என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி - ராகுல் காந்தி நன்றி
    X

    கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி - ராகுல் காந்தி நன்றி

    • ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.
    • இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்கள் தீர்ப்பு.

    கேரள மாநிலத்தில் உள்ள 1,199 உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 9 மற்றும் 11 தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.

    இந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி(UDF), கம்யூனிஸ்டு கட்சிகள் அடங்கிய இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி உள்ளிட்டவைகள் போட்டியிட்டன.

    இன்று வாக்கு எண்ணிக்கை மொத்தம் 244 மையங்களிலும் சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன.

    இந்நிலையில் கேரள உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அம்மாநிலத்தின் எதிர்க்கட்சியான காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF)க்கு பெரும் வெற்றியை பிரதிபலிக்கின்றன.

    2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கருதப்படும் இந்த முடிவுகள் காங்கிரசுக்கு சாதகமாக அமைந்துள்ளது.

    ஆறு மாநகராட்சிகளில் நான்கை காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது. கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூரில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது. இது நகர்ப்புறங்களில் LDF-இன் பிடியைப் பெரிதும் பாதித்துள்ளது.

    நகராட்சி மட்டத்திலும் காங்கிரசின் ஐக்கிய ஜனநாயக முன்னணி முன்னிலை அடைந்தது. 87 நகராட்சிகளில் 54 நகராட்சிகளை ஐக்கிய ஜனநாயக முன்னணி வென்றுள்ளது.

    எர்ணாகுளம், ஆலப்புழா, மலப்புரம், கோட்டயம் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் உள்ள பல நகராட்சிகளில் ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. பத்தனம்திட்டா மற்றும் இடுக்கியில் ஐக்கிய ஜனநாயக முன்னணி மீண்டும் தனது இடத்தைப் பிடித்துள்ளது.

    இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி வெளியிட்ட எக்ஸ் பதிவில், "உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரசின் யுடிஎஃப் மீது நம்பிக்கை வைத்த கேரள மக்களுக்கு எனது வணக்கங்கள். இது ஒரு தீர்க்கமான மற்றும் உற்சாகமளிக்கும் மக்கள் தீர்ப்பு.

    இந்த முடிவுகள் யுடிஎஃப் மீதான நம்பிக்கை வளர்ந்து வருவதற்கான தெளிவான அறிகுறியாகும். மேலும், இது வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றிக்கு வழிவகுக்கிறது.

    செய்தி தெளிவாக உள்ளது: கேரளா, மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, பதிலளித்து, வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொறுப்பான ஆட்சியை விரும்புகிறது.

    இப்போது எங்கள் கவனம் அசைக்க முடியாதது - கேரளாவின் சாமானிய மக்களுடன் நிற்பது, அவர்களின் அன்றாடப் பிரச்சினைகளைக் கையாள்வது, மற்றும் வெளிப்படையான, மக்களை மையமாகக் கொண்ட நிர்வாகத்தை உறுதி செய்வது.

    தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துப் பிரதிநிதிகளுக்கும் எனது வாழ்த்துகள். இந்த வெற்றியைச் சாத்தியமாக்கிய அர்ப்பணிப்புடனும் கடின உழைப்புடனும் செயல்பட்ட ஒவ்வொரு கட்சித் தலைவர் மற்றும் தொண்டருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×