என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொழிற்துறையினருக்கு முழு பாதுகாப்பு: எடப்பாடி பழனிசாமி
- ஒரு தொழிலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போட்டால் வந்து விடாது.
- கப்பலூர் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
மதுரை:
'தமிழகத்தை காப்போம் மக்களை மீட்போம்' சுற்றுப்பயணத்திற்காக மதுரை வந்துள்ள அ.தி.மு.க. பொதுச்செயலாளர் இன்று வியாபாரிகள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது சங்கத்தினர் எய்ம்ஸ் மருத்துவமனை, மதுரை-தூத்துக்குடி சாலை, விமான நிலைய விரிவாக்கம், தென் தமிழகத்தில் தொழிற் வளர்ச்சி, உலக முதலீட்டாளர் மாநாட்டை மதுரையில் நடத்த வேண்டும், கப்பலூர் சுங்கசாவடியை அகற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலிறுத்தினர். பின்னர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அ.தி.மு.க. அரசு அமைந்தவுடன் பல்வேறு அமைப்பை சார்ந்தவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகள் ஆராய்ந்து நடவடிக்கைகள் எடுக்கப்படும். பல்வேறு அரசியில் கட்சியினரும் இங்கு வந்துள்ளீர்கள். தொழிலும், அரசியலும் அப்பாற்பட்டது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது 2015-ம் ஆண்டு சென்னையில் உலக முதலீட்டாளர் மாநாடு நடத்தப்பட்டு ரூ.2.42 லட்சம் கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. எனது தலைமையிலான அம்மா ஆட்சியில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் 304 ஒப்பந்தங்கள் போடப்பட்டன. அவை தற்போது படிப்படியாக வந்து கொண்டிருக்கிறது.
ஒரு தொழிலுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மட்டும் போட்டால் வந்து விடாது. அதற்கு நிதி, நிலம் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முடிந்த பிறகு தான் தொழிற்சாலை வரும். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டு வரப்பட்டு பல லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. மதுரை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும்.
அதேபோல் கோவில் நகரமான இங்கு சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய அ.தி.மு.க. அரசு முழு நடவடிக்கை எடுக்கும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலம் அதிகமானோருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கிறது. அந்த தொழிலுக்கு குறிப்பாக நிலம் தேவை. தற்போது நிலத்தை கையகப்படுத்துவது என்பது அவ்வளவு எளிதானது அல்ல. இருப்பினும் விவசாயிகள் முன் வந்தால் நிலம் கையகப்படுத்தப்பட்டு தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கப்பலூர் சிப்காட் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும். மின் தட்டுப்பாடு ஏற்பட்டால் தொழில்கள் பாதிக்கப்படும். எனவே வெளிமாநிலங்களில் இருந்து நம் மாநிலத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் மின்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஓட்டல் தொழிலில் அச்சுறுத்தல் உள்ளதாக குறிப்பிட்டார்கள். அ.தி.மு.க. ஆட்சி வந்தவுடன் சட்டம் ஒழுங்கு காப்பாற்றப்படும். அம்மா ஆட்சியிலும், எனது ஆட்சியிலும் எனது தலையீடு இல்லாமல் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டால் தான் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும். அ.தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் தொழிற்துறையினருக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும். விளையாட்டுக்கு முன்னுரிமை அளிக்க சலுகைகளும், இட ஒதுக்கீடும் வழங்க ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்துறையினரின் பிரச்சனைகளை தீர்க்க அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்படும்.
கோவில் நகரமான மதுரையை தொழில் நகரமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது ஏராளமான திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக ரூ.1300 கோடியில் முல்லை பெரியாறு கூட்டு குடிநீர் திட்டம், வைகை அணையில் 4 தடுப்பணைகள், ரூ.400 கோடியில் சாலை மேம்பாட்டு திட்டங்கள், பாதாள சாக்கடை வசதிகள், குடிமராமத்து பணிகள், பறக்கும் பாலம் என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அ.தி.மு.க. ஆட்சியில் 2 முறை பயிர் கடன் தள்ளுபடி, வளர்ச்சி நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது.
இங்கு தொழிற்துறையினர் கொடுத்துள்ள பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக கவனமுடன் பரிசலீத்து நடவடடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






