என் மலர்
இந்தியா
- ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்தில் மும்பையில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்.
- குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் கடந்த 36 நாட்களில் 82 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர் என காவல்துறை கவலை தெரிவித்துள்ளது.
மும்பை காவல்துறை அறிக்கையில், நவம்பர் 1 முதல் டிசம்பர் 6 வரையிலான 36 நாட்களில், குழந்தைகள் காணாமல் போனதாக 82 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்தக் காலகட்டத்தில் 18 வயதுக்குட்பட்ட 41 சிறுமிகளும் 13 சிறுவர்களும் காணாமல் போயுள்ளனர். ஐந்து முதல் 11 வயதுக்குட்பட்ட சிறுமிகளும் சிறுவர்களும் காணாமல் போனவர்களில் அடங்குவர்.
இந்தக் காலகட்டகாத்தில் பச்சிளம் குழந்தைகள் காணாமல் போன சம்பவங்களும் பதிவாகியுள்ளது.
குர்லா, வகோலா, பவாய், மால்வானி, சகினாகா போன்ற நகரின் பல்வேறு காவல் நிலையங்களில் குழந்தைகள் காணாமல் போனது தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும் ஜூன் முதல் டிசம்பர் வரை 6 மாத காலத்தில் மும்பையில் 93 சிறுமிகள் உட்பட 145 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக, அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த காணாமல் போன சம்பவங்களுக்குப் பின்னால் மனித கடத்தல் இருப்பதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆளும் பாஜக முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்க்கு கடிதம் எழுதி உள்ளார்.
- பல மாவட்டங்களில் வெப்பநிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.
- மூடுபனி விளக்குகளைப் பயன்படுத்தவும், வாகனங்களுக்கு இடையேயான தூரத்தை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
அரியானாவில் இன்று காலை முதல் சாலைகள் தெரியாத அளவுக்கு அடைந்த மூடுபனி சூழந்துள்ளது.
இந்நிலையில் அங்கு ரோஹ்தக், ஹிசார்,ரேவாரி மாவட்டங்களில் நடந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் பலர் காயமடைந்தனர்.
ரோஹ்தக் மாவட்டத்தில் மேஹம் பகுதியில் உள்ள நெடுஞ்சாலை சந்திப்பில் முதலில், ஒரு லாரி மற்றும் ஒரு கார் மோதிக்கொண்டன. தொடர்ந்து பின்னால் வந்த வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதிக்கொண்டன. சுமார் 35 முதல் 40 வாகனங்கள் விபத்தில் சிக்கின.
இந்த சம்பவத்தில் பல வாகனங்கள் நொறுங்கின. விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
இதேபோல், ஹிசார் மாவட்டத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் அரசுப் பேருந்து ஒரு லாரியுடன் மோதியதில், பின்னால் வந்த மற்றொரு பேருந்து, ஒரு கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் ஒரு இரு சக்கர ஓட்டி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற பயணிகள் காயமின்றி தப்பியதாகத் தெரிகிறது.
மேலும், ரேவாரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை இல் மற்றொரு விபத்து ஏற்பட்டது. மூன்று முதல் நான்கு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டன. இதனால் பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியானாவில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவி வருகிறது. பல மாவட்டங்களில் வெப்பநிலை 4 முதல் 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது.
இந்த சூழலில், இந்திய வானிலை ஆய்வு மையம் அடர்ந்த மூடுபனி உருவாகும் என்றும், வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மூடுபனி விளக்குகளைப் பயன்படுத்தவும், வாகனங்களுக்கு இடையேயான தூரத்தை கடைபிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.
- "நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு சபதம் எடுத்தார்.
- முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.
கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.
மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி (UDF) கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது ஜனநாயக முன்னணி (LDF) அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
LDF கணிசமான இடங்களில் வென்றாலும் காங்கிரஸ் கூட்டணியை விட பின்தங்கியது பேசுபொருளாகி வருகிறது.
இந்நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இடது முன்னணி LDF தொண்டர் ஒருவர் தனது மீசையை சிரைத்துள்ளார்.
"நகராட்சியில் LDF தோல்வியடைந்தால், நான் என் மீசையை மழித்துவிடுவேன்" என்று தேர்தலுக்கு முன்பு பகிரங்கமாகக் கூறிய பாபு வர்கீஸ், முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு கூறியது போல் தனது மீசையை மழித்துக் கொண்டார்.
பத்தனம்திட்டா மாவட்ட பஞ்சாயத்தில் உள்ள 16 இடங்களில் 12 இடங்களை வென்றதன் மூலம் காங்கிரசின் UDF பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
முந்தைய தேர்தல்களில் 12 இடங்களை வென்ற LDF, இந்த முறை ஐந்து இடங்களில் மட்டுமே வென்றது.
கூடுதலாக, UDF 34 கிராம பஞ்சாயத்துகள் மற்றும் ஏழு தொகுதி பஞ்சாயத்துகளில் பெரும்பான்மையைப் பெற்றது.
- இந்தத் திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, அது மாற்றப்படும்போது, மீண்டும் அரசாங்க வளங்கள் வீணாகின்றன.
- ஒரு காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தோல்வியின் சின்னம் என்று வர்ணித்த பிரதமர், இப்போது அந்தப் புரட்சிகரமான திட்டத்திற்குப் பெருமை தேடிக்கொள்ளும் நோக்கில் அதன் பெயரை மாற்றுகிறார்.
2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி அரசால் கொண்டுவரப்பட்டது 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. பாஜக ஆட்சியில் இதற்கான நிதியை பாஜக விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியும் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக மாநிலங்கள் குற்றம்சாட்டின.
இந்நிலையில் 'மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' என்பதை விரிவுபடுத்தி 'புஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம்' (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய பாஜக அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நேருவை தொடர்நது காந்தி மீது பாஜக வெறுப்பை உமிழ்ந்து வருவதாக காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி இருந்தார்.
காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "இதற்குப் பின்னால் உள்ள மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இதற்குப் பின்னால் உள்ள மனநிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
முதலாவதாக, இந்தத் திட்டத்திற்கு மகாத்மா காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது, அது மாற்றப்படும்போது, மீண்டும் அரசாங்க வளங்கள் வீணாகின்றன.
அலுவலகங்கள் முதல் எழுதுபொருள் வரை அனைத்தையும் மறுபெயரிட வேண்டும், இது ஒரு பெரிய மற்றும் விலையுயர்ந்த செயல்முறையாகும். அப்படியானால் இதை தேவையில்லாமல் செய்வதன் பயன் என்ன? எனக்குப் புரியவில்லை" என்று தெரிவித்தார்.
இதற்கிடையே காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் தனது எக்ஸ் பக்கத்தில், "ஒரு காலத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை தோல்வியின் சின்னம் என்று வர்ணித்த பிரதமர், இப்போது அந்தப் புரட்சிகரமான திட்டத்திற்குப் பெருமை தேடிக்கொள்ளும் நோக்கில் அதன் பெயரை மாற்றுகிறார்.
இது மகாத்மா காந்தியை நமது தேசிய மனசாட்சியிலிருந்தும், குறிப்பாக இந்தியாவின் ஆன்மா குடியிருப்பதாக அவர் கூறிய கிராமங்களிலிருந்தும் அழிப்பதற்கான மற்றொரு வழியாகும்.
இந்தத் திட்டத்திற்கு வேண்டுமென்றே இழைக்கப்படும் புறக்கணிப்பை மூடிமறைப்பதற்காக செய்யப்படும் ஒரு மேலோட்டமான மாற்றத்தைத் தவிர இந்த நடவடிக்கை வேறொன்றுமில்லை.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத் தொழிலாளர்கள் அதிக ஊதியம் கோரி வருகின்றனர், ஆனால் மத்திய அரசு ஆண்டுதோறும் இந்தத் திட்டத்திற்கான ஒதுக்கீட்டைக் குறைத்து வருகிறது.
நிலுவைத் தொகைகள் குவிந்து கொண்டே செல்கின்றன, இது இந்தத் திட்டத்திற்கு மெதுவான மரணத்தை ஏற்படுத்துவதற்காக கவனமாகத் திட்டமிடப்பட்ட ஒரு உத்தியாகத் தெரிகிறது.
உண்மையில், இந்த அரசாங்கத்திற்கு நலத்திட்டங்களை வழங்குவதில் எந்த நோக்கமும் இல்லை. யோசனைகள் தீர்ந்துவிட்ட நிலையில், அது வெறும் பாசாங்கு செய்கிறது.
மோடி அவர்களே, நீங்கள் விரும்பியபடி அதன் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள், இந்த மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தை இந்தியாவின் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு வந்தவர்கள் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களும் திருமதி சோனியா காந்தி அவர்களும்தான் என்பதை மக்கள் அறிவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது.
- காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள்வந்தபோது வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.
மாத வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு விரட்டப்படும் சூழலில் குடும்பம் ஒன்று தற்கொலை செய்த சோக சம்பவம் தலைநகர் டெல்லியில் அரங்கேறி உள்ளது.
டெல்லியின் கல்காஜியில் ஒரு தாய் மற்றும் அவரது இஒரண்டு குழந்தைகளின் உடல்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டன.
இந்தக் குடும்பம் இங்கு ஒரு வீட்டில் ரூ.40,000 மாத வாடகைக்கு அனுராதா கபூர் (52), அவரது மகன்கள் ஆஷிஷ் கபூர் (32) மற்றும் சைதன்யா கபூர் (27) வசித்து வந்தனர்.
அனுராதா கணவர் கடந்த ஆண்டு இறந்த நிலையில் அவரது மகன்களுக்கும் வேலை இல்லாததால் குடும்பம் பண கஷ்டத்தில் இருந்துள்ளது. கட்டுமானத் துறையில் பணிபுரிந்த கணவர், குடும்பத்திற்கு மிகப்பெரிய கடன் சுமையை ஏற்படுத்தியிருந்தார்.
இந்த வீட்டின் மூன்றாவது மாடியை டிசம்பர் 2023 இல் குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்தனர். ஆனால் அவர்கள் வாடகை செலுத்தவில்லை.
கடந்த ஆண்டு கணவரும் இறந்த பிறகு, வீட்டை காலி செய்ய வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகினார் .
கடுமையான மன அழுத்தத்தில் இருந்த மகன்கள் கடந்த மாதம் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். வாடகை தொடர்பாக வீட்டு உரிமையாளருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்து வந்தன.
வீட்டு உரிமையாளரின் புகாரைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி வீட்டை காலி செய்ய காவல்துறை மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வந்தபோது, வீடு உள்ளே இருந்து பூட்டப்பட்டிருந்தது.
வீட்டு உரிமையாளர் அழைத்தபோது திறக்காததால், போலி சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தபோது, தாயும் அவரது இரண்டு மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டனர்.
உடல்களுக்கு அருகில் ஒரு தற்கொலைக் குறிப்பு கண்டெடுக்கப்பட்டதாகவும், அதில் பண நெருக்கடி காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக எழுதப்பட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர் .
இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், உடல்கள் பிரேத பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- இந்த விபத்து வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
- இந்தக் கொலைக்கு உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் கைது செய்தனர்.
ஆந்திராவின் அனகப்பள்ளி மாவட்டம் கோத்தப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் குரு நாராயணமூர்த்தி (54)
இவர் கடந்த டிசம்பர் 9-ம் தேதி சாலையில் சடலமாக கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் நாராயணமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சாலை விபத்தில் அவர் மரணம் அடைந்து விட்டதாக நாராயண மூர்த்தியின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நாராயணமூர்த்தியின் உடல் மீது இருந்த காயங்கள் கொலைக்கான சாத்தியக்கூறுகளுடன் இருப்பதால் இந்த விபத்து வழக்கை சந்தேக வழக்காக பதிவு செய்து போலீசார் விசாரித்து வந்தனர்.
விசாரணையின் ஒரு பகுதியாக, ஆறு மாதங்களுக்கு முன்பு நாராயணமூர்த்தியின் பெயரில் பல்வேறு எல்ஐசி உள்ளிட்ட இன்சூரன்ஸ் நிறுவனங்களிலிருந்து ரூ.1.08 கோடி மதிப்புள்ள காப்பீட்டுக் பாலிசிகள் பெறப்பட்டிருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
நாராயண மூர்த்தி இறந்தால் காப்பீட்டுத் தொகை தங்களுக்கு வந்துவிடும் என்ற பேராசையில் மருமகன் சுன்கரி மற்றும் பேரன் சுன்கரி ஜோதி பிரசாத் ஆகியோர் அவரை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொன்றதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அவர்களை கைது செய்த போலீசார் இந்தக் கொலைக்கு உதவிய எல்ஐசி முகவர் நானாஜி மற்றும் ததாஜி என்ற மற்றொரு நபரையும் கைது செய்தனர்.
- எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்தவர் 46 வயதான சுபாஷ் சந்திரன்
- கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.
கேரளாவில் நடைபெற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 6 மாநகராட்சிகளில் 4 இல் காங்கிரஸ் கூட்டணி வென்றுள்ளது.
மேலும் நகராட்சிகளிலிலும் காங்கிரஸ் கூட்டணி கணிசமான இடங்களை கைப்பற்றியது. அதற்கு அடுத்தபடியாக ஆளும் இடது முன்னணி கூட்டணி அதிக இடங்களில் வென்றுள்ளது. பாஜக திருவனநாதபுரத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்நிலையில் 'மஞ்சும்மல் பாய்ஸ்' படத்தின் பின்னால் உள்ள உண்மைக் கதைக்கு சொந்தக்காரரான சுபாஷ் சந்திரன் ஏலூர் நகராட்சியில் உள்ள 27-வது வார்டில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜனநாயக முன்னணி வேட்பாளராக களமிறங்கினார்.
எர்ணாகுளத்தில் உள்ள ஏலூர் பகுதியை சேர்ந்த 46 வயதான சுபாஷ் சந்திரன், கடந்த 2006 இல் நண்பர்களுடன் கொடைக்கானல் சென்றபோது குணா குகையில் உள்ள குழிக்குள் தவறி விழுந்துவிட்டார்.
அப்போது அவரை நண்பர் ஒருவர் சக நண்பர்கள் உதவியுடன் மீட்டு கொண்டுவந்தார். இதை வைத்து இயக்கப்பட்ட 'மஞ்சும்மல் பாய்ஸ்' பெரு வெற்றி பெற்றது.
இந்த நிலையில் சுபாஷ் சந்திரன் தான் போட்டியிட்ட ஏலூர் நகராட்சி வார்டில் வாக்கு எண்ணிக்கையில் 3-ம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவினார்.
- பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது
தலைநகர் டெல்லியின் சராசரி காற்றின் தரக் குறியீடு '450' என்ற மோசமான அளவை தாண்டியுள்ளது.
இந்நிலையில், டெல்லியில் காற்று மாசு மோசமான நிலையில் எட்டியுள்ளதால் நான்காம் கட்ட 'கிராப்' கட்டுப்பாடுகள் அமலாகின்றன.
அதன்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவீதம் பேரை வீட்டில் இருந்தே பணியாற்ற டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனைத்து பள்ளிகளிலும் நேரடி வகுப்புகளுக்கு பதிலாக ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கட்டுமானப் பணிகளுக்கும், பிஎஸ்-3 பெட்ரோல் வாகனங்கள் மற்றம் பிஎஸ்-4 டீசல் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளாட்சி தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியை பா.ஜ.க. கைப்பற்றியது.
- கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
திருவனந்தபுரம்:
கேரளாவில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில், ஆளும் இடதுசாரி முன்னணி எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. அதேவேளையில், மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பாஜக வென்றுள்ளது. இது குறித்து கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் கூறியதாவது:
எல்டிஎப் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதற்கான காரணம் குறித்து விரிவாக ஆராயப்படும்.
தேவையான நடவடிக்கைகளை எடுத்து முன்னோக்கி செல்வோம்.மதவாத சக்திகளின் தவறான தகவல்கள் மற்றும் பிளவுபடுத்தும் தந்திரங்களுக்கு மக்கள் இரையாகிவிட கூடாது என்பதை உறுதிசெய்ய கூடுதல் விழிப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதற்கான எச்சரிக்கை மணியாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது. மக்களின் இந்த தீர்ப்பு, அனைத்து வகையான வகுப்புவாதத்திற்கும் எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது என பதிவிட்டுள்ளார்.
இடதுசாரிகள் 45 ஆண்டுகளாக திருவனந்தபுரத்தில் வெற்றி பெற்று வந்த நிலையில் பா.ஜ.க. தன்வசப்படுத்தியுள்ளது. பாலக்காடு திரிபுனிதுரா நகராட்சிகளையும் பா.ஜ.க. வென்றுள்ளது.
- அர்ஜென்டினாவின் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
- ஐதராபாத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை கால்பந்து வீரர் மெஸ்ஸி நேரில் சந்தித்தார்
ஐதராபாத்:
அர்ஜென்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக, இன்றிரவு உப்பல் மைதானத்தில் தெலங்கானா முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அணியுடன், மெஸ்ஸியின் அணி நட்பு போட்டியில் விளையாடியது.
இந்தப் போட்டியை பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கண்டு களித்தார். இதற்காக ராகுல் காந்தி இன்று மாலை சிறப்பு விமானம் மூலம் ஐதராபாத் வந்தடைந்தார்.
இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தியை கால்பந்து வீரர் மெஸ்ஸி நேரில் சந்தித்தார். அப்போது மெஸ்ஸி தனது கையெழுத்திட்ட ஜெர்சியை ராகுல் காந்திக்கு பரிசாக அளித்தார்.
- தேஜ்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றினார்.
- முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்புவதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஒருவரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேஜ்பூரில் உள்ள பாட்டியா பகுதியைச் சேர்ந்த குலேந்திர சர்மா நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குலேந்திர சர்மா 2002 இல் விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றார். முன்னதாக தேஜ்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு, அவர் சிறிது காலம் தேஜ்பூர் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.
இந்நிலையில் சிறிது காலமாக குலேந்திர சர்மாவை கண்காணித்து வந்த போலீசார், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடன் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்புவதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவரது மொபைல் போன் மற்றும் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் சில சந்தேகத்திற்கிடமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் சில தரவுகளை நீக்கியிருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.
விசாரணை முடிந்த பின்னரே உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று சோனித்பூர் டிஎஸ்பி ஹரிசரண் பூமிஜ் கூறினார்.
- அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.
மத்திய வேளாண் அமைச்சரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.
உளவுத்துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் ஐ.எஸ்.ஐ.யால் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கைகளால் போபாலில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தற்போதுள்ள பாதுகாப்புக்கு கூடுதலாக மேலும் சில வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
இருப்பினும், இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இன்று, போபாலில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ், 10க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுடன், தற்காப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற்ற மொத்தம் 55 பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது.






