என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ஓ.பி.எஸ்., டி.டி.வி., சசிகலாவை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டம்?
- செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
- ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் என அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது. இருப்பினும் சில மாதங்களுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் இணைந்தனர். ஆனால் அவர்களுக்கு இடையே இருந்த சலசலப்பு காரணமாக ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் பிரிந்து சென்றார்.
இதனிடையே, பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இதற்கு அ.தி.மு.க. பிளவே காரணம் என கூறப்பட்டது. இதன்பின்னர் அ.தி.மு.க.வில் இணைய ஓ.பன்னீர்செல்வம் முயன்றும் முடியவில்லை. எடப்பாடி பழனிசாமி பிடிவாதமாக ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை அ.தி.மு.க.வில் இணைக்க முடியாது என கூறிவிட்டார்.
இதற்கிடையே, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிருப்தியில் இருந்து வருகிறார். இதனால் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. மேலும் கட்சியில் செங்கோட்டையனுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் குறைக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் மலர அனைவரும் கைகோர்க்க வேண்டும். ஆட்சியமைக்க ஒன்றுபட்ட, வலிமையான அதிமுகதான் ஒரே தீர்வு, ஒன்றுபடுவோம், வென்று காட்டுவோம்" என்று அதிமுக நிர்வாகிகள், தொண்டர்களுக்கு சசிகலா கடிதம் எழுதியிருந்தார். இதன்பின், ஓ.பி.எஸ், டி.டி.வி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் பேசி வருவதாக கூறப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் இருந்த செங்கோட்டையன் அ.தி.மு.க.வில் இருந்து விலக முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில் வருகிற 5-ந்தேதி மனம் திறந்து பேசுவேன். அன்று முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் அதுவரை பொறுமையாக இருங்கள் என்று செங்கோட்டையன் இன்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் இருந்து செங்கோட்டையன் விலகும் பட்சத்தில் தி.மு.க.வில் இணைவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் விஜயின் த.வெ.க. வில் இணையலாம் என்றும் கூறப்படுகிறது. மேலும், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க. சக்திகளை ஒன்று திரட்ட செங்கோட்டையன் முடிவு என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது, அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்த ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரை ஒருங்கிணைக்க செங்கோட்டையன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிரிந்துள்ளவர்கள் ஒருங்கிணைந்து எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக களமிறங்கலாம் என அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தியில் உள்ள தலைவர்கள் சசிகலாவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
எது எப்படியோ... அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை... எதிரி இல்லை என்கிற வகையில் வருகிற சட்டசபை தேர்தல் வரை தமிழ்நாட்டு அரசியலில் எதுவும் நடைபெறலாம் என்பது தான் நிதர்சனமான உண்மை!






