என் மலர்
இந்தியா

பாஜகவின் தேசிய செயல் தலைவராக நிதின் நபின் நியமனம்!
- நிதின் நபின் தற்போது பீகார் சட்டசபையில் அமைச்சராக பணியாற்றி வருகிறார்.
- மூத்த பாஜக தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின்
பாஜகவின் தேசிய செயல் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபின் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய செயல் தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், மக்களவை தேர்தல் போன்ற முக்கிய காரணங்களால் அவரது பதவி நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் நிதின் நபின் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பாஜக தேசிய பொதுச் செயலாளர் அருண் சிங் உத்தரவின்பேரில், இந்த நியமனத்தை கட்சியின் நாடாளுமன்ற வாரியம் அங்கீகரித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. "பாரதிய ஜனதா கட்சியின் தேசிய நிர்வாகத் தலைவராக பீகார் அமைச்சர் நிதின் நபினை பாஜக நாடாளுமன்ற வாரியம் நியமித்துள்ளது" என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இன்றுமுதல் அவர் தேசிய செயல் தலைவராக செயல்படுவார்.
மூத்த பாஜக தலைவர் நபின் கிஷோர் சின்ஹாவின் மகன்தான் நிதின் நபின். தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு நிதின் நபின் தீவிர தேர்தல் அரசியலில் நுழைந்தார். தற்போது நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அரசில், சாலை கட்டுமானத் துறை அமைச்சராக பதவியாற்றி வருகிறார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தல் வெற்றிக்குப் பிறகு, தொடர்ச்சியாக நான்கு முறை - 2010, 2015, 2020 மற்றும் 2025 பங்கிபூர் சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
நிதின் நபினின் நியமனம் பீகாரிலும், தேசிய அரசியலிலும் பாஜகவிற்கு ஒரு மூலோபாய ஊக்கமாக பார்க்கப்படுகிறது. அவரது நிர்வாக திறன், அனுபவம் போன்றவற்றை காரணம் காட்டி கட்சித் தலைமை இந்த பொறுப்பை ஒப்படைத்துள்ளது. இவர் சத்தீஸ்கர் மாநில பாஜக இணைப் பொறுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.






