என் மலர்
இந்தியா

அசையாத மரம் ஒன்று விழுந்தது கீழே... தந்தூரிக்கு தடைவிதித்த டெல்லி!
- உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ரூ.5,000 வரை அபராதம்
- மின்சாரம், எரிவாயு அடிப்படையிலான அடுப்புகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது
டெல்லியில் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில், தந்தூரி தயாரிக்கப் பயன்படும் அடுப்புகளுக்கு தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
அதாவது டெல்லி முழுவதும் உள்ள உணவகங்கள், ஹோட்டல்கள், தாபாக்கள், தெருவோர உணவகங்களில் நிலக்கரி மற்றும் விறகுகளைப் பயன்படுத்தும் தந்தூரி அடுப்புகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், திறந்த வெளியில் எவ்விதமான எரிக்கும் செயல்களைச் செய்யக்கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு பதில் மின்சாரம், எரிவாயு அடிப்படையிலான அடுப்புகளை பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் நபர்கள் அல்லது நிறுவனங்கள் மீது ரூ.5,000 வரை அபராதம் விதிக்க மாவட்ட நிர்வாகங்களுக்கும் மாநகராட்சி அதிகாரிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
"நகராட்சி நிறுவனங்களின் ஆணையர்கள் மற்றும் தலைமைப் பொறியாளர்கள் உட்பட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், சோதனைகளை நடத்தி, தங்கள் அதிகார வரம்பிற்குட்பட்ட அனைத்து உணவகங்களும் உடனடியாக நிலக்கரி மற்றும் விறகு பயன்பாட்டை நிறுத்துவதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றன" என இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா தனது எக்ஸ் தளத்தில், "திறந்த வெளியில் குப்பை உள்ளிட்டவற்றை எரிக்க வேண்டாம். உங்களின் சிறிய ஒத்துழைப்பு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்." எனக் குறிப்பிட்டுள்ளார்.






