என் மலர்
தலைப்புச்செய்திகள்
- டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக தலைவர் விஜயிடம் இன்று நடந்த விசாரணை நிறைவுபெற்றது.
- சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக த.வெ.க. தலைவர் விஜய்யிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பினார்கள். அதில் 12-ந்தேதி (இன்று) காலை 11 மணிக்கு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதற்காக விஜய் இன்று காலை 6.20 மணியளவில் சென்னை நீலாங்கரை இல்லத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையத்துக்கு சென்றார். காலை 7.10 மணியளவில் அவர் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.
அங்கிருந்து காரில் புறப்பட்டு ஐ.டி.சி. மவுரியா ஓட்டலுக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் தயாராகி மீண்டும் காரில் புறப்பட்டார். அங்கிருந்து சுமார் அரை மணி நேரம் காரில் பயணம் செய்து அவர் சி.பி.ஐ. அலுவலகத்தை அடைந்தார். அதன்பிறகு அவர் சி.பி.ஐ. அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரானார்.
அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் 80-க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. டெல்லி சிபிஐ அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் இன்று நடந்த விசாரணை நிறைவுபெற்றது.
சிபிஐ அதிகாரிகள் 4 பேர் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயிடம் மட்டும் தனியாக விசாரணை நடத்தியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், விசாரணை முடிந்து ஆதவ் அர்ஜூனாவுடன் விஜய் காரில் புறப்பட்டுச் சென்றார். மேலும், விஜயிடம் நாளையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியானது. இன்றிரவு டெல்லியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி நாளையும் விஜய் சிபிஐ விசாரணையை எதிர்கொள்கிறார் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில், தவெக தலைவர் விஜயிடம் நாளை நடைபெறுவதாக இருந்த சிபிஐ விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பொங்கல் திருநாளுக்குப் பிறகு விசாரணைக்கு ஆஜராவதாக விஜய் தரப்பில் வைத்த கோரிக்கைக்கு சிபிஐ அனுமதி அளித்துள்ளது.
விசாரணைக்கு ஆஜராக வேண்டிய தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவித்துள்ளனர்.
- அமெரிக்காவிற்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி நாடு வேறு ஏதுமில்லை
- அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வருவார்.
இந்தியாவிற்கான புதிய அமெரிக்கத் தூதராக செர்ஜியோ கோர் அண்மையில் நியமிக்கப்பட்டார். இன்று, டெல்லியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தில் அவர் முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்புக்குப் பின் பேசிய கோர், "அதிபர் டிரம்ப் உடன் நான் உலகம் முழுவதும் பயணம் செய்திருக்கிறேன். பிரதமர் மோடி மீது அவர் வைத்திருக்கும் நட்பு மிகவும் உண்மையானது என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியும்.
இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இந்த நட்பு மிகவும் ஆழமாக வேரூன்றியுள்ளது" என்று தெரிவித்தார்.
அமெரிக்காவிற்கு இந்தியாவை விட முக்கியமான கூட்டாளி நாடு வேறு ஏதுமில்லை என்று குறிப்பிட்ட அவர், வர்த்தகம், பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவுடன் நெருக்கமாகப் பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், சமீபத்தில் டிரம்ப் உடன் உணவு அருந்தியபோது, அவர் தனது முந்தைய இந்தியப் பயணம் குறித்தும், பிரதமர் மோடியுடனான தனது சிறந்த உறவு குறித்தும் மகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்ததாகக் கோர் கூறினார்.
அடுத்த ஓரிரு ஆண்டுகளில் டிரம்ப் மீண்டும் இந்தியாவிற்கு வருவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்திய மீது 500 சதவீதம் வரி விதிக்கும் புதிய மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.
- பேந்தர் ஹப் என்பது உணவகத்துடன் கூடிய மனமகிழ் மன்றமாக உருவாக்கப்பட்டுள்ளது.
- பிரமாண்ட திறப்பு விழாவில் ஷாருக்கானை காண ஏராளமான ரசிகர் கூட்டம் குவிந்தது.
துபாய் தேராவில் ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் நிறுவப்பட்ட 'பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவக திறப்பு விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் ஷாருக்கான் கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கண்ணன் ரவி குழுமத்தின் (கே.ஆர்.ஜி) சார்பில் தேரா பகுதியில் உள்ள ஜுவல் ஆப் கிரீக் வளாகத்தில் 'பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவகம் நிறுவப்பட்டது. பேந்தர் ஹப் என்பது உணவகத்துடன் கூடிய மனமகிழ் மன்றமாக உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் உணவு வகைகளை வழங்கும் விதமாக ஏ.டி.கே. ஸ்கொயர் என்ற பெயரில் உணகவமும் நிறுவப்பட்டது.

இந்த பேந்தர் ஹப் மற்றும் ஏ.டி.கே. ஸ்கொயர் உணவகத்தை திறந்து வைக்க பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வருகை புரிந்தார்.
அவரை கே.ஆர் குழுமத்தின் தலைவர் கண்ணன் ரவி மற்றும் பராக் ரெஸ்டாரண்ட் மேலாண்மை இயக்குனர் தீபக் ரவி ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
பிறகு அந்த நிறுவனங்களை நடிகர் ஷாருக்கான் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பிரமாண்ட திறப்பு விழாவில் அவரை காண ஏராளமான ரசிகர் கூட்டம் குவிந்தது.
தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் சுவீடன் நாட்டை சேர்ந்த பிரபல மேஜிக் நிபுணர் ஜோ லேபரோவின் நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
அவருடன் கனடாவில் வசித்து வரும் இந்திய வம்சாவளி நடிகையும், நடனக்கலைஞருமான நோரா பத்தேஹி கலந்துகொண்டு ரசிகர்களை மகிழ்வித்தார்.

தொடர்ந்து 2-வது நாளும் அந்த வளாகத்தில் திறப்பு விழா நிகழ்ச்சிகள் தொடர்ந்தது. இதில் குஷ்பு, ரோஜா, ஆர்.கே செல்வமணி, ஜெய், ஜெயப்பிரகாஷ், லைக்கா சுபாஸ்கரன், யுவன் சங்கர் ராஜா, மிர்ச்சி சிவா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, சித்ரா லட்சுமணன், சுப்பு பஞ்சு, வைபவ், அஜய் ராஜ், ராஜீவ் கோவிந்தன், மாதம்பட்டி ரங்கராஜ், அரவிந்த் ஆகாஷ் மற்றும் வழக்கறிஞர் விஜயன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரபலங்கள் வருகை புரிந்திருந்தனர்.
- கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என நிபந்தனை விதித்தது.
- இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார்.
தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் 'ஜன நாயகன்' வெளியீட்டை பட தயாரிப்பு நிறுவனம் ஒத்திவைத்தது. கடைசி நேரத்தில் தணிக்கை சான்றிதழ் கிடைத்தால் இன்று பராசக்தி படம் வெளியானது.
பொங்கல் வெளியீடாக பராசக்தி மட்டும் வெளியான நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு மற்ற படங்களும் திடீரென்று பொங்கல் ரேஸில் குதித்துள்ளன.
கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
இப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படம் ரிலீஸ் அறிவிப்பால் கார்த்தியின் ரசிகர்கள் இந்த பொங்கல் பண்டிகையை விமரிசையாக கொண்டாட தயாராகினர்.
ஆனால் வா வாத்தியார் படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் கடனை முழுமையாக செலுத்தினால் மட்டுமே படத்தை வெளியிட வேண்டும் என நேற்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
அர்ஜுன் லால் சுந்தர் தாஸ் என்பவரிடம் பெற்ற ரூ.21.78 கோடியில் ரூ.3.75 கோடியை இன்று தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா செலுத்திய நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த நிபந்தனையை விதித்தது.
இத்தானில் படம் ஜனவரி 14 வெளியாகுமா என்ற கேள்வி எழுத்தது. இந்நிலையில், அனைத்து தடைகளும் கிளியரானதாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் புதிய போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. அதில், 'வா வாத்தியார்' படம் வருகிற 14 ஆம் தேதி ரிலீசாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.
- பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.
மத்தியப் பிரதேசம் இந்தூர் முதல் ஜபல்பூர் வரை செல்லும் ரெயிலில் கடந்த 2018 பயணித்த சிவில் நீதிபதி ஒருவர் மது அருந்திவிட்டு சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.
இதன்போது சகா பயணியின் இருக்கையில் நீதிபதி சிறுநீர் கழித்தார். அப்போது அந்த பெட்டியில் பெண்களும் அமர்ந்திருந்தனர்.
மேலும் நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.
இதைதொடர்ந்து துறை ரீதியான விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தெரிந்ததையடுத்து, 2019-ல் அவரைப் பணியிலிருந்து நீக்கி அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.
அதேநேரம், அவர் மீதான குற்றவியல் வழக்கில் பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.
இதை அடிப்படையாகக் கொண்டு, 2025-ல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த நீதிபதியை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய அவர்கள், "நீதிபதியின் இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது" என்று கூறி அவரை மீண்டும் பணியில் அமர்த்தியதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.
அவரை மீண்டும் பணியமர்த்தும் உயர்நீதிமன்றத்தின் முடிவை விமர்சித்த நீதிபதிகள், இது குறித்து மாநில அரசு பதிலளிக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.
- பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும்.
- நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
2017-ம் ஆண்டில் இருந்து மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பிப்ரவரி 1 விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை வருவதால் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்று குழப்பம் ஏற்பட்டது.
இந்நிலையில் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் வழக்கம் போல் பிப்ரவரி 1-ஆம் தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணியளவில் மத்திய நிதியமைச்சர் பட்ஜெட்டைத் தாக்கல் செய்வார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி கடைசி வாரத்தில் தொடங்கும். முதல் நாளில் குடியரசுத் தலைவர் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றுவார்.
பட்ஜெட்டிற்கு முந்தைய நாள், அதாவது ஜனவரி 31-ஆம் தேதி, நாட்டின் பொருளாதார நிலை குறித்த பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும்.
பட்ஜெட் கூட்டத்தொடர் மிக முக்கியமானது என்பதால், அவையின் நடவடிக்கைகளைச் சுமூகமாக நடத்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று ஓம் பிர்லா கேட்டுக் கொண்டுள்ளார்.
- பாலியல் குற்றவாளி உடன் பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பும் இந்த விவாகரத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று மெலிண்டா கூறியுள்ளார்.
- ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ் இருக்கும் புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
உலகின் முன்னணி பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனரான பில் கேட்ஸ் 27 ஆண்டுகளாக மனைவி மெலிண்டா கேட்ஸ் உடன் வாழ்ந்து வந்த நிலையில் இருவரும் 2021இல் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
2000 - ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் இருந்து இல் 2024 மெலிண்டா விலகி தனியாக ஒரு தொண்டு நிறுவனத்தை உருவாக்கினார்.
2021ல் ஒப்புக்கொண்ட விவாகரத்து ஒப்பந்தப்படி மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் ரூ.1,12,800 கோடி ஜீவனாம்சம் வழங்க வேண்டும்.
இந்தநிலையில், மைக்ரோசாப்ட் உரிமையாளரான பில்கேட்ஸ் தனது மனைவி மெலிண்டாவுக்கு ஜீவனாம்சமாக ரூ.71,100 கோடி வழங்கினார்.
ஏற்கனவே ரூ.41,700 கோடியை மெலிண்டாவுக்கு பில்கேட்ஸ் வழங்கிய நிலையில், இறுதியாக தற்போது ரூ.71,100 கோடி வழங்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் மெலிண்டாவுக்கு பில் கேட்ஸ் மொத்தமாக 1.05 லட்சம் கோடி ரூபாய் வழங்கியுள்ளார். சமீபத்திய வரி தாக்கல் அறிக்கைகளின்படி இது தெரியவந்துள்ளது.
இதுவே உலகின் மிகவும் காஸ்ட்லியான விவாகரத்து என்று கூறப்படுகிறது. இந்த பணத்தை பெண்கள் முன்னேற்றத்துக்கு செலவழிக்க போவதாக மெலிண்டா கூறியுள்ளார்.
சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு போகப்பொருளாக மாற்றிய பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸிற்கு இருந்த தொடர்பும் இந்த விவாகரத்திற்கு ஒரு முக்கியக் காரணம் என்று மெலிண்டா கடந்த காலங்களில் தெரிவித்திருந்தார்.
ஜெப்ரி எப்ஸ்டீன் உடன் பில் கேட்ஸ் இருக்கும் புகைப்படங்களும் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
- கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
- மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
12 ஆம் வகுப்பு மாணவி கடத்தப்பட்டு ஓடும் காரில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம் ராஜஸ்தானில் நிகழ்ந்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் மாவட்டத்தில் ஜனவரி 6ஆம் தேதி காலை அந்த மாணவி பள்ளிக்கு சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த இரு இளைஞர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து கடத்திச் சென்றுள்ளனர்.
கடத்தப்பட்ட மாணவியை ஓடும் காரிலேயே பல மணி நேரம் அவர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
கார் ஒரு கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்த மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் காரை வழிமறித்துச் சோதனையிட முயன்றனர்.
மக்கள் காரை நெருங்குவதைக் கண்ட இளைஞர்கள், மாணவியை ஓடும் காரிலிருந்து வெளியே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர்.
கிராம மக்கள் அந்த மாணவியை மீட்டு அவரது குடும்பத்தினருக்குத் தகவல் கொடுத்தனர்.
குடும்பத்தினர் கடந்த 11 ஆம் தேதி பிகானேர் போலீசில் புகார் அளித்ததன் மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய இரு இளைஞர்களைப் பிடிக்கத் தனிப்படைகளை அமைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
- கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் நேற்றைய 5வது லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
நவி மும்பையில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
உ.பி. வாரியர்ஸ் அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மேக் லென்னிங் , ஹெர்லின் டியோல் களமிறங்கினர்.
லென்னிங் 14 ரன்னிலும், டியோல் 11 ரன்னிலும் அவுட் ஆகினர். அடுத்து வந்த லிட்ச்பில்ட் 20 ரன்கள் , கிரன் 5 ரன்கள் எடுத்தனர். ஷிராவத் டக் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய டெண்ட்ரா , தீப்தி சர்மாவுடன் ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தது.
20 ஓவர்கள் முடிவில் உ.பி. வாரியர்ஸ் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது.
144 ரன்கள் வெற்றி இலக்குடன் பெங்களூரு அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் கிரேஸ் ஹாரிஸ் களமிறங்கினர்.
கிரேஸ் ஹாரிஸ் 22 பந்துகளில் அரைசதமும் 40 பந்துகளில் 85 ரன்களும் அடித்து ஷிகா பாண்டேவிடம் பந்தில் அவுட் ஆனார். மந்தனா ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் குவித்தார்.
இறுதியில் 12.1 ஓவர்களில் 9 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை பெங்களூரு அணி வீழ்த்தியது.
- பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார்.
- மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.
தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார்.
இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார் .
இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.
இந்நிலையில் இந்திரய்யா உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் (ஜனவரி 11) காலமானார். அவரது இறுதி விருப்பப்படியே, தான் பார்த்து பார்த்துச் செதுக்கிய கல்லறையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.
முன்னதாக தனக்குத் தானே கல்லறை கட்டியது குறித்து இந்திரய்யா ஊடகங்களிடம் பேசியவை அவர் இறந்த பின், மீண்டும் கவனம் பெற்றுள்ளது.
அதில் அவர், எனக்கு நானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன்." என்று பேசியிருந்தார்.
மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.
- பாகிஸ்தானில் இந்திய உளவாளியாக இருந்துள்ளார்.
- சாதாரண மக்களுக்குத் தெரியாத பல ரகசியத் தகவல் தொடர்பு முறைகள் எங்களிடம் உள்ளன.
2014 முதல் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரா அஜித் தோவல் உள்ளார்.
1968 கேரளா கேடர் ஐபிஎஸ் அதிகாரியான தோவல் பாகிஸ்தானில் இந்திய உளவாளியாக இருந்துள்ளார். 2016 சர்ஜிக்கல் ஸ்டிரைக் உள்ளிட்ட பல பாதுகாப்பு நடைவடிக்கைகளில் பங்காற்றியுள்ளார்.
அண்மையில் டெல்லியின் நடைபெற்ற நிகழ்ச்சியில் இளைஞர்கள் மத்தியில் உரையாற்றிய தோவல், " நான் இணையத்தை பயன்படுத்துவதில்லை.
தனிப்பட்ட குடும்ப விஷயங்களுக்காகவோ அல்லது வெளிநாட்டுத் தலைவர்களுடன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலோ தவிர, நான் போனைப் பயன்படுத்துவதில்லை.
செல்போன் மற்றும் இணையம் இல்லாமலேயே எனது பணிகளை என்னால் திறம்படக் கையாள முடிகிறது. சாதாரண மக்களுக்குத் தெரியாத பல ரகசியத் தகவல் தொடர்பு முறைகள் எங்களிடம் உள்ளன" என்று தெரிவித்தார்.
அஜித்தோவல் பெயரில் சமூக வலைதளங்களில் பல போலி கணக்குகள் உலா வருகின்றன. இது குறித்துப் பேசிய அவர், தனக்கு எந்த ஒரு அதிகாரப்பூர்வ சமூக வலைதளக் கணக்கும் இல்லை என்று தெரிவித்தார்.
நாட்டின் மிக உயரிய பாதுகாப்புப் பொறுப்பில் இருப்பதால், சைபர் தாக்குதல்கள் மற்றும் ஒட்டுக் கேட்பு போன்ற அபாயங்களைத் தவிர்க்க அவர் இந்த பழக்கத்தை கடைபிடிக்கிறார் என்று கருதப்படுகிறது.
- நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக கூறப்பட்டது.
- தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. .
பீகாரில் நகைக்கடைகளில் பெண்கள் முகத்தை மூடி வர தடை விதிக்கப்பட்டது. அதே போல் உ.பி. வாரணாசியிலும் ஹிஜாப் அணிந்து வர நகைக்கடைகள் தடை விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் ஹிஜாப் அணியும் இஸ்லாமிய பெண்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை சமூக ஊடகங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனால் இது தவறான தகவல் என தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள பதிவில், "நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை - தமிழ்நாட்டில் அல்ல!
'பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜாப் அணிந்து வருவோருக்கு நகை விற்பனை செய்யமாட்டோம்' என்று நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளதாக வதந்தி பரவி வருகிறது.
ஆனால், நகைக் கடைகளுக்கு ஹிஜாப் அணிந்து வரத் தடை என சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல் உண்மையல்ல. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்பப்படுகிறது.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அல்ல. தவறான தகவலைப் பரப்பாதீர்!" என்று கூறப்பட்டுள்ளது.







