என் மலர்
இந்தியா
- பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார்.
- தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி கவாய்-க்கு போன் செய்து இந்த தாக்குதல் குறித்து கேட்டறிந்து சமூக வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி மீது காலணி வீச முயன்றது தொடர்பாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், "செப்டம்பர் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அந்த வழக்கை கேலி செய்தார். நமது சனாதன தர்மம் தொடர்பான ஒரு வழக்கு வரும்போது, உச்ச நீதிமன்றம் இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கிறது. மனுதாரருக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றாலும் அவரையும் கேலி செய்யாதீர்கள்.
இதனால் நான் காயப்பட்டேன்... நான் குடிபோதையில் இதை செய்யவில்லை. அவரது செயலுக்கு நான் எதிர்வினை ஆற்றினேன். இதற்காக நான் பயப்படவில்லை. நடந்ததற்கு வருத்தப்படவும் இல்லை
இதற்காக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. கடவுள் தான் என்னை இதைச் செய்ய வைத்தார். அவர் விரும்பினால் நான் சிறைக்குச் செல்ல தயார். நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்றாலும் அது கடவுளின் விருப்பம் தான்" என்று தெரிவித்தார்
முன்னதாக மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவ தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.
அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்வீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார்.
- நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
- 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்தனர். பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இருமல் மருந்து உட்கொண்டதில் 14 குழந்தைகள் பலியான நிலையில் நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
இச்சம்பவத்தையடுத்து இருமல் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய 2 இருமல் மருந்துகளின் விற்பனையை மத்திய பிரதேச அரசு முழுமையாகத் தடை செய்துள்ளது.
இந்த மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமான அளவு ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதையடுத்து மத்திய பிரதேச அரசு விசாரணை கோரி குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
கோல்ட்ரிப் இருமல் மருந்து தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விற்பனைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில் கர்நாடகத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருமல், சளிக்கு இந்த நிறுவன மருந்துகளை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருமல் மருந்து பயன்படுத்தியதில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
- புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்த போது திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் சி.டி.நிர்மல்குமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவரும் முன் ஜாமீன் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு விசாரணை ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புகள் தொடர்பாக சி.பி.ஐ.-க்கு மாற்ற மறுத்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை எதிர்த்து பா.ஜ.க. நிர்வாகி உமா ஆனந்தன் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இம்மனு வருகிற வெள்ளிக்கிழமை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் முன்பு விசாரணைக்கு வர உள்ளது.
- ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர்.
- கொல்கத்தாவில் தசரா பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
வடமாநிலங்களில் நவராத்திரி திருவிழா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலகலமாக கொண்டாடப்பட்டது.
துர்கா பூஜை கொண்டாட்டத்தின்போது ஆங்காங்கே ஏற்பட்ட சில பிரச்சினைகள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வெளியாகி பரவிய வண்ணம் உள்ளன.
அந்த வகையில் கொல்கத்தாவில் துர்கா பூஜையையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வு இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜையையொட்டி பூஜை பந்தல் அமைப்பது வாடிக்கை. அவ்வாறு கொல்கத்தாவில் ஏற்படுத்தப்பட்ட பூஜை பந்தல் ஜூன் மாதத்தில் ஏற்பட்ட ஏர் இந்திய விமான விபத்தை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.
260 பேரின் உயிர்களை காவு வாங்கிய அந்த சம்பவத்தை நினைவுகூறும் வகையில் ஏர் இந்தியா விமானம் ஒன்று அடுக்குமாடி கட்டிடத்தை மோதும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது. அனைவரும் மறக்க வேண்டிய இந்த கொடூர நிகழ்வை நினைவுப்படுத்தியது ஏன்? என்ற பதிவுகளுடன் இது தொடா்பான வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
- தனிப்படையினர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.
- புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று முன்ஜாமீன் கிடைக்குமா என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
புதுடெல்லி:
தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் கரூரில் கடந்த 27-ந்தேதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
இந்த சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (வயது 49), பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல் குமார் மற்றும் சிலர் மீது 5 பிரிவுகளில் கரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 29-ந்தேதி திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை தனிப்படை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் ஆகியோரை பிடிக்க கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இந்த தனிப்படையினர் புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அவர்கள் இருவரும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தலைமறைவாக உள்ளனர். அவர்கள் எங்கு உள்ளனர் என்ற தகவலும் வெளியாகவில்லை.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான பொதுநல வழக்குகள் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் மதுரை ஐகோர்ட்டு அமர்வில் கடந்த 3-ந்தேதி விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜோதிராமன் முன்ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதையடுத்து புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமீன் கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வருகிறது. முன் ஜாமீன் மனு மீதான விசாரணையில் தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் கபில் சிபல் வாதாடுகிறார். இந்த நிலையில் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல்குமார் ஆகியோருக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று முன்ஜாமீன் கிடைக்குமா என்பது தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
- ஸ்ரீசைலம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை விளக்குவதற்காக 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிற 16-ந்தேதி வருகிறார். பின்னர் கர்னூலில் உள்ள டிரோன் நகரத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
தொடர்ந்து ஸ்ரீசைலம் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோவில் பங்கேற்கிறார். இதில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, துணை முதல்-மந்திரி பவன்கல்யாண் கலந்து கொள்கின்றனர்.
ஜி.எஸ்.டி. சீர்திருத்தங்களால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகளை விளக்குவதற்காக 3 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகிறார். பிரதமர் வருகை குறித்து நேற்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
பொதுக்கூட்டம் நடத்துவதற்கு ஓர்வக்கல் மண்டலம் நன்னூர் அருகே தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான மைதானத்தை அமைச்சர்கள்,எம்.எல்.ஏ.க்கள் பிரதமரின் சிறப்பு திட்ட அதிகாரி வீரபாண்டியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
- ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும்.
- இப்போது கியர்களை மாற்ற வேண்டிய நேரம் இது.
டெல்லியின் பிதாம்பூரில் ஸ்ரீ பிராமண சபா ஏற்பாடு செய்த அகில இந்திய பிராமண மகாசபா நிகழ்வில் நேற்று டெல்லி முதல்வர் ரேகா குப்தா தலைமை விருந்தினராகப் பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் பேசிய ரேகா குப்தா, "பிராமணர்கள்தான் நமது சமூகத்தில் அறிவு தீபத்தை ஏற்றுபவர்கள். பிராமணர்கள் சாஸ்திரங்களை மட்டுமல்ல, அஸ்திரங்களையும் வணங்கினர்.
ஆயுதங்களும் சாஸ்திரங்களும் மட்டுமே நாட்டைப் பாதுகாக்க முடியும். மதத்தைப் பரப்பி, நல்ல பண்புகளை வளர்ப்பதன் மூலம், பிராமண சமூகம் எப்போதும் சமூகத்தின் நன்மைக்காகவே பாடுபட்டுள்ளது. எனவே எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பிராமண சமூகத்தின் நலனுக்காக பாடுபட வேண்டும்" என்று தெரிவித்தார்.
மேலும்,"கடந்த 27 ஆண்டுகளாக டெல்லியின் வளர்ச்சி மெதுவாக உள்ளது. இப்போது கியர்களை மாற்ற வேண்டிய நேரம் இது. டெல்லிக்கு இன்னும் தீவிரமான வளர்ச்சி தேவை.
டெல்லியின் வளர்ச்சிக்கு நாம் ஒன்றாக இணைந்து பணியாற்றுவோம். ஒன்றுபட்ட சமூகத்தால் மட்டுமே உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும்" என்று ரேகா குப்தா கூறினார்.
- ஆதர்ஷ் நகரில் ஒரு விடுதியில் தங்கி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
- வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, செப்டம்பர் மாதம் முழுவதும் பலமுறை பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அரியானாவின் ஜிந்த் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண் டெல்லியில் உள்ள ஆதர்ஷ் நகரில் ஒரு விடுதியில் தங்கி கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்து வருகிறார்.
அதே பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார். இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. செப்டம்பர் 9 ஆம் தேதி, தனது இரண்டு நண்பர்களுடன் விருந்து வைப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண்ணை ஹோட்டல் அறைக்கு அந்த இளைஞர் அழைத்தார்.
அங்கு, குளிர்பானத்தில் போதைப்பொருளை கலந்து கொடுத்து சுயநினைவை இழக்க செய்து அந்த இளைஞர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தார். மற்ற இருவரும் அந்த கொடூரத்தை பதிவு செய்தனர். அதன் பின்னர் அவர்களும் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
செப்டம்பர் 9 ஆம் தேதி நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அந்த இளைஞர்கள் வீடியோவை சமூக ஊடகங்களில் வெளியிடுவதாக மிரட்டி, செப்டம்பர் மாதம் முழுவதும் பலமுறை பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தனர்.
ஒரு மாதமாக நரகத்தைத் தாங்கிய பிறகு, இளம் பெண் இறுதியாக தைரியத்தை வரவழைத்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறினார்.கடந்த செப்டம்பர் 2 ஆம் தேதி பெண் சார்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த பிறகு, கடந்த வெள்ளிக்கிழமை மூன்று இளைஞர்கள் மீதும் மீதும் போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள அவர்களைக் கைது செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
- மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
- சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகன் இறந்த தேதியிலிருந்து சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும்
பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம், புற்றுநோயால் இறந்த ஒரு ராணுவ அதிகாரியின் தாய்க்குச் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கிய உத்தரவை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்துள்ளது.
அந்த ராணுவ அதிகாரி அரிய வகை புற்றுநோயால் ஜூன் 24, 2009 அன்று உயிரிழந்த நிலையில் திகாரியின் தாயார் சுலோச்சனா வர்மாவுக்குச் சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று சண்டிகர் ஆயுதப்படை தீர்ப்பாயம் 2019-ல் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு அண்மையில் உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஹர்சிம்ரன் சிங் சேத்தி மற்றும் விகாஸ் சூரி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது பேசிய நீதிபதிகள், புகைபிடித்தல் போன்ற காரணங்களால் ஏற்படும் புற்றுநோயைத் தவிர, ராணுவ வீரர்களிடையே ஏற்படும் அனைத்து வகையான புற்றுநோய்களும் ராணுவ சேவையுடன் தொடர்புடையதாகவே கருதப்படும். பணியில் சேரும்போது ஆரோக்கியமாக இருந்த அதிகாரி, ஆறு ஆண்டுகள் ராணுவச் சேவையில் இருந்ததால் ஏற்பட்ட நீண்டகால மன அழுத்தமே புற்றுநோய்க்குக் காரணம்" என்று தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து மத்திய அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், சுலோச்சனா வர்மாவுக்கு அவரது மகன் இறந்த தேதியிலிருந்து சிறப்பு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்ற தீர்ப்பளித்தனர்.
- என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.
- வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன்
உத்தரப் பிரதேசத்தில் 8 ஆம் வகுப்பு மாணவியை பள்ளி மேலாளர் தொடர் பாலியல் துன்புறுத்தல் செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தியோரியா மாவட்டத்தில் சதார் கோட்வாலி பகுதியை சேர்ந்த அந்த சிறுமி அங்குள்ள தனியார் பள்ளியொன்றில் பயின்று வந்தார்.
அண்மை காலமாக சிறுமி பள்ளியிலும் வீட்டிலும் விநோதமாக நடந்துகொண்டிருக்கிறார். என்ன நடக்கிறது என்று தெரியாமல் இருந்த அவரது தந்தை, இறுதியாகச் சிறுமி நடந்தவற்றை சொன்னபோது அதிர்ச்சியில் உரைந்தார்.
பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹா தன்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து, கதவைப் பூட்டி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், வெளியே சொன்னால் தேர்வில் தோல்வியடையச் செய்வேன், உன் குடும்பத்திற்கு தீங்கு விளைவிப்பேன் என்று மிரட்டியதாகவும் சிறுமி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மேலும் பல மாதங்களாக இந்த துன்புறுத்தல் தொடர்ந்தது என்று சிறுமி நடுக்கத்துடன் கூறியுள்ளார்.
சிறுமியின் தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, காவல்துறை பள்ளி மேலாளர் தேவேந்திர குஷ்வாஹாவை கைது செய்து விசாரித்து வருகிறது. அவர் மீது பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
- 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்டார்.
- அரசியலமைப்பைப் பாதுகாக்க சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந்த ஒருவரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராஜேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதலைக் கண்டிக்க வார்த்தைகள் போதாது.
இது அவர் மீது மட்டுமல்ல, நமது அரசியலமைப்பின் மீதான தாக்குதலாகும். தலைமை நீதிபதி கவாய் மிகவும் கருணையுள்ளவர். முழு தேசமும் அவருடன் ஒற்றுமையாக நிற்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய தலைமை நீதிபதி மீதான தாக்குதல் நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் நமது அரசியலமைப்பின் உணர்வு மீதான தாக்குதல் ஆகும். இத்தகைய வெறுப்புக்கு நம் நாட்டில் இடமில்லை, அது கண்டிக்கப்பட வேண்டும்"என்று தெரிவித்தார்.
காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியிட்டுள்ள கண்டன பதவில், ""உச்ச நீதிமன்றத்தில் இன்று மாண்புமிகு இந்திய தலைமை நீதிபதி மீது நடத்தப்பட்ட தாக்குதல் வெட்கக்கேடானது மற்றும் இழிவானது. இது நமது நீதித்துறையின் கண்ணியம் மற்றும் சட்டத்தின் ஆட்சியின் மீதான தாக்குதல்.
தனது திறமை, நேர்மை மற்றும் விடாமுயற்சி மூலம் நாட்டின் மிக உயர்ந்த நீதித்துறை பதவிக்கு உயர்ந்துள்ள ஒரு தலைமை நீதிபதி, இந்த முறையில் குறிவைக்கப்படும்போது, அது மிகவும் கவலையளிக்கும் செய்தியை அனுப்புகிறது.
அரசியலமைப்பைப் பாதுகாக்க சமூகத் தடைகளைத் தகர்த்தெறிந்த ஒருவரை மிரட்டி அவமானப்படுத்தும் முயற்சியை இது பிரதிபலிக்கிறது" என்று கூறினார்.
- டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும்
- நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்
பீகாரில் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
முழுமையான பெரும்பான்மையைப் பெற மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் 122 இடங்கள் தேவை. ஐக்கிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய ஆளும் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளத்தை உள்ளடக்கிய இந்தியா கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளது.
டெல்லி மற்றும் பஞ்சாபில் செயல்படுத்தப்பட்ட நிர்வாக மாதிரியை பீகாரிலும் பின்பற்ற முடியும் என்று தான் நம்புவதாக ஆம் ஆத்மி பீகார் மாநில பொறுப்பாளர் அஜேஷ் யாதவ் ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
அறிவிப்பின் ஒரு பகுதியாக, அஜேஷ் யாதவ் மற்றும் கட்சியின் மாநிலத் தலைவர் ராகேஷ் யாதவ் ஆகியோர் 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டனர்.
"எங்கள் கூட்டணி மக்களுடன் உள்ளது. நாங்கள் எந்தக் கட்சியுடனும் அல்லது கூட்டணியுடனும் கைகோர்க்க மாட்டோம்" என்று அக்கட்சியின் மாநில இணைப் பொறுப்பாளர் அபினவ் ராய் தெரிவித்தார்.






