என் மலர்
உலகம்

Israel Attack: லெபனானில் ஒரு வாரத்தில் 83 குழந்தைகள் பலி - UNICEF கவலை
- ஒட்டுமொத்தமாக லெபனானில் 329 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
- 7 லட்சம் மக்கள் இதுவரை வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர்.
ஈரான் மீதான இஸ்ரேல் - அமெரிக்கா தாக்குதல் கடந்த 8 நாட்களாக நீடித்து வரும் சூழலில் மறுபுறம், தனது அண்டை நாடான லெபனான் மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது.
அங்கு ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பினர் செயல்பட்டு வரும் நிலையில் இஸ்ரேல் அங்கு தலைநகர் பெய்ரூட் உள்ளிட்ட பல்வேறு நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. முந்தைய வருடங்களிலும் ஹிஸ்புல்லாவை அழிப்பதாக கூறி லெபனான் மீது இஸ்ரேல் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டது.
இந்நிலையில் ஐநாவின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், லெபனானில் கடந்த மார்ச் 2 முதல் இஸ்ரேல் தாக்குதலில் கடந்த ஒரு வாரத்தில் குறைந்தது 83 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 254 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் என்று யுனிசெப் தெரிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், "தாக்குதல்களில் லெபனான் முழுவதும் தினமும் சராசரியாக 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழக்கின்றனர், மேலும் 36 குழந்தைகள் காயமடைகின்றனர்.
கடந்த 28 மாதங்களில் இஸ்ரேல் ஒட்டுமொத்தமாக லெபனானில் 329 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், 1,632 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
தற்போது நடந்து வரும் போர் குழந்தைகளின் மீது எந்தளவுக்குகொடூரமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இதுவே நேரடிச் சாட்சியாகும்" என்று யுனிசெப் கவலை தெரிவித்துள்ளது.
மேலும், போர் காரணமாக லெபனான் முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். சுமார் 7 லட்சம் மக்கள் இதுவரை வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். இவர்களில் சுமார் 2 லட்சம் பேர் குழந்தைகள் ஆவர்.
ஏற்கனவே முந்தைய தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்த நிலையில், தற்போதைய சூழல் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளது.
பள்ளிகள் மற்றும் தற்காலிக தங்கும் முகாம்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வாழும் இடங்களையும், அடிப்படை உள்கட்டமைப்புகளையும் தாக்க வேண்டாம் என இரு தரப்பினரையும் யுனிசெப் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்கிடையே தெற்கு ஈரானின் மினாப் நகரில் கடந்த பிப்ரவரி 28 அன்று பெண்கள் தொடக்கப்பள்ளி மீதான அமெரிக்க தாக்குதலில் 160 சிறுமிகள் கொல்லப்பட்டதற்கும் யுனிசெப் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.






