

    மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்று 75 ஆண்டுகளாக முழங்கி வரும் திமுகவுக்கு உண்மையாகவே ஜனநாயகத்தில் அக்கறை இருந்தால், கிராம சபைகளுக்கு உள்ள உரிமைகளை மதித்தும், அவற்றுக்கு அளிக்கப்பட வேண்டிய மரியாதையைக் கொடுக்கும் வகையிலும் விடுதலை நாள் கிராமசபைக் கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை அங்கீகரித்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    Next Story
    ×