என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கட்சியின் நிர்வாகிகளை கவிதா வெளிப்படையாக விமர்சித்து பேசினார்.
- பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஐதராபாத்:
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. சகோதரர் ராமா ராவுடனும் மோதல் வெடித்தது.
இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேசினார் கவிதா. மேலும், கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில், கவிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஸ்மார்ட்போனில் மீடியாடெக்-இன் டிமென்சிட்டி 8400 சிப்செட் இடம்பெறும் என்பதைக் குறிக்கிறது.
- ஸ்மார்ட்போன்கள் பிளாக், கிரே மற்றும் கோல்டு நிற விருப்பங்களில் வரும்.
சியோமி 15T சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்டான்டர்டு சியோமி 15T மற்றும் சியோமி 15 Pro மாடல் ஆகியவை அடங்கும். சியோமி 15T மற்றும் சியோமி 15T Pro மாடல்களின் சாத்தியமான விலை மற்றும் நிறங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
புதிய ஸ்மார்ட்போன்கள் லெய்கா டியூன் செய்யப்பட்ட கேமராக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி 15T மாடல் இப்போது ஒரு பிரபலமான பென்ச்மார்க்கிங் தளத்தில் தோன்றியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் AI செயல்திறனுக்கான முடிவுகள் அதன் சிப்செட், ரேம் மற்றும் ஓஎஸ் விவரங்களைக் காட்டுகிறது.
சியோமி 15T என்று நம்பப்படும் சியோமி 25069PTEBG என்ற மாடல் எண்ணைக் கொண்ட ஸ்மார்ட்போன் கீக்பென்ச் (Geekbench AI) தளத்தில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் பதிவேற்றப்பட்ட முடிவுகள், இந்த கைபேசியில் ஆக்டா-கோர் சிப்செட் உள்ளது. அதில் ஒரு பிரைம் கோர் (3.25GHz), மூன்று செயல்திறன் கோர்கள் (3.00GHz) மற்றும் நான்கு செயல்திறன் கோர்கள் (2.10GHz) உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன. இவை இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக்-இன் டிமென்சிட்டி 8400 சிப்செட் இடம்பெறும் என்பதைக் குறிக்கிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி 15T 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கக்கூடும் என்று கூறுகின்றன . 12GB + 256GB மாடலின் விலை EUR 649 (இந்திய மதிப்பில் ரூ. 66,000) என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சியோமி 15T Pro மாடலின் விலை முறையே EUR 799 (இந்திய மதிப்பில் ரூ. 81,000) மற்றும் 12GB + 256GB மற்றும் 16GB + 512GB மாடல் EUR 899 (இந்திய மதிப்பில் ரூ. 92,000) என இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன்கள் பிளாக், கிரே மற்றும் கோல்டு நிற விருப்பங்களில் வரும்.

சியோமி 15T Pro மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ சிப்செட், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரி மற்றும் அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஃபிளாட் OLED டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இது IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கலாம்.
கேமராவை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 50MP OmniVision OVX9100 பிரைமரி கேமரா, 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP சாம்சங் JN5 5X டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.
- அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 365 நாய்கள் இதில் பங்கேற்றன.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. இந்த நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக நாய்களின் மோப்பதிறன், பராமரிப்பு முறை, உரிமையாளர்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் நாய்களின் சாகச திறமைகளை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வளர்த்த இங்கிலீஸ் ஷட்டர் வகை நாய் தட்டிச்சென்றது. அந்த நாயுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
- 2026 நிஞ்ஜா ZX-6R பைக்கில் 636cc, இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது.
- 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
கவாசாகி நிறுவனம் 2026 நிஞ்ஜா ZX-6R மோட்டார்சைக்கிளை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய நிஞ்ஜா பைக்கின் விலை ரூ. 11.69 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல் முந்தைய மாடலை விட ரூ. 40,000 அதிக விலை கொண்டது.
மேலும் புதிய லைம் கிரீன் நிறத்துடன் புதிய கிராபிக்ஸ் இந்த பைக்கில் புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதுதவிர 2026 மாடலில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

2026 நிஞ்ஜா ZX-6R பைக்கில் 636cc, இன்லைன்-4 சிலிண்டர் எஞ்சின் வழங்கப்படுகிறது. இது ரேம் ஏர் இன்டேக் மூலம் 127bhp பவரையும், அது இல்லாமல் 122bhp பவரையும் வெளிப்படுத்துகிறது. மோட்டார் பெல்ட்கள் 11,000rpm இல் 69Nm உச்ச முறுக்குவிசையை வெளியிடுகின்றன. இத்துடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் அசிஸ்ட், ஸ்லிப்பர் கிளட்ச் வழங்கப்பட்டுள்ளது.
அம்சம் வாரியாக, நிஞ்ஜா ZX-6R பைக்கில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி கொண்ட TFT இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 4-லெவல் டிராக்ஷன் கண்ட்ரோல், இரண்டு பவர் லெவல்கள் மற்றும் கிளட்ச் இல்லாத அப்ஷிஃப்ட்களுக்கு மட்டும் ஒரு விரைவு ஷிஃப்டரைப் பெறுகிறது.
இந்த மோட்டார்சைக்கிள் - ஸ்போர்ட், ரோடு, ரெயின் மற்றும் ரைடர் என நான்குவித டிரைவிங் மோட்களை கொண்டுள்ளன.
- பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
- அப்போது தனது தாயின் நினைவுகள் குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிகரமாகப் பேசினார்.
பாட்னா:
பீகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தர்பங்காவில் யாத்திரையின்போது சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையே, பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அம்மா தான் உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது தாயை அவமதித்துவிட்டனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.
என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அந்த வலி பீகார் மக்களிடமும் உள்ளது. அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லாத எனது தாயாரை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் ஏன் விமர்சனம் செய்தனர்? உங்களை போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய என்னை விட்டுப் பிரிந்து இருந்தார்.

இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சில காலத்திற்கு முன்பு 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம் அனைவரையும் விட்டுச் சென்றார். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத என் அம்மாவை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்து உள்ளனர். சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகவும் வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையை கூட வாங்க மாட்டார். எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பார் என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்ட மாநில தலைவர் கண்ணீர் சிந்தினார். பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் சிலரும் கண்ணீர் சிந்தினர்.
- 'பசால்ட் எக்ஸ்' பேட்ஜைத் தவிர, எஸ்யூவியின் உட்புறத்தில் கான்ட்ராஸ்ட் பினிஷ்கள் இருக்கும்.
- 2WD மாடலில், புதிய VF7 204 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்துகிறது.
பண்டிகை காலம் நெருங்கி வருவதால், கார் தயாரிப்பாளர்கள் தங்கள் புதிய மாடல்களை இந்தியாவில் அறிமுகப்படுத்தத் தயாராகி வருகின்றனர். எனவே, செப்டம்பர் 2025 ஆட்டோ ஆர்வலர்களுக்கு அதிரடியானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த மாதம் இந்திய சாலைகளில் வரவிருக்கும் ஐந்து அற்புதமான கார்களைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
மாருதி சுசுகி எஸ்யூவி
மாருதி சுசுகி தனது புதிய காம்பாக்ட் எஸ்யூவியை வெளியிட உள்ளது. இந்த காரின் பெயர் இன்னும் வெளியிடப்படவில்லை. இருப்பினும், இதற்கு முந்தைய தகவல்கள் மாருதி சுசுகி இந்த காரை எஸ்குடோ என்று அழைக்கலாம் என கூறின. இது மாருதி சுசுகி பிரெஸ்ஸாவிற்கும், நிறுவனத்தின் அரினா வரிசையில் உள்ள மாருதி சுசுகி கிராண்ட் விட்டாராவிற்கும் இடையில் நிலைநிறுத்தப்படும். மேலும், இந்த காரில் கிராண்ட் விட்டாராவை விட சற்று பெரிய இருக்கைகளைப் பெறும் என்றும், உள்புறத்தில் அதிக இடவசதி இருக்கும் என்றும் எதிர்பார்க்கலாம். இது 3 வரிசை இருக்கை அமைப்பையும் கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
சிட்ரோயன் பாசால்ட் எக்ஸ்
சிட்ரோயன் இந்தியா நிறுவனம் வருகிற 5-ந்தேதி இந்திய சந்தையில் பசால்ட் எக்ஸ் காரை அறிமுகப்படுத்த உள்ளது. மேலும் முன்பதிவுகள் ஏற்கனவே ரூ.11,000 டோக்கன் தொகையில் தொடங்கிவிட்டன. முன்னதாக, இந்த நிறுவனம் ஹேட்ச்பேக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலான C3X-ஐ அறிமுகப்படுத்தியது. வரவிருக்கும் சிட்ரோயன் பசால்ட் எக்ஸ், C3X ஐ விட அதிக மேம்படுத்தல்களைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 'பசால்ட் எக்ஸ்' பேட்ஜைத் தவிர, எஸ்யூவியின் உட்புறத்தில் கான்ட்ராஸ்ட் பினிஷ்கள் இருக்கும்.

வின்ஃபாஸ்ட் VF6
வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட், வருகிற 6-ந்தேதி இந்திய சந்தையில் வின்ஃபாஸ்ட் VF6 எலெக்ட்ரிக் எஸ்யூவியை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவியில் 59.6 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதில் 204 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் மோட்டார் வழங்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 480 கிலோமீட்டர்கள் வரை செல்லும் என்று தெரிகிறது.
வின்ஃபாஸ்ட் VF7

VF6 உடன், வின்ஃபாஸ்ட் நிறுவனம் வருகிற 6-ந்தேதி VF7 மின்சார எஸ்யூவி-யையும் வெளியிடுகிறது. வின்ஃபாஸ்ட் VF7 2WD மற்றும் 4WD ஆப்ஷன்களில் கிடைக்கும். இரண்டு ஆப்ஷன்களிலும், இது 70.8kWh பேட்டரி பேக் மூலம் இயக்கப்படுகிறது. 2WD மாடலில், புதிய VF7 204 ஹெச்பி திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்துகிறது. அதே நேரத்தில் AWD மாடலில் பின்புற மோட்டாரும் அடங்கும். இவை இணைந்து 350 ஹெச்பி பவர் மற்றும் 500 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும்.
மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட்
இந்திய வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா, செப்டம்பர் மாதம் மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்டை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியாகி இருக்கும் ஸ்பை படங்களில் புதிய மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் தார் ராக்ஸ்ஸைப் போலவே செங்குத்து ஸ்லாட் கிரில்லைப் பெறும் என்பதை குறிக்கின்றன. இது ஐந்து-கதவுகள் கொண்ட வெர்ஷனில் இருந்ததை போன்ற ஹெட்லைட்களை கொண்டிருக்கும். இத்துடன் C-வடிவ DRLகளுடன் கூடிய LED ப்ரொஜெக்டர் அமைப்பைக் கொண்டுள்ளது. கூடுதலாக, முன் பம்பர் மற்றும் ஃபாக் லைட்கள் உள்ளன.
- ஒரு தொழிலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போட்டால் வந்து விடாது.
- கப்பலூர் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை:
'தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம்' சுற்றுப்பயணத்திற்காக மதுரை வந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இன்று வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது சங்கத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை-தூத்துக்குடி சாலை, விமான நிலைய விரிவாக்கம், தென் தமிழகத்தில் தொழிற் வளர்ச்சி, உலக முதலீட்டாளர் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும், கப்பலூர் சுங்கசாவடியை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்வேறு அரசியில் கட்சியினரும் இங்கு வந்துள்ளீர்கள். தொழிலும், அரசியலும் அப்பாற்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது 2015-ம் ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை தற்போது படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது.
ஒரு தொழிலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போட்டால் வந்து விடாது. அதற்கு நிதி, நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முடிந்த பிறகு தான் தொழிற்சாலை வரும். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும்.
அதேபோல் கோவில் நகரமான இங்கு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அ.தி.மு.க. அரசு முழு நடவடிக்கை எடுக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அந்த தொழிலுக்கு குறிப்பாக நிலம் தேவை. தற்போது நிலத்தை கையகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும் விவசாயிகள் முன் வந்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டு தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கப்பலூர் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் தொழில்கள் பாதிக்கப்படும். எனவே வெளிமாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டல் தொழிலில் அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். அம்மா ஆட்சியிலும், எனது ஆட்சியிலும் எனது தலையீடு இல்லாமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொழிற்துறையினருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்க சலுகைகளும், இட ஒதுக்கீடும் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்துறையினரின் பிரச்சனைகளை தீர்க்க அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படும்.
கோவில் நகரமான மதுரையை தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.1300 கோடியில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணையில் 4 தடுப்பணைகள், ரூ.400 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள், பாதாள சாக்கடை வசதிகள், குடிமராமத்து பணிகள், பறக்கும் பாலம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி, வளர்ச்சி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தொழிற்துறையினர் கொடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கவனமுடன் பரிசலீத்து நடவடடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி.
- அதனைத் தொடர்ந்து எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தகவல்.
சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்தங்கள் வழங்கியதில் ரூ.98.25 கோடி முறைகேடு என்ற வழக்கில் எஸ்.பி. வேலுமணி பெயர் சேர்க்கப்பட்டிருந்தது. எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் இல்லை எனக்கூறி வழக்கு ரத்து செய்யப்பட்டது.
இந்த நிலையில் எஸ்.பி. வேலுமணியின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், எஸ்.பி. வேலுமணிக்கு எதிராக ஆதாரங்கள் சேகரித்துள்ளதால், வழக்கு தொடர சபாநாயகர் அப்பாவு அனுமதி அளித்துள்ளார் எனவும் தெரிவித்துள்ளது.
- சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது.
- சீன அதிபர், ரஷிய அதிபர் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.
வாஷிங்டன்:
சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷிய அதிபர் புதின் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களைச் சந்தித்தார்.
ரஷியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதி, அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கை ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றது. இந்தச் சந்திப்பு உலகம் முழுவதும் பெரும் கவனத்தை பெற்றுள்ளது. மூன்று தலைவர்களும் சந்தித்துப் பேசியதை உலகின் அனைத்து ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை அந்நாட்டு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதுதொடர்பாக ஜான் பால்டன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கை இந்தியாவையும், ரஷியாவையும் மீண்டும் ஒன்றிணைத்து விட்டது. இந்தியா-ரஷியாவை பிரிக்க பல தசாப்தங்களாக அமெரிக்கா செய்த முயற்சிகளை டிரம்ப் சீரழித்து விட்டார். டிரம்ப்பின் தவறான கொள்கையால் இந்தியா, சீனா, ரஷியா நாடுகள் வலுவான கூட்டாளியாகி விட்டன. அவரது தவறான பேரழிவு வரி கொள்கை முற்றிலும் தோல்வி அடைந்துவிட்டது. அவரது இந்த முடிவால் கிழக்கு ஆசியாவில் சீனா நிலைமையை மறு வடிவமைக்க அனுமதித்துள்ளது என பதிவிட்டுள்ளார்.
- மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள்.
- அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள்.
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பில் இருந்து மீள்வதற்கு மத்திய அரசு நிவாரண நடவடிக்கைகள் எடுக்கக் கோரி திருப்பூரில் இன்று தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக எம்.பி. ஆ. ராசா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மோடியும், அமித் ஷாவும் இந்தியாவை விற்கிறார்கள். அம்பானியும், அதானியும் இந்தியாவை வாங்குகிறார்கள். இதன் நீட்சிதான் அமெரிக்கா விதித்த 50 சதவீத வரி. 50 சதவீத வரியை டிரம்ப் போடவில்லை. வரியை போடச் சொன்னதே மோடிதான்.
- செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இருப்பினும் சில மாதங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். ஆனால் அவர்களுக்கு இடையே இருந்த சலசலப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பிரிந்து சென்றார்.
இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கு அ.தி.மு.க. பிளவே காரணம் என கூறப்பட்டது. இதன்பின்னர் அ.தி.மு.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முயன்றும் முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைக்க முடியாது என கூறிவிட்டார்.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் கட்சியில் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியிருந்தார். இதன்பின், ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் பேசி வருவதாக கூறப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசுவேன். அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் விலகும் பட்சத்தில் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் விஜயின் த.வெ.க. வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகளை ஒன்று திரட்ட செங்கோட்டையன் முடிவு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரிந்துள்ளவர்கள் ஒருங்கிணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எது எப்படியோ... அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை... எதிரி இல்லை என்கிற வகையில் வருகிற சட்டசபை தேர்தல் வரை தமிழ்நாட்டு அரசியலில் எதுவும் நடைபெறலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை!
- தெருநாய்க்கு ஆதரவாக நடிகை அம்மு பேசிய கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
- தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் நடிகை அம்மு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.
இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.
இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.
பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெருநாய் சர்ச்சை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நடிகை அம்மு பேசிய கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் நடிகை அம்மு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
அந்த வீடியோவில், "குழந்தைகளை நாய் கடிக்கும் வரை பெற்றோர்கள் எங்கே போனார்கள். சாதாரணமாக ஒரு நாயை விரட்டக் கூடியவர்கள், அது குழந்தையை கடிக்கும் வரை என்ன செய்தார்கள். நாலு கால் இருக்கும் ஜீவன் வித்தியாசமாக கத்தினாலே நாங்கள் ஓடி வந்து பார்ப்போம். ஒரு குழந்தை நாய்க் கடியால் கதறுகிறது என்றால் அதை பார்த்துக் கொண்டு சும்மாவா இருந்தீர்கள். அந்த குழந்தையை காப்பாத்தனும்னு யாருக்குமே தோனலையா. இந்த நிகழ்ச்சி மொத்தம் 8 மணிநேரம் ஷூட்டிங் நடத்தப்பட்டு, அதில் வெறும் 45 நிமிடங்கள் தான் உங்களுக்கு காட்டப்பட்டுள்ளது. எங்கள் தரப்பில் பேசிய நிறைய விஷயங்களை எடிட் செய்துவிட்டனர். நிறைய இடங்களில் தங்களை பேசுவதற்கே அனுமதிக்கவில்லை" என்று கூறினார்.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ரோகிணி, "இப்பொழுது நாய்களின் உயிருக்காக நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். ஆனால் மனித உயிர்களுக்காக கவலைப்படுங்கள் என்று காலம் காலமாக சொல்லி கொண்டிருக்கிறோம்" என்று நடிகை அம்முவை விமர்சிக்கும் வகையில் பேசினார்.






