என் மலர்
தலைப்புச்செய்திகள்
- முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது.
- நாளை சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது.
திருச்சி:
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் தைத்தேர் திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 4-ம் திருநாளான 5-ந்தேதி தங்க கருடவாகனத்தில் நம்பெருமாள் முக்கிய வீதிகள் வழியாக உத்தர வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருவிழாவின் 8-ம் நாளான நேற்று மாலை தங்க குதிரை வாகனத்தில் நம்பெருமாள் புறப்பட்டு உத்திர வீதிகளில் வலம் வந்து வையாளி கண்டருளுளினார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை நடைபெற்றது. இதையொட்டி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் அதிகாலை 4.30 மணிக்கு கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு தைத்தேர் மண்டபத்திற்கு அதிகாலை 5 மணிக்கு வந்தார்.
பின்னர் அதிகாலை காலை 5 மணிமுதல் 5.45 மணிவரை ரதரோஹணம் (மகர லக்னத்தில்) நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் எழுந்தருளிய பின் காலை 6.15 மணிக்கு பக்தர்கள் ரெங்கா, ரெங்கா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் நான்கு உத்திர வீதிகளின் வழியாக காலை 9.20 மணிக்கு நிலையை வந்தடைந்தது. பின்னர் பக்தர்கள் தேரின் முன் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி பெருமாளை தரிசனம் செய்தனர்.
நாளை (11-ந்தேதி) சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடக்கிறது. நிறைவு நாளான 12-ந்தேதி மாலை 3 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து நம்பெருமாள் புறப்பட்டு மாலை 3.30 மணிக்கு ரெங்கவிலாச மண்டபம் வருகிறார். அங்கிருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு வாகன மண்டபம் சென்றடைகிறார்.
வாகன மண்டபத்தில் இருந்து இரவு 8 மணிக்கு நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் புறப்பட்டு நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்து இரவு 9 மணிக்கு வாகன மண்டபம் வந்தடைகிறார்.
இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு இரவு 9.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானம் சென்றடைவதோடு தைத்தேர் திருவிழா நிறைவடைகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அற நிலையத்துறை கோவில் இணை ஆணையர் மாரி யப்பன், கோவில் உள்துறை கண்காணிப்பாளர் வேல்முருகன், கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் செய்திருந்தனர்.
- அதிமுகவில் ஒற்றுமை இல்லை.
- யாருக்கும் எந்த நிர்பந்தமும் வேண்டாம்.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு இன்னும் ஓராண்டிற்குள் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் அடிமட்ட அளவில் உள்ள நிர்வாகிகளுடன் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, சென்னை அண்ணா நகரில் அ.தி.மு.க. கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், கோகுல இந்திரா மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பேசியதாவது:-
அதிமுகவில் ஒற்றுமை இல்லை. எனக்காக இல்லை... என் செல்வாக்குக்காக இல்லை... பொதுச்செயலாளர் அறிவித்த ஆர்ப்பாட்டம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக... அதுதான் நோக்கமே தவிர... எல்லாரையும் தான் கூப்பிட்டோம். அதனால என்னை பார்த்து பேசுறதுக்கோ, என்னை பார்த்து கும்பிடறதுக்கோ, என்னை பார்த்து பயப்படறதுக்கோ... யாருக்கும் அச்சம் வேண்டாம். யாருக்கும் எந்த நிர்பந்தமும் வேண்டாம். என்ன ஒண்ணு நானும் தம்பியும் தானே சுத்துக்கிட்டு இருக்கோம். எங்களோட போட்டோவ போஸ்டரில் போட்டா சந்தோஷம் இருக்காதா... மகிழ்ச்சி இருக்காதா...
எப்படி உங்களால என்னை மறக்க முடிகின்றது... என்ன நிர்பந்தம்... எந்த சுயநலம் என்பதை கேட்கிறேன். இருப்பினும் தொகுதியில் யார் நின்றாலும் அ.தி.மு.க. இங்கு வெற்றி பெறுவதற்கு நான் நிச்சயமாக உறுதியாக பணியாற்றுவேன் என்பதை இந்த நேரத்தில் சொல்லி யார் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது அல்ல. தேர்தல் நேரத்தில் இந்த ஒரு குருப்பிஷமும் இந்த விஷயமும் நடைபெறக்கூடாது என்பதற்காக இதை தெரிவிக்கிறேன்.
முன்னாள் அமைச்சர்களுக்கு மரியாதை இல்லை என்பதை அறிந்தும், மாவட்ட செயலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றார்.
- பல்வேறு சிறப்பு வழிபாடுகளையும் அவர் மேற்கொள்வார்
- இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா மிகவும் கோலாகலமாக நடந்து வருகிறது. கடந்த மாதம் 13-ந் தேதி தொடங்கிய இந்த நிகழ்வில் இதுவரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடி உள்ளனர்.
உலகின் மிகப்பெரிய இந்த கலாசார, ஆன்மிக நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று (திங்கட்கிழமை) பங்கேற்கிறார். இதற்காக பிரயாக்ராஜ் சென்ற ஜனாதிபதி அங்குள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.
இத்துடன் பல்வேறு சிறப்பு வழிபாடுகளையும் அவர் மேற்கொள்வார் என ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி கடந்த வாரம் மகா கும்பமேளாவில் புனித நீராடியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கடந்த மாதம் 29 [புதன்கிழமை] மவுனி அமாவாசையை முன்னிட்டு அதிக பக்தர்கள் கலந்து கொண்ட போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 30 பேர் உயிரிழந்ததாக அம்மாநில அரசு தெரிவித்தது. 60 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
- 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது.
- 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
தி.மு.க. அரசு ஆட்சி பொறுப்பேற்ற கடந்த 2021-ம் ஆண்டு மே மாதம் முதல் தற்போது வரை 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்த பணிகள் நடந்து வந்தன. பட்ஜெட்டை இறுதி செய்யும் பணியை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது. இக்கூட்டத்தில் துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
- சட்டசபை கூட்டத்தொடர் ரத்து.
- மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.
இம்பால்:
மணிப்பூர் மாநிலத்தில் பிரேன்சிங் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது.
அங்கு கடந்த 2023 மே மாதத்தில் இருந்து மைதி மற்றும் குகி இன மக்கள் இடையே வன்முறை ஏற்பட்டது. இதில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.60 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் தங்களது வீடுகளை விட்டு இடம் பெயர்ந்தனர். அங்கு தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
குகி-மைதி இன மக்கள் இடையேயான கலவரத்தை முதல்-மந்திரி பிரேன்சிங் தூண்டியதாக குகி இனத்தவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர் பேசிய ஒரு ஆடியோவும் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த வழக்கில் பிரேன்சிங்கின் குரல் பதிவை மத்திய அரசின் தடய அறிவியல் சோதனை மையம் ஆய்வு செய்து, அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
இந்த நிலையில் மணிப்பூர் முதல்-மந்திரி பிரேன்சிங் நேற்று மாலை பதவியை ராஜினாமா செய்தார். சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்க இருந்த நிலையில் அவர் பதவி விலகியது மணிப்பூர் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க. மற்றும் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.எல்.ஏ.க்கள், மாநில பா.ஜ.க. தலைவர் ஏ.ஷர்தா ஆகியோருடன் கவர்னர் அஜய் குமார் பல்லாவை சந்தித்து பிரேன் சிங் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். புதிய முதல்-மந்திரி பதவி ஏற்கும் வரை பொறுப்பு முதல்-மந்திரியாக நீடிக்குமாறு அவரிடம் கவர்னர் கேட்டுக் கொண்டார்.
இன்று தொடங்க இருந்த சட்டசபை கூட்டத்தொடரில் பா.ஜ.க. அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியானது.
பிரேன் சிங் தலைமையின் மீது பா.ஜ.க. கூட்டணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் அதிருப்தியில் இருந்த தாகவும் கூறப்பட்டது.காங்கிரஸ் நம்பிக் கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏக்களே அதற்கு ஆதரித்து வாக்களிப்பார்கள் என்ற சூழல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே பதவியை ராஜினாமா செய்ய அவர் முடிவு எடுத்தார்.
பிரேன்சிங் கடந்த 3 நாட்களாக டெல்லியில் முகாமிட்டு மத்திய உள்துறை மந்திரிகள் அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மணிப்பூர் திரும்பியதுமே அவர் ராஜினாமா செய்தார்.
மணிப்பூர் முதல்-மந்திரி பதவியை பிரேன் சிங் ராஜினாமா செய்துள்ளதால் இன்று நடைபெற இருந்த சட்டசபை கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக கவர்னர் அஜய்குமார் பல்லா அறிவித்துள்ளார்.
இந்திய அரசிய லமைப்பின் பிரிவு 174-ன் பிரிவு (1) -ல் வழங்கப்பட்ட அதிகாரங்களைப் பயன் படுத்தி, 12-வது மணிப்பூர் சட்டசபையின் 7-வது கூட்டத்தொடரை கூட்டுவதற்கான முந்தைய உத்தரவு இன்னும் தொடங்கப்படாத நிலையில், உடனடியாக செல்லாது என்று இதன் மூலம் அறிவிக்கிறேன்" என்று அவர் தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மணிப்பூர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி கொண்டுவரப்படலாம் என்று தெரிகிறது.
அங்கு அனைத்துகளும் அரசி யல் மாற்று வழிகள் ஆய்வு செய்யப்படும். புதிய முதல்-மந்திரிக்கு உரிமை கோர போதுமான அளவு பா.ஜனதாவுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதன் பிறகும் புதிய அரசு அமைக்க முடியாத சூழ்நிலை ஏற்படாவிட்டால் மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே மணிப்பூர் கவர்னர் அஜய் குமார் பல்லா டெல்லிக்கு அவசர மாக செல்கிறார். மத்திய அரசின் அழைப்பின் பேரில் அவர் டெல்லி செல்கிறார். மணிப்பூரில் சட்டசபை பதவிகாலம் 2027-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முடிவடைகிறது.
இதற்கிடையே பிரேன்சிங் விலகலால் மணிப்பூரில் மைதி- குகி இன மக்களிடையே அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று மத்திய அரசு நம்பிக்கையுடன் இருக்கிறது.
- கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் டாலரின் மதிப்பு 87.43 ரூபாயாக இருந்தது.
- மந்தமான பொருளாதாரத்தை வலுப்படுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதங்கள் குறைப்பு.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு இன்று (பிப்ரவரி 10) வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை சந்தை முடிவில் டாலரின் மதிப்பு 87.43 ரூபாயாக இருந்த நிலையில் இன்று திங்கள்கிழமை சந்தை தொடக்கத்தில் 43 பைசா வீழ்ச்சி அடைந்து ரூபாய் மதிப்பு 87.92 ரூபாயாக உள்ளது. இந்திய ரூபாய் இதுவரை இவ்வளவு வீழ்ச்சியை சந்திதது கிடையாது.
நேற்று [பிப்ரவரி 9] அன்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், எஃகு மற்றும் அலுமினியம் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25% வரியை அறிவித்தார்.
இதன்காரணமாக ரூபாய் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது. னைத்து நாடுகளிலிருந்தும் உலோக இறக்குமதிகளுக்கு இந்த வரிகள் பொருந்தும் என்றும் இந்த வார இறுதியில் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும் என டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே மந்தமான இந்திய பொருளாதாரத்தை வலுப்படுத்த 5 ஆண்டுகளுக்கு பின்னர் ரெப்போ வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்து 6.25% ஆக ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது.
- பெங்களூரு ஹெலகங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது.
- தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெறும்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 15 ஆவது சர்வதேச விமான கண்காட்சி இன்று முதல் தொடங்கியுள்ளது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த கண்காட்சியைத் தொடங்கி வைத்தார்.
பெங்களூருவில் 2 ஆண்டுக்கு ஒருமுறை என இதுவரை 14 தடவை இந்திய ராணுவம் சார்பில் விமான கண்காட்சி நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு விமான கண்காட்சி பெங்களூரு ஹெலகங்கா விமானப்படைத் தளத்தில் நடைபெறுகிறது.
இன்று பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கிய விமான கண்காட்சி பிப்ரவரி 14-ம் தேதி வரை என 5 நாட்கள் நடக்கிறது. தினமும் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை விமான கண்காட்சி நடைபெறும்.
விமான கண்காட்சி நடைபெறும் 5 நாட்களும் காலை ஒருமுறையும், மதியம் ஒருமுறையும் என 2 முறை விமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன. இது காண்போரை மெய்சிலிர்க்க வைக்கும்.
விமான கண்காட்சியைக் காண பலரும் ஆர்வமுடன் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.
அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளின் எப் 35, எஸ்யூ 35 போர் விமானங்களும் எஸ்யூ 57,எப் 16 விமானங்களும் வான்வெளி சாகசங்களில் ஈடுபட உள்ளன.
- ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட இருப்பதாக தகவல்.
- நிதிநிலையை திட்டமிடவும் முடிவு.
மெட்டா நிறுவனம் கிட்டத்தட்ட 3 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது அந்நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 5 சதவீதம் ஆகும். இது தொடர்பான ஆவணங்கள் வெளியாகி இருப்பதாகவும், இன்று (பிப்ரவரி 10) பணிநீக்கம் தொடர்பான நோட்டீஸ் ஊழியர்களுக்கு வழங்கப்பட இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகளை சீர்படுத்தவும், எதிர்பார்த்த அளவுக்கு பணியாற்றாத ஊழியர்களை பணிநீக்கம் செய்வதென மெட்டா நிறுவனம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கை மூலம் இந்த ஆண்டுக்கான நிதிநிலையை திட்டமிடவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் கடந்த ஜனவரி மாதத்தில் ஊழியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் சரியாக பணியாற்றாதவர்களை உடனடி பணிநீக்கம் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களான மைக்ரோசாப்ட், அமேசான், சேல்ஸ்ஃபோர்ஸ் உள்ளிட்டவை ஆயிரக்கணக்கான ஊழியர்களை தொடர்ச்சியாக பணிநீக்கம் செய்து வருகின்றன. அந்த வரிசையில் மெட்டா நிறுவனத்தின் முடிவால் ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
- முதலமைச்சர் முன்னிலையில் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார்.
- சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து இன்று சென்னை தலைமை செயலகத்தில் சட்டமன்ற உறுப்பினராக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றார்.
சபாநாயகர் அறையில் முதலமைச்சர் முன்னிலையில் வி.சி.சந்திரகுமார் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வின் போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
- கோவிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே காட்டு பரமக்குடியில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டின் கீழ் திருவேட்டை உடைய அய்யனார் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் நடிகர் வடிவேலுவின் குலதெய்வ கோவிலாகும். அதேபோல் காட்டுபரமக்குடி கிராமத்தி னரின் பூர்வீக கோவிலாகவும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் இக்கோவிலை நடிகர் வடிவேலுவின் தூண்டுதலின் பெயரில் அவரது ஆதரவாளரான அறங்காவலர் பாக்யராஜ் என்பவர் ஆக்கிரமிப்பு செய்து அவருக்கு சொந்தமான கோவிலாக மாற்றம் செய்ய முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அறிந்த காட்டுபரமக்குடி கிராம மக்கள் மற்றும் குலதெய்வ குடிமக்கள் நேற்று கோவிலின் முன்பாக ஒன்று கூடி நடிகர் வடிவேலுக்கு எதிராக கோஷமிட்டு எதிர்ப்பை தெரிவித்தனர்.
அதேபோல் கோவிலுக்கு புதிதாக தலைவர், செயலாளர், பொருளாளர் என பொறுப்புகள் உருவாக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலை நடிகர் வடிவேலுவின் ஆதரவாளர் அபகரிக்க முயற்சிப்பதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் திருவேட்டை உடைய அய்யனார் கோவிலின் பரம்பரை நிர்வாகியும் தற்போது நிர்வாகியாக இருந்து வரும் பாக்கியராஜ் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவில் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாகவும், தேவையின்றி கோவிலை ஆக்கிரமிக்க கைப்பற்ற முயற்சி செய்வதாக கூறி போராட்டம் செய்வதாகவும் இந்த கோவில் பிரச்சனை தொடர்பாக வருகிற 11-ந்தேதி பரமக்குடி நகர் போலீஸ் நிலையத்தில் கூட்டம் நடக்க இருக்கும் நிலையில் தற்போது இந்த பிரச்சனையை தேவை இன்றி எடுத்து இருப்பதாகவும் தெரிவித்தார்.
- காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
- சுற்றறிக்கை தொடர்பாக தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
மதுரை நேதாஜி சாலையில் தண்டாயுதபாணி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் செயல் அலுவலர் அங்கயற்கண்ணி, அங்கு பணியாற்றுபவர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அதாவது, அர்ச்சகர்களின் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை கோவில் உண்டியலில் செலுத்த உத்தரவிடப்பட்டது.
அவ்வாறு அர்ச்சகர்கள் தட்டில் வரப்பெறும் காணிக்கைகள் உண்டியலில் செலுத்தும் பணியினை கோவில் பணியாளர்கள் கவனிக்க வேண்டும். காணிக்கையை உண்டியலில் செலுத்தாத அர்ச்சகர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
இந்த உத்தரவானது, இந்து சமய அறநிலையத்துறை கோவில் பணியாளர்கள், அர்ச்சகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், கோவில் அர்ச்சகர் தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி உண்டியலில் செலுத்தும் உத்தரவு திரும்ப பெறப்பட்டது.
தண்டாயுதபாணி கோவில் தக்காரிடம் கலந்தாலோசிக்காமல் செயல் அலுவலர் தன்னிச்சையாக உத்தரவு பிறப்பித்துள்ளார் என்று அறநிலைத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுற்றறிக்கை தொடர்பாக தண்டாயுதபாணி கோவில் செயல் அலுவலரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது.
- தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது.
- ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 'கிடுகிடு'வென உயர்ந்து வருவதை பார்க்க முடிகிறது. ரூ.60 ஆயிரத்தை தொட்டுவிடுமோ? என்று நினைத்ததெல்லாம் மாறி இப்போது ரூ.65 ஆயிரத்தையும் தொட்டுவிடுமோ? என நினைக்க வைத்துவிட்டது. இதனை தொடர்ந்து தங்கம் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைகிறது.
இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.7,980-க்கும் சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.63,840-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 107 ரூபாய்க்கும், பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
09-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
08-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,560
07-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
06-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,440
05-02-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 63,240
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
09-02-2025- ஒரு கிராம் ரூ.107
08-02-2025- ஒரு கிராம் ரூ.107
07-02-2025- ஒரு கிராம் ரூ.107
06-02-2025- ஒரு கிராம் ரூ.107
05-02-2025- ஒரு கிராம் ரூ.107






