என் மலர்
இந்தியா

பாகிஸ்தான் உளவுத்துறையுடன் தொடர்பு.. அசாமில் ஓய்வுபெற்ற விமானப்படை அதிகாரி அதிரடி கைது
- தேஜ்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றினார்.
- முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்புவதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உடன் தொடர்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் ஓய்வுபெற்ற இந்திய விமானப்படை அதிகாரி ஒருவரை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேஜ்பூரில் உள்ள பாட்டியா பகுதியைச் சேர்ந்த குலேந்திர சர்மா நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
குலேந்திர சர்மா 2002 இல் விமானப்படையில் இருந்து ஓய்வு பெற்றார். முன்னதாக தேஜ்பூரில் உள்ள விமானப்படை தளத்தில் ஜூனியர் வாரண்ட் அதிகாரியாக பணியாற்றினார். ஓய்வுக்குப் பிறகு, அவர் சிறிது காலம் தேஜ்பூர் பல்கலைக்கழகத்திலும் பணியாற்றினார்.
இந்நிலையில் சிறிது காலமாக குலேந்திர சர்மாவை கண்காணித்து வந்த போலீசார், முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு அவரை கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர் பாகிஸ்தான் உளவு நிறுவனத்துடன் தொடர்புடையவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும், தேசிய பாதுகாப்பு தொடர்பான முக்கியமான தகவல்களை அவர்களுக்கு அனுப்புவதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவரது மொபைல் போன் மற்றும் மடிக்கணினி பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களிடம் சில சந்தேகத்திற்கிடமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவர் சில தரவுகளை நீக்கியிருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றனர்.
விசாரணை முடிந்த பின்னரே உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும் என்று சோனித்பூர் டிஎஸ்பி ஹரிசரண் பூமிஜ் கூறினார்.






