என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

டிரம்பின் வரிவிதிப்பால் திருப்பூரில் வேலை இழந்து தவிக்கும் தொழிலாளர்கள்
- ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
- ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் விதித்த 50 சதவீத வரி விதிப்பால் திருப்பூர் ஆடை உற்பத்தியாளர்கள் - ஏற்றுமதியாளர்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். ஆண்டுதோறும் திருப்பூரில் இருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ரூ.45 ஆயிரம் கோடி ஆடைகளில் பாதி அளவு அமெரிக்காவுக்கே ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன் மூலம் ரூ.15ஆயிரம் கோடி அளவுக்கு ஏற்றுமதி பாதிக்கும் சூழல் உள்ளது. 50 சதவீத வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த நிலையில், அமெரிக்க இறக்குமதியாளர்கள் இப்போதைக்கு ஆடைகளை அனுப்ப வேண்டாம் என்று கூறியதால் தற்போது திருப்பூர் பனியன் நிறுவனங்களில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்த ரூ.5000 கோடி மதிப்பிலான ஆடைகள் தேங்கி கிடக்கிறது. நிலைமை சரியானதும் அனுப்புமாறு அமெரிக்க இறக்குமதியாளர்கள் கூறியுள்ளதால் என்னசெய்வதென்று தெரியாமல் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தவித்து வருகின்றனர். இதன் காரணமாக சில பனியன் நிறுவனங்களில் ஆடைகள் உற்பத்தியும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூரில் பல ஆண்டுகளாக ஆடை உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வரும் பீகாரை சேர்ந்த பிரதான் குமார் கூறியதாவது:- அமெரிக்க வரி தாக்கத்தால் ஏற்படும் நிதி மந்தநிலையால் அச்சத்தில் உள்ளோம்.30 ஆண்டுகளாக சுறுசுறுப்புடன் இயங்கி வந்த எனது நிறுவனம் இப்போது அமைதியாகி விட்டது.
கடந்த 3 வாரங்களாக வேலை ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்ததால்,தொழிலாளர்கள் சிலரை மட்டும் பணியில் அமர்த்தி உள்ளேன். மற்றவர்களை பணிநீக்கம் செய்துள்ளேன். வேலை செய்பவர்களில் ஒரு சிலர் மதியம் வரை மட்டுமே வேலை செய்கிறார்கள்.இதனை நான் இதற்கு முன்பு பார்த்திராத ஒரு பேரழிவு.
நான் 20 வருடங்களுக்கு முன்பு திருப்பூருக்கு வந்தேன். பனியன் நிறுவனங்களில் சிறிய வேலைகளை செய்தேன். ஆடை உற்பத்தியில் உள்ள நுணுக்கங்களை படிப்படியாகக் கற்றுக்கொண்டேன். பின்னர் பெரிய நிறுவனங்களில் துணி வாங்குதல், வெட்டுதல் மற்றும் பின்னல் போன்ற முழு அளவிலான வேலைகளையும் அவுட்சோர்ஸ் செய்து , பின்னர் ஆடை உற்பத்தியில் ஈடுபட்டேன்.
முன்னேற்ற நிலையில் இருந்த திருப்பூர் இப்போது அமெரிக்க வரி விதிப்பால் ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளதை பார்க்கிறேன்.பள்ளியில் படிக்கும் எனது 3 குழந்தைகளுக்கு கட்டணம் செலுத்த முடியவில்லை. இ.எம்.ஐ. செலுத்த முடியாமல் தவிக்கிறேன் என்றார்.
இவரைப்போலவே, வட இந்திய மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வந்து தொழில் செய்யும் பலர் அமெரிக்காவின் வரி விதிப்பால் பாதிப்பை சந்தித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் இருந்து திருப்பூர் வந்த சனோஜ் குமார் கூறுகையில், நான் பனியன் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறேன். அமெரிக்க வரி விதிப்பு பாதிப்பு காரணமாக ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திருப்பூரை விட்டு வெளியேறிவிட்டனர். தற்போது தங்கியிருப்பவர்களுக்கு வாரத்தில் சில நாட்கள் மட்டும் வேலை வழங்கப்படுகிறது. கொரோனாவின் போது இதேபோன்ற நெருக்கடி ஏற்பட்டது. வேலை இல்லாததால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக திருப்பூரை விட்டு வெளியேறினர். அமெரிக்க வரி விதிப்பால் தற்போது, நாங்கள் 40 சதவீத வேலைகளை மட்டுமே செய்ய முடிகிறது. தற்போதுள்ள தொழிலாளர்களுக்கு கூட வேலை இல்லாததால், எனது சொந்த ஊரில் உள்ளவர்கள் திருப்பூருக்கு வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளேன். எனது நிறுவனத்தில் பணியாற்றிய சிலர் கட்டுமானப் பணிகளுக்கு மாறியுள்ளனர் என்றார்.
அமெரிக்க வரி பாதிப்பு திருப்பூர் பனியன் தொழிலை மட்டுமின்றி உள்ளூர் வர்த்தகத்தையும் பாதித்துள்ளது. இது குறித்து செல்போன் கடை நடத்தி வரும் வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் கூறுகையில், நான் திருப்பூர் வந்த போது வெறுங்கையுடன் வந்தேன். அணிந்திருந்த ஆடைகள் மட்டுமே இருந்தன. நான் முதலில் ஒரு உதவியாளராக பணியை தொடங்கினேன், தேநீர் வாங்குவது, கார்களை சுத்தம் செய்வது மற்றும் நிறுவனங்களில் பிற வேலைகளை செய்தேன். பல ஆண்டுகளாக வேலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். இப்போது திருப்பூரில் 3 செல்போன் உதிரிபாகங்கள் கடைகளை நடத்தி வருகிறேன்.அமெரிக்க வரி விதிப்பால் திருப்பூரில் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.இதனால் வர்த்தகமும் பாதிக்கும் நிலை உள்ளது என்றார்.
திருப்பூரில் பீகார், ஜார்க்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 5 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள், தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த ஊரில் உள்ள குடும்பத்தினருக்கு வாரத்திற்கு பணம் அனுப்புவார்கள். ஆனால் கடந்த ஒரு மாதமாக பணம் அனுப்ப முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே மத்திய, மாநில அரசுகள் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.






