என் மலர்tooltip icon

    இந்தியா

    • சனாதனத்தை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கூச்சலிட்டார்.
    • இத்தகைய விஷயங்கள் என்னை எவ்விதத்திலும் பாதிக்காது" என்று நீதிபதி பி.ஆர். கவாய் தெரிவித்தார்.

    உச்ச நீதிமன்ற வளாகத்தில் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது வழக்கறிஞர் ஒருவர் காலணி வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அந்த சமயத்தில் 'சனாதனத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது' என்று தாக்குதல் நடத்திய வழக்கறிஞர் கூச்சலிட்டார்.

    இதனையடுத்து காலணி வீசிய வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர். இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.

    முன்னதாக மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவ தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.

    அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்வீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.

    இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக தான் அவர் மீது தற்போது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    • விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்
    • கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    ஒடிசா மாநிலம் தெபிகரா பகுதியில் உள்ள நதி படித்துறையில் துா்கா சிலையை கரைக்க விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் கடந்த 3-ந்தேதி நள்ளிரவில் ஊா்வலமாகச் சென்றனா்.

    தா்கா பஜாா் வழியாகச் ஊா்வலம் சென்றபோது, அதிக சத்தத்தில் பாடல் ஒலித்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்தனா். இதைத்தொடா்ந்து வாக்கு வாதம் ஏற்பட்டு வன்முறையாக மாறியது.

    அப்போது துா்கா சிலை ஊா்வலத்தினா் மீது கற்கள், கண்ணாடி பாட்டில்கள் வீசப்பட்டன. இந்தச் சம்பவம் தொடா்பாக 6 போ் கைதுசெய்யப்பட்டனா்.

    இந்நிலையில், மாவட்ட நிா்வாகத்தின் தடை உத்தரவை மீறி விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினா் நேற்று மாலை மோட்டார் சைக்கிள் பேரணி நடத்தினா்.வித்யாதா்பூர் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி, வன்முறை நடைபெற்ற தா்கா பஜாா் உள்ளிட்ட பகுதிகளைக் கடந்து நகரத்தின் மேற்குப் பகுதியான சி.டி.ஏ செக்டாா் 11-ல் முடிவடைந்தது. இதில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட னர்.

    அப்போது அவா்களை போலீசார் தடுத்து நிறுத்தியபோது மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப் பட்டன. மேலும் கடைகள், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டன.

    நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர். வன்முறையை தடுக்க கட்டாக்கில் 13 காவல் நிலைய எல்லை பகுதிகளில் 36 மணி நேர ஊரடங்கு உத்தரவை ஒடிசா அரசு பிறப்பித்தது.

    இந்த ஊரடங்கு உத்தரவு நேற்று இரவு 10 மணி முதல் தர்கா பஜார், மங்களாபாக், பூரிகாட், லால் பாக் மற்றும் ஜகத்பூர் உள்ளிட்ட பகுதிகளில் அமலானது.

    மேலும், பொய்யான தகவல் பரப்பப்படுவதைத் தடுக்க கட்டாக் மாநகராட்சி, கட்டாக் வளா்ச்சி ஆணையம் மற்றும் 42 மவுஜா மண்டலம் ஆகிய பகுதிகளில் நேற்று இரவு 7 மணி முதல் இன்று இரவு 7 மணி வரையில் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே துா்கா சிலை கரைப்பின்போது ஏற்பட்ட வன்முறைக்கு எதிராக கட்டாக் நகரில் இன்று 12 மணி நேர கடை அடைப்புக்கு விஷ்வ இந்து பரிஷத் அழைப்பு விடுத்தது.

    கட்டாக் நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கியப் பகுதிகளில் போலீசார் மற்றும் விரைவு நடவடிக்கை படை வீரர்கள் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

    அமைதி காக்கும்படி முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, முன்னாள் முதல்-மந்திரி நவீன் பட்நாயக், மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் ஆகியோர் வலியுறுத்தி உள்ளனர்.

    • ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும்.
    • நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் விரதமிருந்து இருமுடி கட்டி வருவார்கள். மேலும் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் நடைபெறும் மாதாந்திர பூஜையிலும் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பார்கள்.

    சபரிமலைக்கு முக்கிய பிரமுகர்கள் பலரும் வந்து செல்வது வழக்கம். அதேபோல் ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலைக்கு வருவதாக இருந்தது. அவர் பம்பையில் இருந்து நடைபயணமாக சன்னிதானத்துக்கு சென்று சாமி தரிசனம் செய்வார் என்றும், ஒருநாள் சபரிமலையில் தங்கியிருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதற்கு தகுந்தாற்போல் பம்பையில் இருந்து சன்னிதானம் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக ஜனாதிபதியின் சபரிமலை வருகை ஒத்திவைக்கப்பட்டது. வேறொரு நாள் சபரிமலைக்கு வருவார் என்று ஜனாதிபதி மாளிகை தெரிவித்திருந்தது.

    அதன்படி ஜனாதிபதி திரவுபதி முர்பு இந்த மாதம் சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் விமானம் மூலமாக வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு வரும் அவர், பின்பு பம்பைக்கு சென்று, அங்கிருந்து சன்னிதானத்துக்கு செல்கிறார்.

    ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது. ஐப்பசி மாத பூஜைக்காக 22-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். ஐப்பசி மாத பூஜையின் இறுதி நாளான 22-ந்தேதியே ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலைக்கு வர உள்ளார்.

    அவர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு 22-ந்தேதி இரவே சன்னிதானத்தில் இருந்து பம்பைக்கு வருகிறார். பின்பு அங்கிருந்து திருவனந்தபுரம் செல்கிறார். ஜனாதிபதி திரவுபதி முர்மு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 24-ந்தேதி வரை கேரளாவில் இருப்பார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு ஐப்பசி மாதாந்திர பூஜையில் பங்கேற்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன. மேலும் ஜனாதிபதி வருகை தரும் 22-ந்தேதி பக்தர்கள் கோவிலுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிகிறது. ஆனால் அது தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

    ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதான பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன.

    • 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் 3 கட்டங்களாக நடைபெற்றது.
    • சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.

    பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.

    243 உறுப்பினர்களை கொண்ட அந்த மாநில சட்டசபையின் பதவி காலம் நவம்பர் 22-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதனால் அங்கு விரைவில் தேர்தல் நடைபெறுகிறது.

    பீகார் தேர்தல் தயார் நிலை குறித்து கடந்த 2 நாட்களாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பாட்னாவில் ஆய்வு மேற்கொண்டார். பீகார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    இந்த நிலையில் பீகார் தேர்தல் தேதி இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்படுகிறது. டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பீகார் சட்டசபை தேர்தல் தேதியை அறிவிக்கிறார்.

    2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தல் அக்டோபர் 28, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது. நவம்பர் 10-ந்தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

    பீகார் சட்டசபை தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் தலைமை தேர்தல் ஆணையரிடம் பெரும்பாலான அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அதே போல சில கட்சிகள் 2 கட்டங்களாக நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தன.

    இதனால் பீகார் தேர்தல் எத்தனை கட்டங்களாக நடைபெறும் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    பீகார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்த பணியை கடந்த ஜூன் மாதம் தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. சமீபத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டது.

    வாக்காளர் பட்டியலில் முன்பு 7.89 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்த நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தில் 47 லட்சம் பேர் நீக்கப்பட்டு தற்போது 7.42 கோடி வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

    பீகாரில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஐக்கிய ஜனதா தளம்-பா.ஜ.க. கூட்டணி கடுமையாக போராடி வருகிறது. லோக் ஜன சக்தி, இந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஷ்டிரீய லோக் மோர்ச்சா ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    எதிர்க்கட்சி கூட்டணியில் ராஷ்டிரீய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. அங்கு கடும் போட்டி நிலவுகிறது.

    • இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
    • போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்தோரை போலீசார் கைது செய்தனர்.

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் முலக்கலச்செருவு பகுதியில் தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகள் போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்த ஜனார்தன் ராவ், கோட்டராஜு, ராஜேஷ், ஸ்ரீனிவாச ராவ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த விவகாரம் ஆந்திர மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்த குற்ற செயல்களில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சி நிர்வாகிகளை கட்சியில் இருந்து நீக்கி அக்கட்சித் தலைவரும், முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடு உத்தரவு பிறப்பித்தார். 

    • தீ விபத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெறும் 5 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
    • தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த முதல்வர் உத்தரவு.

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சவாய்மான் சிங் அரசு ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியின் 2-வது மாடியில் உள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் நேற்று இரவு திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    ஆஸ்பத்திரி முழுவதும் தீ வேகமாகப் பரவியது. இதனால் அங்கு சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உடனடியாக பதறியடித்து மருத்துவமனையை விட்டு வெளியே ஓடிவந்தனர்.

    தீவிபத்து குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து, மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையில் ஏற்பட்ட தீயை அணைத்தனர்.

    இந்த பயங்கர தீ விபத்தில் சிக்கி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 2 பெண்கள், 4 ஆண்கள் உள்பட 6 பேர் மூச்சு திணறியும் உடல் கருகியும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    படுகாயம் அடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. மேலும், இந்த தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த விலை உயர்ந்த மருத்துவ உபகரணங்களும் தீயில் எரிந்து நாசமானது.

    தீ விபத்து குறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரியவந்தது.

    தகவல் அறிந்ததும் முதல்-மந்திரி பஜன்லால் சர்மா, நாடாளுமன்ற விவகார மந்திரி ஜோகராம் படேல் மற்றும் உள்துறை இணை மந்திரி ஜவஹர் சிங் பெதம் ஆகியோர் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் தீ விபத்து ஏற்பட்டபோது மருத்துவமனை ஊழியர்கள் தகவல் எதுவும் தெரிவிக்காமல் ஓடிவிட்டதாக அவர்களிடம் குற்றம் சாட்டினர்.

    தீவிபத்து குறித்து நோயாளிகளின் உறவினர்கள் கூறும்போது, அறையில் இருந்து புகை வருவதைக் கண்டு உடனடியாக ஊழியர்களுக்குத் தகவல் தெரிவித்தோம், ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தவில்லை.

    தீ விபத்து ஏற்பட்ட போது, அவர்கள் தான் முதலில் வெளியில் ஓடி வந்தனர். சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளின் நிலை குறித்து யாரும் எங்களிடம் எதுவும் கூற வில்லை.

    தீ வேகமாக பரவியது. ஆனால் அதை அணைக்க எந்த உபகரணமும் இல்லை, தீயை அணைக்கும் கருவிகளும் இல்லை, சிலிண்டர்களும் இல்லை, தண்ணீர் வசதிகூட அங்கு இல்லை என்று கோபத்துடன் தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து மருத்துவக் கல்வித் துறை ஆணையர் இக்பால் கான் தலைமையிலான குழு விசாரணை நடத்த முதல்-மந்திரி பஜன்லால் சர்மா உத்தரவிட்டுள்ளார்.

    தீ விபத்துக்கான காரணங்கள், தீ விபத்துக்கான மருத்துவமனை நிர்வாகத்தின் நடவடிக்கைகள், தீ விபத்து ஏற்பட்டால் நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் வெளியேற்றம் ஆகியவற்றை இந்தக் குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும்.

    மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டது.
    • அந்த காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச மாநிலத்தில் பள்ளி தாளாளர் ஒருவர் காசோலையில் 7,616 ரூபாய் என்பதை ஆங்கில எழுத்து வடிவில் எழுதியது சமூக வலைதளத்தில் வைரலானது.

    அரசு பள்ளி தாளளர் கையெழுத்திடப்பட்ட காசோலையில் எழுதப்பட்டிருந்தது அனைவரையும் வினோதத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அட்டர் சிங் கையெழுத்திட்ட அந்த காசோலையில் 7,616 ரூபாய் என எழுதப்பட்டுள்ளது. அதற்கு ஆங்கிலத்தில் seven thousand six hundred and sixteen என்பதற்குப் பதிலாக, Saven Thursday six harendra sixty Rupees Only என எழுதியுள்ளார்.

    Seven-க்குப் பதிலாக saven எனவும், Thousand என்பதற்கு பதிலாக Thursday எனவும் எழுதப்பட்டுள்ளது. hundred என்பதற்கு பதிலாக, harendra என எழுதப்பட்டுள்ளது.

    அந்தக் காசோலையை யாரோ புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விட்டனர். இதனால் அட்டர்சிங், நெட்டிசன்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளானார்.

    இத்தகவல் பள்ளி கல்வி இயக்குனரகத்தின் கவனத்துக்குச் சென்றது. பள்ளி முதல்வர், ஆசிரியர் அட்டர் சிங் ஆகியோரிடம் இயக்குனரகம் விரிவான விளக்கம் கேட்டது. பள்ளி கல்வி இயக்குனர் ஆஷிஷ் கோஹ்லி முன்பு ஆஜராகுமாறு அவர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

    இந்நிலையில், நேரில் ஆஜரான அட்டர் சிங் கவனக்குறைவால் தெரியாமல் தவறு செய்து விட்டதாக ஒப்புக்கொண்டார். ஆனால் அவரது விளக்கத்தை இயக்குனர் ஏற்றுக்கொள்ளவில்லை. அட்டர் சிங்கை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்.

    • மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
    • இதில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்தது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்கில் நேற்று கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.

    இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

    டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.

    இந்நிலையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல் மந்திரி திங்கட்கிழமை பார்வையிடுகிறார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.
    • பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.

    மோடி அரசின் பொருளாதார கொள்கைகள் அவரது தொழிலதிபர் நண்பர்களின் நலன்களில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.

    அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இந்தியாவில் செல்வம் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பது குறித்து ஒன்றன்பின் ஒன்றாக அறிக்கைகள் எச்சரிக்கின்றன.

    மில்லியன் கணக்கான இந்தியர்கள் அன்றாடத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போராடும் அதே வேளையில், நாட்டின் பாதி செல்வத்தை வெறும் 1,687 பேர் மட்டுமே வைத்துள்ளனர்.

    மோடி அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைகளால் இயக்கப்படும் இந்த மிகப்பெரிய செல்வக் குவிப்பு, நம் நாட்டில் மிகப்பெரிய பொருளாதார சமத்துவமின்மையை உருவாக்குகிறது.

    இந்த சமத்துவமின்மை பரவலான சமூக பாதுகாப்பின்மை மற்றும் அதிருப்தியை உருவாக்குகிறது.

    மற்ற நாடுகளில் சமீபத்திய நிகழ்வுகள், இதே தீவிர பொருளாதார சமத்துவமின்மையும், முடக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளும் அரசியல் குழப்பத்திற்கு ஊக்கியாக மாறிவிட்டன என்பதைக் காட்டுகின்றன.

    இந்த அரசாங்கம் இந்தியாவை அதே பாதையில் தள்ளுகிறது. அதிகார உறவு காரணமாக ஒரு சில தொழிலதிபர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வருகின்றனர். பிரதமரின் கொள்கைகள் அவரது சில தொழிலதிபர் நண்பர்களின் நன்மைகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன.

    இந்தியாவின் பொருளாதாரத்தின் முதுகெலும்பான சிறு குறு தொழில்துறை முன்னெப்போதும் இல்லாத அழுத்தத்தில் உள்ளது.

    இந்த அழுத்தம் உள்நாட்டுக் கொள்கைகள் மட்டுமல்ல, வெளியுறவுக் கொள்கை தோல்விகளின் விளைவாகும்.

    சாதாரண மக்களுக்கு சம்பாதிக்கும் வாய்ப்புகள் சுருங்கி வருகின்றன. பணவீக்கம் மிக அதிகமாக உயர்ந்து, வேலை செய்பவர்கள் கூட சேமிப்பிற்குப் பதிலாக கடனில் அதிகளவில் சுமையாக உள்ளனர்.

    கல்வி மற்றும் சுகாதாரத்தில் முதலீடுகள் படிப்படியாகக் குறைந்து வருகின்றன, மேலும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பலவீனமடைந்து வருகின்றன.

    மில்லியன் கணக்கான மக்களுக்கு சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பு வலையை வழங்கிய மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் போன்ற வெற்றிகரமான திட்டங்கள் இப்போது ஊதிய நெருக்கடிகளைச் சந்திக்கின்றன. தொழிலாளர்களுக்கு சரியான நேரத்தில் ஊதியம் கூட கிடைப்பதில்லை.

    செல்வத்தின் இத்தகைய தீவிர மையப்படுத்தல் பொருளாதாரத்திற்கு ஒரு பிரச்சனை மட்டுமல்ல, ஜனநாயகத்தின் ஆன்மாவின் மீதான நேரடித் தாக்குதலாகும். பொருளாதார அதிகாரம் ஒரு சிலரின் கைகளில் குவிந்ததால், அரசியல் முடிவுகளும் அவர்களுக்கு சாதகமாகத் இருக்கின்றன.

    இது வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மைக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான குடிமக்கள் ஜனநாயகம் மற்றும் வளர்ச்சியின் செயல்முறையிலிருந்து படிப்படியாக ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்." என்று தெரிவித்துள்ளார்.    

    • இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது.
    • ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசத்தில், வரதட்சணை கேட்டு 21 வயது கர்ப்பிணி பெண் ஒருவர் கணவர் மற்றும் உறவினர்களால் அடித்துக் கொல்லப்பட்டார் .

    மைன்புரி மாவட்டத்தின் கோபால்பூர் கிராமத்தில் ரஜினி குமாரி என்ற அந்த 21 பெண் கணவர் சச்சின் உடன் வசித்து வந்தார். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அவர்களுக்கு திருமணம் நடந்தது. ரஜினி அண்மையில் கர்ப்பமாகி உள்ளார்.

    ரஜினியை கணவர் சச்சினும் அவரது உறவினர்களும் ரூ.5 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு அழுத்தம் கொடுத்து வந்தனர்.

    இதை நிறைவேற்றத்தால், அவர்கள் நேற்று முன் தினம் (வெள்ளிக்கிழமை) ராஜனியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். இதில் ரஜினி உயிரிழந்தார்.

    பின்னர், ஆதாரங்களை அழிக்கும் நோக்கில் அவரது உடலை தங்கள் வயலில் வைத்து எரித்துள்ளனர்.

    இந்தச் சம்பவம் குறித்து அறிந்த ராஜனியின் தாயார் சுனிதா தேவி சனிக்கிழமை அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதற்கிடையே தாயார் சுனிதா தேவி அளித்த குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் சச்சின், அவரது சகோதரர்கள் பிரான்ஷு மற்றும் சஹ்பாக், உறவினர்களான ராம்நாத், திவ்யா மற்றும் டினா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.    

    • மொபைல் போனை வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்க வசதி செய்யப்படும்.
    • ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள்.

    எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளை செய்ய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையிலான குழு பீகார் வந்துள்ளது.

    நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு கட்சிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.

    இந்நிலையில் ஞானேஷ் குமார் இன்று பீகாரின் வைஷாலி நகரில் செய்தியாளர் சந்திப்பு நிகழ்த்தினார்.

    அதில் பேசிய அவர், பீகாரில் 243 சட்டமன்ற இடங்கள் உள்ளன என்றும் அவர் கூறினார். சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னர் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும். தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஏற்கனவே அனைத்து அரசியல் கட்சிகளுடனும் கூட்டங்களை நடத்தியுள்ளனர்.

    மேலும், அனைத்து பொறுப்பு அதிகாரிகளுடனும் ஒரு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரே கட்டமாக தேர்தலை நடத்துவது குறித்து, தேர்தல் ஆணையம் விரைவில் ஒரு முடிவை எடுக்கும்.

    ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 வாக்காளர்களுக்கு மேல் இருக்க மாட்டார்கள். வாக்களிக்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

    மொபைல் போனை வாக்குச் சாவடிக்கு வெளியே வைக்க வசதி செய்யப்படும். அவற்றை வெளியே வைத்துவிட்டு வந்த பின்பே வாக்களிக்க அனுமதிக்கப்படும்.

    மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களின் வண்ணப் புகைப்படங்கள் இருக்கும்.

    பீகார் தேர்தலில் 17 புதிய சோதனைகளை பரிசோதிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இது எதிர்காலத்தில் நாடு தழுவிய அளவில் செயல்படுத்தப்படும்.

    வாக்காளர் அடையாள அட்டைகளில் வாக்காளர் அடையாள எண்கள் பெரிதாக இருக்கும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணுவதில் பிழை இருந்தால், அனைத்து VVPAT, வாக்குச்சீட்டு வாக்குகளும் எண்ணப்படும்.

    ஒவ்வொரு தேர்தலுக்கும் முன்பு வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது அவசியம், பீகார் சிறப்பு தீவிர திருத்தும் சட்டப்படி நடத்தப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு அதை மறுபரிசீலனை செய்வது சட்டத்திற்கு முரணானது.

    வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பதற்கு மாவட்ட தேர்தல் அலுவலர் தான் பொறுப்பு. பீகாரின் 243 மாவட்ட தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை தணிக்க செய்ய ஒன்றிணைந்து பணியாற்றினர்.

    நீக்கப்பட்ட பெயர்களின் பட்டியல் அரசியல் கட்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயர் விடுபட்டிருந்தால், அவர்கள் மாவட்ட நீதிபதியிடம் மேல்முறையீடு செய்யலாம்" என்று தெரிவித்தார்.  

    • சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.
    • பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேற்குவங்காள மாநிலத்தில் இமயமலைக்கு உட்பட்ட டார்ஜிலிங், கலிம்போங், கூச் பெஹார், ஜல்பைகுரி மற்றும் அலிப் பூர்துவார் ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன.

    கனமழை , நிலச்சரிவால் டார்ஜிலிங் மாவட்டத்தில் மிரிக்- குர்சியோங்கின் மாவட்ட நகரங்கள் மற்றும் சுற்றுலா தலங்களை இணைக்கும் துடியா இரும்புப் பாலமும் இடிந்து விழுந்தது.

    நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்ததில் 17 பேர் பலியானார்கள். உயிரிழப்பு சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதை தொடர்ந்து டார்ஜிலிங்கில் உள்ள டைகர் ஹில் மற்றும் ராக் கார்டன் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூட மாவட்ட நிர்வாகம் உத்தர விட்டுள்ளது.

    பலியானவர்களின் உடல்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

    மலைப்பகுதி மாவட்டங்களில் இரவு முழுவதும் இடைவிடாமல் பெய்து வரும் பலத்த மழையால் அண்டை மாவட்டமான ஜல்பைகுரியன் மல்பஜாரில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    மேற்கு வங்காளம்- சிக்கிமை இணைக்கும் சாலை மற்றும் சிலிகுரியை இணைக்கும் சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் நிலச்சரிவால் துண்டிக்கப்பட்டன.

    துர்கா பூஜைக்காக ஏராளமான சுற்றுலா பயணிகள் டார்ஜிலிங் சென்றுள்ளனர். கனமழை மற்றும் நிலச்சரிவால் அவர்கள் பரிதவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத் தப்பட்டுள்ளது.

    பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு மேலாக மிக கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    டார்ஜிலிங் எம்.பி. ராஜூ பிஸ்தா தனது எக்ஸ்தள பதிவில் கூறியிருப்பதாவது:-

    கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்பு மிகுந்த கவலை அளிக்கிறது. உயிரிழப்புகள், சொத்து இழப்பு மற்றும் உள்கட்டமைப்புக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. நிலைமையை நான் கண்காணித்து வருகிறேன். மேலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன்.

    இவ்வாறு அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.

    ×