என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    இ.பி.எஸ். டெல்லி சென்று வந்ததும் நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும்- நயினார் நாகேந்திரன்
    X

    இ.பி.எஸ். டெல்லி சென்று வந்ததும் நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும்- நயினார் நாகேந்திரன்

    • தேர்தலில் ஜெயிக்க போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான்.
    • தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடக்கிறது.

    பாஜக-வின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நெல்லையில் நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர்கள் எழுப்பிய கேள்விக்கு நயினார் நாகேந்திரன் அளித்த பதில் வருமாறு:-

    கேள்வி: ஓ. பன்னீர்செல்வத்திடம் நீங்கள் 2 நாட்களுக்கு முன்பாக பேசியதாக கூறியுள்ளார். அவரை கூட்டணியில் இணைக்க வாய்ப்புள்ளதா?

    பதில்: அதையெல்லாம் இப்போது கூற முடியாது.

    கேள்வி: டி.டி.வி. தினகரன், விஜய் தலைமையில் ஒரு கூட்டணி, சீமான் தலைமையில் ஒரு கூட்டணி என்று கூறி 4 முனை போட்டி என்று கூறுகிறாரே? நீங்கள் இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: 4 முனை போட்டியும் நடக்கலாம். 5 முனை போட்டியும் நடக்கலாம். தேர்தலில் ஜெயிக்க போவது தேசிய ஜனநாயக கூட்டணி தான்.

    கேள்வி: மதுரையில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணி குறித்து எதுவும் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்: கூட்டணி குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. எடப்பாடி பழனிசாமி உடனும் நான் பேசி இருக்கிறேன். அவர் டெல்லிக்கு சென்று தலைவர்களை சந்திக்க இருக்கிறார். அதன் பிறகு நல்ல விஷயங்கள் நிறைய நடக்கும்.

    கேள்வி: செங்கோட்டையனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும் டெல்லிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: அவர் கூட்டணி கட்சியில் இருக்கிறார். அதனால் சென்று பார்க்க இருக்கிறார்.

    கேள்வி: அ.தி.மு.க.வில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதை தீர்க்க வாய்ப்பு இருக்கிறதா?

    பதில்: அ.தி.மு.க.வில் குழப்பமே இல்லையே.

    கேள்வி: செங்கோட்டையன் திடீர் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார் அல்லவா?

    பதில்: அது குழப்பம் என்று சொல்ல முடியாது.

    கேள்வி: நடிகர் விஜய் பிரசார பயணத்தில் ஈடுபட்டுள்ளார். பெரம்பலூரில் மக்களை சந்திக்கவில்லை. இதை எப்படி பார்க்கிறீர்கள்?

    பதில்: அடுத்தவர்கள் கட்சி கூட்டத்தை பற்றி நான் பேச விரும்பவில்லை. அது அவர்களின் நிர்வாகத்தை பொருத்தது. கூட்டம் சேர்த்தால் ஜெயிக்க முடியுமா?

    ஓட்டு வாங்கினால் தான் ஜெயிக்க முடியும் என்றார்.

    தொடர்ந்து அவர் கூறுகையில், தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மோசமான ஆட்சி நடக்கிறது. பாரதீய ஜனதா யாரையும் எதிரி கட்சியாக கருதாமல் எதிர்கட்சியாக தான் பா.ஜ.க. கருதுகிறது. தனிப்பட்ட விமர்சனங்களை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×