என் மலர்
தஞ்சாவூர்
- சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது.
- மாநில அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்காக ஒவ்வொரு பாராளுமன்ற தொகுதியிலும் வாக்குச்சாவடி கமிட்டியின் பாசறையை அமைத்து வருகிறோம்.
சென்னை மாநகரத்தில் மட்டும் 17 மணி நேரத்திற்கும் மேல் மழை பெய்தது. இந்தியாவில் வேறு எங்கும் இதுபோன்று மழை பெய்தால் எந்த ஒரு நகரமும் தாங்காது. சென்னையை பொருத்தவரை மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு திறமையாகவே கையாண்டுள்ளது.
ரூ.4 ஆயிரம் கோடியை முறையாக செலவு செய்துள்ளனரா என்பதை அவர்களது தணிக்கை குழு முடிவு செய்யும். அதனை நம்மை போன்றவர்கள் முடிவு செய்ய முடியாது. இந்தியா கூட்டணி தற்போது பளிச்சென உள்ளது. மாநில அரசு கேட்டுள்ள ரூ.5 ஆயிரம் கோடி நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.
- திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
பட்டுக்கோட்டை:
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கழுகுப்புலிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 38). இவரது மனைவி பாத்திமா பானு (35). இந்த தம்பதிக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜேம்ஸ்சுக்கும், பாத்திமா பானுவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இது குறித்து பாத்திமா பானு பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜேம்சை கைது செய்து திருச்சி சிறையில் அடைத்தனர். திருச்சி சிறையில் இருந்த ஜேம்சை ஜாமீனில் எடுக்க அவருடைய மனைவி பாத்திமா பானு எந்த முயற்சி எடுக்கவில்லை.
இந்நிலையில் ஜேம்ஸ்சின் தாயார் ஆரோக்கிய மேரி ( 57) தன்னுடைய மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்து உள்ளார். இதனை கேள்விப்பட்ட பாத்திமா பானு மாமியாரிடம் தன்னுடைய கணவரை ஜாமீனில் எடுக்க வேண்டாம். அவ்வாறு எடுத்தால் அவர் வெளியில் வந்த பிறகு என்னை கொலை செய்து விடுவார் என்று கூறிதடுத்துள்ளார்.
ஆனால் அதை கேட்காத ஆரோக்கிய மேரி தனது மகனை ஜாமீனில் எடுக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஆரோக்கிய மேரி மற்றும் பாத்திமாபானு இடையே ஜாமீன் எடுப்பது சம்பந்தமாக மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கோபம் அடைந்த பாத்திமா பானு தன்னுடைய மாமியார் ஆரோக்கியமேரியை அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பட்டுக்கோட்டை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆரோக்கிய மேரி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து பாத்திமாபானுவை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது. இச்சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- திடுக்கிட்டு எழுந்த சிவகுருநாதன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார்.
- மின் கசிவு காரணமாக வாஷிங் மெஷின் வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவாசல் கவாஸ்காரத்தெருவை சேர்ந்தவர் சிவகுருநாதன் (வயது 55). இவர் கீழவாசல் கடைவீதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். இவரது வீட்டின் கீழ் பகுதியில் மாமனார் சுந்தரம், மாமியார் கமலம் வசித்து வருகின்றனர். மாடி வீட்டில் சிவகுருநாதன் மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை சிவருநாதன் மனைவி புவனேஸ்வரி வாஷிங் மெஷினில் துணியை போட்டு சுவிட்ச் போட்டு விட்டு நடைப்பயிற்சிக்காக வெளியில் சென்றார். அப்போது சிறிது நேரத்தில் வாஷிங் மெஷின் பயங்கர சத்தத்துடன் வெடித்து எரிய தொடங்கியது. வீடு முழுவதும் புகை மூட்டமாகியது .
திடுக்கிட்டு எழுந்த சிவகுருநாதன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். மேலும் அக்கம் பக்கத்தினரும் அங்கு திரண்டனர்.
தகவலின் பேரில் தீயணைப்பு படை நிலைய அதிகாரி கணேசன் இளங்கோ மற்றும் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வாஷிங்மெஷின் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வாஷிங் மெஷின் முற்றிலும் எரிந்து சேதமானது. இதேப்போல் சோபா, டி.வி, கட்டில், மெத்தை , துணிமணிகள் ஆகியவையும் எரிந்து நாசமாகின.
இவற்றின் மதிப்பு பல ஆயிரம் இருக்கும் என தெரிகிறது. இந்த பயங்கர தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் ஏற்படவில்லை.
இது குறித்து கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின் கசிவு காரணமாக வாஷிங் மெஷின் வெடித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் தஞ்சையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டது.
- வழக்கில் 6,131 பேரிடம், சுமார் ரூ.410 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது.
தஞ்சாவூர்:
தஞ்சை ரஹ்மான் நகரை சேர்ந்தவர் கமாலுதீன். இவர் ராஹத் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தை நடத்தி வந்தார். இவர் தனது நிறுவனத்தில் முதலீடு செய்தால் மாதம் வரும் லாபத்தில் பங்கு தருவதாக கூறியுள்ளார்.
இதை நம்பி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் பலரும் கோடிக்கணக்கான ரூபாய் வரை முதலீடு செய்தனர். இதில் முதலீடு செய்தவர்களுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை பணம் வழங்கப்பட்டது. இந்நிலையில் கமாலுதீன் இறந்த பிறகு அவரது மனைவி ரஹானா பேகம், கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி ஆகியோரிடம் முதலீட்டாளர்கள் பணத்தை கேட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கு பணம் வழங்கப்படவில்லை. இது தொடர்பாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் பாதிக்கப்பட்டவர்களால் புகார் அளிக்கப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு திருச்சி மாவட்ட பொருளாதார குற்றத்தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் 6,131 பேரிடம், சுமார் ரூ.410 கோடி வரை மோசடி செய்தது தெரிய வந்தது. இந்த மோசடி வழக்கில் கமாலுதீன் சகோதரர் அப்துல் கனி, கமாலுதீன் மனைவி ரஹானா பேகம், மகன் அப்சல் ரகுமான், டிரான்ஸ்போர்ட் அலுவலக உதவியாளர்கள் என சிலரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கில் கமாலுதீனின் நண்பரான தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் நகரை சேர்ந்த அங்குராஜா (வயது 41) என்பவரை திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லிகிரேஸ் தலைமையிலான போலீசார் கைது செய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
கைதான அங்குராஜா தஞ்சையில் பிளக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் கமாலுதீனுடன் சேர்ந்து ராஹத் நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களின் முதலீட்டு பணத்தில் அசையா சொத்துக்கள் வாங்கியும் விற்பனை செய்தும் லாபம் சம்பாதித்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
- கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
- தஞ்சை பெரிய கோவிலில் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.
தஞ்சை:
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில், உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த கோவிலில் சதய விழா, நவராத்திரி கலை விழா, சித்ரா பவுர்ணமி விழா, ஆஷாட நவராத்திரி விழா, ஐப்பசி மாத அன்னாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் பெரிய கோவிலுக்கு வரும் வெளிநாட்டினர், வெளிமாநில பக்தர்கள் ஆண்களும், ஒரு சில பெண்களும் அரைக்கால் சட்டை அணிந்து வருகின்றனர். இதனால் மற்ற பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை உள்ளது. இதை தடுக்கும் வகையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் " டிரஸ்கோடு" என்ற ஆடை கட்டுப்பாட்டு அறிவிப்பு பலகையை கோவில் நுழைவு வாயில், காலணி பாதுகாக்கும் இடம் என 2 இடங்களில் நேற்று முதல் வைக்கப்பட்டுள்ளது.
அதில் ஆண்கள் வேட்டி, சட்டை, பேண்ட் அணிந்தும், பெண்கள் புடவை, தாவணி, துப்பட்டாவுடன் கூடிய சுடிதார் ஆகியவை அணிந்து வர வேண்டும் என்றும் எழுதப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பலகையை பார்த்த சமூக ஆர்வலர்கள், இது வரவேற்கத்தக்கது என்றும் பக்தர்களும் இதை கடைபிடிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
- பேராவூரணியை சேர்ந்த இளைஞர்கள் பலர் சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் உள்ளனர்.
- கடந்த ஆண்டு நெல் உற்பத்தியை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி குறைந்து விட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நடைபயணத்தை பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தொடங்கினார். அவருக்கு வழிநெடுகிலும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பேராவூரணி தாசில்தார் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய நடைபயணம் சேது சாலை, பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி சாலை வழியாக பொதுமக்களிடம் கோரிக்கை மனுகளை பெற்றபடி சென்றார்.
மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கு வந்து சேர்ந்துள்ளது. நமது நாடு 9 ஆண்டுகளில் பெருளாதாரத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை பார்த்து வருகிறீர்கள்.
பேராவூரணியை சேர்ந்த இளைஞர்கள் பலர் சிங்கப்பூர், துபாய் போன்ற வெளிநாடுகளில் உள்ளனர். அவர்களும் பாதயாத்திரைக்கு வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் சொல்வது என்னவென்றால் வெளிநாடுகளில் இந்தியன் என்று சொல்வது பெருமையாக உள்ளது என்கின்றனர்.

காங்கிரஸ் கடைசியாக ஆட்சியில் இருந்த போது கொப்பரை தேங்காயின் ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.52.50 ஆக இருந்தது. ஆனால், தற்போது ரூ.108.60 ஆக உயர்ந்துள்ளது. 107 சதவீதம் கொப்பரை தேங்காயின் ஆதார விலையை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார்.
விவசாயம் அல்லாத பல தொழில்களில் இளைஞர்கள் உள்ளனர். அதற்கு மாறாக டெல்டாவில் இளைஞர்கள் விவசாயத்திற்கு வர வேண்டும். அவர்களுக்காக டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வரப்படும். தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவதை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. கடந்த ஆண்டு நெல் உற்பத்தியை விட இந்த ஆண்டு நெல் உற்பத்தி குறைந்து விட்டது. இது வேதனை அளிக்கிறது.
இதேநிலை நீடித்தால் நெல் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டு பெரும் ஆபத்தை சந்திக்கும் சூழ்நிலை ஏற்படும். இந்த ஆபத்தில் இருந்து டெல்டாவை காப்பாற்ற பா.ஜனதாவால் மட்டுமே முடியும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொண்டார். பொதுமக்களை பார்த்து கை அசைத்தபடி சாலையில் தொண்டாகள் புடைசூழ நடந்து சென்றார். பின்னர் அவர் பேசுகையில்:-
பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் உள்ளிட்ட பகுதியில் மீனவர்கள் அதிகம் வசிக்கின்றனர். வருகிற 2024-25-ம் ஆண்டில் உறுதியாக நதிநீர் இணைப்பு திட்டம் நடந்தே தீரும். தண்ணீரை வைத்து தான் நமக்கும் அண்டை மாநிலத்திற்கும் பிரச்சினை வருகிறது. விவசாயத்தை காப்பாற்ற பிரதமர் மோடி 3-வது முறையாக ஆட்சிக்கு வரவேண்டும். முதல் ஐந்தாண்டு ஆட்சி ஏழை மக்களுக்காக, 2-வது ஐந்தாண்டு ஆட்சி நாட்டின் வளர்ச்சிக்காக, 3-வது ஐந்தாண்டு ஆட்சி நமது விவசாயத்திற்காக தான் இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
- நிலத்தை முழுமையாக என்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.
- போலீசார் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள கக்கரை கிராமத்தை சேர்ந்த பிச்சையப்பன் மனைவி மணியம்மாள் (வயது 75), அவரது மகன் சரபோஜி (40), அவரது மனைவி செந்தமிழ் செல்வி (38) ஆகிய 3 பேரும் நெற்பயிர்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். திடீரென அவர்கள் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த மண்எண்ணெயை தங்களது உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.
இதனை பார்த்த போலீசார் உடனடியாக ஓடி சென்று அவர்களிடமிருந்து மண்எண்ணெய் கேனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவர்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இது குறித்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
நாங்கள் எங்கள் ஊரில் 2.50 ஏக்கரில் நெற்பயிர் செய்துள்ளோம். விவசாயத்தை நம்பியே நாங்கள் வாழ்ந்து வருகிறோம். இந்நிலையில் எனது இறந்த மகனின் மனைவி அதாவது எனது மருமகள் விளைநிலத்தில் எனக்கும் பங்கு உண்டு எனக்கூறி 30 பேருடன் வந்து பயிரிட்ட நெற்பயிர்களை பிடுங்கி சேதப்படுத்தினார்.
மேலும் நிலத்தை முழுமையாக என்னிடம் ஒப்படைக்குமாறு மிரட்டி தாக்கினார்.
இது குறித்து ஒரத்தநாடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருகிறோம். நாங்கள் உயிர் வாழவே பயமாக உள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். எனவே சம்பந்தப்பட்ட மருமகள் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிலத்தில் நெற்பயிர் அறுவடை செய்ய எந்த இடையூறும் ஏற்படாத அளவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதையடுத்து போலீசார் தீக்குளிக்க முயன்ற மூன்று பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- தி.மு.க. அரசு தொடர்ந்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி வருகிறது.
- தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு புதூர் பகுதியில் இருந்து பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' பாதயாத்திரை நடைபயணத்தை நேற்று தொடங்கினார். தொடர்ந்து, அவர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஒரத்தநாடு அண்ணாசிலை பகுதிக்கு வந்தடைந்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
தி.மு.க. அரசு தொடர்ந்து மக்களையும், விவசாயிகளையும் ஏமாற்றி வருகிறது. காவேரி பிரச்சினைகளை முந்தைய காலங்களில் தி.மு.க. அரசு சரிவர கையாளத காரணத்தினால் தான் கர்நாடகா தொடர்ந்து அணைகளை கட்டி விட்டது. இதனால் தமிழகத்துக்கு காவிரி நீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
தி.மு.க. அரசு தேர்தலின் போது அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றாமல் மாறாக 99 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லி ஏமாற்றுகிறார்.

மீத்தேன் எரிவாயு
பிரதமர் நரேந்திர மோடி விவசாயிகள் மீதும், தமிழகத்தின் மீதும் மிகுந்த அக்கறை கொண்டுள்ளார். காவேரி பிரச்சினை, மீத்தேன் எரிவாயு போன்றவற்றில் தமிழக விவசாயிகளின் நலன் சார்ந்த விவசாய கோரிக்கைகளை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், நெல்லுக்கான விலையை உயர்த்தி விவசாயிகளுக்கு பல நலத்திட்டங்களை அறிவித்து நடை முறைப்படுத்தி வருகிறார்.
எனவே, வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பின் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதனைத் தொடர்ந்து, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பாதயாத்திரை நடைபயணம் மேற்கொண்டார். நகரின் முக்கிய வீதிகள் வழியாக தொண்டர்களுடன் இணைந்து மக்களை பார்த்து கை அசைத்தபடி நடைபயணமாக சென்றார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர், தனது பிரசார வாகனத்தில் நின்றபடி அண்ணாமலை பேசினார். அப்போது அவர் கூறுகையில்:-
மன்னார்குடி தொகுதி எம்.எல்.ஏ. டி.ஆர்.பி. ராஜா, தனது சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியில் 3 ஆயிரம் ஏக்கரில் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என தெரிவித்தார். ஆனால் இதுவரை அமைக்கப்படவில்லை.
பா.ஜனதாவை பொறுத்தவரை கடந்த மார்ச் 29-ந்தேதி ஒட்டு மொத்தமாக 8 மண்டலங்களில் நிலக்கரி திட்டம் அறிவிக்கப்பட்டது. அதில் டெல்டாவும் சேர்க்கப்பட்ட நிலையில், இப்பகுதி பா.ஜனதா நிர்வாகிகள் வேண்டுகோளின்படி, நான் நேரடியாக நிலக்கரித்துறை மந்திரியை சந்தித்து அந்த திட்டத்தை டெல்டாவில் நிறைவேற்றுவதில் இருந்து விலக்கு பெற்று அரசாணை வெளியிட வைத்தோம்.
தஞ்சாவூரில் விமான போக்குவரத்து தொடங்க பா.ஜனதா சார்பில் விமான போக்குவரத்து துறை மந்திரியை சந்தித்து வலியுறுத்தி உள்ளோம். காவிரி மேலாண்மை வாரியம், விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி தான் உண்மையான டெல்டாகாரர்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
- இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.
- மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கீழவஸ்தா சாவடி நாகா நகரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்.
இவரது மனைவி இந்திராணி (வயது 50).
நேற்று இரவு வீட்டில் இந்திராணி தனது மகள்கள் சுஷ்மிதா (27), ஸ்ருதி (25) ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது வீட்டின் பின்பக்கம் உள்ள கம்பி வேலியை பிரித்துக் கொண்டு மூன்று மர்ம நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். திடுக்கிட்டு எழுந்த இந்திராணி மற்றும் அவரது மகள்கள் திருடன்.. திருடன்... என கத்தி கூச்சலிட்டனர்.
இதையடுத்து அந்த மர்ம நபர்கள் கத்தி, கட்டையை காண்பித்து சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் எனக் கூறி மிரட்டல் விடுத்தனர்.
பின்னர் கத்தி முனையில் இந்திராணி, சுஷ்மிதா, ஸ்ருதி கழுத்தில் கிடந்த தங்க செயினை பறித்தனர்.
மொத்தம் 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இது குறித்து இந்திராணி தஞ்சை தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38).
விவசாய கூலி தொழிலாளி.
இவருக்கு கயல்விழி (30) என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மதியம் வினோத்குமார் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் வினோத்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- வேலை காரணமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
- பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடசேரி கிராமத்தை சேர்ந்தவர் கபில்தேவ் (வயது 36).
இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று வேலை விஷயமாக தஞ்சை புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
அப்போது அவர் டவுன் பஸ் நிற்கும் மார்க்கத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த நேரத்தில் பஸ் நிலையத்திற்குள் தனியார் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அந்த பஸ் திரும்பும் போது எதிர்பாராதவிதமாக கபில்தேவ் மீது மோதியது.
இதில் பஸ்சின் சக்கரம் ஏறி இறங்கியதில் தலை நசங்கி கபில்தேவ் சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தஞ்சை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கபில்தேவ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை நடைபெற உள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அண்ணாசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மருத்து வக்கல்லூரி சாலையில் அமைந்துள்ள துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
எனவே மருத்துவ க்கல்லூரி பகுதிகள், ஈஸ்வரி நகர், முனிசிபல்காலனி, திருவேங்கடம்நகர், கருப்ஸ் நகர், ஏ.வி.பி. அழகம்மாள் நகர், மன்னர் சரபோஜி நகர், மாதாக்கோட்டை, சோழன் நகர், தமிழ்ப்பல்கலைக்கழகம், மேல வஸ்தாசாவடி, பிள்ளையார்பட்டி, மானோ ஜிப்பட்டி, ரெட்டிபாளையம் ரோடு, காந்திபுரம், வஹாப் நகர், சப்தகிரிநகர், ஐஸ்வர்யா கார்டன், ராஜலிங்கம் நகர் மற்றும் அதனை சுற்றி உள்ள இடங்ளுக்கு நாளை காலை மணி 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






