என் மலர்tooltip icon

    இந்தியா

    • கடந்த வெள்ளிக்கிழமை 90.65 ரூபாயாக இருந்தது.
    • இன்றைய வர்த்தக முடிவில் 90.72 ரூபாயாக உள்ளது.

    வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி பரிமாற்றம் இன்றைய சந்தை வர்த்தக முடிவில் டாலருக்கு நிகரான இந்தியாவின் பண மதிப்பு 9 காசுகள் குறைந்து 90.74 ரூபாயாக உள்ளது.

    டாலருக்கு நிகராக இந்தியாவின் பண மதிப்பு 90.66 ரூபாயுடன் வர்த்தகம் தொடங்கியது. அதன்பின் 90.37 என முன்னேற்றம் கண்டது. இது நேற்றைய வர்த்தக முடிவின் மதிப்பை விட 28 பைசா முன்னேற்றமாகும். எனினும். 90.77 ரூபாய் என வீழ்ச்சியடைய தொடங்கியது. இறுதியாக 90.74 ரூபாயில் வர்த்தகம் நிறைவடைந்தது.

    கடந்த வெள்ளிக்கிழமை டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 90.65 ரூபாயாக இருந்தது. தற்போது 9 பைசா வீழ்ச்சியடைந்துள்ளது.

    கடந்த வாரம் இறுதியில் இந்தியா- அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தது. இதனால் டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 31 பைசா ஏற்றம் கண்டு 90.65 ரூபாயாக இருந்து.

    கச்சா எண்ணெயின் சர்வதேச சந்தை மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் மூலம் டாலருக்கு நிகரான இந்தியா ரூபாயின் மதிப்பு மதிப்பீடு செய்யப்படுகிறது.

    • நாடுதான் முதல். அதன்பிறகுதான் கட்சி என்று பாஜக நம்புகிறது. சுயநலம் என்று வரும்போது அது கடைசிதான்.
    • ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு சுய நலம்தான் முதல் மற்றும் கடைசி விசயமாகும்

    பாஜக தேசியத் தலைவராக பீகாரை சேர்ந்த நிதின் நபின் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தேர்வு செய்யப்பட்டபின் முதன் முறையாக தனது சொந்த மாநிலம் சென்றார். அங்கு நடைபெற்ற பாஜக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது நிதின் நபின் பேசியதாவது:-

    பீகாரில் இருந்து காட்டு ராஜ்ஜியத்தை வேரோடு சாய்ப்பதற்காக, கட்சி தொண்டர்கள் போராடினார்கள். பிரசுரங்கள் வழங்குவதற்கு கூட ஆபத்தான நிலையில் தங்களுக்கு என்ன நிகழும் என்பதை தெரிந்து கொண்டும் பணியாற்றினார்.

    அந்த தியாக உணர்வு தொடர்கிறது. கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அங்கு தங்களுக்கு எதிர்வினையாக என்ன கிடைக்கும் என்பதை தெரிந்தும் கூட கட்சி தொண்டர்கள் தியாகங்களை செய்து வருகின்றனர்.

    நாடுதான் முதல். அதன்பிறகுதான் கட்சி என்று பாஜக நம்புகிறது. சுயநலம் என்று வரும்போது அது கடைசிதான். ஆனால் எதிர்க்கட்சிகளுக்கு சுய நலம்தான் முதல் மற்றும் கடைசி விசயமாகும்.

    இவ்வாறு நிதின் நபின் தெரிவித்துள்ளார்.

    • பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட வேண்டாம் என்று கட்சித் தலைமை வேண்டுகோள்

    தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் இன்று பிற்பகல் புனேவில் உள்ள ரூபி ஹால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டை தொடர்பான பிரச்சினைகள், இருமல் மற்றும் காய்ச்சல் நீண்ட நாட்களாக இருந்துவந்த நிலையில், இன்று சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    முதலில் பாராமதியில் உள்ள தனது இல்லத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புனேயில் உள்ள ரூபி ஹால் கிளினிக் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். யாரும் பயப்பட வேண்டாம் என்றும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்றும் அவரது மகளும், எம்பியுமான சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார். தற்போது மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் கூட வேண்டாம் என்று கட்சித் தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

    சமீபத்தில் மகாராஷ்டிர துணை முதலமைச்சர் அஜித் பவாரின் மறைவைத் தொடர்ந்து நடைபெற்ற சடங்குகளில் சரத் பவார் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மோடி அரசு ஏன் பொறுப்புக்கூறலுக்கு அஞ்சுகிறது?
    • இது நாடாளுமன்றத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதல்

    PM CARES, பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (NDF) ஆகிய குறிப்பிட்ட மூன்று நிதிகள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்ப முடியாது என்று பிரதமர் அலுவலகம் மக்களவைச் செயலகத்திற்குத் தெரிவித்துள்ளது.

    இதற்கு இவை அரசு நிதி அல்ல என விளக்கம் அளித்துள்ளது. அதாவது, இந்த நிதிகள் அனைத்தும் மக்களின் தன்னார்வப் பங்களிப்புகள் மூலம் உருவாக்கப்பட்டவை என்றும், இவை இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து ஒதுக்கப்படுபவை அல்ல என்றும் கூறியுள்ளது.

    இதற்கு பிரதமர் அலுவலகம் இரண்டு விதிகளையும் மேற்கோள் காட்டியுள்ளது.

    • விதி 41(2)(viii): நாடாளுமன்றக் கேள்விகள் இந்திய அரசின் நேரடிக் கவலைக்குரிய (primarily the concern of the Government) விஷயமாக இருக்க வேண்டும்.
    • விதி 41(2)(xvii): இந்திய அரசுக்கு நேரடியாகப் பொறுப்பில்லாத அமைப்புகள் அல்லது நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள விவகாரங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பக்கூடாது. என தெரிவித்துள்ளது.

    மேலும் இந்த நிதிகள் பொது தொண்டு அறக்கட்டளையாக (Public Charitable Trust) பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவை அரசின் நேரடிக் கட்டுப்பாட்டுக்குள் வராது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் தலைமை எக்ஸ் தளப் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளது. அதில், 

    "பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரகாலச் சூழ்நிலைகளில் நிவாரணம் (PM CARES Fund), பிரதமரின் தேசிய நிவாரண நிதி (PMNRF) மற்றும் தேசிய பாதுகாப்பு நிதி (NDF) குறித்த கேள்விகளை நாடாளுமன்றத்தில் எழுப்ப முடியாது."

    இந்த உத்தரவுகள் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்திலிருந்து நேரடியாக மக்களவை செயலகத்திற்கு வந்துள்ளன. இதன்மூலம் இந்த நிதிகள் குறித்து கேள்விகள் கேட்க வேண்டாம் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது பல தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது:

    • நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள், அப்படியிருக்கையில் பொதுநலன் சார்ந்த கேள்விகளைக் கேட்பதிலிருந்து அவர்கள் ஏன் தடுக்கப்படுகிறார்கள்?
    • மோடி அரசு ஏன் பொறுப்புக்கூறலுக்கு அஞ்சுகிறது?
    • ஆயிரக்கணக்கான கோடி பொதுப் பணம் குறித்த கேள்விகளை ஏன் முடக்க வேண்டும்?
    • மக்களிடமிருந்து அரசு எதைமறைக்க முயல்கிறது?
    • இனி நாடாளுமன்றம் அரசியலமைப்பின்படி செயல்படுமா அல்லது மோடியின் உத்தரவுகளின்படி செயல்படுமா?

    இது வெளிப்படைத்தன்மை அல்ல.

    இது சர்வாதிகாரக் கட்டுப்பாடு.

    இது நாடாளுமன்றத்தின் மீதே தொடுக்கப்பட்ட தாக்குதல். " எனக் குறிப்பிட்டுள்ளது. 

    • மக்களவையில் பிரதமர் மோடியை தாக்க திட்டம் என சபாநாயகர் குற்றச்சாட்டு.
    • ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசவில்லை.

    ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது சீன விவகாரம் குறித்து ராகுல் காந்தி பேசத் தொடங்கினார். இதற்கு பாஜக எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மக்களவையில் அவரை பேசவிடாமல் தடுத்தனர்.

    இதற்கிடையே மக்களவையில் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்குப் பதிலளிக்கத் திட்டமிட்டிருந்தபோது, சில காங்கிரஸ் எம்.பி.க்கள் பிரதமரின் இருக்கையைச் சூழ்ந்து கொண்டு "முன்னெப்போதும் இல்லாத அசம்பாவிதத்தை" செய்யத் திட்டமிட்டிருந்ததாக தமக்குத் தகவல் கிடைத்ததாக சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்தார். இதனால் ஏற்பட்ட பாதுகாப்புக் கவலைகள் மற்றும் அவையின் கண்ணியத்தைக் கருத்தில் கொண்டு, பிரதமரைச் சபைக்கு வர வேண்டாம் என்று தாமே அறிவுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். இதனால் மக்களவையில் பிரதமர் மோடி இல்லாமல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ராகுல் காந்தி கூறுகையில் "பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் மிரட்டல் என்ற கேள்விக்குகே இடமில்லை. உண்மை என்னவென்றால் மக்களவையில் நான் பேசியதை கண்டு பிரதமர் மோடி அவைக்கு வர பயந்தார்" என்றார்.

    • போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பஞ்சாப் மாநிலம் டர்ன் தரன் மாவட்டத்தில் இன்று காலை முதலாம் ஆண்டு சட்ட கல்லூரி மாணவர் சக தோழியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்று பின்னர் தன்னைத்தானே சுட்டுக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    பிரின்ஸ் ராஜ் என்பவர் இன்று காலை சரியாக 9.15 மணிக்கு வகுப்பறையில் அமர்ந்திருக்கும்போது திடீரென எழுந்து கையில் இருந்து துப்பாக்கியை எடுத்து பின்னால் அமர்ந்திருந்த சந்தீப் கவுர் என்ற சக மாணவியை துப்பாக்கியால் சுட்டார். இதனால் வகுப்பறையில் இருந்த மாணவிகள் துப்பாக்கிச்சத்தத்தை கேட்டு அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

    இதையடுத்து பிரின்ஸ் ராஜ் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    பிரின்ஸ் ராஜ் ஏன் சந்தீப் கவுரை துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பதற்கான காரணங்கள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • கோவிலில் நடக்கும் விழாக்களில் பலர் தங்களின் யானைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பார்கள்.
    • யானையை இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    கேரள மாநிலத்தில் உள்ள கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும் யானைகளுக்கு மதம் பிடித்துவிடுவதால், சில நேரங்களில் பிரச்சனை ஆகி விடுகிறது.

    இதனால் கோவில் திருவிழாக்களில் யானைகளை பயன்படுத்த கேரள ஐகோர்ட் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஐகோர்ட்டின் கட்டுப்பாடுகளின் படியே, கேரளாவில் உள்ள கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் கொச்சி அருகே கோவில் திருவிழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானை, திடீரென பாகனை தள்ளிவிட்டு அதிவேகமாக ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-

    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் கொச்சி அருகே உள்ள திரிபுனித்து ராவில் பூர்ணத்ரயீசர் கோவில் இருக்கிறது. கேளர மாநிலத்தில் உள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் இங்கு விஷ்ணு அருள்பாலிக்கிறார்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் நடக்கும் உற்சவங்கள் மற்றும் பண்டிகைகள் மிகவும் பிரபலமானவை ஆகும். இதனால் அவற்றில் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பூர்ணத்ரயீசர் யானைகளை விரும்பும் கடவுளாக கருதப்படுவதால், இந்த கோவிலில் நடக்கும் விழாக்களில் பலர் தங்களின் யானைகளை தாமாகவே முன்வந்து அனுப்பி வைப்பார்கள்.

    இந்தநிலையில் பூர்ணத்ர யீசர் கோவில் திருவிழாவிற்காக கோட்டயத்தில் இருந்து சாமப்புழா உன்னி கிருஷ்ணன் என்ற யானை கொண்டு வரப்பட்டிருந்தது. கோவிலின் கருவறைக்கு முன்னால் உள்ள அத்தாழ சீவேலிக்கான கோபுர நுழைவு வாயிலின் அருகே அழைத்துவரப்பட்ட போது, அந்த யானை திடீரென ஆக்ரோஷமடைந்தது.

    இதையடுத்து அந்த யானை, தன் மீது அமர்ந்திருந்த இரண்டாவது பாகனை கீழே விழச்செய்துவிட்டு ஆக்ரோஷத்துடன் வேகமாக ஓடியது. அந்த யானை கோவில் வளாகத்தை சுற்றி வேகமாக ஓடியபடி இருந்தது. இதனை கோவிலில் இருந்த பக்தர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் கோவில் வளாகத்தில் நாலாபுறமும் அலறியடித்துக்கொண்டு சிதறி ஓடினர். இதனால் கோவிலில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அந்த யானை கோவிலின் மேடைக்கு அருகே நின்றது. ஆனால் ஆக்ரோஷம் தனியாமல் தலையை வேகமாக அசைத்த படி நின்றது.

    இதையடுத்து கோவிலுக்குள் இருந்த பக்தர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். கோவில் வாயில்கள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு யானையை இயல்புநிலைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டன.

    பல்லுருடடி அழகிய காவு கோவிலில் இருந்து யானை படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஒன்றரை மணி நேர முயற்சிக்கு பிறகு யானையை சாந்தப்படுத்தி அமைதி நிலைக்கு கொண்டு வந்தனர். பின்பு அந்த யானை கோவிலில் இருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டது. அதன்பிறகே கோவிலில் ஏற்பட்டிருந்த பரபரப்பு முடிவுக்கு வந்தது.

    • சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
    • இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    நாடாளுமன்றத்தின் கீழவையில் பிரதமர் மோடியை தாக்க காங்கிரஸ் திட்டமிட்டிருந்ததாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் பதிலளிக்க இருந்தபோது, சில காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரின் இருக்கைக்கு அருகே சென்று ஒரு அசம்பாவித சம்பவத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டிருப்பதாகத் தனக்குத் தகவல் கிடைத்ததாகவும், இத்தகைய சூழலில் நாட்டின் ஜனநாயக மரபுகள் சிதைக்கப்படுவதைத் தவிர்க்கும் நோக்கில், பிரதமரை அவைக்கு வரவேண்டாம் என்று தாமே கேட்டுக்கொண்டதாக ஓம் பிர்லா கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. .

    இந்நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒரு தலைப்பட்சமாக நடந்து கொள்வதாக குற்றம் சாட்டி

    அவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பகல் நேர ஒளி தொடர்ந்தே இருக்கும்.
    • இந்த அற்புதமான வளையக் காட்சியின் உச்சத்தை அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை காணலாம்.

    புதுடெல்லி:

    சூரிய கிரகணங்கள் வானியல் நிகழ்வுகளில் மிகவும் முக்கியமானவை. இவை கலாச்சார ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என கருதப்படுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் சந்திரன் நேர்கோட்டில் வரும்போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. அப்போது சந்திரன் சூரியனின் ஒளியை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ மறைத்து ஒருநிழலை உருவாக்குகிறது.

    இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் மாசி மாத அமாவாசை நாளான வருகிற 17-ந்தேதி நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் மதியம் 3.26 மணி முதல் மாலை 7.57 மணி வரை நீடிக்கும். இந்த வளைய சூரிய கிரகணம் "நெருப்பு வளையம்" என்ற பெயராலும் அறியப்படுகிறது. காரணம், சந்திரன் சூரியனின் முன் வந்து அதன் மையப் பகுதியை மறைக்கும் போது, சூரியன் முழுமையாக மறையாமல், சந்திரனைச் சுற்றி பிரகாசமான ஒளிவட்டம் தென்படும்.

    இந்த நிகழ்வின்போது முழு சூரிய கிரகணத்தை போல வானம் முற்றிலும் இருளடையாது. பகல் நேர ஒளி தொடர்ந்தே இருக்கும். ஆனால் சூரியன் ஒரு ஒளிரும் வளையமாக சந்திரனைச் சுற்றி தெரியும். இந்த காட்சி அழகை மட்டுமல்லாமல், சூரியனின் வெளிப்புற அடுக்குகள் குறித்து ஆய்வு செய்யும் வானிய லாளர்களுக்கும் அறிவியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

    இந்த அற்புதமான வளையக் காட்சியின் உச்சத்தை அதிகபட்சமாக 2 நிமிடங்கள் 20 வினாடிகள் வரை காணலாம். இது தென் ஆப்பிரிக்கா, தெற்கு அர்ஜென்டினா மற்றும் அண்டார்டிகாவில் தெரியும். கான் கார்டியா போன்ற ஆய்வு நிலையங்களில் பணிபுரியும் ஒரு சில விஞ்ஞானிகள் மற்றும் தென் பெருங்கடலில் சாகசப் பயணம் செய்யும் பயணிகள் மட்டுமே இந்த முழு வளையத்தையும் நேரில் காண முடியும்.

    தென் அமெரிக்காவின் தெற்கு முனைகள், தெற்கு ஆப்ரிக்காவின் சில பகுதிகள் மற்றும் தென் கடல்க ளில் வசிக்கும் மக்களுக்கு, சூரியன் பாதியிலேயே மறைந்து, 'கடித்த ஆரஞ்சு பழம்' போலக் காட்சியளிக்கும் பகுதி சூரிய கிரகணம் தெரியும்.

    இந்தச் சூரிய கிரகணங்கள், 400 மடங்கு பெரிய சூரியன், 400 மடங்கு தொலைவில் இருப்பதால், சந்திரன் மற்றும் சூரியன் எவ்வளவு துல்லியமாக வரிசையாக உள்ளன என்பதை நமக்கு நினைவூட்டும் ஒரு வானியல் அதிசயம் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இந்தியாவில் சூரிய கிரகணம் தெரியாது என்றாலும், இது சிறு தாக்கத்தை உண்டாக்கும்.

    • ரெயில் திட்டங்களுக்கு தேவையானவற்றில் 24% நிலத்தையே தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியுள்ளது.
    • நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,465 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் ரெயில்வே திட்டங்களுக்கான நிதியை விரைந்து வழங்கிடவும், முக்கியமான திட்டங்களை மீண்டும் தொடங்கிடவும், தமிழ்நாட்டிற்குக் கூடுதலாக புதிய ரெயில்வே திட்டங்களை அனுமதித்திடவும் ரெயில்வே அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்கிடுமாறு கோரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதில் அளித்துள்ளார்.

    அதில், "தமிழ்நாட்டில் ரெயில் திட்டங்களுக்கு தேவையானவற்றில் 24% நிலத்தையே மாநில அரசு கையகப்படுத்தியுள்ளது. நிலம் கையகப்படுத்தியதற்கு ரூ.1,465 கோடி தமிழ்நாடு அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கவில்லை என முதலமைச்சர் கூறியுள்ளது அடிப்படை ஆதாரமற்றது.

    மதுரை - தூத்துக்குடி ரெயில்வே திட்டத்திற்கு 91% நிலம் கையகப்படுத்தும் பணி முடியவில்லை. திண்டிவனம் - செஞ்சி திருவண்ணாமலை ரெயில் திட்டத்திற்கு 86% நிலம் கையகப்படுத்தப்படவில்லை. ராமேஸ்வரம் - தனுஷ்கோடி திட்டத்திற்கு மாநில அரசு ஒத்துழைக்கவில்லை" என்று தெரிவித்துள்ளார். 

    • டெல்லியிலுள்ள பல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
    • பாராளுமன்றவளாகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர்.

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில், பாராளுமன்றத்திற்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது

    பாராளுமன்றவளாகம் மற்றும் டெல்லியிலுள்ள பல பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பாராளுமன்றவளாகத்தில் காவல் துறையினர் சோதனை நடத்தினர் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்துள்ளது.

    இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் கூடவுள்ள நிலையில் இந்த வெடிகுண்டு மிரட்டல் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே இருந்தது.
    • விமானி இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார்.

    கர்நாடக முன்னாள் அமைச்சர் அமரேகவுடா பாட்டீல் பையாபுராவின் பேரனும், சட்டமன்ற உறுப்பினர் ஷரணகவுடா பாட்டீல் பையாபுராவின் மகனின் திருமணம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசுகுரு என்ற இடத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் சித்தராமையா, துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சர் ஜர்கிஹோலி தனிதனி ஹெலிகாப்டர்களில் வர முடிவு செய்தனர். சித்தராமையா, டி.கே. சிவக்குமார் வருகைக்காக ராய்ச்சூர் சாலையில் 2 ஹெலிபேடுகள் தனி தனியாக அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு கலபுரகி சாலையில் உள்ள எம்.எல்.ஏ., மணப்பா வஜ்ஜலின் ஹெலிபேடு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை சார்பில் முதல்-அமைச்சர், துணை முதல்-அமைச்சரை வரவேற்க நெறிமுறைகளின் படி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. அதே நேரத்தில் அமைச்சர் ஜர்கிஹோலிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மட்டும் செய்யப்பட்டு இருந்தன.

    அப்போது முதல்-அமைச்சர் சித்தராமையா வந்த ஹெலிகாப்டரை அமைச்சர் ஜர்கிஹோலிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் பைலட் தவறாக தரையிறக்கினார். அப்போது ஹெலிகாப்டரில் வந்து இறங்கிய முதல்-அமைச்சர் சித்தராமையாவை வரவேற்க யாரும் இல்லை. ஒரு போலீஸ் பாதுகாப்பு வாகனம் மட்டுமே இருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து தவறை உணர்ந்த விமானி இது குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரிவித்தார். இதையடுத்து அவர்கள் அவசர அவசரமாக அங்கு வந்தனர். ஆனால் அதற்குள் முதல்-அமைச்சர் சித்தராமையா திருமணத்துக்கு சென்று விட்டார். இதையடுத்து சித்தராமையா இறங்க வேண்டிய ஹெலிபேடில் அமைச்சர் ஜர்கிஹோலியின் ஹெலிகாப்டர் தரையிறங்கியது.

    முதல்-அமைச்சர் சித்தராமையாவின் பைலட் குழப்பத்தால் இந்த சம்பவம் நடந்தது தெரிய வந்தது. இதையடுத்து திருமண விழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிய முதல்-அமைச்சர் சித்தராமையாவுக்கு போலீசார் மரியாதை செலுத்தினர்.

    ×