என் மலர்
இந்தியா
- அதிபர் புதினுக்கு பிரதமர் மோடி தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.
- அப்போது, இந்தியாவிற்கு வரவேற்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.
புதுடெல்லி:
பிரதமர் நரேந்திர மோடி இன்று ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது புதினின் 73-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து தனது நிலைப்பாட்டை உறுதிப்படுத்தினார்.
அப்போது, அவர் நல்ல ஆரோக்கியத்துடன், புதினின் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி பெற வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 23-வது இந்தியா-ரஷியா வருடாந்திர உச்சிமாநாட்டிற்கு பிரதமர் மோடி புதினை அழைத்தார்.
கடந்த வாரம் அதிபர் புதின் தனது இந்திய வருகையை உறுதிசெய்தார். சமீபத்தில் பிரதமர் மோடியின் பிறந்தநாளுக்கு அதிபர் புடின் வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- முன்பதிவு செய்த பின், தேதியை மாற்ற வேண்டுமென்றால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும்.
- டிக்கெட்டை ரத்து செய்வதற்கான தொகை பயணிகள் கட்டாயம் செலுத்த வேண்டிய நிலை தற்போது உள்ளது.
ரெயில்களில் பயணம் செய்ய இந்திய மக்கள் 60 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். திடீரென பயணிகள் திட்டமிட்ட தேதியில் பயணம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டால், டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும். இல்லை என்றால், பயணம் செய்ய முடியாத நிலை ஏற்படும். சில சமயங்களில் தவறுதலாக கூட தேதி மாற்றி டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
இவர்கள் டிக்கெட் ரத்து செய்துதான், மாற்று தேதிக்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய முடியும். வரும் ஜனவரியில் இருந்து, பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்யாமல் பயணத் தேதியை மாற்றிக் கொள்ளும் வசதியை இந்திய ரெயில்வே நிர்வாகம் அமல்படுத்த உள்ளது. இதை இந்திய ரெயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
எனினும், மாற்று தேதிக்கான டிக்கெட் உறுதி (Available) எனச் சொல்ல முடியாது. மாற்று தேதியில் டிக்கெட் இருந்தால் மட்டுமே மாற்ற முடியும். அத்துடன், மாற்று தேதிக்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக இருந்தால், அந்த கூடுதல் தொகையை செலுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
- மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்ய சென்றபோது பாஜக எம்.பி. மீது கொடூர தாக்கு.
- மூக்கு உடைந்து ரத்தம் சொட்டிய நிலையில் மருத்துவமனையில் அனுமதி.
மேற்கு வங்கம் மாநிலத்தின் வடக்கு பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது. சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. டார்ஜிலிங்கில் கொட்டித் தீர்த்த கனமழையால், அங்குள்ள மிரிக் மற்றும் சுகியா பொகாரி ஆகிய இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. மிரிக் என்ற இடத்தில் பாலம் இடிந்து விழுந்தது.
இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் பாலம் இடிந்து விழுந்த சம்பவங்களில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
டார்ஜிலிங்கில் கனமழை சேதங்களில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தார். கனமழை மற்றும் நிலச்சரிவுவால் பாதிக்கப்பட்டோருக்கு சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்குவதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது என்றார்.
இந்த நிலையில் நக்ரகட்டா பகுதியில் வெள்ள பாதிப்பை பார்வையிட பாஜக எம்.பி. கஜென் முர்மு சென்றார். அப்போது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. அவர் மீது சிலர் கற்களை வீசினர். இதில் பாஜக எம்.பி. முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. ரத்தம் சொட்ட சொட்ட பாதுகாப்புப்படை வீரர்கள் எம்.பி.யை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
இந்த தாக்குதலை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் திட்டமிட்டு நடத்தியதாக பாஜக குற்றம் சாட்டியது. பிரதமர் மோடி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
இந்த நிலையில் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, மருத்துவமனை சென்று பாஜக எம்.பி.யை சந்தித்து, உடல்நலம் குறித்து விசாரித்தார். மேலும், மருத்துவர்களிடம் சிகிச்சை தொடர்பாக கேட்டறிந்தார்.
தற்போது துர்கா பூஜை காலம். பேரழிவு காரணமாக இந்த விழைவை ஒத்திவைக்க பாஜக வலியுறுத்தியது. ஆனால், துர்கா பூஜை உரிய நேரத்தில் நடைபெறும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
- கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கியது.
- ஆசிரியர்கள் சங்கம் விடுமுறையை நீட்டிக்க கோரிக்கை விடுத்திருந்தது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் சமூக நீதி ஆணையம் தலைமையில் நடைபெறும் சாதிவாரி கணக்கெடுப்பு கடந்த மாதம் 22-ம் தேதி தொடங்கப்பட்டது.
பல மாவட்டங்களில் இந்தக் கணக்கெடுப்பு முழுமையாக நிறைவேறவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், முதல் மந்திரி சித்தராமையா தலைமையில் அவசர கூட்டம் இன்று நடைபெற்றது. அதன்பின் முதல் மந்திரி சித்தராமையா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மாநிலத்தின் அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளுக்கும் அக்டோபர் 18-ம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் சங்கம் விடுமுறையை நீட்டிக்க கோரியிருந்தது. அவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் தொடர்ந்து பணி புரிந்து முழுமையான கணக்கெடுப்பு தரவுகளைப் பதிவு செய்யும் வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
இந்த கணக்கெடுப்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்று பணியாற்றி வருகின்றனர்.
மாணவர்களுக்கு தசரா விடுமுறை காலத்துடன் இணைந்த சாதி கணக்கெடுப்பு விடுமுறை கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் தலைமையைில் இந்தியா கூட்டணி, NDA-வை எதிர்கொள்கிறது.
- தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் வேட்பாளராக களம் நிறுத்தப்படலாம் என எதிர்பார்ப்பு.
பீகார் மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. 243 தொகுதிகளை கொண்ட பீகாருக்கு அடுத்த மாதம் 6 மற்றும் 11ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் முன்னணி வகிக்கும் மகாகத்பந்தன் (மகா கூட்டணி) களம் இறங்கும். இதனால் பீகாரில் கடும் போட்டி நிலவும் எனத் தெரிகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், நிதிஷ் குமார்தான் முதல்வர் என்பது ஏற்கனவே உறுதியான விசயம். அதேவேளையில் மாகா கூட்டணியில் (தற்போது இந்தியா கூட்டணி) யார் முதலமைச்சர் வேட்பாளர் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அந்த கூட்டணியில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ்தான் முதல்வர் வேட்பாளராக பார்க்கப்படுகிறது. ஆர்.ஜே.டி. தொண்டர்களும் இதைத்தான் விரும்புகிறார்கள்.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் உதித் ராஜியிடம், முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு உதித் ராஜ் கூறியதாவது:-
ராஷ்டிரிய ஜனதா தளத்திற்கு வேண்டுமென்றால் தேஜஸ்வி யாதவ் முதலமைச்சர் முகமாக இருக்கலாம். ஆனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் கூட்டாக முடிவு செய்யப்படும். எந்தவொரு கட்சியின் ஆதரவாளர்களும், அவர்களுடைய கட்சித் தலைவரை முதலமைச்சர் வேட்பாளராக தேர்வு செய்ய முடியும். ஆனால், இந்தியா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் முடிவு செய்யப்படவில்லை. காங்கிரஸ் தலைமையகம் என்ன முடிவு எடுக்கிறது என்பதை பார்ப்போம்" என்றார்.
முதலமைச்சர் வேட்பாளரை முன்நிறுத்தாமல் நாங்கள் போட்டியிடமாட்டோம் என சில வாரங்களுக்கு முன் தேஜஸ்வி யாதவ் தெரிவித்திருந்த நிலையில், உதித் ராஜ் தற்போது இவ்வாறு தெரிவித்துள்ளார். இவரது கருத்துக்கு உடனடியான ராஷ்டிரிய ஜனதா தளம் அல்லது தேஜஸ்வி யாதவ் கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
- மத்திய அறங்காவலர் குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது.
- மத்திய அறங்காவலர் குழு கூட்டம் வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடக்க உள்ளது/Key decision expected in upcoming board meeting
புதுடெல்லி:
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் கூட்டம்
வரும் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை மாதத்திற்கு ரூ.1,000 லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்துவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பணியாளர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியம் தற்போது மாதத்திற்கு ரூ.1,000 ஆக உள்ளது. இந்தத் தொகை 2014-ம் ஆண்டில் நிர்ணயிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 11 ஆண்டாக இந்தத் தொகை அப்படியே உள்ளது.
தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் பல்வேறு சங்கங்கள் நீண்ட காலமாக ஓய்வூதியத் தொகையை உயர்த்தக் கோரி வலியுறுத்தி வருகின்றன. எனவே இந்தக் கூட்டத்தில் ரூ.2,500 ஆக அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் இந்த முடிவு எடுக்கப்படலாம் என்பதால், இந்தக் கூட்டம் அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
- சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி 2012-ல் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
- இந்த வழக்கின் மீதான விசாரணை 13 ஆண்டாக நிலுவையில் இருந்தது.
புதுடெல்லி:
சாலை பாதுகாப்பு விதிகளை மேம்படுத்தக் கோரி கோவையைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் கடந்த 2012-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கின் விசாரனை கடந்த 13 ஆண்டுகளாக நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சாலை விபத்துகளைக் குறைக்க புதிய பாதுகாப்பு விதிகளை 6 மாதங்களில் உருவாக்க வேண்டும் என அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
13 ஆண்டாக நிலுவையில் இருந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது குற்ப்பிடத்தக்கது.
- கடந்த ஜூன் மாதம் 6.3 சதவீதமாக இருக்கும் என கணித்திருந்தது.
- தற்போது 6.5 சதவீதமாக அதிகரிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.
2026 நிதியாண்டில் இந்தியாவின் வளர்ச்சி 6.3 சதவீதமாக இருக்கும் என கடந்த ஜூன் மாதம் உலக வங்கி கணித்திருந்தது. தற்போது 6.5 சதவீதமாக இருக்கும் எனக் கணித்துள்ளது.
உலகின் மிகவும் வேமாக வளர்ந்து வரும் முக்கியமான பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து இருப்பதாக தெரிவித்துள்ளது. வலுவான நுகர்வோர் வளர்ச்சி, மேம்பட்ட வேளாண்மை உற்பத்தி, கிராமப்புற ஊதிய வளர்ச்சி ஆகியவை இதற்கு முக்கிய காரணம் என உலக வங்கி தெரிவித்துள்ளது.
வங்கதேசத்தின் வளர்ச்சி 4.8 சதவீதமாகவும், பூடானின் வளர்ச்சி 7.3 சதவீதமாகவும், மாலத்தீவின் வளர்ச்சி 3.9 சதவீதமாகவும், நேபாளத்தின் வளர்ச்சி 2.1 சதவீதமாகவும் இருக்கும் என கணித்துள்ளது.
- மோடி குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்று 24 வருடங்கள் நிறைவடைந்துள்ளது.
- 2014 முதல் பிரதமராக இருந்து வருகிறார்.
இந்திய பிரதமர் மோடி கடந்த 24ஆம் ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் குஜராத் மாநில முதல்வராக பதவி ஏற்றார். அதில் இருந்து தற்போது வரை சுமார் 24 ஆண்டுகள் மக்களுக்கான சேவையாற்றி வருகிறார்.
24 ஆண்டுகளாக முதல்வர் மற்றும் பிரதமர் பதவியில் இருந்து கொண்டு நாட்டுக்கு மக்களுக்கு சேவையாற்றி வருவதை உள்துறை அமைச்சர் அமித் ஷா பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில் "முதலில் நாடு என்பது தொலைநோக்குப் பார்வையாகவும், வளர்ந்த இந்தியா என்பது நோக்கமாகவும் இருக்கும்போது, கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் தலைமைத்துவம் எவ்வாறு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்பதை பிரதமர் மோடி நிரூபித்துள்ளார்" எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டிற்கும், பொது சேவைக்கும் 24 வருடங்களை அர்ப்பணித்துள்ளார். மக்கள் பிரச்சனைகளை தனது பிரச்சனைகளாக கருதி அவற்றை தீர்த்து வைத்து, சுயநலமின்றி உழைத்து வரும் பிரதமர் மோடி, முதல்வராக பதவி ஏற்ற இந்த நாள் ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாகும்" எனத் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய பிரதமாக பதவி ஏற்றார். அதில் இருந்து 3ஆவது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிக நாட்கள் பிரதமராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
பிரதமராக பதவி ஏற்பதற்கு முன்னதாக, 12 1/2 வருடங்கள் குஜராத் மாநில முதல்வராக பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.
- மலையேறி செல்லும் போது, அவர் சோர்வடைந்தால் சன்னிதானத்துக்கு டோலியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
திருவனந்தபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டு தோறும் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை மட்டுமின்றி ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் 5 நாட்கள் மாதாந்திர பூஜையும் நடைபெறும். ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 17-ந்தேதி திறக்கப்படுகிறது.
அதில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்வதற்காக ஜனாதிபதி திரவுபதி முர்மு வருகிற 22-ந்தேதி சபரிமலைக்கு வருகிறார். அவர் கடந்த மே மாதமே சபரிமலைக்கு வருவதாக இருந்தது. ஆனால் அப்போது இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவியதன் காரணமாக அவரது வருகை ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு தற்போது சபரிமலைக்கு வருகிறார். இதற்காக அவர் சிறப்பு விமானத்தில் வருகிற 22-ந்தேதி மதியம் கொச்சி வருகிறார். அங்கிருந்து நிலக்கல்லுக்கு ஹெலிகாப்டரில் வரும் அவர், பின்பு பம்பைக்கு காரில் செல்கிறார்.
பம்பையில் உள்ள பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் சிறிதுநேரம் ஓய்வெடுக்கும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, மாலையில் பம்பையில் இருந்து சன்னிதானத்துக்கு இருமுடி கட்டுடன் மலையேறி செல்கிறார். அதே நேரத்தில் மலையேறி செல்லும் போது, அவர் சோர்வடைந்தால் சன்னிதானத்துக்கு டோலியில் செல்லவும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இதற்காக 5 டோலிக்கள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. மேலும் அதனை தூக்கிச் செல்லக்கூடிய தொழிலாளர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஜனாதிபதி வருகையை முன்னிட்டு நிலக்கல் முதல் பம்பை வரையிலும், பம்பை முதல் சன்னிதானம் வரையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அதனை ஆய்வு செய்வதற்காக ஜனாதிபதிக்கான சிறப்பு பாதுகாப்பு குழுவினர் இந்த வாரம் சபரிமலைக்கு வருகிறார்கள்.
- பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார்.
- தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது ராகேஷ் கிஷோர் என்று வழக்கறிஞர் காலணி வீச முயன்றார். மேலும், 'சனாதன தர்மத்தை அவமதிப்பதை இந்தியா பொறுத்துக் கொள்ளாது' என கூச்சலிட்ட வழக்கறிஞரை நீதிமன்ற பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.
இருப்பினும், "கவனத்தை சிதறவிடாதீர்கள், இது என்னைப் பாதிக்காது" என கூறி எந்த பரபரப்பும் இன்றி வழக்கறிஞர்களிடம் வாதங்களைத் தொடருமாறு பி.ஆர்.கவாய் கேட்டுக் கொண்டார்.
இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர். பிரதமர் மோடி கவாய்-க்கு போன் செய்து இந்த தாக்குதல் குறித்து கேட்டறிந்து சமூக வலைத்தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்தார்.
இதையடுத்து தலைமை நீதிபதி மீது காலணி வீச முயன்ற வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி மீது காலணி வீச முயன்றது தொடர்பாக எனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தெரிவித்துள்ளார்.
ANI செய்தி நிறுவனத்திடம் பேட்டி அளித்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், "செப்டம்பர் 16 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி அந்த வழக்கை கேலி செய்தார். நமது சனாதன தர்மம் தொடர்பான ஒரு வழக்கு வரும்போது, உச்ச நீதிமன்றம் இத்தகைய உத்தரவுகளை பிறப்பிக்கிறது. மனுதாரருக்கு நிவாரணம் வழங்கவில்லை என்றாலும் அவரையும் கேலி செய்யாதீர்கள்.
இதனால் நான் காயப்பட்டேன்... நான் குடிபோதையில் இதை செய்யவில்லை. அவரது செயலுக்கு நான் எதிர்வினை ஆற்றினேன். இதற்காக நான் பயப்படவில்லை. நடந்ததற்கு வருத்தப்படவும் இல்லை
இதற்காக நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. கடவுள் தான் என்னை இதைச் செய்ய வைத்தார். அவர் விரும்பினால் நான் சிறைக்குச் செல்ல தயார். நான் தூக்கிலிடப்பட வேண்டும் என்றாலும் அது கடவுளின் விருப்பம் தான்" என்று தெரிவித்தார்
முன்னதாக மத்திய பிரதேசத்தில் உள்ள கஜுராகோ கோவில் வளாகத்தில் உள்ள ஜவாரி கோவிலில் சேதம் அடைந்த கடவுள் விஷ்ணுவின் சிலையை சரி செய்து மீண்டும் நிறுவ தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ராகேஷ் தலால் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான பெஞ்ச் முன் விசாணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்தது.
அத்துடன் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், "இந்த மனு முற்றிலும் சுய லாபம் நோக்கம் கொண்டது. கடவுளிடம் சென்று ஏதாவது செய்யக் சொல்லுங்கள். நீங்கள் கடவுள் விஷ்ணுவின் கடுமையான பக்தர் என்று சொல்லிக் கொள்வீர்கள் என்றால், பிரார்த்தனை செய்து, தியானம் செய்யுங்கள்" என்று தெரிவித்திருந்தார்.
இது சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு சர்ச்சையானது. இதனையடுத்து நான் அனைத்து மதங்களையும் மதிக்கிறேன். எனது கருத்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளது என கவாய் விளக்கம் அளித்தார்.
- நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
- 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் கோல்ட்ரிப் என்ற இருமல் மருந்தை உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்தனர். சிறுநீரக செயலிழப்பால் குழந்தைகள் இறந்தனர். பலருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த இருமல் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதற்கிடையே இருமல் மருந்து உட்கொண்டதில் 14 குழந்தைகள் பலியான நிலையில் நேற்று இரவு 2 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இறந்ததையடுத்து பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது.
இச்சம்பவத்தையடுத்து இருமல் மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தில் மேலும் 2 இருமல் மருந்துகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. ரீலைப் (Relife) மற்றும் ரெஸ் பிப்ரெஷ் டிஆர் (Respifresh TR) ஆகிய 2 இருமல் மருந்துகளின் விற்பனையை மத்திய பிரதேச அரசு முழுமையாகத் தடை செய்துள்ளது.
இந்த மருந்துகளில் அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட அதிகமான அளவு ஆபத்தான ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இந்த 2 இருமல் மருந்துகளும் குஜராத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதையடுத்து மத்திய பிரதேச அரசு விசாரணை கோரி குஜராத் அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
கோல்ட்ரிப் இருமல் மருந்து தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் விற்பனைக்கு மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்கள் தடை விதித்துள்ள நிலையில் கர்நாடகத்திலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருமல், சளிக்கு இந்த நிறுவன மருந்துகளை கொடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருமல் மருந்து பயன்படுத்தியதில் குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.






