என் மலர்
தலைப்புச்செய்திகள்
- அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
- பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.
மதுரை:
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் என்பவரை நகை திருட்டு புகாா தொடர்பாக சிறப்பு படை பிரிவு போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் இறந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டனர். மேலும் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் 2 மாதத்திற்கும் மேலாக இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தினர். அஜித்குமாரின் குடும்பத்தினர், நண்பர்கள், கோவில் ஊழியர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவின்படி விசாரணை அறிக்கையை சி.பி.ஐ. அதிகாரிகள் மதுரை மாவட்ட கோர்ட்டில் தாக்கல் செய்தனர். அறிக்கையில் பிழைகள் இருப்பதாக கூறி மாவட்ட நீதிமன்றம் அதனை திருப்பி அனுப்பியது. பிழைகளை சரி செய்து மீண்டும் அறிக்கையை தாக்கல் செய்ய சி.பி.ஐ. நடவடிக்கையை எடுத்து வருகிறது.
இந்தநிலையில் அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதா கொடுத்த நகை திருட்டு புகாரையும் சி.பி.ஐ. விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. அதன்படி சி.பி.ஐ. அதிகாரிகள் நிகிதா புகார் தொடர்பான விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக அருண்குமார், கோவில் ஊழியர்கள், அஜித்குமார் தாக்குதல் தொடர்பாக வீடியோவை எடுத்த சத்தீஸ்வரன், நிகிதாவிடம் இருந்து கார் சாவி வாங்கிக்கொடுத்த கண்ணன், அஜித் நண்பர் வினோத்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் இவர்களுக்கு முறையான சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்படும் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவித்தன.
- இந்தியாவின் பொறியியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு மரியாதை செலுத்துகிறேன்.
- வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் எங்கள் என்ஜினீயர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-
இன்று என்ஜினீயர்கள் தினம். இதையொட்டி இந்தியாவின் பொறியியல் நிலப்பரப்பில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். தங்கள் படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம், புதுமைகளை முன்னெடுத்து, துறைகளில் கடுமையான சவால்களைச் சமாளிக்கும் அனைத்து என்ஜினீயர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் எங்கள் என்ஜினீயர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்தனர்.
- கைகுலுக்காமல் இருப்பது குறித்து இந்திய அணி ஏற்கனவே போட்டி நடுவரிடம் தெரிவித்து இருந்தது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 127 ரன்னில் சுருண்டது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா 131 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வெற்றிக்கு பிறகு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்குவதை தவிர்த்தனர். முன்னதாக டாஸ் போடும் போதும் கை குலுக்கல் நடைபெறவில்லை. இதே போல இந்திய வீரர்கள் அறையும் மூடப்பட்டது.
இது குறித்து சூர்யகுமார் யாதவ் கூறும் போது, 'நாங்கள் விளையாட மட்டுமே வந்தோம். நாங்கள் அவர்களுக்கு பதில் அளித்தோம். சில விஷயங்கள் விளையாட்டு திறனுக்கு அப்பாற்பட்டது' என்றார்.
பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா கூறும் போது, 'நாங்கள் கைகுலுக்க விரும்பினோம். ஆனால் எதிர் அணி வீரர்கள் அதை செய்யாததால் ஏமாற்றம் அடைந்தோம். எங்களது ஆட்டத்திலும் ஏமாற்றம் அளித்தது. ஆனாலும் கைகுலுக்க விரும்பினோம்' என்றார். போட்டி முடிந்த பிறகு நடைபெற்ற பரிசளிப்பு விழாவை பாகிஸ்தான் கேப்டன் புறக்கணித்தார்.
இதற்கிடையே கை குலுக்காதது தொடர்பாக இந்திய அணிக்கு எதிராக ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் அளித்தது. இதற்கிடையே கைகுலுக்காமல் இருப்பது குறித்து இந்திய அணி ஏற்கனவே போட்டி நடுவரிடம் தெரிவித்து இருந்தது.
- தேர்தலில் ஜெயிக்க போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான்.
- தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடக்கிறது.
பாஜக-வின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: ஓ. பன்னீர்செல்வத்திடம் நீங்கள் 2 நாட்களுக்கு முன்பாக பேசியதாக கூறியுள்ளார். அவரை கூட்டணியில் இணைக்க வாய்ப்புள்ளதா?
பதில்: அதையெல்லாம் இப்போது கூற முடியாது.
கேள்வி: டி.டி.வி. தினகரன், விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, சீமான் தலைமையில் ஒரு கூட்டணி என்று கூறி 4 முனை போட்டி என்று கூறுகிறாரே? நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: 4 முனை போட்டியும் நடக்கலாம். 5 முனை போட்டியும் நடக்கலாம். தேர்தலில் ஜெயிக்க போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான்.
கேள்வி: மதுரையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உடனும் நான் பேசி இருக்கிறேன். அவர் டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்திக்க இருக்கிறார். அதன் பிறகு நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும்.
கேள்வி: செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அவர் கூட்டணி கட்சியில் இருக்கிறார். அதனால் சென்று பார்க்க இருக்கிறார்.
கேள்வி: அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதை தீர்க்க வாய்ப்பு இருக்கிறதா?
பதில்: அ.தி.மு.க.வில் குழப்பமே இல்லையே.
கேள்வி: செங்கோட்டையன் திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் அல்லவா?
பதில்: அது குழப்பம் என்று சொல்ல முடியாது.
கேள்வி: நடிகர் விஜய் பிரசார பயணத்தில் ஈடுபட்டுள்ளார். பெரம்பலூரில் மக்களை சந்திக்கவில்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்?
பதில்: அடுத்தவர்கள் கட்சி கூட்டத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை. அது அவர்களின் நிர்வாகத்தை பொருத்தது. கூட்டம் சேர்த்தால் ஜெயிக்க முடியுமா?
ஓட்டு வாங்கினால் தான் ஜெயிக்க முடியும் என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடக்கிறது. பாரதீய ஜனதா யாரையும் எதிரி கட்சியாக கருதாமல் எதிர்கட்சியாக தான் பா.ஜ.க. கருதுகிறது. தனிப்பட்ட விமர்சனங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றார்.
- சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.
- சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது.
வக்பு திருத்த சட்டம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ தள பதிவில்,
தி.மு.க.வும் மற்ற மனுதாரர்களும் வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில், ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள முக்கியத் திருத்தங்களுக்குத் தடை விதித்து மாண்பமை உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
1) வக்புக்குச் சொத்தை அளிக்க, 5 ஆண்டு இஸ்லாத்தைக் கட்டாயமாக நடைமுறையில் கடைப்பிடித்திருக்க வேண்டும் எனும் விதிக்குத் தடை
2) வக்பு நிலத்தை அரசு நிலம் என்று ஒரு குற்றச்சாட்டு எழுந்தாலே, உரிய அதிகாரி அறிக்கை அளிக்கும்வரை அல்லது அரசு முடிவெடுக்கும் வரை அச்சொத்தைப் பறிக்கும் அதிகாரத்துக்குத் தடை
3) 'வக்பு பயனர்' என்பதை நீக்கும் மாவட்ட ஆட்சித் தலைவருக்கான அதிகாரத்துக்குத் தடை (நீண்டகால மதப் பயன்பாட்டின் அடிப்படையில் வக்பு சொத்துகளாகக் கருதப்படும் சொத்து)
4) மத்திய வக்பு வாரியத்தில் நான்குக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரை சேர்ப்பது, மாநில வக்பு வாரியங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம் அல்லாதோரைச் சேர்ப்பதற்குத் தடை. இதனால், இந்த வாரியங்களில் முஸ்லீம்கள் பெரும்பான்மையாக இருப்பது உறுதிசெய்யப்படும்.
ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிராக, சட்டவிரோதமாகச் செய்துள்ள திருத்தங்களை நீக்குவதை நோக்கிய முக்கிய நகர்வாக இன்றைய நீதிமன்ற உத்தரவு அமைந்துள்ளது.
இந்த சட்டத்திருத்த முன்வரைவு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்தே, தி.மு.க. இதனைத் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள பலரோடு சேர்ந்து வெற்றியும் கண்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான தமிழ்நாடு அரசும் ஒன்றிய அரசு வக்பு திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்திச் சட்டமன்றத்தில் திர்மானம் நிறைவேற்றி, ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் பா.ஜ.க.வின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
இந்நிலையில், இன்றைய உத்தரவு இஸ்லாமியர்களின் மத உரிமைகளையும் அடிப்படை உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தையும் மாண்பமை உச்சநீதிமன்றம் பாதுகாக்கும் என மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை வலுப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- ஒரு காலத்திலும் அ.தி.மு.க.வின் ஓட்டு விஜய்க்கு போகாது.
- உதயநிதியை மை டியர் குட்டி சாத்தான் என்று சொல்லி இருக்கலாம்.
சென்னை:
அண்ணாவின் 117-வது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
செங்கோட்டையன் மறப்போம் மன்னிப்போம் என்று பேசி உள்ளார். அது குறித்து பொதுச்செயலாளர்தான் முடிவு செய்ய வேண்டும். அண்ணா, எம்.ஜி.ஆர். மறுக்க முடியாத மாபெரும் சக்திகள். விஜய் எம்.ஜி.ஆரின் படத்தை பயன்படுத்தியது வரவேற்கும் விசயம்தான்.
அண்ணா படத்தையோ எம்.ஜி.ஆர். படத்தையோ பயன்படுத்துவதால் அ.தி.மு.க.வின் ஓட்டுகள் அவருக்கு போகாது. ஒரு காலத்திலும் அ.தி.மு.க.வின் ஓட்டு விஜய்க்கு போகாது. விஜய்க்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்.
விஜய் ஸ்டாலினை அங்கிள் என்றார்... சி.எம். சார் என்றார்... என்னை கேட்டு இருந்தால் நானே சொல்லி இருப்பேன். சி.எம். ஸ்டாலின் சார் என்று சொல்லாமல்.. சி.எம். சாத்தான் சார் என்று சொல்லி இருக்கலாம். உதயநிதியை மை டியர் குட்டி சாத்தான் என்று சொல்லி இருக்கலாம்.
அமைச்சர் நேரு மழைக்காலத்திற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையில் கவனம் செலுத்தாமல் கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில்தான் கவனம் செலுத்துகிறார். இந்த சாத்தான் ஆட்சியில் லஞ்சம், ஊழல், கட்டபஞ்சாயத்து தான் நடக்கிறது.
எங்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் ஸ்டைலை பின்பற்றுவதால் எங்கள் கட்சி ஓட்டு விஜய்க்கு போகாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
- இந்த விழாவில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்றனர்.
விழாவில் பேசிய இளையராஜா, "சில நாட்களுக்கு முன்பு சூப்பர்ஸ்டார் எனக்கு போன் செய்து நாம பண்ணதெல்லாம் மேடையில் சொல்லப்போகிறேன் என்று கூறினார். பெல்பாட்டம் பேண்ட் போட்டுக்கிட்டு நல்லா கிராப் முடி விட்டுட்டு கையில பட்டையா ஒரு வாட்ச் கட்டிக்கிட்டு... என்று கூறிய இளையராஜா ரஜினிகாந்திடம் சொல்லவா சொல்லவா... என்று கூறி மகேந்திரனும் நீங்களும் நானும் உக்காந்து குடிச்சோம்.
ஸ்டூடியோவில் வந்து என்னிடம் ரஜினி சொல்றாரு... நாம குடிச்சோம் நியாபமிருக்கா... நீங்க அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு ஆடின ஆட்டம் இருக்கே... அதை சொல்ல போறேன் என்றார். நீங்க என்னவேனாலும் சொல்லிக்கோங்க எனக்கு கவலையில்லை என்றேன்" என்று இளையராஜா தெரிவித்தார்.
இதைகேட்டு இருக்கையில் இருந்து எழுந்து இளையராஜா அருகில் வந்து பேசிய ரஜினி, "ஜானி படத்திற்கு இசையமைக்கும்போது நானும் மகேந்திரனும் குடிச்சோம், அப்போது இளையராஜாவிடம் குடிக்கிறீர்களா என்று கேட்டோம். அவரும் ஓகே சொல்ல... அப்போது அரை பாட்டில் பீர் குடிச்சிட்டு அவரு போட்ட ஆட்டம் இருக்கே... 3 மணி நைட் வரைக்கும்... ஊருல இருக்க கிசுகிசு எல்லாம் கேக்குறாரு... குறிப்பா கதாநாயகிகளை பத்தி... அண்ணே பெரிய காதலன்...அதான் இந்த பாட்டெல்லாம்... அப்படி இருந்தவரு... இன்னும் நிறைய இருக்கு... அடுத்தவாட்டி வைச்சிக்கிறேன்" என்று கூறிவிட்டு இருக்கையில் அமர்ந்தார். ரஜினி பேச்சால் அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது.
இதனையடுத்து பேசிய இளையராஜா, "இல்லாததை எல்லாம் ரஜினி அடிச்சி விட்டு போறாரு" என்று கிண்டலடித்தார்.
மது அருந்தியதாக இளையராஜாவும் ரஜினியும் பேசிக்கொண்டது இணையத்தில் பேசுபொருளானது. இளையராஜாவின் சாதனைகள், சிம்பொனி இசை என பேச எவ்வளவோ விஷயங்கள் இருந்தும் குடிப்பழக்கம் பற்றி இளையராஜாவும் ரஜினியும் பேசியதே இணையத்தில் முக்கிய விவாத பொருளாக மாறியது.
இளையராஜாவுக்காக அரசு நடத்திய விழாவில் குடி பற்றிய உரையாடல் பேசுபொருளானது சர்ச்சையானது. இதனையடுத்து பலரும் ரஜினி மற்றும் இளையராஜா பேசிய 'குடி' பற்றிய உரையாடல் அந்த மேடையில் தேவையற்றது என்று இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
- ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
* தமிழ்நாட்டில் இன்று முதல் 19-ந்தேதி வரை 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* திருப்பத்தூர், தருமபுரி, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* தமிழகத்தில் வரும் 16-ந்தேதி ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* தமிழகத்தில் வரும் 17-ந்தேதி 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* தமிழகத்தில் வரும் 18-ந்தேதி 11 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு உள்ளது. நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* தமிழகத்தில் வரும் 19-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட் - தினேஷ் ராஜ் வழங்கும், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் "காட்ஸ்ஜில்லா" திரைப்படம்; புதுவிதமான கற்பனையுடன் உருவாகும் இந்த திரைப்படம் ஒரு "ரோம்-காம்" வகையாகும். இப்படத்தில் தர்ஷன் கதாநாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், மற்றும் பலர் நடிக்கின்றனர்.இயக்குனர் மோகன் குரு செல்வா இயக்கத்தில் பூஜையுடன் தொடங்கியது "காட்ஸ்ஜில்லா" திரைப்படம்.
சமீபத்தில் வெளியாகி, விமர்சகர்களின் பாராட்டை பெற்ற "பிளாக் மெயில்" படத்தின் வெற்றியை தொடர்ந்து வித்யாசமான "ரோம் காம்" படமான "காட்ஸ் ஜில்லா" படத்தை தயாரிக்கும் சினிமா மீடியா அண்ட் என்டர்டெய்ன்மென்ட் லிமிடெட், க்ரியேடிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் ஜி. தனஞ்ஜெயன் மற்றும் PGS புரொடக்ஷன்ஸ்.

பூஜை விழாவில் படக்குழிவினர், மற்றும் சினிமா துறையை சேர்ந்த பலர் கலந்துக்கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்: தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு , FEFSI தலைவர் R.K. செல்வமணி, இயக்குனர் விஜய், இயக்குனர் சசி மற்றும் இயக்குனர் பாண்டிராஜ்.
கவுதம் வாசுதேவ் மேனன், தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, ரோபோ சங்கர், KPY வினோத், பிளாக் பாண்டி, PGS ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப குழு விவரம்:ஒளிப்பதிவு – சிவராஜ்படத்தொகுப்பு – அரவிந்த் பி. ஆனந்த்இசை – கார்த்திக் ஹர்ஷாகலை இயக்கம் – சௌரப் கேசவ்தனித்துவமான திரைக்கதைக்கு பெயர் பெற்ற இயக்குநர் மோகன் குருசெல்வா, பொழுதுபோக்கும் உணர்ச்சியும் கலந்த திரைப்படத்தை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
- ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் - ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கும் சூழல் உள்ளது. 50 சதவீத வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த நிலையில், அமெரிக்க இறக்குமதியாளர்கள் இப்போதைக்கு ஆடைகளை அனுப்ப வேண்டாம் என்று கூறியதால் தற்போது திருப்பூர் பனியன் நிறுவனங்களில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. நிலைமை சரியானதும் அனுப்புமாறு அமெரிக்க இறக்குமதியாளர்கள் கூறியுள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக சில பனியன் நிறுவனங்களில் ஆடைகள் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூரில் பல ஆண்டுகளாக ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் பீகாரை சேர்ந்த பிரதான் குமார் கூறியதாவது:- அமெரிக்க வரி தாக்கத்தால் ஏற்படும் நிதி மந்தநிலையால் அச்சத்தில் உள்ளோம்.30 ஆண்டுகளாக சுறுசுறுப்புடன் இயங்கி வந்த எனது நிறுவனம் இப்போது அமைதியாகி விட்டது.
கடந்த 3 வாரங்களாக வேலை ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்ததால்,தொழிலாளர்கள் சிலரை மட்டும் பணியில் அமர்த்தி உள்ளேன். மற்றவர்களை பணிநீக்கம் செய்துள்ளேன். வேலை செய்பவர்களில் ஒரு சிலர் மதியம் வரை மட்டுமே வேலை செய்கிறார்கள்.இதனை நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பேரழிவு.
நான் 20 வருடங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தேன். பனியன் நிறுவனங்களில் சிறிய வேலைகளை செய்தேன். ஆடை உற்பத்தியில் உள்ள நுணுக்கங்களை படிப்படியாகக் கற்றுக்கொண்டேன். பின்னர் பெரிய நிறுவனங்களில் துணி வாங்குதல், வெட்டுதல் மற்றும் பின்னல் போன்ற முழு அளவிலான வேலைகளையும் அவுட்சோர்ஸ் செய்து , பின்னர் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டேன்.
முன்னேற்ற நிலையில் இருந்த திருப்பூர் இப்போது அமெரிக்க வரி விதிப்பால் ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளதை பார்க்கிறேன்.பள்ளியில் படிக்கும் எனது 3 குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை. இ.எம்.ஐ. செலுத்த முடியாமல் தவிக்கிறேன் என்றார்.
இவரைப்போலவே, வட இந்திய மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்து தொழில் செய்யும் பலர் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இருந்து திருப்பூர் வந்த சனோஜ் குமார் கூறுகையில், நான் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். அமெரிக்க வரி விதிப்பு பாதிப்பு காரணமாக ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது தங்கியிருப்பவர்களுக்கு வாரத்தில் சில நாட்கள் மட்டும் வேலை வழங்கப்படுகிறது. கொரோனாவின் போது இதேபோன்ற நெருக்கடி ஏற்பட்டது. வேலை இல்லாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக திருப்பூரை விட்டு வெளியேறினர். அமெரிக்க வரி விதிப்பால் தற்போது, நாங்கள் 40 சதவீத வேலைகளை மட்டுமே செய்ய முடிகிறது. தற்போதுள்ள தொழிலாளர்களுக்கு கூட வேலை இல்லாததால், எனது சொந்த ஊரில் உள்ளவர்கள் திருப்பூருக்கு வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளேன். எனது நிறுவனத்தில் பணியாற்றிய சிலர் கட்டுமானப் பணிகளுக்கு மாறியுள்ளனர் என்றார்.
அமெரிக்க வரி பாதிப்பு திருப்பூர் பனியன் தொழிலை மட்டுமின்றி உள்ளூர் வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. இது குறித்து செல்போன் கடை நடத்தி வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் திருப்பூர் வந்த போது வெறுங்கையுடன் வந்தேன். அணிந்திருந்த ஆடைகள் மட்டுமே இருந்தன. நான் முதலில் ஒரு உதவியாளராக பணியை தொடங்கினேன், தேநீர் வாங்குவது, கார்களை சுத்தம் செய்வது மற்றும் நிறுவனங்களில் பிற வேலைகளை செய்தேன். பல ஆண்டுகளாக வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இப்போது திருப்பூரில் 3 செல்போன் உதிரிபாகங்கள் கடைகளை நடத்தி வருகிறேன்.அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.இதனால் வர்த்தகமும் பாதிக்கும் நிலை உள்ளது என்றார்.
திருப்பூரில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள், தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு வாரத்திற்கு பணம் அனுப்புவார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக பணம் அனுப்ப முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.
- பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
- 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.
சென்னை:
உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையின்படி 20.6.2025 அன்று சென்னை ராணி மேரி கல்லூரியில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளின் 2025-26-ம் ஆண்டிற்கான பி.எட். மாணாக்கர்களின் சேர்க்கைக்கான இணைய தள விண்ணப்பப்பதிவு தொடங்கப்பட்டு, மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் முதல் கட்ட கலந்தாய்விற்கு பிறகு 2 அரசு கல்வியியல் கல்லூரிகளில் 49 காலியிடங்கள் மற்றும் 13 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 530 காலியிடங்கள் என மொத்தம் 579 இடங்கள் உள்ளன.
இணையதளத்தில் விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து பயில ஏதுவாக இணையதள விண்ணப்பப்பதிவு வசதி இன்று (15-ந்தேதி) முதல் வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து செயல்பட வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
இவ்வாய்ப்பினை பயன்படுத்தி மாணாக்கர்கள் www.tngasa.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும், மாணவர்கள் சேர்க்கைக்கான கூடுதல் விவரங்களை www.lwiase.ac.in என்ற இணையதள வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
அதே போல், எம்.எட். பாடப்பிரிவில் காலியாக உள்ள இடங்களில் மாணவர்கள் சேர்ந்து பயில ஏதுவாக மாணவர்கள் சேர்க்கை கான இணையதள விண்ணப்பப் பதிவு வசதி வருகிற 30-ந்தேதி வரை செயல்படும். விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் www.tngasa.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- பா.ம.க. தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
- தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலமாக சமீபகாலங்களில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
சென்னை தி.நகரில் உள்ள பா.ம.க. அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதுதொடர்பாக வழக்கறிஞர் பாலு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணிக்கு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.
* ஆக.9-ந்தேதி மாமல்லபுரத்தில் நடந்த பொதுக்குழுவில் நிறைவேற்றிய தீர்மானங்களை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
* இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பா.ம.க. தலைவராக அன்புமணியை அங்கீகரித்துள்ளது.
* 2026 வரை பா.ம.க. தலைவராக அன்புமணி நீடிப்பார் என்ற தீர்மானத்தை ஏற்று தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பி உள்ளது.
* பா.ம.க. நிர்வாகிகளின் பதவிக்காலம் நீட்டிப்பையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
* பா.ம.க. தலைமை அலுவலகமாக சென்னை தி.நகரில் உள்ள அலுவலகத்தை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
* தேர்தல் ஆணையத்தின் கடிதம் மூலமாக சமீபகாலங்களில் இருந்த குழப்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.
* அன்புமணிதான் பா.ம.க. தலைவர், அவருக்கே மாம்பழம் சின்னம் என தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளது.
* பா.ம.க. பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, நிறுவனர் ராமதாஸ் என தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.
* பா.ம.க. அன்புமணி தலைமையில் உள்ள இயக்கம் தான் என அவர் திட்டவட்டமாக கூறினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையடுத்து வழக்கறிஞர் பாலுவின் அறிவிப்பை தொடர்ந்து பா.ம.க.வினர் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் பா.ம.க.வினர் கொண்டாடினர்.
ராமதாசின் நோக்கத்தை நோக்கி தான் நாங்கள் பயணிக்கிறோம். அனைவரும் அன்புமணி தலைமையிலான பா.ம.க.விற்கு வாருங்கள் என ராமதாஸ் அணியில் உள்ளவர்களுக்கு பாலு அழைப்பு விடுத்துள்ளார்






