என் மலர்
தலைப்புச்செய்திகள்
- சட்லெஜ், பியாஸ், ராவி நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது.
- பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மூழ்கின. வீடுகள் சேதமடைந்தன.
சண்டிகர்:
வட இந்தியாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ள அபாயம் உருவாகியுள்ளது. இதையடுத்து, பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளதாக மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
சட்லெஜ், பியாஸ், ராவி நதிகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. பல்வேறு மாவட்டங்களில் பயிர்கள் மூழ்கின. வீடுகள் சேதமடைந்தன. கனமழை காரணமாக பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீரில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி கனமழையால் கடுமையாக பாதிப்பு அடைந்த பஞ்சாப் மற்றும் ஜம்மு காஷ்மீருக்கு நிவாரண உதவியாக 5 கோடி ரூபாய் வழங்கினார்.
இதுதொடர்பாக அரியானா முதல் மந்திரி நயாப் சிங் சைனி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், பஞ்சாப், ஜம்மு காஷ்மீரில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளம் மிகவும் துயரமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் அரியானா அரசாங்கமும், மாநில மக்களும் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உறுதியாக நிற்கிறார்கள். முதல் மந்திரியின் நிவாரண நிதியிலிருந்து பஞ்சாப், ஜம்மு காஷ்மீருக்கு தலா 5 கோடி ரூபாய் உதவி அனுப்பப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளார்.
- தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், 364 நிறைவேற்றம்.
- 40 வாக்குறுதிகள் பரிசீலனைஉயில் உள்ளதை அமைச்சர்கள் விளக்கியுள்ளனர்.
தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறிய 505 வாக்குறுதிகளில், நமது #DravidianModel அரசு 364 வாக்குறுதிகளை நிறைவேற்றி, 40 வாக்குறுதிகள் பரிசீலனையில் உள்ளதைத் தக்க தரவுகளோடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சிவசங்கர், சோவி செழியன் ஆகியோர் விளக்கியுள்ளனர்.
இன்னும் ஒருபடி மேலே சொன்னால், முதல்வர் காலை உணவு திட்டம் (#CMBreakfastScheme), நான் முதல்வன் (#NaanMudhalvan), புதுமைப்பெண் (#PudhumaiPenn), தமிழ் புதல்வன் (#TamilPudhalvan) போன்ற இந்தியாவுக்கே முன்னோடியாகச் செயல்படுத்தப்படும் முத்திரைத் திட்டங்கள் தேர்தல் அறிக்கையில் (#ElectionManifesto) குறிப்பிடப்படாதவை!
முந்தைய ஆட்சியின் பத்தாண்டுகால நிதி நிர்வாகச் சீர்கேடு, கொரோனா நெருக்கடி, தமிழ்நாட்டை வெல்ல முடியாத மத்திய பா.ஜ.க. வன்ம அரசின் ஓரவஞ்சனை போன்ற தடைகளைக் கடந்து, சொன்ன சொல்லைக் காப்பாற்றியுள்ளோம்!
Accessibility, Accountability, Transparency, Inclusivity, Responsibility, Sustainability இதுதான் தி.மு.க.!
இவ்வாறு மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
- தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசாணை வெளியிட்டால் வாக்குறுதிகள் நிறைவேறி விடுமா? 'சீனி சக்கரை சித்தப்பா ஏட்டில் எழுதி நக்கப்பா' கதை தானா?
2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருவதாகவும், 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருப்பதாகவும் ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் திமுக அரசு எந்த அளவுக்கு மோசடி செய்கிறது என்பதற்கு இதைவிட மோசமான உதாரணம் இருக்க முடியாது. சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் 98% நிறைவேற்றப்பட்டு விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும், அமைச்சர்களும் தொடர்ந்து பொய்யுரைத்து வந்த நிலையில் உண்மை நிலையை மக்களுக்கு உணர்த்தும் வகையில், விடியல் எங்கே? என்ற ஆவணத்தை தயாரித்து கடந்த ஆகஸ்ட் 26-ஆம் நாள் வெளியிட்டேன்.
அந்த ஆவணத்தில் திமுக சார்பில் அளிக்கப்பட்டு இன்று வரை நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளை பட்டியலிட்டிருந்தேன். வெறும் 66 வாக்குறுதிகளை, அதாவது 13% வாக்குறுதிகளை மட்டுமே திமுக அரசு நிறைவேற்றியிருப்பதாகக் கூறியிருந்த நான், அவற்றையும் அந்த நூலில் பட்டியலிட்டிருந்தேன். அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டது மட்டுமின்றி, அவற்றில் எந்த அளவுக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது; எந்த அளவுக்கு செயல்படுத்தப் படவில்லை என்பதையும் விரிவாக விளக்கியிருந்தேன். அதை திமுக அரசால் மறுக்க முடியவில்லை.
இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் சக அமைச்சர்கள் இருவருடன் செய்தியாளர்களிடம் பேசிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், "திமுகவின் 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளை செயல்படுத்த அரசாணை வெளியிடப்பட்டு, அவற்றில் பல செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 40 வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் உள்ளன. ஆக மொத்தம் 404 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு விட்டன.
மத்திய அரசின் அனுமதிக்காக 37 வாக்குறுதிகள் காத்திருக்கின்றன. மீதமுள்ள 64 வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாதவை" என்று கூறியிருக்கிறார். இது அப்பட்டமான பொய்; அதைத் தவிர வேறொன்றுமில்லை. வாக்குறுதிகளின் எண்ணிக்கையை மட்டுமே அமைச்சர் தெரிவித்தாரே தவிர, அவற்றின் பட்டியலை வெளியிட வில்லை. இதிலிருந்தே பா.ம.க.வின் குற்றச்சாட்டுக்கு திமுகவிடம் பதில் இல்லை என்பதை அறியலாம்.
அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் எவ்வாறு நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளாக கருத முடியும்? என்று தெரியவில்லை. அமைச்சர் கூறுவதைப் போல 364 தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாகக் கூட தெரியவில்லை. ஒருவேளை அவ்வாறு பிறப்பிக்கப்பட்டிருந்தால் அவற்றை அரசு வெளியிட்டு இருந்திருக்கலாம். செய்யாத சாதனைகளையே செய்ததாகக் கூறி பெருமைப்பட்டுக் கொள்ளும் திமுக அரசு, யாருக்கும் பயனற்ற அரசாணை பிறப்பித்திருந்தால் கூட அதைக் கொண்டாடியிருக்கும். ஆனால், அதை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் செய்யவில்லை.
ஒருவேளை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் எல்லாம் வைகை ஆற்றில் வீசப்பட்டதைப் போல, பிறப்பிக்கப்பட்ட ஆணைகளை எல்லாம் கூவம் ஆற்றிலும், அடையாறு ஆற்றிலும் திராவிட மாடல் அரசு வீசி விட்டதோ, என்னவோ தெரியவில்லை.
ஒருவேளை அரசாணைகளே பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், வாக்குறுதிகள் அரசின் பரிசீலனையில் இருந்தாலும் அதனால் யாருக்கும் எந்த பயனும் இல்லை. அளிக்கப்பட்ட வாக்குறுதியின் பயன்கள் மக்களுக்கு முழுமையாக கிடைத்தால் மட்டும் தான் அது நிறைவேற்றப்பட்டதாக பொருள் ஆகும். அரசாணைகள் எனப்படுபவை ஏட்டுச் சுரைக்காய்கள் தான்.
அவற்றைக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் கூறுவதைப் போல அரசாணை வெளியிடப்பட்ட வாக்குறுதிகளையும், பரிசீலனையில் உள்ள வாக்குறுதிகளையும் நிறைவேற்றபட்டவையாக கருத வேண்டும் என்றால், அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல, "சீனி சக்கரை சித்தப்பா.... ஏட்டில் எழுதி நக்கப்பா" என்பதற்கு எடுத்துக்காட்டாகத் தான் இருக்குமே தவிர மக்களுக்கு பயன்படாது.
திமுக அரசின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கின்றன? என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டைக் கூறுகிறேன். 2021-ஆம் ஆண்டுக்கான திமுக தேர்தல் அறிக்கையில், 221 வாக்குறுதியாக, 'மாதம் ஒருமுறை மின் கட்டணத்தை கணக்கிடும் முறை கொண்டுவரப்படும். இதனால், ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வரை மிச்சமாகும்" என்று கூறப்பட்டிருந்தது. அந்த வாக்குறுதி இப்போது வரை நிறைவேற்றப்படவில்லை.
அந்த வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என்று இன்றைய செய்தியாளர் சந்திப்பில் மின்துறை அமைச்சரிடம் கேட்ட போது, அனைத்து வீடுகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு மாதந்திர மின் கட்டண வசூல் நடைமுறைக்கு வரும் என்று பதிலளிக்கிறார். ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்ட பிறகு தான் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்படவில்லை. ஏன் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று கேட்டால் ஸ்மார்ட் மீட்டரை காரணம் காட்டுவார்கள்.
திமுக ஆட்சி இன்னும் 6 மாதங்கள் மட்டுமே தொடரும் என்ற நிலையில், எப்போது ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்பது தெரியவில்லை. இப்படியாக திமுக அரசின் அனைத்து விளக்கங்களுமே, "அத்தைக்கு மீசை முளைத்தால்" என்ற ரீதியில் தான் உள்ளன. அத்தைக்கு ஒரு போதும் மீசை முளைக்காது; திமுக அரசு ஒருபோதும் வாக்குறுதிகளை நிறைவேற்றாது என்பது தான் உண்மை. அதேபோல், திமுகவால் இனி மீண்டும் ஆட்சிக்கு வரவே முடியாது என்பது தான் மறுக்க முடியாத எதார்த்தம் ஆகும்.
நான் வெளியிட்ட ஆவணத்தில் நிறைவேற்றப்படாத 373 வாக்குறுதிகளையும், அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட 66 வாக்குறுதிகளையும் பட்டியலிட்டிருக்கிறேன். திமுக அரசு உண்மையாகவே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியிருந்தால், அவற்றின் வரிசை எண் வாரியாக எந்தெந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன? அவற்றுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது? அதனால் எவ்வளவு பேர் பயனடைந்துள்ளனர்? என்ற விவரங்களை வெளியிட வேண்டும். இல்லாவிட்டால், வாக்குறுதிகளை நிறைவேற்றும் விஷயத்தில் நாங்கள் தோல்வியடைந்து விட்டோம்; தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டோம் என்று ஒப்புக்கொண்டு ஒட்டுமொத்த அரசும் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.
- பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
- 20 லட்சம் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வடக்கு பகுதிகளான ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி போன்ற மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. ஜம்மு-காஷ்மீர், இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு காரணமாக பேய்மழை கொட்டித் தீர்த்தது.
இதுபோன்று பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்திலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் மழை வெள்ள அபாய சூழ்நிலையை எவ்வாறு கையாள வேண்டும் எனக்கூறியது விசித்திரமாக உள்ளது.
இது தொடர்பாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப், செய்தி சேனலுக்கு பேட்டியளிக்கும் போது கூறியதாவது:-
வெள்ள அபாயம் போன்ற சூழ்நிலைக்கு எதிராக போராடும் மக்கள், மழை வெள்ளத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். தாழ்வான பகுதியில் வாழும் மக்கள் வெள்ளத்தை மழைநீர் வடிகால் கால்வாயில் விடுவதற்குப் பதிலாக கண்டெய்னர், தொட்டிகளில் சேமிக்க வேண்டும். மக்கள் வெள்ளத்தை ஆசீர்வாதமாக (Blessing) பார்த்து, சேமித்து வைக்க வேண்டும்.
10 முதல் 15 வருட பெரிய திட்டங்களை விட, சிறிய அணைகளை கட்ட வேண்டும். சிறிய அணைகள் கட்டும் வேலைகள்தான் உடனடியாக முடிவடையும். நீரை கால்வாயில் விட்டுக்கொண்டிருக்கிறோம். அதை நாம் கட்டாயம் சேமிக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
பஞ்சாப் மாகாணத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜூன் 26 முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை 854 பேர் மழைக் காரணமாக உயிரிழந்துள்ளனர். 1,100 பேர் காயம் அடைந்துள்ளனர்.
செனாப் ஆற்றில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் ஓடுகிறது. இன்றைக்குள் முல்தான் மாவட்டத்தை வெள்ளம் சென்றடைந்து, ராவி ஆற்று நீருடன் கலக்க வாய்ப்புள்ளது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
- குமாரசம்பவம் திரைப்படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது.
- இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது.
குமாரசம்பவம் படத்தை நடிகரும் இயக்குநருமான பாலாஜி வேனு கோபால் இயக்கியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளார்.
இப்படத்தில் குமரவேல், பாலசரவணன், ஜி.எம் குமார், வினோத் சாகர் மற்றும் லிவிங்ஸ்டன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படம் ஒரு ஃபீல் குட் காமெடி திரைப்படமாக உருவாகியுள்ளது. இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 12-ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை வீனஸ் இன்ஃபொடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
- கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின.
- பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என்றனர்.
காபுல்:
ஆப்கானிஸ்தானின் கிழக்குப் பகுதியில் உள்ள குனார் என்ற மாகாணம் மலைகள் நிறைந்த இடமாகும். இது பாகிஸ்தானை ஒட்டிய பகுதியாகும். இங்குள்ள வீடுகளில் பெரும்பாலானவை மண்ணால் கட்டப்பட்டவை.
நேற்று முன்தினம் இரவு 11.47 மணிக்கு குனார் மாகாணத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவாகி இருந்தது. நங்கர்ஹார் மாகாணத்தில் நுலாலாபாத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. இரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியானது. இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை உயரலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட மோசமான நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,411 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 3,000 பேர் காயமடைந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
- பலாத்கார வழக்கில் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. ஹர்மீத் சிங் கைது செய்யப்பட்டார்.
- செல்லும் வழியில் ஹர்மீத் சிங் போலீசார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
சண்டிகர்:
பஞ்சாபில் முதல் மந்திரி பகவந்த் சிங் மான் தலைமையில் ஆம் ஆத்மி தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் ஹர்மித் சிங் பதன்மஜ்ரா. கடந்த சட்டசபை தேர்தலில் சானோர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இவர்மீது ஜிரக்பூரை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹர்மீத் சிங்கை கைதுசெய்தனர்.
இந்நிலையில், காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஹர்மீத் சிங்கும், அவரது உதவியாளர்களும் போலீசாரை நோக்கி சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
போலீசார் கஸ்டடியில் இருந்து ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. ஹர்மித் சிங் தப்பி ஓடியது பஞ்சாபில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைமறைவாகி இருக்கும் எம்.எல்.ஏ ஹர்மீத் சிங்கை தேடும் பணியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
- இந்தியா- பாகிஸ்தான் மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக அஜர்பைஜான் கருத்து.
- பாகிஸ்தானோடு சகோதரத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் என அந்நாட்டு அதிபர் பேசியதாக செய்தி வெளியானது.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு சீனாவில் உள்ள தியான்ஜின் நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டின்போது அஜர்பைஜான் இந்த அமைப்பின் முழு உறுப்பினராகும் முயற்சியை இந்தியா தடுத்து நிறுத்தியது.
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்ததால் இந்தியா பழிவாங்க முயல்கிறது என குற்றம்சாட்டியுள்ளது.
மாநாடு நடைபெற்ற இடத்தில் அஜர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்-ஐ சந்தித்தார். அப்போது, இந்தியா- பாகிஸ்தான் இடையிலான மோதலில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார். மேலும், உலகளாவிய மன்றங்களில் இந்தியாவின் நடவடிக்கை இருந்தபோதிலும், அஜர்பைஜான் பாகிஸ்தானோடு சகோதரத்துவத்திற்கு முன்னுரிமை அளிக்கும் எனக் கூறியதாக செய்திகள் வெளியானது.
- கிம் ஜாங் உன் கடைசியாக 2023ஆம் ஆண்டு ரஷியா சென்றிருந்தார்.
- 2019ஆம் ஆண்டுக்குப்பின் தற்போது சீனா சென்றடைந்துள்ளார்.
வடகொரியாவின் அதிபராக கிம்ஜாங் உன் உள்ளார். இவரது தலைமையில் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்பது உலகின் மற்ற நாடுகள் அறிந்து கொள்ள முடியாத நிலை உள்ளது. அடிக்கடி ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்கா மற்றும் தென்கொரியாவுக்கு சவால் விடுத்து வருகிறார். அணுஆயுதம் வைத்திருக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று.
அதிபர் கிம் ஜாங் உன்-ஐ வெளியில் காண்பது அரிதாகும். மேலும், வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்வதும் அரிது. ரஷியா அல்லது சீனா போன்ற நாடுகளுக்கு மட்டும் எப்போதாவது சுற்றுப் பயணம் மேற்கொள்வது உண்டு.
இந்த நிலையில் இன்று கிம்ஜாங் உன் சீனா சென்றடைந்துள்ளார். நேற்றிரவு வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் இருந்து புறப்பட்டு இன்று சீனா சென்றடைந்துள்ளார். குண்டு துளைக்காத பிரத்யேக ரெயில் மூலம் சென்றுள்ளார். சீனாவில் நடைபெறும் ராணுவ அணுவகுப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
2023ஆம் ஆண்டு ரஷியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து, புதினை சந்தித்து பேசினார். அதன்பின் இதுதான் அவருடைய வெளிநாட்டு பயணம். இதற்கு முன்னதாக 2019-ல் கிம் ஜாங் உன் சீனா சென்றுள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியாவுக்கு ஆயுதங்கள் சப்ளை செய்வதுடன், வீரர்களும் ரஷியாவுக்கு ஆதரவாக சண்டையிட அனுப்பி வைத்துள்ளதாக உக்ரைன் குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.
- கட்சியின் நிர்வாகிகளை கவிதா வெளிப்படையாக விமர்சித்து பேசினார்.
- பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஐதராபாத்:
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. சகோதரர் ராமா ராவுடனும் மோதல் வெடித்தது.
இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேசினார் கவிதா. மேலும், கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில், கவிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- ஸ்மார்ட்போனில் மீடியாடெக்-இன் டிமென்சிட்டி 8400 சிப்செட் இடம்பெறும் என்பதைக் குறிக்கிறது.
- ஸ்மார்ட்போன்கள் பிளாக், கிரே மற்றும் கோல்டு நிற விருப்பங்களில் வரும்.
சியோமி 15T சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஸ்டான்டர்டு சியோமி 15T மற்றும் சியோமி 15 Pro மாடல் ஆகியவை அடங்கும். சியோமி 15T மற்றும் சியோமி 15T Pro மாடல்களின் சாத்தியமான விலை மற்றும் நிறங்கள் பற்றிய தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
புதிய ஸ்மார்ட்போன்கள் லெய்கா டியூன் செய்யப்பட்ட கேமராக்களைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சியோமி 15T மாடல் இப்போது ஒரு பிரபலமான பென்ச்மார்க்கிங் தளத்தில் தோன்றியுள்ளது. இதில் ஸ்மார்ட்போனின் AI செயல்திறனுக்கான முடிவுகள் அதன் சிப்செட், ரேம் மற்றும் ஓஎஸ் விவரங்களைக் காட்டுகிறது.
சியோமி 15T என்று நம்பப்படும் சியோமி 25069PTEBG என்ற மாடல் எண்ணைக் கொண்ட ஸ்மார்ட்போன் கீக்பென்ச் (Geekbench AI) தளத்தில் இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் பதிவேற்றப்பட்ட முடிவுகள், இந்த கைபேசியில் ஆக்டா-கோர் சிப்செட் உள்ளது. அதில் ஒரு பிரைம் கோர் (3.25GHz), மூன்று செயல்திறன் கோர்கள் (3.00GHz) மற்றும் நான்கு செயல்திறன் கோர்கள் (2.10GHz) உள்ளன என்பதை வெளிப்படுத்துகின்றன. இவை இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக்-இன் டிமென்சிட்டி 8400 சிப்செட் இடம்பெறும் என்பதைக் குறிக்கிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களில் சியோமி 15T 67W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கக்கூடும் என்று கூறுகின்றன . 12GB + 256GB மாடலின் விலை EUR 649 (இந்திய மதிப்பில் ரூ. 66,000) என்று கூறப்படுகிறது. இதற்கிடையில், சியோமி 15T Pro மாடலின் விலை முறையே EUR 799 (இந்திய மதிப்பில் ரூ. 81,000) மற்றும் 12GB + 256GB மற்றும் 16GB + 512GB மாடல் EUR 899 (இந்திய மதிப்பில் ரூ. 92,000) என இருக்கலாம். இந்த ஸ்மார்ட்போன்கள் பிளாக், கிரே மற்றும் கோல்டு நிற விருப்பங்களில் வரும்.

சியோமி 15T Pro மாடலில் மீடியாடெக் டிமென்சிட்டி 9400+ சிப்செட், 90W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,500mAh பேட்டரி மற்றும் அதிக ரிப்ரெஷ் ரேட் கொண்ட ஃபிளாட் OLED டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். இது IP69 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டிருக்கலாம்.
கேமராவை பொருத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 50MP OmniVision OVX9100 பிரைமரி கேமரா, 13MP அல்ட்ராவைடு கேமரா மற்றும் 50MP சாம்சங் JN5 5X டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 32MP செல்ஃபி கேமரா வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன.
- அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கென்னல் கிளப், மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் தேசிய அளவிலான நாய்கள் கண்காட்சி 2 நாட்கள் நடைபெற்றது. ஜெர்மன் ஷெப்பர்டு, ராட்வீலர், டாபர்மேன், லேப்ராடர், சிப்பிபாறை, ராஜபாளையம், கோம்பை உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இனங்களை சேர்ந்த 365 நாய்கள் இதில் பங்கேற்றன.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் நாய்கள் அழைத்து வரப்பட்டிருந்தன. இந்த நாய்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. குறிப்பாக நாய்களின் மோப்பதிறன், பராமரிப்பு முறை, உரிமையாளர்களின் கட்டளைக்கு கட்டுப்படுதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டது. அனைத்து வகை போட்டிகளிலும் சிறந்த நாய்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்த போட்டியில் நாய்களின் சாகச திறமைகளை சுற்றுலா பயணிகள் கண்டு வியப்படைந்தனர். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த நாய்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் வளர்த்த இங்கிலீஸ் ஷட்டர் வகை நாய் தட்டிச்சென்றது. அந்த நாயுடன் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.






