என் மலர்
இந்தியா

100 நாள் வேலை திட்டத்தில் காந்தி பெயர் மாற்றம்: காங்கிரஸ் கட்சி நாளை போராட்டம்
- வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்படும்.
- மத்திய அரசின் பங்களிப்பு 100%ல் இருந்து 60% ஆக குறைக்கப்படும்.
புதுடெல்லி:
காங்கிரஸ் கூட்டணி அரசால் 2005-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (MGNREGA). இதன் கீழ் கிராமப்புறங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பா.ஜ.க. ஆட்சியில் இதற்கான நிதியை விடுவிக்காததால் இதன் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாக பல்வேறு மாநிலங்கள் குற்றம்சாட்டின.
இதற்கிடையே, மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் என்பதை விரிவுபடுத்தி பூஜ்ய பாபு ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் (Pujya Bapu Rural Employment Scheme) என மத்திய அரசு பெயர் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி நாடாளுமன்றத்தில் 125 நாள் வேலைத்திட்ட மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது. இந்த மசோதாவின்படி வேலைவாய்ப்பு நாட்கள் 100-லிருந்து 125 ஆக உயர்த்தப்படும். குறிப்பாக, மத்திய அரசின் பங்களிப்பு 100%ல் இருந்து 60% ஆக குறைக்கப்படும். இதனால் மாநிலங்களுக்கு நிதி சுமை ஏற்படும். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், 100 நாள் வேலை திட்டத்தில் காந்தியின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் நாளை போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சி அறிவித்துள்ளது.






