என் மலர்
இந்தியா
- 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
- உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 93-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் விமானப்படை தின கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
ஹிண்டன் விமானப்படை தளத்தில் நடைபெற்ற விமானப்படை அணிவகுப்பை விமானப்படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் ஏ.பி. சிங் பார்வையிட்டார்.
- ஜெகன்மோகன் ரெட்டி நாளை அனகாப்பள்ளி மாவட்டம், நர்சி பட்டினம் மக்கவர பாலத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார்.
- விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி நாளை அனகாப்பள்ளி மாவட்டம், நர்சி பட்டினம் மக்கவர பாலத்தில் மருத்துவக் கல்லூரியை திறந்து வைக்க உள்ளார். இதற்காக ஜெகன்மோகன் ரெட்டி விஜயவாடாவில் இருந்து விமானம் மூலம் விசாகப்பட்டினம் செல்கிறார்.
விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமான ரோடு ஷோவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. ரோடு ஷோவில் கலந்து கொள்ள ஏராளமான தொண்டர்களை திரட்டி வருகின்றனர்.
ஜெகன்மோகன் ரெட்டி ரோடு ஷோ நடத்தினால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு தமிழ்நாடு மாநிலம் கரூரில் நடந்தது போல் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உள்ளதாக கூறி போலீசார் ரோடு ஷோவுக்கு தடை விதித்தனர்.
இதுகுறித்து அனகாப்பள்ளி மாவட்ட தலைவரும், முன்னாள் மந்திரியுமான அமர்நாத் ரெட்டி கூறுகையில்:-
அரசு எத்தனை தடை விதித்தாலும் சாலை பயணம் தொடரும். யார் எங்களை தடுக்கிறார்கள் என்று பார்த்துக் கொள்வோம். போலீசாரிடம் அனுமதி கேட்டு கடிதம் தரவில்லை. தகவலுக்காக கொடுத்து இருக்கிறோம் என்றார்.
- பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மும்பை வந்தடைந்தார்.
- மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்றார்
இருநாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் 128 உறுப்பினர்கள் கொண்ட வர்த்தக குழுவுடன் மும்பை வந்தடைந்தார்.
மும்பை விமான நிலையத்தில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்நாவிஸ் மற்றும் துணை முதலமைச்சர்கள் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை வரவேற்றனர்.
கெய்ர் ஸ்டார்மர் நாளை டெல்லியில் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பில் இருநாட்டு உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
- அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக இறந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த துயர சம்பவம் நாட்டையே உலுக்கியது.
கரூர் கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இதுகுறித்து கரூர் போலீசாரும் விசாரணை நடத்தி த.வெ.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.
நீதிபதி அருணா ஜெகதீசன் 3 மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து, இந்த வழக்கானது சென்னை ஐகோர்ட்டு நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனே சிறப்பு புலனாய்வு குழுவிடம் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் கரூருக்கு வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர். தொடர்ந்து அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு தடை கோரி தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
கரூர் துயர சம்பவம் தொடர்பாக சிறப்புக்குழு விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.
- வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது.
- தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரைப் புகழ்வது வெட்கக்கேடானது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் மீது நேற்று முன் தினம் மூத்த வழக்கறிஞர் ஒருவர் காலணியை வீச முயன்ற சம்பவம் பேசுபொருளாகி வருகிறது.
வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், திங்கள்கிழமை காலை நீதிமன்ற அறையில் தலைமை நீதிபதி கவாய் மீது காலணியை வீச முயன்றார். ஆனால் காலணி நீதிபதி மீது படவில்லை. ராகேஷ் கிஷோரை பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்தனர்.
அண்மையில், கஜுராஹோவில் உள்ள விஷ்ணு கோவிலின் சிலை சீரமைப்புக்கு உத்ராவிடக்கோரிய மனுவை விசாரித்தபோது, "நீங்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர் என்றால், அவரிடமே பிரார்த்தனை செய்து இதை கேளுங்கள்" என்று கூறி கவாய் சனாதன தர்மத்தை அவமதித்ததால் மனம் புண்பட்டு இந்தச் செயலைச் செய்ததாக வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் கூறினார்.
இதற்கிடையே வழக்கறிஞர் ராகேஷ் கிஷோரை இந்திய பார் கவுன்சில் இடைநீக்கம் செய்தது. இந்நிலையில் இதுதொடர்பாக கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சைக் கருத்தை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநில பாஜக தலைவரும், பெங்களூருவின் முன்னாள் காவல் ஆணையருமான பாஸ்கர் ராவ், "சட்டப்படி முற்றிலும் தவறு என்றாலும், இந்த வயதிலும் நீங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுத்து அதன் விளைவுகளைப் பற்றி கவலைப்படாமல் அதன்படி வாழ்ந்த உங்கள் துணிச்சலை நான் பாராட்டுகிறேன்," என்று அந்த வழக்கறிஞரை பாராட்டி பதிவிட்டிருந்தார். இதன்பின் அந்த பதிவை பாஸ்கர் ராவ் நீக்கியும் உள்ளார்.
இந்நிலையில் பாஸ்கர் ராவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள கர்நாடகா காங்கிரஸ் தலைவர் மன்சூர் கான், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டிய முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான இவர், தலைமை நீதிபதியை அவமதித்த ஒருவரைப் புகழ்வது வெட்கக்கேடானது என்று தெரிவித்தார்.
- இந்த சம்பவம் தொடர்பாக சத்தர்பூர் மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
- ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்று ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் தீப்தி பாண்டே கூறினார் .
பாஜக ஆளும் மத்தியப் பிரதேசத்தில் சத்தர்பூர் மாவட்டம் பிஜாவரில் பகுதியில் உள்ள ஒரு குளத்தில் இருந்து நூற்றுக்கணக்கான அசல் வாக்காளர் அடையாள அட்டைகள் மீட்கப்பட்ட விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
குளத்தை சுத்தம் செய்யும் பணியின் போது, குளத்தில் மிதக்கும் பிளாஸ்டிக் பையை துப்புரவுப் பணியாளர்கள் கண்டுபிடித்ததாகவும், அதைத் திறந்தபோது சுமார் 500 வாக்காளர் அடையாள அட்டைகளைக் கண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவை 15வது வார்டை சேர்ந்தவர்களின் அசல் வாக்காளர் அடையாள அட்டைகள் என அதிகாரிகள் ஆய்வின்பின் உறுதிப்படுத்தி உள்ளனர்.
வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்படுவதற்கு முன்பே அட்டைகள் காணாமல் போயிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
மீட்கப்பட்ட அனைத்து அட்டைகளும் உள்ளூர் நிர்வாகத்தின் வசம் உள்ளன.
இந்த சம்பவம் தொடர்பாக சத்தர்பூர் மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இதற்கிடையே வாக்காளர் அடையாள அட்டைகள் அடங்கிய பைகளின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
இந்த சம்பவம் ராகுல் காந்தியின் வாக்கு திருட்டு குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்துகிறது என்று ம.பி. மாநில காங்கிரஸ் தலைவர் தீப்தி பாண்டே கூறினார் .
நூற்றுக்கணக்கான வாக்காளர் அட்டைகள் குளத்தில் எப்படி விழுந்தன என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும் என்றும் இல்லையெனில் போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் சத்தர்பூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ககன் யாதவ் எச்சரித்தார்.
- அப்போது முதலை அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது.
- ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.
ஒடிசாவில் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை முதலை இழுத்துச் சென்ற சம்பவத்தின் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
கடந்த திங்கட்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் ஜஜ்பூர் மாவட்டத்தில் பஞ்சர்பூரின் கண்டியா கிராமத்தைச் சேர்ந்த சௌதாமினி என்ற 57 வயது பெண் அப்பகுதியில் உள்ள காரஸ்ரோட்டா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது முதலை அவரை ஆற்றில் ஆழமான பகுதிக்குள் இழுத்துச் சென்றது. ஆற்றங்கரையில் இருந்த கிராம மக்கள் முதலையைத் துரத்தி விரட்ட முயன்றும் முடியவில்லை.
தகவலறிந்த தீயணைப்புப் படையினரும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆற்றில் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். ஆனால் ஆற்றில் முதலைகள் இருப்பதால் மீட்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
- 15 பேர் குழுவாக மார்கோனஹள்ளி அணைக்கு அருகில் நேற்று சுற்றுலா சென்றனர்.
- அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் பலத்த நீரோட்டம் ஏற்பட்டது
கர்நாடகாவின் தும்கூரு மாவட்டத்தில் 15 பேர் குழுவாக மார்கோனஹள்ளி அணைக்கு அருகில் நேற்று சுற்றுலா சென்றனர்.
இவர்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஏழு பேர் ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதால், ஆற்றில் பலத்த நீரோட்டம் ஏற்பட்டது. இதனால் ஏழு பேரும் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். நவாஸ் என்ற ஒருவர் மட்டும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் இரண்டு உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. நான்கு பேரைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
மீட்கப்பட்ட நவாஸைத் தவிர, வெள்ளத்தில் சிக்கிய அனைவரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்று துமகூரு காவல் கண்காணிப்பாளர் அசோக் தெரிவித்துள்ளார்.
அணைக்கு திடீரென தண்ணீர் திறக்கப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- தீப்பிழம்புகளும் வெடிப்பு சத்தமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தன.
- இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இதேபோன்ற விபத்தில், எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் பலியாகினர்.
ராஜஸ்தானில் இன்று இரவு எல்.பி.ஜி சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற லாரியுடன் மற்றொரு லாரி மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.
டுடு பகுதியில் ஜெய்ப்பூர் - அஜ்மீர் தேசிய நெடுஞ்சாலையில் விபத்து நடந்த உடனே சிலிண்டர்கள் வெடிக்கத் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அருகில் இருந்த வாகனங்களும் சேதமடைந்தன. தீப்பிழம்புகளும் வெடிப்பு சத்தமும் பல கிலோமீட்டர் தூரத்துக்கு எதிரொலித்தன.
தகவல் அறிந்ததும் காவல்துறையினரும் தீயணைப்புப் படையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து நெடுஞ்சாலையில் போக்குவரத்தை நிறுத்தினர்.
சம்பவம் குறித்து பேசிய துணை முதலமைச்சர் பிரேம் சந்த் பைரவா, லாரிகளின் ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்களைக் காணவில்லை என்றும் அவர்களைத் தேடும் பணி நடைபெறுவதாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதுவரை உயிரிழப்பு குறித்த தகவல் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இதே நெடுஞ்சாலையில் கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த இதேபோன்ற விபத்தில், எண்ணெய் டேங்கர் வெடித்து 19 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.
- மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
- அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.
ஓராண்டு காத்திருப்புக்குப் பிறகு ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மத்திய அரசு இறுதியாக அதிகாரப்பூர்வ பங்களாவை ஒதுக்கியுள்ளது.
கெஜ்ரிவால், கடந்த 2024 செப்டம்பர் 17 அன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்தபின், தனது கட்சி எம்.பி.யான அசோக் மிட்டலின் வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகிறார்.
தேசிய அங்கீகாரம் பெற்ற கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் அவருக்கு மத்திய அரசு பங்களா ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால் அரசு பங்களா ஒதுக்கீட்டில் ஏற்பட்ட தாமதம் குறித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி மனு தாக்கல் செய்தது.
இதனையடுத்து, செப்டம்பர் 25 அன்று, 10 நாட்களுக்குள் தகுந்த பங்களாவை ஒதுக்குவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
அந்த வகையில் கெஜ்ரிவாலுக்கு டெல்லியில் லோதி எஸ்டேட்டில் உள்ள டைப்-7 பங்களா ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த பங்களாவில் இதற்கு முன்னர், பாஜக தலைவரும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான இக்பால் சிங் லால்புரா வசித்து வந்தார்.
முன்னதாக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி காலி செய்த பங்களாவை தனக்கு ஒதுக்க வேண்டும் என்று கெஜ்ரிவால் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அந்த பங்களா மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரிக்கு ஒதுக்கப்பட்டது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் டெல்லி தேர்தலின்போது கெஜ்ரிவாலின் அதிகாரபூர்வ அரசு இல்லத்தில் ஆடம்பர வசதிகள் இருப்பதாக பாஜக தீவிர பிரசாரம் மேற்கொண்டு ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.
- தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
- பூரன் குமாரின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனியின் தலைமையிலான குழுவுடன் ஜப்பான் சென்றுள்ளார்.
அரியானாவின் கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (ஏடிஜிபி) பூரன் குமார் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 1.30 மணியளவில், சண்டிகர் செக்டார் 11-ல் உள்ள அவரது அரசு குடியிருப்பு வீட்டின் அடித்தளத்தில், தனது சர்வீஸ் ரிவால்வரால் சுட்டுக்கொண்டு அவர் உயிரை மாய்த்துக்கொண்டார்.
சண்டிகர் காவல்துறை மூத்த கண்காணிப்பாளர் கன்வர்தீப் கவுர் கூறுகையில், "பூரன் குமாரின் உடல் அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து தடயங்களை சேகரித்தனர். இதுதொடர்பான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே கூடுதல் விவரங்கள் தெரியவரும்" என்று அவர் தெரிவித்தார்.
சம்பவ இடத்தில் இதுவரை எந்த தற்கொலைக் குறிப்பும் கண்டெடுக்கப்படவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்கொலை நடந்த சமயத்தில், பூரன் குமாரின் மனைவியும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அம்னீத் குமார், அரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனியின் தலைமையிலான குழுவுடன் ஜப்பான் நாட்டிற்குப் பயணம் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- நிலச்சரிவில் சிக்கிய ஆம்னி பஸ் முழுவதையும் மண் மூடியது.
- மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
சிம்லா:
இமாச்சல பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் இருந்து குலு மாவட்டம் கலல் நகருக்கு இன்று மாலை ஆம்னி பஸ் சென்றுகொண்டிருந்தது. அதில் 20-க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர்.
பிலாஸ்பூரின் பாலு நகரில் உள்ள பாலம் அருகே மலைப்பாங்கான பகுதியில் பஸ் சென்றுகொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மலைப்பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் ஆம்னி பஸ் சிக்கிக்கொண்டது. பாறைகள் விழுந்து பஸ் முழுவதும் மண் மூடியது.
தகவலறிந்த மீட்புக் குழுவினர் விரைந்து சென்றனர். அவர்கள் நிலச்சரிவால் மண்ணுக்குள் சிக்கிய பஸ்சில் இருந்தவர்களை மீட்க முயற்சித்தனர்.
இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.






