என் மலர்
இந்தியா

தாயார் பற்றி உருக்கம்: பிரதமர் மோடியின் பேச்சைக் கேட்டு கண்ணீர் வடித்த பா.ஜ.க. தலைவர்
- பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார்.
- அப்போது தனது தாயின் நினைவுகள் குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிகரமாகப் பேசினார்.
பாட்னா:
பீகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வாக்காளர் உரிமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். தர்பங்காவில் யாத்திரையின்போது சில காங்கிரஸ் தொண்டர்கள் பிரதமர் மோடி மற்றும் அவரது தாயாருக்கு எதிராக அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினர். இச்சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இதற்கிடையே, பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
அம்மா தான் உலகம். அம்மா தான் எங்கள் சுயமரியாதை. பாரம்பரியம் நிறைந்த இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வை நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. எனது தாயை அவமதித்துவிட்டனர். ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் என் தாயை மட்டுமல்ல, இந்த நாட்டின் தாய்மார்களையும், சகோதரிகளையும் அவமதித்து விட்டனர்.
என் இதயத்தில் எவ்வளவு வலி இருக்கிறதோ அந்த வலி பீகார் மக்களிடமும் உள்ளது. அரசியலில் எந்தத் தொடர்பும் இல்லாத எனது தாயாரை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் ஏன் விமர்சனம் செய்தனர்? உங்களை போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய என்னை விட்டுப் பிரிந்து இருந்தார்.
இப்போது என் அம்மா உயிருடன் இல்லை என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். சில காலத்திற்கு முன்பு 100 வயதை நிறைவு செய்த பிறகு அவர் நம் அனைவரையும் விட்டுச் சென்றார். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத என் அம்மாவை ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சியினர் அவமதித்து உள்ளனர். சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரை என்னால் பார்க்க முடிகிறது. இது மிகவும் வேதனையானது. என் அம்மா மிகவும் வறுமையில் என்னை வளர்த்தார். அவர் தனக்கென ஒரு புதிய சேலையை கூட வாங்க மாட்டார். எங்கள் குடும்பத்திற்காக ஒவ்வொரு பைசாவையும் சேமிப்பார் என தெரிவித்தார்.
இந்நிலையில், பிரதமர் மோடி உணர்ச்சி பொங்க பேசியதைக் கேட்ட மாநில தலைவர் கண்ணீர் சிந்தினார். பின்னால் அமர்ந்திருந்த பெண்கள் சிலரும் கண்ணீர் சிந்தினர்.






